Wednesday, October 12, 2011

வணிகமயமான வெகுஜன இதழ்கள் – கருப்பு

     எனக்குத் தெரிந்து பலரும் குமுதம், ஆனந்தவிகடன் இதழ்களை பேருந்துப் பயணங்களில் கொறிக்க அல்லது பொழுதுபோக்க என்று வாங்குகிறார்கள். நூலகத்திலும் இம்மாதிரியான முக்கிய இதழ்களுக்கு வாசகர்கள் மத்தியில் போட்டி அதிகம். ஒருவர் எப்போது படித்து முடிப்பார்? என்று மற்றொருவர் படிப்பவரையே வெறித்துப் பார்த்திருக்கும் காட்சிகளை நாம் நூலகங்களில் அடிக்கடி  கண்டிருப்போம். ஆனால் தன்னம்பிக்கை, மாஸ்டர், மருத்துவ மலர் போன்ற இதழ்கள் சீண்டுவாரற்றுக் கிடக்கும். ஜோஸ்யம், வாஸ்து, ராசி தொடர்பான இதழ்கள் காணாமல் போய்விடும் அல்லது நூலகரால் தரவுப் புத்தகம்போல் பாதுகாக்கப்படும். இப்படி வாசகர்கள் போட்டி போட்டுக் கொண்டு படிப்பதற்கு வெகுஜன இதழ்களில் என்னதான் உள்ளது?

பாதிக்குப் பாதி விளம்பரங்களும், மீதம் சினிமாச் செய்திகளும்தான் அவற்றை ஆக்கிரமித்துள்ளன. விமர்சனம் என்று வரும்போது நாம் சில விஷயங்களை அடிப்படையாகக் கொள்ள வேண்டியுள்ளது.

J இதழ்கள் தான் கூறும் தர்மத்திற்கு(?) நியாயமாக நடந்து கொள்கின்றனவா?
J மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றனவா? அல்லது புரியவைக்கின்றனவா?
J சமூக மாற்றத்திற்கு உதவுகின்றனவா? போன்றவற்றைப் பார்க்க வேண்டும்.

அவற்றின் செயல்பாடுகள் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கங்களில் சிலவற்றை ஒரு உதாரணமாகப் பார்ப்போம். இத்தகைய இதழ்களால் ஹீரோவாக்கப்பட்டவர்தான் அன்னா ஹசாரே. அன்னாவை ஆதரிக்காதவர் இந்தியரே அல்லர். அன்னாவே இந்தியா! போன்ற முழக்கங்கள் இவ்விதழ்களால் தொடர்ந்து பரப்பப்பட்டன. இளைஞர்கள் தேசியக்கொடியை அசைத்து ஆர்ப்பரிக்கும் காட்சிகளை கிரிக்கெட் மைதானத்தில் மட்டுமே இதுநாள்வரை பார்த்து வந்த நாம் அன்னாவின் உண்ணாவிரத மேடையிலும் இதே கண்கொள்ளாக் காட்சியைக் கண்டு தேசபக்தியை வளர்த்துக் கொண்டோம். “இந்த முதல்வர் பதவி எனக்கு முள் கிரீடம் போன்று உள்ளது. இந்தப் பதவி மட்டும் இல்லையென்றால் கரசேவையின்போது குறைந்தது 10 முஸ்லீம்களையாவது கொன்றிருப்பேன்என முன்பே கூறியிருந்தார் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி. இந்த மோடிதான் அன்னாவால் சிறந்த முதல்வர் எனப்பாராட்டப்பட்டவர். அடுத்து பிரதமராவதற்குத் தகுதியானவர் என அன்னாவால் அருள்பாளிக்கப் பெற்றவர். குஜராத்தில் நிர்வாகம் சிறப்பாக உள்ளது போன்ற புகழுரைகள் வேறு. இத்தகைய மனப்பான்மைகொண்ட அன்னாவுக்கு தன் சொந்த மாநிலமான மகாராஷ்டிராவில் விவசாயிகளின் தற்கொலை பற்றியோ, பக்கத்து மாநிலமான ஒரிஸாவில் பசுமைவேட்டை என்ற பெயரில் பழங்குடி மக்கள் விரட்டியடிக்கப்படுவதைப் பற்றியோ, பன்னாட்டு பராசுரக் கம்பெனிகளால் இந்திய தொழில் வளங்கள் கொள்ளை அடிக்கப்படுவதைப் பற்றியோ, கிஞ்சித்தும் கவலையில்லை. இப்பிரச்சனைகளைப்பற்றி அன்னா ஏன் உண்ணாவிரதம் இருக்கவில்லை என்று கேட்டால் நாம் ஊழலுக்கு ஆதரவானவர்கள், தேசத்துரோகி எனப் பட்டம் கட்டப்படுவோம். இதுபோன்ற கேள்விகள் மக்கள் மனதில் எழும்பாவண்ணம் பார்த்துக்கொண்டதில் வெகுஜன இதழ்களின் பங்கு மகத்தானது.

