Saturday, February 4, 2012

வினாக்களின் கற்கள் தூவிய பாதையில் விடைகளற்ற ஒரு பயணம் – சுப்புராயுலு

நம் மண்ணில் மானுட வாழ்வியக்கம்
கிராமங்களில் மையம் கொண்டது
ஒரு நதியின் சீரான நீரோட்டமாய்.

இப்புவியின் நிலப்பரப்பில்
உயிர்ப் பெருக்கம் உயிர்த்துச் செழித்த
வைகறைக் காலம் வளர்ந்து
இறுதி ஊழியை நோக்கி நகர்ந்து செல்கிறதா?

வாழ்வெனும் நதியின் ஓட்டத்தில்
குமிழாய் உருப்பெற்று
உடைந்து சிதறும் காலமே
மனித வாழ்வெனினும்
இருக்கும்வரை செழுமையை
வளர்ப்பதுதான் இயல்பன்றோ?

மாற்றம் ஒன்றே மாறாதது
அறிஞர்களின் சொல்லாடல்களினூடே
புதிய திசைகளில் தடங்கள் பதித்து
நதிபாய்ந்து செல்கிறது.
நீரின்றியமையா உலகும்
ஏரின் பின் சென்ற நிலமும்
கொழுவின் முனை வகிரா
பாழின் பிரதியாய்
வான் நோக்கித் தவம் செய்கிறதா?

மாற்றங்களின் விளைவில் உருவான
கனிச்சாற்றை
பருகுபவர்கள் யார்?
மானுடத்திற்குள்ளேயே அழிவின் விதைகளை
விதைத்தவர் யார்?

எவற்றின் கரங்கள் வழி மண்பிசைவில்
நாம் மண்பாண்டங்கள் ஆனோம்?
யாருடைய உளிச் செதுக்கல்களில்
நாம் சிலைகளானோம்?
காலவிரைவில் வாழ்வின் சுழற்சி மையம்
கிராமங்களைவிட்டு நகரத்தை
மையம் கொண்டபோது
நண்பனே
நாம் இடம் பெயர்ந்தோம்
செழுமை உயிர்க்கும் நிலப்பரப்புகளைத் தேடி
இறையையும் நீரையும் தேடி

வலசைப் பறவைகள்கூட மீண்டும்
தம் தாய்நிலத்தை நோக்கியே பறந்து செல்கின்றன.
நம் கனவுகளிலும்
நாம் பருகும் நீரின் ஒவ்வொரு மிடறிலும்
நம் தாய்மண்ணின் நினைவுகளையே பருகுகின்றோம்

வினாக்களின் கற்கள் தூவிய உருப்பெருக்கப் பாதைகளில்
விடையில்லாப் பயணமாய் முடிவதா?
அல்லது
குறுகிய நகரத் தெருக்களின் வாகன அடர்த்தியினூடே
முன்னகர சாத்தியமற்றுப் போகும் தருணங்களின்
கோபமாய்க் கரைவதா?
சொல் என் நண்பனே!
(மாவிபகவின் படைப்பரங்கில் வாசிக்கப்பெற்ற கவிதை)

No comments:

Post a Comment