Showing posts with label பதிவு. Show all posts
Showing posts with label பதிவு. Show all posts

Sunday, January 8, 2012

அரசு செயல்பட வேண்டும் – சிபிஅய் (எம்-எல்) கோரிக்கை


   தானே புயலால் ஏற்பட்ட பேரிழப்புக்கும் பெரும் துயரத்துக்கும்  அதிமுக அரசாங்கத்தின் செயலற்ற தன்மையே காரணம்!
ஆமை வேகத்தில் நடந்து வரும் துயர் துடைப்பு நடவடிக்கைகள், பெரும் துயரிலிருந்து மக்களை மீட்பதாக இல்லை, போர்க்கால அடிப்படையில் என்ற சொல்லுக்கு பொருந்துவதாகவும் இல்லை.
பாதிப்புக்கு ஆளான மக்களின் வாழ்வாதாரத்தை முழுவதுமாக மீட்டெடுக்கவும், அழிந்துபோயுள்ள விவசாயத்தை முழுவதுமாக புதுப்பிக்கவும் அரசாங்கம் உடனடி, நீண்டகால திட்டங்களை செயல்படுத்திட வேண்டும்.

24ந்தேதி முதலே புயல் பற்றிய எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டு வந்தது. புயலின் வேகம் மணிக்கு 150 கிமீ வரை இருக்குமென்று திரும்பத் திரும்ப அறிவிக்கப்பட்டு வந்தது. ஏறத்தாழ ஆறு நாட்கள் அவகாசமிருந்தும் அரசாங்கம் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் இறங்கவில்லை. மாவட்ட நிர்வாகங்களும் கடும் அலட்சியத்துடன் இருந்துள்ளன. இதுவே பெரும் இழப்புக்கும் துயரத்துக்கும் முதன்மையான காரணம்.
டிசம்பர் 30ம் தேதி அதிகாலை கோரத் தாண்டவத்துடன் புயல் கரையைக் கடந்தது. அன்று பிற்பகலில் ஆளும் கட்சியின் பொதுக் குழுக் கூட்டம், அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் புடைசூழ தடபுடலான விருந்துடன் நடந்துள்ளது. பொதுக்குழவில் கலந்து கொண்ட முதலமைச்சரோ, அமைச்சர்களோ, கட்சிக்காரர்களோ தானே புயல் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களை சின்னாபின்னமாக்கியதைப் பற்றி எதுவும் பேசவில்லை. முதலமைச்சரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தீர்மானம் நிறைவேற்றிய பொதுக்குழு புயலின் கொடுமையால் இறந்தவர்களுக்கு ஒரு இரங்கல் தீர்மானத்தை கூட நிறைவேற்றத் தயாராக இல்லை!
புயல் பற்றிய செய்தி அறிந்ததும் பொதுக்குழுவை தள்ளிவைத்துவிட்டு அமைச்சர்களையும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கட்சி நிர்வாகிகளையும் புயல் பாதித்த பகுதிகளுக்குச் சென்று துயர் துடைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு முதலமைச்சர் உத்தரவிட்டிருக்க வேண்டும். மக்களுக்கு பேரழிவை ஏற்படுத்திய தானே புயலை கண்டுகொள்ளாத முதலமைச்சர், சசிகலா புயலை சமாளிப்பதில் மட்டும் மும்முரமாக இருந்துள்ளார்!
இதிலிருந்தே அதிமுக அரசாங்கம் புயலை சமாளிப்பதற்கு, மக்களை காப்பதற்கு முன்னெச்சரிக்கை (மின்சாரத்தை துண்டித்ததை தவிர)நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. அரசாங்க இயந்திரத்தை இறக்கிவிடவில்லை என்பதும் தெளிவாகிறது.
பொதுக்குழுக் கூட்டத்தை முடித்த பிறகே அமைச்சரவையைக் கூட்டியிருக்கிறார். புயல் ஏற்படுத்திய பாதிப்புகள் தெரிந்திருந்த போதும் கூட வெறும் 150 கோடி மட்டுமே ஒதுக்கியதும் நான்கு நாட்கள் கழித்து மேலும் 750 கோடி ஒதுக்கியதும் முதலமைச்சரின் செயலின்மைக்கு எடுத்துக்காட்டு. புயல் தாக்கி 5 நாட்களுக்குப்பிறகே முதலமைச்சர் கடலூருக்கு சென்றுள்ளார் என்பது இதை மேலும் உறுதிப்படுத்துகிறது. 2004ல் பேரழிவு சுனாமி தாக்கிய போதும் இப்படித்தான் நடந்து கொண்டார்.
புயல் தாக்கி ஏழு நாட்களுக்குப்பிறகும் விழுப்புரம், கடலூர் கிராமங்கள் இருட்டில் மூழ்கிக் கிடக்கின்றன. இன்னும் குடிதண்ணீர், உணவு, தங்குவது, மருத்துவம், எதுவுமின்றி லட்சக் கணக்கான மக்கள் கடும் துன்பத்தில் உள்ளனர். மின்சாரம் முழுவதுமாக மீண்டும் கொண்டு வரப்படுமென்பதற்கு மாவட்ட நிர்வாகங்கள் எந்த உத்தரவாதத்தையும் தரத் தயாராக இல்லை.