ஒவ்வொரு கிராமத்திலும் நெசவாளி, பொற்கொல்லர், தச்சர் இருக்க வேண்டும். அவரவர், அவரவர் தொழில்களைச் செய்ய வேண்டும். அப்போதுதான் கிராமம் சுயசார்புடன் விளங்கும்இது அன்னாவின் அருள்வாக்கு. இப்படி சுயசார்பு என்ற பெயரில் வருணாச்சிரம தர்மத்தை உயர்த்திப் பிடிப்பதன் மூலம் அன்னா ஹசாரே ஒரு இந்துத்துவ பார்ப்பனிய ஏவலாளி என்று தெளிவுபடுத்திவிட்டார். அதற்கான பலனாக அவரது உண்ணாவிரதத்திற்கு இந்துத்துவ சக்திகள் ஆதரவளித்தன. அதற்குப் பிரதிபலனாக அவர் காங்கிரசுக்கு எதிராக, அதாவது ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி.க்கு ஆதரவாக, மதஅடிப்படைவாதத்தைத் தங்கள் அடிப்படையாகக் கொண்டவர்களுக்காக தேர்தல் பிரச்சாரம் செய்யப் போவதாக அறிவித்திருக்கிறார். அவர் அரசியலுக்கு அப்பார்ப்பட்டவர். வேறு என்னதான் செய்வார். ஆனால் இவரை ஆனந்தவிகடன்இந்தியன் தாத்தாஎன்றும், குமுதம் வகையறாக்கள்நிஜநாயகன்என்றும் பலவாறு புகழ்கின்றன. இந்த இதழ்களும்கூட இந்துத்துவ சக்திகளின் வெகுஜனத் தளத்திற்கான இந்துத்துவக் கொள்கை பரப்புச் சாதனங்கள்தான் என்பது ஏனோ அடிக்கடி நமக்கு மறந்து போய்விடுகிறது. சண்டே இந்தியன் இதழ் மட்டும் அன்னா பிடிவாதம் செய்யக்கூடாது என்று மென்மையாக (மொன்னையாக) விமர்சனம் செய்கிறது. புதிதாகத் தொடங்கப்பட்ட புது இளரத்தங்களைக் கொண்ட பத்திரிகை இன்னும் சிறிது காலம் கழித்தே எங்கே போய் நிற்கும் என்பதைக் கணிக்க முடியும்.

அஸ்ஸாம் மாநிலத்தில் சிறப்பு அதிரடிப்படையினருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரத்தை (சந்தேகப்பட்டவரைச் சுட்டுத்தள்ளும் அதிகாரத்தை) ரத்து செய்யக் கோரிஜயரோம் ஷர்மிளாஎன்ற பெண் 12 ஆண்டுகளாகத் தண்ணீர் மட்டுமே குடித்து உணணாவிரதம் இருந்து வருகிறார். இப்போராட்டத்தைப் பற்றி அரைப் பக்கமேனும் செய்தி வெளியிட இந்த இதழ்களுக்குத் துப்பில்லை. அன்னாவை ஆதரிப்பதன் மூலம் இவைகள் தங்கள் நவீன பார்ப்பனியத்தைப் புதுப்பித்துக் கொள்கின்றன. ஐந்தாயிரம் மக்கள் தினம் தினம் உண்ணாவிரதம் இருக்க, 127 பேர் 12 நாட்களாகத் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து கூடங்குளம் அனுமின்நிலையத்தை மூடக்கோரி நடத்திய போராட்டத்தை, அதன்பின் உள்ள நியாயத்தை எந்த வார இதழும் வெளிக்கொணரவில்லை. அவர்களுக்கெல்லாம் நட்சத்திரங்களின் அந்தரங்கத்தை ஆராய்வதே தலையாய பணியாக உள்ளது.

