50 நாட்களைக் கடந்தும் ஓடிக்கொண்டிருந்த, ஓட்டப்பட்டுக் கொண்டிருந்த ஏழாம் அறிவு நிறைய வசூலைக் குவித்ததாகச் சொல்கிறார்கள். படமுதலாளிகள் விநியோகஸ்தர்களாகவும், விநியோகஸ்தர்கள் படங்களைத் தயாரிக்கவும் முற்படுகின்றபொழுது, எல்லாவித வியாபார சூட்சமங்களையும் தெரிந்து, நட்டமின்றி லாபங்களை அள்ளத் தெரிந்து கொள்கின்ற சூழலில் நீண்ட நாட்கள் படம் அரங்கில் ஓடுவது இண்டு இடுக்குகளின், மிச்ச சொச்சங்களின் லாபத்தேடலையும் நிவர்த்தி செய்துவிடுகிறது. குறைந்த அரங்குகள், காட்சிகள் குறைப்பு, அதிக கட்டணம், வசதிகளற்ற திரையரங்குகள், பெரிய, சிறிய படங்களிடையே ஏற்படும் அதிகாரப் போட்டி, கண்ணா பின்னாவென்று எகிறும் திரைக்கட்டணங்கள் (பின் எப்படிக் குறையும் திருட்டு விசிடிகள்) என ஒரு படம் நீண்ட நாட்கள் ஓடுவது என்பது சவாலான விஷயம்.
சிறுபத்திரிகை வட்டாரத்திலும், தீவிர இலக்கிய வட்டத்திலும் வேறெந்த வணிக ரீதியான திரைப்படத்தையும்விட ஏழாம் அறிவு பரவலாக விமர்சனத்திற்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஏற்றுக் கொள்ளப்பட்டது என்ற வார்த்தை சரிதான் என நினைக்கிறேன். இதே காலகட்டத்தில் வெளியாகி இதற்கு இணையான வசூல் வெற்றி பெற்ற ‘வேலாயுதம்’ பற்றி இந்தச் சிறுபத்திரிகை வட்டம் பேசவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
நிறையப்பேர் விமர்சித்து விட்டார்கள். இப்படத்தை எவ்வகைப்படுத்துவது என்ற குழப்பம் எனக்குள் எழுந்தது. சயின்ஸ் ஃபிக்சன் என்றார்கள் படத்தோடு தொடர்புடையவர்கள். சயின்ஸ் ஃபிக்சன் (அறிவியல் புனைகதை) என்றால் என்னவென்று தெரியாமல் தமிழ்கூறும் படைப்புலகு அவ்வப்போது திணறுவது வழக்கம். வரலாற்றுப்படம் என்கிறார்கள். சிரிப்புத்தான் வருகிறது. வரலாறு பாவம் மந்திரியாரே. ‘ஃபேன்டஸி’ என்றொரு வகைமாதிரி இருக்கிறது. அதீத கற்பனை. ‘ஃபேன்டஸி’யில் நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். மூன்றுதலை மனிதன், நான்குகண் புலி, பேசும் சிங்கம், ஒற்றைக்கொம்பு குதிரை, (தும்பிக்கை உடைய யானை என்பதுகூட விநோதமாக இருக்கும் ஃபேன்டஸி’ உலகில்) என உங்கள் கற்பனைக்கு எட்டாத எல்லாமும் இங்கு சாத்தியம். அநேகமாக சயின்ஸ் ஃபிக்சன் என்று சொல்லிக்கொள்ளும் 80 விழுக்காடு படங்கள் ‘ஃபேன்டஸி’தான். எந்திரன் உட்பட நிறைய ஹாலிவுட் படங்கள் ‘ஃபேன்டஸி’தான். ஏழாம் அறிவையும் படம் தொடங்கிய 10 நிமிடத்திலேயே இது ஒரு ‘ஃபேன்டஸி’ என ஏற்றுக்கொண்டால்தால்தான் முழுவதுமாகப் படத்தையே பார்க்க முடிந்தது.
இந்தப்படம் பற்றி மீண்டுமொரு விமர்சனம் செய்வதைவிட கூடுதலான சில பதிவுகளையும், கேள்விகளையும் மட்டும் இங்கு முன்வைக்க விரும்புகிறேன்.