விவசாயம் பேரழிவு !

கடலூர், விழுப்புரம், நாகை, திருவாரூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், தஞ்சை மாவட்டங்களில் 10 லட்சம் ஏக்கர் அளவுக்கு பயிர் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ஆனால் அரசாங்கம் 5 லட்சம் ஏக்கர் மட்டும் என்று கூறுகிறது. அதுபோலவே சேதமடைந்துள்ள குடிசைகள், வீடுகள், உயிரிழந்துள்ள கால்நடைகள், சாய்ந்துள்ள மின் கம்பங்கள், சரிந்துள்ள மின் மாற்றிகள், வேரோடு விழுந்துள்ள மரங்கள் இவை அனைத்து விசயத்திலும் கணெக்கெடுப்பு தவறானவை. திட்டமிட்டு குறைத்துக் காட்டப்பட்டிருக்கிறது. அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணங்களும் மிக குறைவானவை. சின்னக் குடிசையைக் கூட 2500க்கோ 5000க்கோ கட்டமுடியாது என்பது  தெரிந்திருந்தும் அரசாங்கம் இவ்வாறு அறிவித்திருப்பது ஏமாற்று வேலையாகும். நெல் பயிருக்கு ஏக்கருக்கு 10000 வேண்டுமென விவசாயிகள் கேட்கும் நிலையில் ஹெக்டேருக்கு (2.5 ஏக்கர்) 10000 என (ஏக்கருக்கு ரூ 4000 மட்டுமே)அறிவித்திருப்பது துயரமடைந்துள்ள விவசாயிகளை ஏமாற்றுவதாகும். ஆண்டுக்கு ஏக்கருக்கு 30000 வரை வருமானம் தரும் முந்திரிப் பயிர்கள் முற்றிலுமாக அழிந்து போயுள்ளன. முந்திரி (விவசாய இழப்பு ரூ 300 கோடி)மீண்டும் முந்திரி விவசாயத்தில் வருமானம் கிடைக்க 10-15 ஆண்டுகளாகும். அப்படியிருக்க முந்திரி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 3600 என அறிவித்திருப்பது புயல் ஏற்படுத்திய கொடுமையை விட பெரும் கொடுமையாகும். மூன்று லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள்! மின் சேத மதிப்பே ரூ 1000 கோடி என மதிப்பிடப் பட்டிருக்கிறது. ஆனால் மொத்த சேதத்திற்கும் ரூ 850 கோடி அரசாங்கம் ஒதுக்கியிருக்கிறது. பாதிப்பின் தீவிரத்தையும் மக்களின் பாதிப்பையும் அரசாங்கம் உணரவில்லை என்பதையேக் காட்டுகிறது.

