Wednesday, November 1, 2017

சங்கம் சரணம் பிரியாணி - சத்யா - சிறுகதை


“சின்ன இதழாளர்கள் பேரவை செயற்குழு கூட்டம்” செவல செத்த ஒரக்கவே படிச்சான். பேரப்பாத்ததும் செவலைக்கு சந்தேகம் அதிகமாயிருச்சு. 'இந்த சித்தப்பா வேற என்னமோ சொல்லியில்ல கூட்டியாந்தாரு? இங்கிட்டு என்னடான்னா சின்ன இதழ்ன்னு போட்டுருக்கான்'னு. கண்ணக்குவிச்சு ஒதட்டப் பிதுக்கிப் பாத்தான். 'சரி நம்ம வாயி சின்ன வாயி, சின்ன இதழாளர்னு நம்மள சேத்துக்கிருவாக. இந்த சித்தப்பா வாயி சின்னதில்லயே? பீடியும் சிகரெட்டுமா குடிச்சு நல்லா கறுத்துப் பெருத்துப்போயில்ல இருக்கு, எப்புடி சங்கத்துல சேத்துக்கிருவாக?'ன்னு. சந்தேகப்பட்டு லேசா சித்தப்பாவோட காதக்கடிச்சான். அவருக்கு பக்கோன்னு ஆயிருச்சு, "டேய், வயசுப்பயங்கறது சரியாதேன் இருக்கு, புத்திய பொம்பள முந்தானையிலையே வெச்சுருக்க, சின்ன இதழ்னா சிற்றிதழ்டா, வீட்டுக்குப் போனதும் மதனிட்ட சொல்லி உனக்கு கல்யாணத்தப் பண்ண சொல்லணும்"னு சொன்னாரு. செவலைக்கு தன் புத்திய நெனச்சோ, இல்ல கல்யாணத்த நெனச்சோ, இல்ல ரெண்டையும் நெனச்சோ வெக்கமா வந்துச்சு. 'பேரவைக்கு பேர வைக்கத் தெரியாதவன்லாம் பேரவ நடத்தினா இப்புடிதான்'னு மனசுல கருவிக்கிட்டு சித்தப்பா மூஞ்சில முழிக்க வெக்கப்பட்டுக்கிட்டு மேடயப் பாத்தான் .மேடையில எண்ணி வெச்சாப்புல அஞ்சுபேரு இருந்தாக. நட்ட நடுவுல இருந்த அப்பச்சிதான் தலைவரு போல. எம்பது வயசு தேறும். மண்டையில மசுரெல்லாங் காணாம போயி பல்லு ஒவ்வொன்னும் இப்போவா பொறவான்னு யோசிச்சுகிருந்துச்சு. அப்பச்சி மாதிரியே. அப்பச்சிக்கு ரெண்டு பக்கமும் ரெண்டுபேரு இருந்தாக, ஒருத்தவுக அந்த இருவதுக்கு நாப்பது ஏசி ரூமுலயும் தொப்பி போட்டுகிருந்தாக. எப்புடியும் அம்பத்தஞ்சு வயசு தேறும். இன்னொருத்தரு நல்ல சபாரியப் போட்டுக்கிட்டு சுருட்ட முடியோட நம்ம வினு சக்ரவர்த்திக்கு சபாரி போட்டது கணக்கா இருந்தாக. ரெண்டுபேரும் தல எப்ப சாயும் அடுத்த தலைவராவலாம்னு நல்லா பாத்துக்கிட்டே இருந்தமாதிரி செவலைக்கு தோணுச்சு. "ஏன் சித்தப்பு சின்ன இதழ்னு சங்கத்துக்கு பேரு வெச்சதுக்கு சிற்றிதழ்னே பேரு வெச்சுருக்கலாம்ல"ன்னு செவல சித்தப்பாவிடம் கேட்டான். "அந்த பேருல ஏற்கனவே வேற சங்கம் இருக்குடான்"னு சித்தப்பா சொல்லிட்டாக.
