சமீப காலத்தில் நான் பார்த்த குறும்படங்களில் என்னை மிகவும் கவர்ந்த படம் தீபனின் ‘ஒருநாள்...‘ கலைஞர் தொலைக்காட்சியில் ‘நாளைய இயக்குநர்‘ நிகழ்ச்சியில் முதல்பரிசு பெற்ற படம் இது.
கணவன் மனைவி உறவை வைத்து தீவிரவாதத்தை மிக அருமையாக சொல்லிய படம். ஒரு பெண்ணையும் ஒரு ஆணின் (தீபன்-இயக்குநர்) குரலையும் மட்டுமே பயன்படுத்தி சொல்ல வந்ததை மிகத்தெளிவாகச் சொல்லியுள்ளார் தீபன்.
படத்தின் ஆரம்பத்தில் காதலர்களைப் போன்ற உணர்வை ஏற்படுத்தி பின் ஒரு வரியில் தங்கள் உறவைப் புரியவைத்த விதம் நன்றாய் இருந்தது. மனைவியின் செல்லச் சண்டையில் ஆரம்பித்து, பின் கணவனின் நிலை அறிந்து அவள் காட்டிய பாசத்தையும், அக்கரையையும் உணரமுடிந்தது. படத்தின் காட்சிக்கு ஏற்ப நீலிமாவின் நடிப்பும் முக பாவணைகளும் இயற்கையான விதத்தில் அமைந்திருந்தது.
படம் தீவிரவாதம் பற்றிய கேள்விக்குறியுடன் முடிந்ததால் பலரையும் பல கோணங்களில் யோசிக்கத் தூண்டுகிறது. இத்தகைய தீவிரவாததினால் பாதிப்பிற்கு அழிந்து போவது அன்பு மட்டுமே என்ற ஆழமாக கருத்தைத் தெரிவிக்கிறது. படத்தின் சில இடங்களில் ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்தியது மட்டுமே எனது பார்வையில் சிறு நெருடலாகத் தோன்றியது.
7½ நிமிடங்கள் மட்டுமே ஓடும் இந்தப் படம் பார்ப்பவர்களிடம் இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துமேயானால் 2½ மணிநேரம் ஓடும் பெரும் படங்கள் ஏன் இந்தத் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்ற சந்தேகம் எழுகிறது.
தீவிரவாதத்தைச் சொல்வதாக எண்ணி வெளிவரும்/வெளிவந்த படங்கள் பெரும்பாலும் கதாநாயகனின் ஹீரோயிசத்தை காட்டுவதற்காகவும், அவர்களை விளம்பரப்படுத்திக் கொள்வதாகவும், ஒரு பொழுதுபோக்கிற்கானதாகவும் மட்டுமே இருப்பது வருத்தத்தை அளிக்கிறது.
கோடி கோடியாய் செலவழித்து எடுக்கும் படங்களின் மத்தியில் குறைந்த முதலீட்டில் எடுக்கும் இது போன்ற படங்கள் வரவேற்கத்தக்கன.
(மாவிபக’வின் திரைவிமர்சன அரங்கில் வாசிக்கப்பெற்ற கட்டுரை)
Nee oru village vingyaani
ReplyDelete