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் விவசாயம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. குடிசை வீட்டில் வாழ்ந்த ஏழை மக்கள் அனைத்தையும் இழந்துள்ளனர். மூன்றரை லட்சம் வீடுகள் பாதிப்பு என்ற அரசாங்க அறிவிப்பும் தவறு. பல லட்சக் கணக்கான மக்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்பதற்கே இன்னும் பல மாதங்களாகும். விவசாயிகள் பெரும் கடனாளியாவார்கள். விலை வாசி கடுமையாக உயரும் வேலை தேடி வெளியேறுவது படுமோசமாக அதிகரிக்கும். ஒட்டு மொத்த பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ள நிலையில் விவசாயத்தொழிலாளர்கள், கட்டுமானத்தொழிலாளர்கள், சிறு, குறு, நடுத்தர விவசாயிகள், நகர்ப்பகுதிகளில் வாழும் அன்றாடக் கூலிகள் மிக மோசமாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.  பல லட்சக் கணக்கான மரங்கள் சாய்ந்துள்ள நிலையில் வரும் கோடைகாலம் அக்கினி சுவாலை வீசுவதாகவே இருக்கும். சுற்றுச் சூழல் மிக மோசமாக பாதிக்கப்படும்.

அதிக  நெல் விவசாயம் நடந்து வரும் விழுப்புரம் மாவட்டத்தில் நெல் பெரும் சேதமடைந்துள்ளது. முந்திரி, சவுக்கு, கரும்பு, உளுந்து. தென்னை போன்ற பயிர்களும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. புயல் பாதித்த எட்டு ஒன்றியங்களில் இன்னும் மின்சாரம், குடிதண்ணீர் வழங்கப்படவில்லை. கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன. ஏழு நாட்களுக்குப்பிறகும் அரசாங்கம் அறிவித்த நிவாரணம் வழங்கப்படவில்லை. பல்லாயிரக் கணக்கான வீடுகள், குடிசைகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஊருக்கு ஒருசில பேர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகளும் ஆளும் கட்சிக் காரர்களும் கூறுகின்றனர். ஆளும்கட்சிக்காரர்களின் குறுக்கீடு மிக அதிகமாக இருக்கிறது.

அரசாங்கம் உடனடி, நீண்டகால அடிப்படையில் பின்வரும் திட்டங்களை செயல் படுத்திட வேண்டும்.

பாதிப்பின் முழு விவரங்களையும் கணக்கெடுத்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
குடிசை வீடுகளை முழுமையாகவும் பகுதியாகவும் இழந்தவர்கள், வேறுவகையில் பாதிக்கப்பட்ட ஏழைக் குடும்பங்கள் அனைத்துக்கும் 4 மாதங்களுக்கு குறையாமல் மாதம் 50 கிலோ அரிசி, தேவையான மண்ணெண்ணய், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும். கூரை வரி, வீட்டு வரிகளை ரத்து செய்ய வேண்டும்.
கிராமங்களில் 100 நாள் வேலைத்திட்டத்தை 200 நாட்களாகவும் கூலியை 300 ஆகவும் உயர்த்தி செயல்படுத்திட வேண்டும். வேறு புதிய வேலைவாய்ப்புதிட்டங்களையும் உருவாக்கிட வேண்டும். நகர்ப்பகுதிகளிலும் புதிய வேலைவாய்ப்பு திட்டங்களை செயல் படுத்திடவேண்டும்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களின் குழந்தைகளின் கல்விச்செலவை அரசே ஏற்றுக் கொள்ளவேண்டும். முழுமையாக, பகுதியாகவோ பாதிக்கப் பட்ட குடிசை வீட்டிலிருந்த அனைத்து குடும்பங்களுக்கும் அரசு செலவில்,  வாழத்தகுதியான கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும். வரும் 5 ஆண்டுகளுக்குள் கூரை வீடுகள் இல்லாத தமிழ்நாடு என்ற நிலையை உருவாக்கிட வேண்டும்.

விவசாயிகள் பெரும் கடனாளியாவதையும் தற்கொலைக்கு தள்ளப்படுவதையும் தடுக்க முழுமையான இழப்பீட்டை (பயிர் செய்ய ஏக்கர் ஒன்றுக்கு ஆன செலவு, விளைச்சலின் மதிப்பு ஆகியவற்றை சேர்த்து) வழங்குவதோடு லட்சக்கணக்கான விவசாயிகள் விவசாயத்தை மீண்டும் தொடங்கிட விதை, உரம், பூச்சி மருந்து, விவசாயக் கருவிகள், உள்ளிட்ட முழுச் செலவையும் அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவேண்டும். நிலவரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் தள்ளுபடி செய்ய வேண்டும். அனைத்து வகை கடன்களையும் ரத்து செய்ய வேண்டும். விவசாய பம்புசெட்டுகளுக்கான மின் இணைப்பு, கம்பங்கள் துண்டிக்கப் பட்ட இடங்களில் அரசு செலவில் கம்பங்கள் நட்டு, விரைந்து மின் இணைப்பு வழங்கிட வேண்டும்.