செவல இதுக்கு முந்தி இந்த மாதிரி கூட்டத்துக்கெல்லாம் வந்ததில்ல. சித்தப்பாதான் வம்படியாய்க் கூட்டி வந்திருந்தாரு. சித்தப்பா பெரியாளு. ஊருக்குள்ள வார அம்புட்டு புக்கையும் படிச்சுட்டு கத சொல்லுவாக. சின்ன வயசுல கத சொல்லி தூங்க வெக்குறது சித்தப்பாதான்னா பாத்துகிடுங்க. சித்தப்பா அப்பவே ஏதேதோ கூட்டமெல்லாம் நடத்துவாக. செவல போயி கூட்டத்துல ஓரமா உக்காந்து பாப்பான். நெறயபேரு ஏதேதோ கத சொல்லுவாக, இவனுக்கு அதுல பாதி வெளங்கும். பாதி ஒன்னும் புடிபடாது. இவன் சித்தப்பா கூட்டத்துக்கு போனது தெரிஞ்சா அன்னிக்கு நைட்டு அப்பா பின்னி எடுத்துருவாக. சித்தப்பா பண்றது அவென் வீட்டுல யாருக்கும் பிடிக்கல. சித்தப்பா இல்லாதப்ப எல்லாப்பேருங் கூடிக்கூடி பேசி அவர திட்டுவாக. நேர்ல ஒன்னும் பேச மாட்டாக அம்புட்டு பயம் சித்தப்பா மேல. ஒரு தடவ தாத்தா எதோ திட்டப்போயி சித்தப்பா அதையே கதையா எழுதி பேப்பருல போட்டுட்டாகளாம். தாத்தாவுக்கு ஒருவாரத்துக்கு வெளில தல காட்ட முடியல. அதுல இருந்து சித்தப்பாவ யாரும் ஏதும் சொல்றது இல்ல. இப்படி சித்தப்பாவ சின்ன வயசுல இருந்தே பெரியாளா நெனச்சு வளந்த செவலைக்கு ஒரு சங்கடம் வந்துடுச்சு. இன்ஜினியரிங் முடிச்சுட்டு இருக்கற அரியர க்ளீயர் பண்ணுவோம்னு வீட்டுல ஆறு மாசம் உக்காந்துருந்தவனுக்கு ஆளாளுக்கு அறிவுரை சொல்ல ஆரம்பிச்சுட்டாக. இவன் பொறுத்துப் பொறுத்துப் பாத்தான். கடைசியில சித்தப்பா ஆயுதந்தேன் நமக்கு செட் ஆவும்னு ஒரு கவிதை எழுதிட்டான்
“இலவசமாய் நீங்கள்
கழட்டிவிட்டுப் போகும்
அறிவுரைகளுக்கு
டோக்கன் போட்டு
காசு வசூலித்தால்
என் மாத சம்பளம்
உங்கள் குடும்ப சம்பளம்”
ஒரு நாலஞ்சு தடவ பேப்பரத் திருப்பித் திருப்பி படிச்சுப் பாத்தான். சிறப்பா வந்துருப்பதா தோணுச்சு. ஆனா இது போதாதே பேப்பருல போடணுமே. நேர போயி சித்தப்பாகிட்ட குடுத்து ‘இத பேப்பருல போடணும்’னான். அதப் படிச்சுட்டு சித்தப்பா இவன மேலயுங்கீழயுமா பாத்தாக. இவனுக்கு ‘ஏன் இப்புடிப் பாக்குறாரு’ன்னு கூச ஆரம்பிச்சுடுச்சு. நீ வாடா உன்ன எவங்கேக்கறான்னு பாப்போம்னு அவரு போற கூட்டத்துக்கெல்லாம் கூட்டிப்போக ஆரம்பிச்சுட்டாரு.