சமீபத்திய பரமக்குடி சம்பவம் பற்றி பொதுவாக இந்த இதழ்கள் அரசையும், காவல்துறையையும் கேள்விக்குள்ளாக்கி உள்ளன. இதன் மூலம் தலித்துகளுக்கு ஆதரவு என்ற முற்போக்கு முகமூடியை அணிந்து கொள்ள முயற்சிக்கின்றன. ஆனால் இந்த ஆதரவுநிலை அந்த கட்டுரையுடன் முடிந்துவிடுகிறது. வேறெந்த இடத்திலும் தீண்டாமை பற்றியோ, தலித்துகளின் அவலநிலையை உணர்த்தும் உண்மைச்சம்பவங்கள் பற்றியோ எந்தக் கட்டுரையும் குறிப்புகளும் இல்லை. இந்தியாவில் 1975ல் அறிவிக்கப்பட்ட அவசரநிலைக்காலத்தில் பத்திரிகைகள் தணிக்கையை எதிர்த்து அன்றை தினமணி தலையங்கப் பகுதியை வெற்றிடமாக விட்டுவைத்துப் பிரசுரித்தது. அன்றைய ஜனசக்தி அவசரநிலையை ஆதரித்துத் தலையங்கம் எழுதியது. இந்த ஒரு விஷயத்தை மட்டும் வைத்துக் கொண்டு தினமணி மக்களுக்கான நாளிதழ் என்றும், ஜனசக்தி அரசுக்கு ஆதரவான இதழ் என்றும் மதிப்பிடுவது எவ்வளவு அறிவீனமோ அதேபோல்தான் ஒற்றைச் சம்பவங்களின் எதிர்வினையை வைத்து வெகுஜன இதழ்களின் தலித் அணுகுமுறை பற்றி நாம் முடிவெடுப்பதும்.

விகடனில் கர்நாடக சங்கீதம் பாடும் ஒரு சிறுமி பற்றிய கட்டுரையில் அச்சிறுமியை அவர், இவர் என்றே விளிக்கிறான் விகடன். ஆனால் அடுத்து இரண்டு பக்கம் தாண்டி பறைஇசைக் கலைஞனான 20வயது இளைஞனைப் பற்றிய கட்டுரையில், அவ்விளைஞனை அவன், இவன் என்றே விளிக்கிறான். இச்சிறு உதாரணமே விகடனின் பார்ப்பனியப் பண்பாடு பற்றி விளக்கிவிடும். ஒவ்வொரு எழுத்திற்குப் பின்னாலும் ஒரு வர்க்கச் சார்பு உண்டு. தான் சார்ந்த வர்க்க நலனையே உயர்த்திப் பிடிக்கும் போக்கு இவ்விதழ்களில் காணப்படுகிறது.

தேர்தல் காலங்களில் இவ்விதழ்களின் போக்கு அப்பட்டமானது. அரசு தனக்குச் சாதகமாக இல்லையென்றால், அரசுக்கு எதிர்நிலையை எடுப்பதன் மூலம் எதிர்க்கட்சிகளுக்குச் சாமரம் வீசுகின்றன. தேர்தல் முறைகளிலும், முறைகேடுகளினாலும், ஊழல்களாலும் மக்கள் விரக்தியுற்றிருக்கும் சூழலில் ஆளும் கட்சி கூட்டணிக்கு மாற்று முன்னாள் ஆண்ட கூட்டணிதான் என்ற மனப்பான்மையை உருவாக்கி, கட்டிக்காத்து அதைத்தாண்டிச் சிந்திக்க விடாமல் செய்துவிடுகின்றன.