பல லட்சக கணக்கான மரங்கள் சாய்ந்து சுற்றுச் சூழல் கடுமையாக பாதிக்கப்பட உள்ள நிலையில் பசுமை சூழலை உருவாக்க அரசு பெரும் திட்டம் ஒன்றை விரைந்து இம்மாவட்டங்களில் செயல் படுத்திட வேண்டும்.

புயல்பாதிப்பு பற்றி அறிந்த பிறகும் கூட மன்மோகன் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆட்சியில் பங்கு பெற்றுள்ள காங்கிரஸ்,திமுகவும் இதுபற்றி வாய்திறக்கவில்லை. இது கடும் கண்டனத்திற்குரியது. 2004 சுனாமி பேரழிவுக்குப் பிறகு மத்திய அரசு உருவாக்கியுள்ள பேரிடர் மேலாண்மை விதிமுறைகள் துயர்துடைப்புக்கு ஏற்றதாக இல்லை. மேலும் இயற்கை சீற்றங்களை அறிவியல் ரீதியாக தடுக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அமைப்பை உருவாக்கவும் தவறி விட்டது. பேரிடர் மேலாண்மை விதிமுறைகளை முற்றிலுமாக மாற்றி அமைக்கவேண்டும்.

முதல் சுனாமியால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் கடலூர் மாவட்டங்கள் இரண்டாவது சுனாமியாலும் கடுமையாக பாதிக்கப் பட்டிருக்கின்றன. மத்திய, மாநில அரசுகள் சிறப்பு பெருந்திட்டத்தை உருவாக்கி இவ்விரு மாவட்டங்களின் பொருளாதார-சமூக வளர்ச்சிக்கு விரைந்து செயலாற்ற வேண்டும். இல்லாவிட்டால் பெரும் வேலைஇல்லா திண்டாட்டம், பட்டினிச்சாவு, தற்கொலைகளை சந்திக்கும் அவல நிலை உருவாகும்.

30-12-2011 அன்று புதுச்சேரி, தமிழ்நாட்டின்  கடலூர், விழுப்புரம் மாவட்டங்களை தானே புயல்  மிகமோசமாக தாக்கி பேரழிவையும் பெருநாசத்தையும் ஏற்படுத்தியதை அடுத்து, 04-01-2012 அன்று மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் மாநிலச்செயலாளர் பாலசுந்தரம் தலைமையில் கட்சியின் புதுச்சேரி மாநிலச்செயலாளர் சோ.பாலசுப்ரமணியன், விழுப்புரம் மாவட்டச்செயலாளர் எம். வெங்கடேசன், கடலூர் மாவட்டச்செயலாளர் சி.அம்மையப்பன், தஞ்சை-நாகை மாவட்டச்செயலாளர் இளங்கோவன், விவசாயத்தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் டிகேஎஸ். ஜனார்த்தனன், மற்றும் கலியமூர்த்தி, தனவேல், ராஜசங்கர், கணேசன் ஆகியோர் 280 கி.மீ பயணம் செய்து பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, மக்களை சந்தித்து வந்தனர்.

(06-01-2012 அன்று விழுப்புரத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் மாநிலச்செயலாளர் பாலசுந்தரம் வெளியிட்ட அறிக்கை)

Wednesday, January 4, 2012

பரமக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு மத்திய புலன் விசாரணை வேண்டும் - பாலசுந்தரம்

