Saturday, October 22, 2011

மண்ணை அரித்துச் சென்ற பேரலைகள் - சுப்புராயுலு


ஓயாத கடல் அலைகள் தரையைச்சாடி
மண்ணை அரித்து மடிந்து சரிவதைப்போல்

மேற்கு திசையிலிருந்து புரண்டுவந்த பேரலையொன்று
வாழ்வுப் பரப்பில் அனைத்தையும்
வாரிச் சுருட்டிக் கொண்டு விரைந்து சென்றது.

அன்னிய சாரங்களில் ஊறிய
நாற்றங்கால்களில் வளர்ந்த பயிர்கள்
பாத்திகளிலும், வயல்களிலும் நடப்பட்டு
நம் மண்ணின் சாரமற்ற சுவையாக வளர்க்கப்படுகிறது.

அறுவடை செய்யப்பட்டு களத்திலடிக்கப்பட்ட தானியத்தை
மூடைகளில் கட்டி வண்டிகளிலேற்றுவதற்கு
களத்திற்கே வந்து
காத்திருக்கும் மேற்கின் தரகர்கள்.

தங்களை அழுத்தும் வாழ்வு தரும் சுமைகளை
கீழிறக்க முயலாமல்
நுகத்தடியில் தானே தலைகொடுக்கும்
எருதுகளாய் மாந்தர்கள்.

தூரத்தில் தெரியும் நகரின் கான்கரீட் வனத்தின் மீது காலைப்பனி
மனப்பதிவு ஓவியத்தின் தூரிகைத் தீற்றலாய் படிந்திருக்க
நகரின் காலைப் பொழுது
வாகன ஊர்வலத்தின் அடர்த்தியினூடாக
இரும்புக் குரைகளின் பாய்ச்சலோடு தொடங்குகிறது -
நடந்து செல்பவர்களின்
அர்ச்சனை மொழியை வாங்கிக்கொண்டு.


புதிது புதிதாய் முளைக்கும் நுண்ணலைக் கோபுரங்களின் பெருக்கம்
சிற்றுயிர்களின் சிறகடிப்பிற்கு முற்றாய் விடைகொடுத்தது.
உயிர்களின் சங்கிலிக் கோர்வையில்
சில கரணைகளை துண்டிப்பதில் முடிந்தது.

உறவுப் பாலங்களில் நடந்து பழகிய எனக்கு
பகல் பொழுதுகளிலும் இரவின் மௌனம் உறைந்திருக்கும்
இப்புறநகர்
உள்ளிழுக்கப்பட்ட ஆமையின் கால்களாய்
உறவாட மறுத்து முடங்கிக் கிடந்தது
சோர்வினைத் தந்தது.

வாழ்வின் உன்னதங்களைப் பெறமுடியாத
ஏக்கங்கள் புலம்பல்களாய் வெளிப்படும்
என்துணைவியின் துயரத்தினை
காணச்சகியாது மனம் துடித்துக் கொண்டிருக்கிறது.


காலம் உழுது புரட்டிய எம்மண்ணில் புதைந்த
திணைவாழ்வின் தடயங்களை கிளறிக் கொண்டிருக்கிறேன்
கிளைகளற்ற மரத்தில்
சிறகுகளற்ற பறவையாய்.

(2011 அக்டோபர் 9 ஆம் நாள் அருப்புக்கோட்டையில் மானுட விடுதலை பண்பாட்டுக் கழகம் நடத்திய படைப்பரங்கில் வாசிக்கப்பெற்ற விதை)

No comments:

Post a Comment