Thursday, February 18, 2016

குழந்தமை – சுப்புராயுலு

மானுடம் பிரசவித்த
துருவ நிலத்தின்
குளிர் பொதிந்த
துலிப் மலர்கள்

காலமும் தூரமுமற்ற
பிரபஞ்ச வெளியின்
பால் வழித் தாரகைகள்
பூமிக்கு வழங்கிய
உயிர்களின் தூதுவர்கள்

மலர்வதும் சருகாகி உதிரவதுமான
நிலையற்றதின் புதிர் வழிகளினூடை
விடையாக வந்து
நம்மைத் தழுவிக் கொண்ட
மென் மலர் இதழ்கள்

மத முரண்களின் மோதலில்
விறகாகிப்போன
ஆலன் குருதிகளின்
அவலச் சுவைகள்
நிரம்பிய முடிவற்ற
வரலாற்றின்
சோகத் சித்திரங்கள்

பாலின வகைமைக்குள்
பொருத்திப் பார்த்தே
வளர்ந்து வரும்
மானுடச் சிறுமையின்
சதுப்பு நிலத்தை
வடிகட்டி செழுமையாக்கும்
செம்மலர்கள்

வீணையின் தந்தி மீட்டலில்
எழும்
ராக ஜீவ ஸ்வரங்கள்
தரும் அதி உன்னத
தரணங்கள் தரும்
இன்ப அலைகளின்
பரு உருவம்

கன்றுகளாய் துள்ளித் திரியும்
வெளிகளை மறித்த
சிற்றறைகளில் முடிக்கி
வளர்க்கப்படும்
போன்சாய் செடிகளல்ல
அவர்கள்

அவர்கள் நம் மனதில்
நிரம்பி வழியும் வக்கிர
எண்ணங்களின் வடிகால்கல் அல்ல
மகிழ்வின் பூங்காங்கள் ஊடே
ஓடி விளையாடும்
வண்ணக் கலவைகளின்
வசீகர வித்துகள்.

ஒவ்வொரு முறையும்
கைகளைக் கழுவும் போதும்
விரலிடுக்கில் எஞ்சியிருக்கும்
குழந்தமையின் வாசணை

நம்மில் கமழ்ந்து கொண்டேயிருக்கும்.

(மாவிபக படைப்பரங்கில் வாசிக்கப்பெற்றது)

No comments:

Post a Comment