அப்படித்தான் இங்கயும் கூட்டி வந்துருந்தாரு. வரும்போதே சித்தப்பா சொல்லிட்டாரு. ”டேய் மவனே, இது சிற்றிதழ் சங்க கூட்டம். நீ யாருன்னு கேட்டாகன்னா. நான் இன்ஜினியரிங் முடிசுருக்கேன். நெருஞ்சின்னு ஒரு மின்னிதழ் ஆரம்பிக்கப் போறேன்னு சொல்லிடு”ன்னு. செவலைக்கு உள்ளுக்குள் சந்தோசம் என்றாலும் நெருஞ்சிக்கு எந்த ‘ரு’ போடணும்னு பெரிய நெருடலாவே இருந்துச்சு. அப்பச்சி கூட்டத்துல இருந்த எல்லாத்தையும் ஒவ்வொருத்தரா பேரு சொல்லி வரவேத்தாக. செவல எல்லாத்தையும் பாத்தான். அந்த கூட்டத்துல நாலு பயலுவளத் தவிர எல்லாரும் சித்தப்பாவையே சின்னப் பையன்னு சொல்றது கணக்கா இருந்துச்சு. சித்தப்பாவுக்கு அம்பது வயசு தாண்டிருச்சுன்னா வந்தவுக வயச பாத்துக்கிடுங்க. கடைசியில சித்தப்பா பேரையுஞ்சொல்லி அப்பச்சி வரவேத்தாக. திடீருன்னு “செவலப் பாண்டியன், ஆய்வாளர்”னு இவம் பேரச் சொல்லி வரவேற்கவும் இவனுக்கு ஒரே கூச்சம். பதறிப்போய் எந்திரிச்சு எல்லாருக்கும் வணக்கஞ் சொல்லிட்டு உக்காந்தான். இவனை இதுக்கு முன்னால இப்படி யாரும் மரியாதையாச் சொன்னதில்ல. அதும் இம்புட்டு பெரிய அப்பச்சி அவுரு இவுருன்னு இவனப் பேசவும் உச்சி குளுந்துடுச்சு. ஆனாலும் ஒரு இன்ஜினியரிங் அரியர் வெச்ச கிராஜுவேட்ட ஆய்வாளன்னு சொல்லிட்டாகளேன்னு உள்ளுக்குள்ள வருத்தம். மெதுவாக உக்காந்து சித்தப்பாகிட்ட, “என்ன சித்தப்பு ஆய்வாளன்னு சொல்லிட்டாக”ன்னு கேக்க. “எதோ மாத்தி சொல்லிட்டாக.. விடுடா”ன்னு சொல்லிட்டாரு.
என்னதான் சித்தப்பா சொன்னாலும் இவனால விட முடியல. அப்படியென்ன ஆய்வு செய்யுறோம்னு மண்டையைப் போட்டு உடைச்சுக்கிட்டு இருந்தான். வரும்போதே சிற்றிதழ்னா என்னன்னு இவனுக்கு பெரிய சந்தேகமா போயிடுச்சு. ஒருவேளை அப்பாவுக்குத் தம்பி சித்தப்பா போல இதழுக்குத் தம்பி சிற்றிதழ் போலன்னு நெனச்சுக்கிட்டான். அதுலயும் இன்னொரு சந்தேகம் வந்துடுச்சு. அப்பாவுக்குத் தம்பி சித்தப்பா இதழா இல்ல அம்மாவுக்குத் தங்கச்சி சித்தி இதழான்னு. அது இங்க வந்த பொறவுதான் கிளியராச்சு. இந்த அம்பதுபேரு கூட்டத்துல ஒரு பொம்பளகூட இல்ல. அப்படின்னா இது அப்பாவுக்கு தம்பி சித்தப்பா இதழ்தான்னு முடிவுக்கு வந்துருந்தான். அதுபோக இன்னொரு ஆய்வுலயும் இவன் இருந்தான். நாலு மாசம் முன்னால ‘தட’த்துல யவனிகா ஸ்ரீராம் எழுதின கவிதை ஒன்னு வந்துச்சு. அது எதோ நவீனக் கவிதையாம். இவனுக்கு தெரிஞ்ச ஒரே நவீனு கூடப்படிச்சவந்தேன். அதுபோக பிரேமம் படத்தப் பாத்துவுட்டு எல்லாப் புள்ளையளும் 'நிவின் பாலி'ன்னு சொல்லிட்டு திரிஞ்சதுல அந்தப்பய மேல கொஞ்சம் காண்டுலதேன் இருந்தான். 'அந்தக் கவித புரிஞ்சாதாண்டா மவனே நீ கவிஞன்'னு சித்தப்பா சொல்லிட்டாக. சரி அதுக்கு அர்த்தம் கண்டுபிடிக்கணும்னு நாலு மாசமா கெடந்து மண்டைய உடைக்குறான், ஒன்னும் பிடிபடல. குதுரைங்குறான், தோல் பெல்ட்டுங்குறான், தையப்போட்ட பந்துங்குறான். என்னதான் சொல்ல வரான்னு ஒன்னும் புரியல. இதுக்கு நடுவுல இன்னொரு ஆய்வுக்கு போயிட்டான் நம்ம செவல. யவனிகா ஸ்ரீராம் ஆம்பளையா, பொம்பளையா? யவனிகான்னு தனியா சொன்னா பொம்பள மாதிரி இருக்கு, ஸ்ரீராமையும் சேத்து சொன்னா ஆம்பள மாதிரி இருக்கு. ஒருவேளை புருஷன் பேர பின்னால போட்டுருக்கோ. ஆனா இந்த மாதிரி பெரிய எழுத்தாளருல்லாம் புருஷன் பேர பின்னால போட்டுக்க மாட்டாகளே. அது ஏதோ ஆணாதிக்கம்ன்னு சொல்லிக்கிருவாக. இவனுக்குத் தெரிஞ்சு இந்திரா சௌந்தரராஜன் ஆம்பள. ஒருதடவ புக்குல போட்டோ பாத்துருந்தான். ஆனா அனுராதா ரமணன் பொம்பள. இவனால அதுல ஒரு முடிவெடுக்க முடியல. நம்ம செவல சுஜாதாவையே ரொம்ப நாளைக்கு பொம்பளன்னு நெனச்சுட்டு இருந்த பய. சரி கழுத சித்தப்பாட்ட கேப்பமுன்னா அதுக்கும் கூச்சமா இருந்துச்சு. சரி இம்புட்டு ஆராய்ச்சி பண்ணுற நம்மள ஆய்வாளர்னு சொன்னதுல தப்புல்லன்னு மனசுக்குள்ள செவல சமாதானம் ஆகிட்டான்.