தமிழ்கூறும் நல்லுலகம் முழுக்க முழுக்க சாதிகளால் ஆனது. தோற்றத்தில், பேச்சில், நடையுடை பாவணையில் ஏதாவதொரு வகையில் ஜாதியை வெளிப்படுத்திக் கொள்வதை கௌரவமாகக் கருதுவது. இது ஆண்டைகளுக்கு மட்டுமே என்பது வேறு விஷயம். படத்தில் காட்டப்படும் பல்லவ பரம்பரையின் வாரிசான கதாநாயகன் என்ன ஜாதி? நாங்கள்தான் நாடாண்டவர்கள், அந்த மன்னன் எங்கள் ஜாதி, இந்தப் பேரரசன் எங்கள் ஜாதிதான் என மார்தட்டும் நல்லுலகில் இந்தக் கதாநாயகன் (குடும்பம்) எப்படித் தப்பிக்க முடிந்தது? அப்படி ஒரு குறிப்பிட்ட ஜாதியைக் குறிப்பிட முடியுமென்றாலும் மற்ற ஜாதியினரும் படம் பார்க்க வருவார்களேயென்ற வியாபாரக் கவலை ‘கதை இலாகா’வினருக்கும்(?), படமுதலாளிகளுக்கும் வந்திருக்கக்கூடும். சிறு ஜமீனே வைத்திருப்போரைப் பேரரசர் என்பதும் (கலிங்கத்துப் பரணி), வாய்க்கால் தகறாரை பெரும்போர் என்பதும் தமிழாய்ந்த தமிழ்ப்புலவர் குணம். இப்பொழுது பெரும்பாலான ஜாதியினரிடையேயும் ஏதாவதோர் அரசனை தங்கள் ஜாதியின் பிரதிநிதியாகக் காட்டிக் கொள்வதற்கான முயற்சியோடு வரலாற்றை ஆய்ந்து மேய்கிறார்கள். வியாபாரத்திற்கு ஆகாது என்பதால் மட்டும்தான் பல்லவனின் DNAவை ஆராய்ந்த இயக்குநர் ஜாதியை விட்டுவிட்டார். பல்லவ வாரிசின் ஜாதியைக் குறிப்பிட்டு விட்டால் (நாகரீகம் கருதி குறிப்பிடவில்லை என்பதெல்லாம் சும்மா – கவுண்டர் படங்கள், எஜமான், முக்குலத்தோர், நாயக்கர், செட்டியார் படங்கள் தமிழில் இல்லையா என்ன?) ஏனைய ஜாதியினரிடையே தமிழுணர்வை எழுப்புவது மிகவும் சிக்கலானதாகிவிடும். ஏனைய ஜாதி ரசிகன் விசிலடிக்க மாட்டான். கைதட்ட மாட்டான். இந்தப்படம் தெலுங்கிலும் வெளியாகி உள்ளது. அங்கு என்ன நிலைமை. முதலில் தமிழ்நாட்டில் தமிழன் யார் என்று விவாதம் இல்லை. சண்டை வந்துவிடும். பின்னர் தமிழர் பண்பாடு என்றால் என்ன என்ற கேள்விக்குப் பதில் சொல்லவேண்டிய துர்பாக்கிய நிலையும் ஏற்படும்.
இடஒதுக்கீடு என்பதை ஏதோ பேருந்தில் சீட்டுக்குத் துண்டு போடுவதுபோல் கேவலமாகப் புரிந்துகொள்பவர்கள் தயவுசெய்து (தயவு செய்து என்ன, தயவு செய்து… ஒழுங்கு மரியாதையாக…) அம்பேத்கரையும், பெரியார் போன்றோரின் எதிர்வினைகளையும், பார்ப்பனிய, நிலவுடமைச் சமூகத்தையும் தெரிந்து கொள்வது நல்லது.
படத்தில் 6½ அறிவுடன் DNA research செய்யும் கதாநாயகி போகிற போக்கில் டைமிங்காக, ரைமிங்காக ‘Reservation, Corruption இருக்கிற நாடு உருப்படுமா?’ என்கிறார். சுபா ஸ்ரீநிவாசன் அப்படித்தான் பேசமுடியுமென்றாலும், எதுவும் புரியாமல் ஏதோ பஞ்ச் டயலாக் போல என நினைத்து அதற்கும் கைதட்டி வைக்கும் விசிலடிச்சான் குஞ்சுகளை என்ன சொல்ல? சிறிது நாளைக்கு புரட்சி, போராட்டம், நமது உரிமை, போராளி போன்றவற்றோடு இடஒதுக்கீடு என்ற வார்த்தையையும் பயன்படுத்த ஏதாவது நிபந்தனைகள் விதித்தால் நல்லது. இல்லையென்றால் இந்த வார்த்தைகளை சரியான அர்த்தத்தில் பயன்படுத்துபவர்கள் வேறு வார்த்தைகளைத் தேட வேண்டியதுதான்.