ரங்கத்தை நிறைத்திருக்கும் உங்களுக்கும் மேடையில் உள்ளவர்களுக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பரமக்குடி துப்பாக்கிச் சூடு குறித்த உண்மைகளை தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் தெரிவிக்கிற வகையில் மதுரையில் நடத்தப்பட்ட பொதுவிசாரணை அறிக்கையை வெளியிடும் பரமக்குடி துப்பாக்கிச் சூடு எதிர்ப்பு நடவடிக்கை கமிட்டியின் முயற்சிகளை மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சியின் சார்பாக பாராட்டுகிறேன். தாழ்த்தப்பட்டவர்கள் மீது ஒரு அரச பயங்கரத்தை நடத்திவிட்டு, அதை மறைக்கச் சதிசெய்துவரும் அரசாங்கத்தின் முயற்சிகளை முறியடிக்கும் வகையில் உண்மைகளை வெளிக்கொணரும் இந்த முயற்சியை மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சி மனதாரப் பாராட்டுகிறது.
பொதுவிசாரணை அறிக்கை பரமக்குடியில் செப்டம்பர் 11ல் நடத்தப்பட்ட கொடூரக் குற்றம் குறித்து மத்திய புலன் விசாரணை வேண்டுமெனக் கேட்கிறது. இக்கோரிக்கையை எமது கட்சி ஆதரிக்கிறது. ஆதரித்து வலியுறுத்துகிறது.....
அதிமுக ஆட்சி ஒரு நபர் விசாரணைக் கமிஷன் ஒன்றை நியமித்திருக்கிறது. இதைக்கூட சாதாரணமாக நியமித்திடவில்லை. தலித் இயக்கங்கள், மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் வலியுறுத்தலுக்குப் பிறகே கமிஷன் அறிவிக்கப்பட்டது. அந்தக் கமிஷன் ஒரு இடைக்கால அறிக்கையை அரசாங்கத்திடம் கொடுத்ததாகவும் அதன் பரிந்துரைப்படி துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டவர்கள் குடும்பத்திற்கு மேலும் 4 லட்சமும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பும் வழங்கப்படுமென்றும் அரசாங்க அறிவிப்பு கூறுகிறது.
கமிஷனது இடைக்கால அறிக்கை பத்திரிகைகளில் வெளியிடப்படவில்லை. பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. அந்த அறிக்கையும்கூட ஆறு தலித்துகளை சுட்டுக்கொன்ற காவல்துறை அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கச் சொல்லவில்லை? ஒருவேளை அப்படி சொல்லியிருந்தால் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க ஏன் முன்வரவில்லை? என்ற கேள்விகள் எழுகின்றன. தலித்துகளின் எழுந்து வரும் கோபத்தைத் தணிக்க, ஆவேசத்தை மட்டப்படுத்த கமிஷனும் அரசாங்கமும் இப்படி ஒரு முயற்சியில் இறங்கியுள்ளதாகவே தெரிகிறது. எனவேதான் மாநில அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டிருக்கும் கமிஷனிடமிருந்து நீதி கிடைக்காது என்று கூறுகிறோம். சிபிஅய் விசாரணை வேண்டுமென்று வலியுறுத்துகிறோம்.
பள்ளி பாடப்புத்தகங்களின் அட்டையைப் புரட்டினால் முதல் பக்கத்தில் தீண்டாமை ஒரு பாவச்செயல்; தீண்டாமை ஒரு குற்றம் என்று அச்சடிக்கப்பட்டிருக்கிறது. பரமக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி சட்டப்பேரவையில் முதலமைச்சர் பேசினார். இது இனக் கலவரமில்லை என்று சொல்கிறார்கள். அப்படி இருந்தால் எங்களுக்கும் மகிழ்ச்சிதான். ஆனால், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை பற்றி இழிவாக எழுதப்பட்டதன் தொடர்ச்சியாக பள்ளப்பச்சேரி பழனிக்குமாரின் கொலையும் அதையடுத்து சங்கிலித்தொடராக பல சம்பவங்களும் நடந்துள்ளன என்று முதலமைச்சர் கூறுகிறார். அப்படியே அவதூறாக எழுதப்பட்டிருந்ததாகவே வைத்துக்கொள்வோம். நான் கேட்கிறேன், அதற்காக கொலை செய்வார்களா? ‘ஆம்‘ என்று சொல்கிறாரா முதலமைச்சர். முதலமைச்சரே பழனிக்குமாரின் கொலைக்கு நியாயம் கற்பிக்கிறாரே. இது எவ்வளவு பெரிய ஆபத்து?