அப்பச்சி மைக்க வாங்கி “இங்க நிறைய இளைஞர்கள் வந்துருக்கீங்க” அப்படின்னு ஆரம்பிச்சுச்சு ‘உம்ம வயசுக்கு எல்லாரும் இளைஞர்’தான்னு செவல நினைச்சுக்கிட்டான். ரொம்ப இளவட்டப் பசங்களா இருந்த நாலு பேர கூப்பிட்டு. “இங்க பாருங்க இருபது வயசுப் பசங்களா வந்துருக்காங்க. இவங்கள மாதிரி இளைஞர்கள் நெறைய பேரு வரணும்”னு சொல்லிட்டு இருக்கும்போதே கூட்டத்துல எம்ஜியார் மாதிரி வட்டத்தொப்பி போட்டிருந்த ஒருத்தர் சத்தமா “நீங்க இருக்கற வரைக்கும் வரமாட்டாங்க” என்று கட்டையைக் குடுக்க கூட்டத்தில் சித்தப்பா உட்பட பலர் சிரித்தனர். செவலைக்கோ காது கேக்காததுபோல பாவ்லா காட்டிக்கிட்ட அப்பச்சியை நினைத்து பாவமா இருந்துச்சு. அடுத்ததா மேடையில இருந்த தொப்பிக்காரவுக எந்திரிச்சு மைக்கப் புடிச்சாக அவரு பொருளாளராம் அப்படின்னு அவரே சொல்லிக்கிட்டு “நான் சங்கப் பொருளாதார நிலை குறித்துதான் அதிகம் பேசுவேன்”னு சொல்லிக்கிட்டாக. “நான் சுத்திவளைச்சுல்லாம் பேச விரும்பல, நேராவே பேசுறேன். சங்கத்துக்கு எல்லாரும் நிதி தர வேண்டிய பாக்கி இருக்கு, யாருன்னு நான் நேரடியா சொல்ல விரும்பல”ன்னு சுத்தி வளைச்சு எல்லாரும் நிதி தரணும்னு சொல்லிட்டு, “அடுத்த தடவ நிதியோட வரலன்னா மிதி”தாங்கற மாதிரி எதோ சொன்னாரு. சரி முடிச்சுட்டாருன்னு பாத்தா எதோ இருவத்தஞ்சுபிசா ஸ்டாம்பு கெடைக்குறதேயில்ல ஆந்த்ரா போயி வாங்க வேண்டிதா இருக்கு, நம்ம ஊரு போஸ்ட் ஆபீசுல வாங்கி வெய்க்க சொல்ல மந்திரியப் பாக்கணும் மனு குடுக்கனும்னு ஏதேதோ பேசினாரு. ‘இருவந்தஞ்சுபிசா ஸ்டாம்பு இல்லன்னா என்ன? அம்பதுபிசா ஸ்டாம்பு வாங்கி ரெண்டுக்கு ஒன்னா ஒட்ட வேண்டியதுதான’ன்னு செவல நெனச்சுட்டு இருக்கும்போதே சித்தப்பா, “இதென்ன பிரமாதம் நம்ம சிவகாசிக்காரவுககிட்டச் சொன்னா அதே மாதிரி ஸ்டாம்பு இவுக அடிச்சு குடுத்துருவாகல்ல” என்று சித்தப்பா சொல்லி சிரிக்க செவலைக்கு அதுகூட நல்ல யோசனையாகத்தான்பட்டது.