ராம நாராயணன் பாணியிலான அம்மன் படங்களில் அம்மனின் எல்லைக்குள் நுழையும் தீய சக்திகள் சக்தியிழந்து போகும். போதிதர்மனின் எல்லைக்குள் நுழைந்ததால் தீய சக்தி டாங்லீயை உடனே திரும்பும்படி ஷாவ்லின் கோயிலின் தலைமைக்குரு எச்சரிக்கிறார். இறுதியில் அம்மன் அருள் தீய மந்திரவாதியை சூலத்துடன் நடனமாடிவிட்டு அழித்துவிடும். இங்கு போதி தர்மன் குங்ஃபூ நடனமாடி சூரனை அழிக்கிறார். போதியின் புத்தமதத்தை விட்டுவிட்டார்கள். அவ்வளவுதான். வேறொண்றுமில்லை. குங்ஃபூவின் அடிப்படை களரி என்கிறார்கள். இது ஷாவ்லினுக்குத் தெரியுமா? மேற்குலகின் எதிர்ப்பு அன்றைய சோவியத் ரஷ்யா என்றால் இன்றைக்கு ‘இரும்புத் திரை சீனா’. முருகதாஸ் போன்ற தமிழாய்ந்தவர்கள் சில விஷயங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். ஏற்கனவே எண்ணற்ற வைரஸ்கள் இந்தியாவிற்குள் நுழைந்துவிட்டன. டாங்லீ மூலமாக சீனாவிலிருந்தல்ல. மேற்குலகிலிருந்து நிறைய டாங்லீக்கள் இந்தியா முழுவதும் நடமாடுகிறார்கள், வைரஸ் பரவி வியாதி பீடித்துப்போய்த் திரிகிறார்கள். GATT ஐத் திறந்தது முதல் அந்நிய முதலீடுகள்வரை நிறைய வைரஸ் நோய்கள் இங்கு பல்கிப் போய்க் கிடக்கின்றன. படத்தில் பழந்தமிழர் பெருமை பேசுமிடமெல்லாம் மூடநம்பிக்கைகளுக்கு பகுத்தறிவு முலாம் பூசுகிறார்கள். சாணிப்பால் தெளிப்பது என்பது அப்போது சாலை, வீட்டுத் தரை, சுவர் எல்லாம் மண். சாணிப்பால் தெளிக்கலாம். இப்பொழுது தார்ச்சாலையிலும், சலவைக்கல் தரையிலும் தெளிக்கவா? மஞ்சள் மகத்துவம் பேசிய சுபாவும், போதி தர்மனும் மான்சாண்டோ அழித்த விதைகளப் பற்றியும் ஒருவரி பேசியிருக்கலாமே? தெரியாது. அப்படியெல்லாம் யோசிக்கத் தெரியாது, இந்தப் படத்தில் DNA ஆராய்ச்சியானது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லாவிட்டாலும், சகித்துக்கொள்ளும்படியாக இருக்கிறதா? தமிழ் சினிமாவில் தோளில் ஒரு சால்வையை சுற்றிக் கொண்டால் எப்படி ப்ளட் கேன்சரோ அதே போன்று உடம்பில் 2, 3 வயர்களை ஒட்டவைத்தால் DNA ஆராய்ச்சி என்று நாம் நம்ப வேண்டுமா? கடைசியில் கூடு விட்டுக் கூடு பாயும் மாயாஜாலப்படம் போல் கதாநாயகன் போதிதர்மனாகவே உருப்பெறுகிறான். இந்தியாவின் கை வைத்தியம் உட்பட சில பாரம்பரிய மருத்துவ முறைகளில் அறிவியல் ஏற்றுக் கொள்ளத்தக்க விளக்கங்களைத் தர இயலவில்லை. ஆனால், பலன் தருகின்றன என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே இவை பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், அறிவியலுக்கு நிரூபணம் தேவை. ஆதாரம் தேவை. கண்ணெதிரே கல் இருந்தாலும் கல் இருக்கிறது என்பதற்கான ஆதாரங்களைத் தேடுவதுதான் அறிவியலே தவிர, பார்ப்பதனால் கல் இருக்கிறது என்பதல்ல.