இன்றைக்குப் புகழ்பெற்று விளங்கும் நிறைய இலக்கியப் படைப்பாளர்கள் தொடக்ககாலத்தில் இதுபோன்ற பல்சுவை இதழ்களில் எழுதித்தான் தங்களை அடையாளப் படுத்திக் கொண்டனர். இவர்களை தமிழிலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தியதில் பல்சுவை இதழ்களின் பங்கு மகத்தானது. இதை அந்த எழுத்தாளர்களும்கூட மறுக்க முடியாது. இன்று படைப்புகளுக்கு விகடன், குமுதம் வகையறாக்கம் வெறும் 4 பக்கங்கள் மட்டுமே ஒதுக்குகின்றன. வைரமுத்து, வாலி போன்றவர்களின் ப்ளாஸ்பேக் இதில் அடங்காது. படைப்பாளர்கள் யாரையும் புதிதாக அறிமுகப்படுத்துகிறார்களா என்று கேட்டால் அதற்கு வலுவான பின்புலம் தேவைப்படுகிறது. படைப்பாளர்களுக்கான இலக்கிய இதழ் என அறியப்பட்ட கல்கி முன்னவற்றைவிட அதிகமான இடத்தையே கொடுத்துள்ளது. ஓரளவு சமூக அரசியல் தளத்தில் இயங்குபவர்களின் கட்டுரைகளுக்கு கல்கி இடமளிக்கிறது. அதேபோல் ஈழ ஆதரவு எழுத்துக்கள் விகடனில் தொடர்ந்து வருவதையும் மறுக்க முடியாது. திருமாவேலன் போன்றோர் ஈழத்துக் கொடுமைகளை உணர்வுடன் வெகுஜன இதழில் எழுதுவது வரவேற்கத்தக்கதே. புதிய தலைமுறை இதழில் இளைஞர்களுக்கு வழிகாட்டும்படியாக பல கட்டுரைகளும்; தன்னம்பிக்கை, சுயமுன்னேற்றம் குறித்த சிந்தனைகளும் தொடர்ந்து வெளிவருகின்றன. ஆனால் எல்லாப் பத்திரிகைகலும் வாசகனை நுகர்வோனாக மட்டுமே வைத்திருக்கின்றன. அவனுக்குள் உள்ள படைப்புத் திறனுக்கும் எதிர்வினைக்கான உணர்வுகளுக்கும் மதிப்பளிப்பதில்லை. அதற்கான வெளியும்கூட இப்பத்திரிகைகளில் இல்லை. ‘அப்புடிப்போடு சபாசு‘ ‘அற்புதம்‘ ‘அசத்திட்டீங்க‘ ‘கீப் இட் அப்‘ போன்ற ‘டுமுக்கு டுப்பான் டுப்பு டமுக்கு டப்பான் டப்பு‘ வகை இலக்கியப் பதிவுகளே வாசகர் கடிதங்களாகவும் வெளியிடப்படுகின்றன.

முற்றிலும் சினிமா செய்திகளையே கொண்டுவரும் குமுதம் போன்ற இதழ்கள், சினிமா ஸ்பெஷல் என்று சிலசமயம் சிறப்பிதழ் வேறு போடுகின்றன. நடிகையின் கவர்ச்சிப்படத்தை நடுப்பக்கத்தில் பிரசுரிக்கும் குமுதம்தமிழர்களின் இதயத் துடிப்புஎன்று இலட்சினை முழக்கத்துடன் வெளிவருகிறது. தமிழர்களின் இதயம் இப்படித்தான் துடிக்கிறதா? 42 விழுக்காடு சினிமா செய்திகளை தாங்கி வரும் குமுதம் பத்திரிகையின் கொள்கை என்ன? என்று அலசி ஆராய்ந்தால், நாம்தான் பாவம். தமிழ் வார இதழ்களின் நம்பர் 1 என்ற இலட்சினை முழக்கத்துடன் வரும் விகடன் 30 விழுக்காடு சினிமா செய்திகளைக் கொண்டுள்ளது. பெண்களின் அரை நிர்வாணப் படங்களுக்கு என்று பிரத்யேக பக்கங்கள் இன்பாக்ஸ் என்ற பெயரில் உண்டு. ஸ்வீட்டா, ஸ்டைலா, ஸ்மார்ட்டா என்ற கேப்சனுடன் வெளிவரும்கல்கியில் சினிமா செய்திகள் குறைவு. நடிகைகளின் கவர்ச்சிப் படங்களும் குறைவு அல்லது இல்லை. இந்தியா டுடே போன்ற அரசியல் இதழ்களும் கடைசிப் பக்கங்களில் சினிமா செய்திகளையும், கவர்ச்சிப் படங்களையும் இறைத்துள்ளன. பலபேர் இந்தியா டுடேவை கடைசிப்பக்கத்தில் இருந்துதான் வாசிக்கத் தொடங்குகின்றனர்.