அடுத்ததா சபாரிக்காரரு மைக்கப் புடிச்சாரு. எடுத்ததும் பயங்கர காட்டமாத்தான் பேசத் தொடங்கினாரு. எடுத்த எடுப்புலயே தொப்பிக்காரர குத்தம் சொன்னாரு. ஆனா சரியாவே பேச வரல, செந்தமிழ்ல பேசுறேன்னு ஏதேதோ உளறிக் கொட்டினாரு. செவல இந்தாளெல்லாம் எப்படி புக்கு நடத்துறாருன்னு நெனச்சுக்கிட்டான். “சங்கத்திலே பதவியிலிருப்பவர்கள் கண்டிப்பாக பத்திரிக்கை நடத்தவேண்டும்”ன்னு சொன்னாரு. அப்பத்தான் செவலைக்கு நிம்மதியா இருந்துச்சு. ‘நம்ம எதோ பத்திரிக்க நடத்தாம கூட்டத்துக்கு வர்றதுக்கே சங்கடப்பட்டோம் இங்க என்னடான்னா பத்திரிக்க நடத்தாம பதவியிலேயே இருக்கானுவ’ன்னு நெனச்சுக்கிட்டான். ‘அரசாங்கத்துல நமக்கு வெளம்பரமே கொடுக்க மாட்டேன்றானுவ’ன்னு பொலம்பினார். ‘என்னைய கலந்தாலோசிக்காமலே கூட்டத்த நடத்துறீக’ன்னு குத்தஞ் சொன்னார். ‘இங்க நாலு பேருக்கு பாராட்டுவிழா நடத்துறீக. ஆனா இவுகள யாருன்னு எனக்கு தெரியல’ன்னு போட்டுத்தாக்கினாரு. பாராட்டு வாங்கிக்க வந்தவுகளுக்கு சங்கடமாப் போயிடுச்சு. வெளில காட்டிக்கிறாம பகுமானமா இருந்துக்கிட்டாக. செவலைக்கு இதெல்லாம் வேடிக்கையா இருந்துச்சு. ஏதும் கைகலப்பு நடக்குமான்னு பாத்துக்கிட்டேயிருந்தான்.
அடுத்ததா இன்னொருத்தரு கூட்டத்துல இருந்து பேச வந்தாரு. ஆளு நல்ல சொட்டையா மீசைய மட்டும் விருமாண்டிகணக்கா எண்ணெய் தேச்சு பெருசா வளத்து முறுக்கிவிட்டுட்டு வந்தாரு. மீசையில தேச்ச எண்ணெய மண்டையில தேச்சுருந்தா முடி கொட்டாம இருந்திருக்குமேன்னு செவல நெனச்சுக்கிட்டான். அவரு பேரு அனீஸ், ஆளும் அணில் கணக்கா துருதுருன்னு இருந்தாரு அவரு பேசினதுதான் நல்ல கருத்தா இருந்துச்சு. எல்லாப்பேரும் கைத்தட்டினாக. ‘சிற்றிதழ்ங்கற பேருல எல்லாப் பேரும் பக்கத்த ரொப்பிட்டு திரியரானுவ’ன்னு மூஞ்சில அடிச்சது கணக்கா சொல்லிட்டாரு. உடனே தொப்பிக்காரப் பொருளாளரு ‘நீங்க எல்லா புக்கும் படிக்கறதில்லன்னு நெனைக்குறே’ன்னு சொல்ல அனீஸ் உடனே, ‘இல்லைங்கையா நான் உங்க புக்கதான் முதல்ல படிப்பேன்’னு சொல்ல தொப்பிக்காரரு வாய இறுக்கமா மூடிக்கிட்டாரு. “வெளம்பரத்துக்காக பத்திரிக்கை நடத்துறதுக்கு நான் நாக்கப் புடுங்கிட்டு சாவன்யா” என்று உணர்ச்சிவசப்பட்டு அவுரு பேசினதுக்கு எல்லாரும் கைதட்ட மேடையிலிருந்தவுக மொகத்துல ஈயாடல. ‘எதுக்குய்யா போஸ்டல் ஸ்டாம்பு இல்லன்னு போயி மந்திரிகிட்ட மனு குடுக்கணும்? போஸ்டல் டிபார்ட்மெண்டு சென்ட்ரல் கவர்மெண்டுக்கு கீழ வருதுய்யா? இங்க இருக்கறவனப் பாத்தா ஒன்னும் பண்ண முடியாது’ன்னு தன் சொட்டைத் தலையை தடவிக்கொண்டே சொல்லவும் ஏற்கனவே கருப்பாயிருந்த பொருளாளரு மூஞ்சி இன்னும் கறுத்துப் போச்சு. ‘ஆஹா போஸ்டல் டிபார்ட்மெண்டு சென்ட்ரல் கவர்மெண்டு கீழ வருதா’ன்னு செவல நெனச்சுட்டு இருக்கும்போதே. ‘உங்களுக்கு விளம்பரம் வேணும்னா தனியாப் பாத்து வாங்கிக்கங்க. சங்கத்துப் பேர யூஸ் பண்ணாதீங்க’ன்னு சொல்லி விஷயத்தை தெளிவாக்கினாரு.