வன்முறையாளர்கள், கலவரக்காரர்களிடமிருந்து மக்களைப் பாதுகாக்க, தங்களைப் பாதுகாத்துக்கொள்ள போலீஸார் சுடவேண்டியாகிவிட்டது என்று துப்பாக்கிச்சூட்டை, 6பேர் கொலையை, முதலமைச்சர் நியாயப்படுத்துகிறார். தலித்துகளை, தாழ்த்தப்பட்டவர்களை வன்முறையாளர்கள், கலவரக்காரர்கள் என்று திரும்பத் திரும்பக் கூறுகிறார். ஜான்பாண்டியன் பரமக்குடி சென்றால் கலவரம் வரும் என்கிறார். ஏன், தேவர் ஜெயந்திக்கு ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்டவர்கள் படையெடுத்துச் செல்கிறார்களே. அப்போதெல்லாம் கலவரம் வராதா? தாழ்த்தப்பட்டவர்கள் வன்முறையாளர்கள், கலவரக்காரர்கள் என்றால் பன்னீர்செல்வம் போன்றவர்கள் மகாத்மாக்களா?
சட்டமன்றம், ஜனநாயகத்தின் மாண்பு என்றெல்லாம் பேசுகிறார்கள். தலித்துகளின் வாக்குகளையும் பெற்று ஆட்சிக்குப் போனவர் சட்டப் பேரவையில் நின்று கொண்டு தலித்துகளை ஒதுக்கி வைத்துப் பேசினாரே இது தீண்டாமை இல்லையா? எனவே தீண்டாமைக் குற்றத்தின் கீழ் முதலில் விசாரிக்கப்படவேண்டியவர் முதலமைச்சர். எனவேதான் சிபிஅய் விசாரணை கோருகிறோம். நாம் அறிந்தவரை இதுவரை எந்தவொரு முதலமைச்சரும் இது போல தலித்துகளை ஒதுக்கிவைத்து, குற்றவாளிகள், கலவரக்காரர்கள் என்று குற்றம் சுமத்தி பேசியதில்லை. இந்த சட்டமன்றத்தில் தலித்துகளுக்கு இடமில்லையா? இது மிகமிக ஆபத்தானது. இப்படி ஒரு முதலமைச்சர் ஆளும் போது எப்படி தாழ்த்தப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும்? பரமக்குடியில் ரத்தம் சொட்டச் சொட்ட சுட்டுக் கொன்ற கொடுங்குற்றம் போலவே தலித்துகளை வன்முறையாளர்கள், கலவரக்காரர்கள் என்று ஒதுக்கிவைத்து பேசியதும் கொடும் வன்முறையாகும்; தீண்டாமைக் குற்றமாகும். எனவேதான், முதலமைச்சரின் சட்டப்பேரவைப் பேச்சுக்கு தாழ்த்தப்பட்ட மக்களிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டுமென்று கோருகிறோம். அவரது பேச்சை சட்டப்பேரவைக் குறிப்பிலிருந்து நீக்கவேண்டுமென்று மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
சட்டம், ஒழுங்கைப் பாதுகாப்பதற்காக வேறு வழியின்றி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக கூறுகிறார்கள். இல்லை. தாழ்த்தப்பட்டவர்களின் சமத்துவப் போராளி இமானுவேல் சேகரன் கொல்லப்பட்ட அதே நாளில், செப்டம்பர் 11ல், ஆறு தாழ்த்தப்பட்டவர்களை சுட்டுக் கொன்ற சம்பவம், தலித்துகளை அச்சுறுத்துவதற்காக நடத்தப்பட்டது. தலித்துகளின் ஒற்றுமையை சிதைப்பதற்காக திட்டமிட்டு நடத்தப்பட்டது. இமானுவேல் சேகரன், தேவருக்கு இணையாக எப்படி எழுந்துவரலாம்? என்ற சாதியக் காழ்ப்புணர்ச்சியால் நடத்தப்பட்டக் கொடூரம். தேவருக்கு போட்டியாக தேசியத்தலைவன், தெய்வத்திருமகன் என்று கொண்டாடுவதைப் பொறுத்துக்கொள்ள முடியாததால் அரங்கேற்றப்பட்ட கொடூரம்! இமானுவேல் சேகரன் நினைவு நாளை அரசாங்க விழாவாக நடத்தவேண்டும் என்ற தலித்துகளின் கோரிக்கை இனி எழக்கூடாது என்பதற்காக திட்டமிட்டு நடத்தப்பட்ட அரச பயங்கரவாதம்.