இதழ்கள் சினிமா செய்திகள் வெளியிடக்கூடாது என்று சொல்லுமளவிற்கு நானொன்றும் சினிநாத்திகன் கிடையாது சொல்லப்போனால் இன்றைய சினிமா நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் பற்றித் தெரிந்து கொள்ள சினிமா எக்ஸ்பிஸ் படிக்கச் சொல்வேன். காத்திரமான சினிமா பற்றித் தெரிந்து கொள்ள காட்சிப்பிழை திரை படிக்க ஊக்குவிப்பேன். அஜயன் பாலாவும், செழியனும் என் மனம் கவர்ந்த சினிமா கருத்தாளர்கள். அரசியலையும் சினிமாவையும் சரிவிகிதத்தில் கலந்து தரும் யமுனாராஜேந்திரனின் கட்டுரைகளால் நான் ஈர்க்கப்பட்டிருக்கிறேன் என்பது மறுக்க முடியாத உண்மை. இவையெல்லாம் சினிமா தொடர்பானவை. பல்சுவை இதழ்களில் வருபவை எதுவும் சினிமா தொடர்பானதாக இல்லாமல், சினிமாவையும், சினிமாத்துறையில் உள்ளவர்களையும் கேவலப்படுத்தி – படிக்கும் நம்மையும் கேவலப்படுத்துகின்ற மலினமான கிளுகிளுப்புகள் அவை. நாம் மூளைச்சுரண்டலுக்குட்படுகிறோம் என்பதை அறிந்துகொள்ள இயலாவகையில் இவற்றைத் தர இவர்கள் ஃப்ராய்டியத்தில் பட்டம் பெற்றிருக்கிறார்கள் என்பதால் நாம் அவற்றை ரசிப்பதாக உணர்கிறோம்.

பொதுவாக எந்த வகையான விளம்பரங்கள் அதிகம் கிடைக்கிறதோ அதை மையப்படுத்தியே ஒரு சிறப்பிதழ் போடும் அளவிற்கு இதழ்களில் விளம்பரம் வெளியாகிறது. உதாரணத்திற்கு லாட்ஜ் மற்றும் ட்ராவல்ஸ் ரெஸ்டாரண்ட் போன்றவர்களிடமிருந்து விளம்பரத்தைச் சேகரித்துசுற்றுலா சிறப்பிதழ்வெளியிடுகின்றன. ஆணுறை விளம்பரங்கள் அதிகம் கிடைத்தால் இவை அளவான குடும்பச் சிறப்பிதழ் வெளியிடும். ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முழுக்க இவை கல்வி பற்றிய சிந்தனைகளைவிட கல்வி வணிகம் தொடர்பான விளம்பரங்களையே அதிகம் கொண்டுள்ளதையும். சில பத்திரிகைகள் என்ன படிக்கலாம் என்ற பெயரில் எந்தெந்தக் கல்வி நிறுவனங்களில் படிக்கலாம் என ஆலோசனை சொல்வதும், சென்று பார்த்தால் அந்தக் கல்வி நிறுவனங்கள் அவர்கள் சுட்டிய அந்தத் தரத்தில் இருப்பதில்லை என்பதும் பலருக்கும் தெரிந்தே. கண்ணுக்குத் தெரியாத எழுத்தில் இதழில் வரும் விளம்பரங்களின் நம்பகத் தன்மைக்கு பத்திரிகை பொருப்பல்ல என பொருப்பாக அச்சிட்டிருப்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இப்படி இவர்கள் பொருபேற்க முடியாத விளம்பரங்கள் ஆனந்த விகடன் 20 விழுக்காடு குமுதம், 18 விழுக்காடு, கல்கி 7 விழுக்காடு மற்ற இதழ்கள் 5 விழுக்காடு அளவிற்கு பொருப்புடன் நமக்கு வந்து சேர்கின்றன. குமுதம் அச்சானவுடன் ஒரு பிரதிகூட விற்கப்படாமல் அவற்றை அப்படியே எரித்துவிட்டால்கூட குமுதத்திற்கு நஷ்டமில்லை. ஏஜென்டுகளுக்கு இலாப இழப்பு. மக்களுக்கு இலாபம். அவ்வளவு விளம்பரம். அந்த அளவிற்கு விளம்பரக் கட்டணம்.

தொலைக்காட்சிகளில் சமையல் நிகழ்ச்சிகள் நடத்தப்படும்போது, செய்யப்படும் உணவுப் பதார்த்தங்களின் மேல் அழகுக்காக சில தின்பொருட்களை வைத்து, அலங்காரமாக்கி உண்ணக் கொடுப்பார்கள். இந்த வார, மாத இதழ்கள் எல்லாம் முதலாளிகளின் பண்டங்களை கூவி விற்கும் விளம்பர ஊடகமாகவே உள்ளன. விளம்பரத்திற்கு இடையே சில சினிமா கிளுகிளுப்பும் பிற கிளுகிளுப்புகளும் வாசகநுகர்வோருக்கு வழங்கப்படுகின்றன. கேவலமான பதார்த்தங்களின் மீது தூவப்பட்ட வண்ணத்தீனியின் அழகில் மகிழ வைப்பது போல் அலங்காரத்திற்காக சினிமா மற்றும் அரசியல் போன்றவற்றை தூவித் தருகின்றனர்.