பொறவு யாரு யாரோ பேசினாக, ரிட்டையர்டு போலிசுன்னாக, தமிழ் வாத்தியாருன்னாக, இன்னொரு பெருசு ‘தமிழ வாழவைக்குறதே என் சிற்றிதழ்தான்னு பேசி சங்க கால தமிழ மட்டும்தான் என் இதழுல போடுவேன்’னு சொல்லிக்கிடாக. அந்நேரம் சித்தப்பு திரும்பி, “ஏன்டா மவனே.. உனக்கு தெரியுமா? சங்கம்ங்கறதே வடமொழிடா”ன்னு சொன்னாரு. அந்தப் பெருசு போறபோக்குல “சுஜாதா சிற்றிதழ் நடத்துறது திட்டமிட்ட தற்கொலைன்னு சொல்லிருக்காரு. ஆனா நான் என்ன சொல்றேன், சிற்றிதழ் நடத்துறது கள்ளக்காதல் மாதிரி. பொண்டாட்டிக்குத் தெரியாம காசு சேர்த்து பண்ணனும், தப்பித்தவறி தெரிஞ்சுச்சு அவ்வளவுதான்”னு சொல்லவும் எல்லாப்பேரும் கைதட்ட ஆரம்பிச்சுட்டாக. செவல சித்தப்பாவிடம், “சித்தப்பு இந்தாளுதான் பொண்டாட்டிக்கிட்ட செமத்தியா வாங்கிருக்காப்ள. அத கலந்துகட்டி விடுறாரு”ன்னு சொன்னான். திடீர்ன்னு சுண்ணாம்புச்சட்டிக்குள்ள மண்டைய விட்டது கணக்கா முடியெல்லாம் நரைச்சுப்போன ஒருத்தரு பேசும்போது, “போன மாநாட்டுல எதோ கடமைக்கு அமைச்சர கூப்புடுறேன்னு குமார வெங்கட்ராமன கூப்புடீக, அந்தாளுக்கும் இலக்கியத்துக்கும் என்னய்யா சம்பந்தம்? சரி கூப்புட்டது கூப்புட்டீக, அதோட விடவேண்டியதுதான? ‘உங்க ஆட்சியே திரும்ப தொடரணும்’னு தீர்மானம் போடுறீக? இங்க எல்லாக் கட்சிக்காரவுளும் இருக்கோம். உங்க இஷ்டத்துக்கு தீர்மானம் போட்டு எங்கள அவமானப் படுத்தாதீக”ன்னு காட்டமா சொல்லவும், எல்லாரும் கைத்தட்டினாக. “என்னய்யா தீர்மானம் போட்டதுக்கும் கை தட்டினீக இப்ப தீர்மானம் போடக்கூடாதுன்னாலும் கை தட்டுறீக. இப்படி எல்லாத்துக்கும் கை தட்டியே பழகிட்டீங்களே”ன்னு சொன்னாரு. நம்மாளுக அதுக்கும் கை தட்டினாக. ஒருவேளை இந்த புலவர்கள் வாக்கு பலிச்சுதான் ஆட்சி தொடந்துருச்சோன்னு செவலைக்கு சந்தேகம் வந்துடுச்சு.