செப்டம்பர் 11 பரமக்குடி துப்பாக்கிச்சூடு நடந்த சிந்தாமணி, இளையான்குடி, பரமக்குடி பகுதிகளுக்கு எமது கட்சி சார்பில், செப்டம்பர் 19,20 தேதிகளில் சென்று வந்தோம். மக்களைச் சந்தித்தோம். கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்தோம். பெண்களைச் சந்தித்தோம். தோழர்கள் சந்திரபோஸ், சிம்சன் உள்ளிட்டவர்களை சந்தித்தோம். எமக்குக் கிடைத்த தகவல்களும் ஆதாரங்களும் நடந்த வன்முறை ஒரு அரசபயங்கரவாதம் என்பதைத் தெளிவாக்கின. அதுமட்டுமல்ல, உள்துறை அமைச்சகத்தைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் தனது இடுப்பில் இடுக்கி வைத்திருக்கும் சாதி ஆதிக்கவெறிக் கும்பலின் திட்டமிட்ட சதி இது என்பதும் நிரூபணமாகிறது. இது மேலிடத்துச் சதி என்பதுதான் உண்மை. இத்தகைய கொடூரத்துக்குப் பிறகும்கூட அந்த சாதிஆதிக்க வெறிக்கும்பலை தனது இடுப்பிலிருந்து இறக்கிவிட முதலமைச்சர் தயாராக இல்லை. எனவே மேலிடத்து சதியை, மாநில அரசாங்கம் நியமித்திருக்கும் விசாரணைக் கமிஷன் விசாரிக்க முடியாது. சிபிஅய் விசாரிக்கவேண்டும்.
இந்த சமயத்தில், மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சி ஒன்றை வலியுறுத்துகிறது. தாழ்த்தப்பட்டோர், பழங்குடி மக்களுக்கெதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டுமென்று கோருகிறோம். தலித்துகள், பழங்குடி மக்கள்மீது அரச பயங்கரவாதம் பாய்கிறபோது எவ்வித புகாருமின்றி தானாகவே அவர்கள் (போலீஸ் அதிகாரிகள்) மீது வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் பாய்கிறவகையில் அந்த சட்டம் திருத்தப்பட வேண்டுமென்று கோருகிறோம். எத்தனையோ வன்முறைகள், கொடியங்குளம், தாமிரபரணி என நடந்துள்ளன. இந்தச் சட்டத்தின் கீழ் எந்த போலீஸ் அதிகாரியாவது தண்டிக்கப்பட்டிருக்கிறாரா? எனவேதான் இப்படியொரு சட்டத்திருத்தம் வேண்டுமென்று கோருகிறோம். இங்கு நம்முடன் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் இதை வலியுறுத்தவேண்டுமென்று கோருகிறாம்.
பரமக்குடி கடைசி சம்பவமாக இருக்கவேண்டுமென்று சொன்னார்கள். தாழ்த்தப்பட்டவர்கள் ரத்தம் சிந்துவது பரமக்குடியோடு முடிந்துவிட வேண்டும்; முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டுமென்று சொன்னார்கள். இதில் எமது கட்சிக்கு முழு உடன்பாடு உண்டு. அதற்கு என்ன செய்ய வேண்டும்? முதலில் தெற்கிலுள்ள தலித்துகள், வடக்கிலுள்ள தலித்துகள், கிழக்கிலுள்ள தலித்துகள், மேற்கிலுள்ள தலித்துகள் அனைவரும் ஒரே சக்தியாக திரளவேண்டும். தலித் விரோத ஆட்சிகள் அதைக்கண்டு மிரளவேண்டும். தாழ்த்தப்பட்டோர் விரோத ஆட்சிகள் பயப்படவேண்டும். தாமிரபரணி, கொடியங்குளம், பரமக்குடி போன்றவைகளை அரங்கேற்றும் ஆட்சிகள் ஆட்டங்காண வேண்டும். துப்பாக்கிச்சூடு நடத்தும் செந்தில்வேலன், சந்திப்பட்டீல் போன்ற போலிஸ் அதிகாரிகளின் காக்கிச் சட்டைகள் கழற்றப்படும், அவர்கள் சிறையில் தள்ளப்படுவார்கள் என்ற நிலை வரவேண்டும். அப்போதுதான் பரமக்குடிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
