Tuesday, February 21, 2012

புறக்கணிப்பின் வலி – மு.பழனிக்குமார்

சந்திக்கும் பொழுதுகளில்
உரையாடல்களின் வழி
ஒழுகும் நிமிடங்களின்
நினைவோட்டப் பதிவுகள்
கொஞ்சம் நிறைந்து நிற்கும்.

எண்ணப் பதிவுகளூடாய்
பயணித்து
பிடித்தது, படித்தது
மாறவேண்டியது, மாற்றவேண்டியது
இவனைப்பற்றி, அவனைப்பற்றியென
நீளும் விவாதங்களில்
நிலைப்பாடுகளற்று
மணிகள் நொடிகளாய்
கரைவதுண்டு.

வார்த்தைச் சுழிவுகள் நிறைத்து
தெரியாததை தெரிந்ததாய்
தெளிவுபடப் பேசி,
சொற்களுக்குச் சிம்மாசனமிட்டு,
விழி பிதுங்கப் பேசிய கணங்களும்
செவி கிழிய கேட்ட கணங்களும்
கடந்து போனதுண்டு.

சில நேரங்களில்
புறக்கணிப்பும், முகத்திருப்பலும்
முரண்களும் முன்னுந்தித் தள்ளி முடிவதுண்டு.

உணரவியலாது
புறக்கணிப்பின் வலி.

புறக்கணிக்க எத்தனிக்கும் பொழுதுகளில்
நிகழும் சொல்லாடல்களின் இடைவெளியில்
உடைந்த வார்த்தைகளும்
சிதைந்த சொற்களுமாய்
நிரம்பி நீளும்.

புறக்கணிப்பிற்குப்பின் நிகழும்
எண்ண ஊசலாட்டங்களின்
எதிர் வினைகள்
மனம் நிறைந்து
அழுகி ஒழுகும் -
அடுத்த புறக்கணிப்பிற்கு
ஆயுதம் செய்யும்.

தேநீர்கடை உரையாடல்களின்
பேருந்து நிலைய புகைகளூடாய்
மனப்புகையும் கரைந்து மறையும்.

எனினும்
அடுத்த சந்திக்கும் பொழுதுகளை
எதிர்நோக்கியிருக்கும்

தேநீர்க்கடைகளும், பேருந்து நிலையமும்
அரங்கள் கூட்டங்களின் வாயிற்படியும்
கலைந்து செல்லும் பொழுதுகளும்
நானும்.

(2012 பிப்ரவரி 18ஆம் நாள் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற மாவிபகவின் படைப்பரங்கில் வாசிக்கப்பெற்ற கவிதை)

No comments:

Post a Comment