இன்னொரு பெருசு பேசுறேன்னு, ‘தற்கொலை, கள்ளக்காதல்னுல்லாம் சொல்லாதீங்க நாங்க எவ்வளவு ஆத்மார்த்தமா பத்திரிக்கை நடத்துறோம் தெரியுமா’ன்னு பொலம்பவும் சித்தப்பா மெதுவா “கள்ளக்காதல கூடதான் ஆத்மார்த்தமா பண்ணனும், தற்கொலைய விட ஆத்மார்த்தமா எதாச்சும் பண்ணிட முடியுமா”ன்னு செவல காதக்கடிச்சாரு.
இப்படியா ஒரு மாதிரி எல்லாரும் பேசி முடிச்சு கெளம்பலாம்னு தலைவரு சொல்லுற நேரத்துல சித்தப்பு, நான் பேசணும்னு எந்திரிச்சு போயிட்டாரு. ஆஹா இவரு எதையாச்சும் கெளப்பிவிடப் போறாருய்யான்னு செவல நெனைக்கையில மைக்கப் புடிச்சு, “பேசின எல்லாப்பேரும், பதவி பதவின்னு சொல்லிட்டு இருக்கீக? இது பதவியா பொறுப்பா? நான் பொறுப்புன்னுதாங்க நெனச்சுகிருக்கேன்”ன்னு ஆரம்பிக்கவும் மேடையில இருந்தவகளுக்கெல்லாம் மூஞ்சியெல்லாம் மூத்திரசந்துக்குள்ள போன மாதிரி ஆயிடுச்சு. “நம்ம வெடிகுண்டு முருகேசன் சங்கத்துல பொறுப்புல இருக்காருய்யா. அவரு சமீபத்துல ‘காலால் வரைந்த காவியம்’னு புக்கு எழுதினதுக்கு அவர ஊருக்குள்ளயே நொழைய விடாம அடிச்சு தொறத்திட்டாக. சங்கத்துல என்னய்யா பண்ணினீக. அதைக் கண்டிச்சு ஒத்தை அறிக்கை விட்டுருப்பீகளா? சங்கத்து பொறுப்புல இருக்கறவனுக்கே ஒன்னும் பண்ணலன்னா அப்பறம் எதுக்குய்யா சங்கம் நடத்துறீங்க? உங்களுக்கு ஜால்ரா அடிக்கணும்னா நீங்க தனியா அடிச்சுக்கங்க. ஒங்களுக்கு அது ஒரு அரிப்பு சொறிஞ்சுக்கிரணும்னு எங்களுக்கு தெரியும். நீங்களே சொறிஞ்சுக்கங்க நீங்களே ஜால்ரா அடிச்சுக்கங்க. ஊரக்கூட்டி ஜால்ரா அடிக்க சொல்லாதீங்க. நீங்க அடிக்கற ஜால்ரா பேரவைக்கு சவுண்டி சத்தம் மாதிரியே கேக்குது. ஒங்க அரிப்புக்கு எங்களையெல்லாம் சொறிய சொல்லாதீங்க. எனக்கெல்லாம் நகம் பெருசு. சொறிய சொன்னா பொராண்டி வெச்சுருவேன்”ன்னு காட்டமா சொல்லிட்டு கொசுறா “நானும் பத்திரிக்கை நடத்துறேன், கள்ளக்காதலெல்லாம் இல்ல, என் மனைவிட்ட நகைய வாங்கி அடமானம் வெச்சுதான் நடத்துறேன், காசு வரவும் திருப்பி தந்துடுவேன்”னு சொல்லவும் எல்லாப்பேரு புருவமும் ரெண்டு இஞ்சு மேல ஏறிருச்சு. சித்தப்பாவ பொறாமையாப் பாத்தாக. செவலக்குத்தான தெரியும் இவரு சித்திக்கிட்ட எப்புடி நக வாங்குறாருன்னு.
