Friday, February 24, 2012

கூடாக் கனவு - சுப்புராயுலு

அறுவடை செய்த வயல் வெளிகளில்
ஓடிக் கொண்டிருக்கிறேன்.
வானூர்தியின் சிறகுகள்
காற்றைச் சீவும் பேரோசை
காதுகளைக் கிழிக்கிறது.
முன்னும் பின்னும் பக்கவாட்டிலும்
குண்டுகள் வெடித்துச் சிதறுகின்றன.
அதன் சிதறல்கள் முதுகைத் துளைத்து
குருதி கசிய உடையை நனைக்கிறது.
விழிப்புத்தட்ட
கனவென உணர்கிறேன்.

அரசின் அழுத்தம் கிராமங்களின் மேல்
நால்வழிச் சாலைகளாய் படர
அதன் ஜீவசுவாசம் அறுபட்டுப் போகிறது.
துளிர்ப்பதும், உதிர்வதும், மலர்வதும்
சருகாகி மண்ணில் வீழ்வதுமான
தாவர உயிரியக்கத்தின் தொடர் நிகழ்வை
மரபீனி மாற்றுப் பயிர்ப் பெருக்கத்தினால்
கானுயிர்களை நாசம் செய்யும்
உத்திகளை வகுத்துக் கொண்டே இருக்கிறது.

அணுப்பிளவின் கணநேர வெடிப்பில்
பெருகும் தீயின் ஜூவாலையில்
மானிடம் இதுவரை சேமித்த
அனைத்துச் செல்வங்களையும்
ஆகிருதியாக்கும் யத்தனங்கள்
தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

எங்கே கனவு
மெய்ப்பட்டுவிடுமோ
என்ற பயத்தில்
பதைபதைத்துக் கொண்டிருக்கிறேன்
நான்.
(2012 பிப்ரவரி 18ஆம் நாள் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற மாவிபக‘வின் படைப்பரங்கில் வாசிக்கப்பெற்ற கவிதை)

No comments:

Post a Comment