அதிகார வர்க்க / ஆளும் வர்க்க வாழ்க்கை முறையும் அதற்கான மனப்பான்மையுமே சிறந்தது என்ற பார்ப்பனிய / முதலாளித்துவ பண்பாட்டை முன்னிருத்துபவை மக்களின் கல்வியறிவு, விழிப்புணர்வு பெருகியதால் தாக்குப்பிடிக்க முடியாமல், சிலநேரங்களில் முற்போக்கு முகமூடி அணிந்து கொண்டு நவீனப் பார்ப்பனீயம் பரப்புகின்றன. ஆனால் இவை முதலாளித்துவத்திடம் சிக்கியபிறகு இலாபம் ஒன்றையே இலக்காகக் கொண்டு முழுவணிக இதழ்களாகவே மாறிவிட்டன. ஊடக முதலாளிகள் நினைத்தால், தாங்கள் எண்ணிய வண்ணம் இந்த நாட்டின் நிகழ்ச்சி நிரலைத் தயாரிக்கவும், தாங்கள் விரும்பும் நபரை தேசத்தின் நாயகனாக்கவும், தாங்கள் வெறுக்கும் நபரையோ அல்லது கட்சியையோ தனிமைப்படுத்தவும் முடியும் என்பதற்கு அன்னா ஹசாரே நாடகம் ஒரு சான்று.

ஒரு வணிக நிறுவனம் (உதாரணமாக அடையாறு ஆனந்தபவன், வசந்தபவன்) தனது வாடிக்கையாளர்களை சென்று சேரும் இதழ்களில்தான் விளம்பரம் செய்ய விரும்பும். அதேசமயம் இதழ்களும் அவ்வணிக நிறுவனங்களின் விளம்பரங்களைப் பெறும்பொருட்டு, அந்நிறுவனங்களின் வாடிக்கையாளர்களுக்கான செய்திகளை வெளியிடுவதையே முக்கிய நோக்கமாகக் கொள்ளும். இந்த வியாபார உத்திகளுக்கிடையயேதான் வாசகர்களுக்குச் செய்திகளைத் தருவதாகச் சொல்லிக் கொண்டு தங்கள் வர்க்கநலன் சார்ந்த செய்திகளை இவ்விதழ்கள் பரப்புகின்றன. குமுதமும், விகடனும், கல்கியும், துக்ளக்கும் தங்களது வர்க்க நலன் சார்ந்த சித்தாந்தங்களைத்தான்(?) தனது வாசகர்களுக்குத் தருகின்றன.

பொதுவாக இதழ்கள் Infortainment (Information and Entertainment) என்ற அடிப்படையை கொண்டு ஆரம்ப காலங்களில் இயங்கி வந்தன. பின்னர் முதலாளித்துவ உலகில் அது Advertainment (Advertaisment and Entertainment) என்று மாறிப்போனது. இதழ்கள் தங்கள் வணிகம் சார்ந்த தேவையை மக்களின் தேவை என்று கருத்துருவாக்கம் செய்கின்றன. நுகர்வு புத்தியிலிருந்து மக்களை விலக விடுவதில்லை. இப்போது இருக்கும் சமூகம் நன்றாகத்தான் உள்ளது. இனிமேலும் நன்றாகத்தான் இருக்கும். என்று தற்போதுள்ள நிலப்புரபுத்துவ, முதலாளித்துவ, அரைக்காலனியக் கட்டமைப்பைப் பேணிக்காக்கும் வலதுசாரித்தன்மையுடன் செயல்படுகின்றன. இவை சமுதாய மாற்றத்திற்கு ஒருபோதும் முன்னடி எடுத்து வைக்கப்போவதில்லை.

(2011 அக்டோபர் 9 ஆம் நாள் அருப்புக்கோட்டையில் மானுட விடுதலை பண்பாட்டுக் கழகம் நடத்திய அச்சு ஊடகமும்  ஊடக  அச்சும் கருத்தரங்கில் வாசிக்கப்பெற்ற கட்டுரை)

No comments:

Post a Comment