ஒருவழியா கூட்டம் முடிஞ்சு எல்லாரும் சாப்புடக் கெளம்பினாக. நல்ல மட்டன் பிரியாணியா ஏற்பாடு பண்ணிருந்தாக. பிரியாணி நல்ல காரசாரமா சிறப்பா இருக்கவும் எல்லாருக்கும் பிரியாணி புராணந்தேன். கூட்டத்துல பேசின விஷயத்தையெல்லாம் மறந்து, எல்லாரும் பிரியாணி, ஏசி ரூமுன்னு பேசிட்டு இருக்க ஆரம்பிச்சுட்டாக. “டேய் செவல, வாடா ‘கயிறு திரித்து’ பத்திரிக எடிட்டரு கதிர் குமரன போய் பாத்துடட்டு வருவோம்”னாரு. அது நல்ல தரமான இலக்கிய பத்திரிக்க. அதோட எடிட்டரு எம்புட்டு பெரிய ஆளு? இன்னிக்கு தேதிக்கு இருக்கற பெரியாளுக எல்லாரும் முதல்ல ‘கயிறு திரிச்ச’வுகதேன். செவலைக்கு சித்தப்பா மேல ஒரே கோவம், ‘அம்புட்டு பெரிய ஆளப் பாக்கப் போறோம்னு முன்னாலேயே சொல்லியிருந்தா நல்ல டிரெஸ்ஸா போட்டுருப்பேன். இன்னிக்கு சும்மா சாயம்போனது கணக்கா சட்டையும் பேண்டும் போட்டுருக்கே’ன்னு நெனச்சுக்கிட்டான். இந்த சிற்றிதழ் நடத்துரவுகளே இம்புட்டு பகுமானமா சபாரியும் கிபாரியுமா இருக்காகன்னா அம்புட்டு பெரிய பத்திரிக்க நடத்துற கதிர் குமரன் எப்புடி இருப்பாருன்னு கற்பன பண்ணிக்கிட்டான். தங்கத்துல செயினு, ப்ரேஸ்லெட்டு, கோட்டு சூட்டுன்னு அமர்க்களமா இருப்பாருன்னு நெனச்சுக்கிட்டே சித்தப்பு பின்னாலயே போனான்.
அங்கிட்டு இங்கிட்டுன்னு வழியக் கேட்டு நடந்தே கூட்டிட்டு போனதுல வேர்த்து நனஞ்சுட்டான் செவல. மண்டையெல்லாம் தண்ணியா ஊத்துது. கதிரு பாத்ததும் ‘ச்சை’ன்னு ஆயிருவாருன்னு நெனச்சுக்கிட்டான். “அந்தா அந்த மாடியிலதாண்டா ஆபீஸு”ன்னு சித்தப்பா காட்டினாக. ரெண்டு மூணு ரூமு சேந்தாப்புல ஆபீஸு. சரி கழுத போவோம்னு செவலயும் சித்தப்பா பின்னாலயே போனான். சந்தேகமா கதவத் தொறந்தா ஆபீசுக்குள்ள சாதாரண ஜீன்ஸும் கட்டம்போட்ட சட்டையுமா ஒத்தை ஆளுதான் இருக்காரு. எந்திரிச்சு வந்து “வாங்க”ன்னு சித்தப்பாவுக்கு கையக் குடுத்து. செவலைக்கும் கை குடுத்து, “தோழர் யாரு?”ன்னாரு. செவலைக்கு இது யாருன்னு ஒன்னும் வெளங்கல. ஆபீசுல வேல பாக்குறவுகளா இருக்கும்னு நெனச்சுக்கிட்டு “சார் ஏதும் வெளில போயிருப்பாரோ?”ன்னு சித்தப்பா காதக்கடிச்சான் செவல. “ஹாஹஹா..” ன்னு சிரிச்சுட்டு, “இதாண்டா நம்ம கதிர் குமரன்”ன்னு சித்தப்பா சொன்னாரு. கோட்டு சூட்டு, செயினு, ப்ரேஸ்லெட்டு எதுவுமே இல்ல. பாக்க அசப்புல பக்கத்துவீட்டு செந்தில் மாமா மாதிரியே இருந்தாரு ‘நம்ம’ கதிர் குமரன்.
(2017 அக்டோபர் பயணம் இதழில் - “செவல” சென்று வந்த சின்ன இதழாளர்கள் செயற்குழு கூட்டம்... என்ற தலைப்பில் இச்சிறுகதை வெளியாகி உள்ளது. எழுதியவர் சத்யா என்ற பெயரில் எழுத சிறப்பு செய்வதாக நினைத்து சத்யகிருஷ்ணன் என்ற பெயருடனும் வெளியாகியுள்ளது. சத்யகிருஷ்ணன்தான் சத்யா என இதன் மூலம் சான்றளிக்கப்படுகிறது. Notary Publicன் Affidavit கேட்க வேண்டாம் என வேண்டிக் கொள்கிறோம். Anyway  நன்றி பயணம் சுரா’விற்கு)

No comments:

Post a Comment