Thursday, March 1, 2012

இலைகளை உதிர்ப்பவள் – செந்தி

உன் மரத்திலிருந்து உதிர்ந்த இலை
இன்னும் என்னை அடையவில்லை
திசைதப்பி எங்கோ அலைந்து கொண்டிருக்கலாம்
அல்லது
அது எனக்கான இலை என்பதை
அறியாதவனாக இருக்கலாம்
அவ்வப்போது
இலைகளை உதிர்த்துத்தான் பார்க்கிறாய்
அவைகள் என்னிடம் வந்து சேர்ந்தும் சேராமலும்
இருக்கின்றன.
நீயொரு மரம்
நீயொரு கூடு
நீயொரு பறவை
சில் வண்டுகள் நிறைந்த உனது காட்டில்
எனது நினைவுகள் அசைந்து கொண்டிருக்கின்றன.
உனது மூங்கில்கள் முத்தங்களிட்டுக் கொண்டதில்
பற்றியெறிகிறது வனம்
வௌவாலென பாறை இடுக்குகளில்
தொங்கிக் கொண்டிருக்கிறேன் நான்.

(2012 பிப்ரவரி 18ஆம் நாள் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற மாவிபகவின் படைப்பரங்கில் வாசிக்கப்பெற்ற கவிதை)

No comments:

Post a Comment