ஏழாம் அறிவு அருவெறுப்பூட்டும், அச்சமூட்டும் படம் என நான் கருதுவதன் காரணம் இதுதான். DNA ஆராய்ச்சி முடிவில் கதாநாயகன் உடலில் புகுவது போதிதர்மனா? இல்லை ஹிட்லரா? மொழித் தூய்மையும், இனத்தூய்மையும் (அது தூய்மையா?) வலியுறுத்திய நாஸிசத்தைப் போதிக்கும் பயிலரங்கு அருப்புக்கோட்டையில் ஒரு திரையரங்கில் கட்டணத்துடன் 50 நாட்கள் நடைபெற்றது எவ்வளவு பெரிய அதிர்ச்சி. மொழி மாற்றம், மதமாற்றம், இனமாற்றம் (இனக்கலப்பு) பற்றி இவ்வளவு பதைபதைக்கும் போதி தர்மனின் ஆவி (வேறென்ன சொல்லச் சொல்றீங்க?) கடைசியாக நம்மை நோக்கி தனது நோக்கு வர்மத்தைச் செலுத்த முயற்சிக்கிறது. வர்மத்தின் விளைவு பர்ஸ் காலியாகிவிட்டது. மூளை பத்திரம்…!
ஆறறிவுடன் உங்கள் தோழன் கேகே.
(மாவிபக’வின் திரைவிமர்சன அரங்கில் வாசிக்கப்பெற்ற கட்டுரை)
நீங்கள் அறிவியல் என்று கூறுவது எந்த அறிவியல். History of science படியுங்கள். ஒரு செயல் செய்யப்பட்டு அதனால் ஏற்படும் முடிவு மறுபடி நிகழுமானால் அது அறிவியல் அவ்வளவே. அதை யார் செய்தாலும் அந்த முடிவு வர வேண்டும் அவ்வளவுதான். மஞ்சள் காமாலைக்கு கீழா நெல்லி பயன்தருகிறது என்றால் யார் எடுத்துக்கொண்டாலும் பயன் கிடைக்கிறது. அதை அல்லோபதி மருத்துவத்தால் விளக்க முடியாவிட்டால் அதை அறிவியல் இல்லை என்று ஒதுக்கிவிட முடியாது. இப்படி ஏராளம் உள்ளன. நம்பிக்கை என்பது வேறு கருதுகோள் என்பது வேறு. ஏழாம் அறிவு முட்டாள்தனமாக எடுக்கப்பட்டதற்காக தமிழ்நாட்டில் அறிவியலே இல்லை என்று கிளம்பிவிடாதீர்கள். உங்கள் 'அறிவியலால்' சிமிண்டும் கம்பியும் இல்லாமல் ஒரு கட்டடம் கட்டச் சொல்லுங்கள். தஞ்சைக் கோயிலையும், கல்லணையையும், தாஜ்மகாலையும் சிமிண்ட் கம்பி இல்லாமல் அந்தக் கால எங்கள் முட்டாள்கள் (உங்கள் பார்வையில்) கட்டியுள்ளார்கள். சர் ஆர்தர்காட்டன் அட உங்கள் அறிவியலைக் கண்டுபிடித்த வெள்ளைக்காரன், கல்லணையைப் பார்த்து என்ன சொல்லி இருக்கிறான் என்று படித்துப் பாருங்கள். பிரிட்டிஷ் பேரரசின் படைக்கு இணையான கடற்படையை வைத்திருந்தவன் ராஜராஜன் என்று உங்கள் வெள்ளைக்கார ஆய்வாளர்களே சொல்லியுள்ளார்கள்.
ReplyDeleteஏரி நூலிட்டு ஏறுவித்தல் என்ற சமமட்ட உயர ஏரிகளைக் கட்டியவன் இரும்பைக்குடி கிழவன். இதை வியந்து பாராட்டுபவர் சாண்ட்ராபோஸ்டல் என்ற ஆய்வாளர்(World Resources Institute)) இவையெல்லாம் சின்ன சின்ன எடுத்துக்காட்டுகள்.
உலக வரலாற்றைப் படியுங்கள் தோழரே கொஞ்சம் தமிழகத்து வரலாற்றையும் படியுங்கள்.
அன்புடன்
முட்டாள் தமிழன்