சிவகாமி அவர்கள் சரியாக சொன்னதுபோல இதற்கு அரசியல் கட்சிகளின் பங்கு மிக முக்கியமானது. எங்களைப் பொருத்தவரை, தாழ்த்தப்பட்டவர்களின் சமஉரிமைக்கு, சமத்துவத்திற்கு முன்னுரிமை கொடுக்காதவர்கள் தலைவர்களே இல்லை என்று கூறுவோம். அத்தகைய கட்சிகள், கட்சிகளே இல்லை என்றுதான் கூறுவோம். தாழ்த்தப்பட்டவர்களது ஜனநாயகத்தைப் பேசாத, கட்சிகள் ஜனநாயக கட்சிகளே இல்லை. அவர்களது உரிமையை, சமத்துவத்தை பேசாத ஜனநாயகம், ஜனநாயகமே இல்லை. தலித்துகள் யார்? இந்த தேசத்தை உருவாக்குபவர்கள், உழைக்கும் மக்கள். வரலாற்று நாயகர்கள். எண்ணிக்கையை வைத்துப் பார்க்கிற எண்ணிக்கை அரசியல், வாக்கு வங்கி அரசியலைப் புறக்கணித்தாக வேண்டும்.
இப்போது தேவை தாழ்த்தப்பட்ட மக்களின் ஒற்றுமை, ஒரே அரசியல் சக்தியாக திரளும் அவசியம். அந்த நிலமை எவ்வளவு சீக்கிரம் உருவாகிறதோ அவ்வளவு சீக்கிரம் பரமக்குடி, தாமிரபரணி இல்லாமல் போகும். இந்த அரங்கம், இங்கு காணப்படும் ஆவேசம், உறுதிப்பாடு இந்தத் திசையில் முன்னேறவேண்டும் என்று மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சி விரும்புகிறது. மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சியைப் பொருத்தவரை தாழ்த்தப்பட்ட மக்களின் ஒற்றுமைக்காக, சமத்துவத்துக்காக, உரிமைக்காக, அவர்களது ஜனநாயத்துக்காக முன்னுரிமை தருகிறது. அந்தப் போராட்டக் களத்தில் எப்போதும் முன்னணியில் நிற்கும். அதற்காக தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொள்கிறது. இது உங்கள் போராட்டமல்ல, நமது போராட்டம். நாம் வெற்றி பெறுவோம்! ஆணவமிக்க ஆட்சியாளர்களை மண்டியிடச்செய்வோம் என்று கூறி விடை பெறுகிறேன். நன்றி! வணக்கம்!!
{03-12-2011 அன்று சென்னை லயோலாக் கல்லூரியில் நடைபெற்ற பரமக்குடி துப்பாக்கிச்சூடு பொதுவிசாரணை அறிக்கை வெளியீடு நிகழ்வில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம் ஆற்றிய உரை}
(தாமதமாகப் பதிவு செய்யப்பட்டது என்றாலும் தோழர் பாலசுந்தரம் அவர்கள் உரையில் குறிப்பிட்டுச் சுட்டிக்காட்டிய சில விஷயங்கள் நடந்துள்ளது என்பதால் – இப்பதிவு வலையேற்றப்படுகிறது)

Tuesday, November 8, 2011

அணுசக்தியை மக்கள்சக்தி தோற்கடிக்கும் - பாலசுந்தரம், மாநிலச் செயலர், இகக (மா-லெ)


இந்தியாவின் கவனத்தை திருப்பியுள்ள இடிந்தகரை மக்கள் போராட்டத்திற்கும் சிறப்பாக வழி நடத்திக் கொண்டிருக்கும் தலைவர்களுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) மத்திய, மாநிலக் கமிட்டிகள் சார்பாக எனது புரட்சி வாழ்த்துகளை போராட்ட ஒருமைப்பாட்டை தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்கள் போராட்டங்களைக் கண்டு மன்மோகன் ஆட்சி அஞ்சுகிறது. ஆதிவாசிகளின் போராட்டங்களைக் கண்டு அஞ்சுகிறது. நொய்டா விவசாயிகளின் போராட்டத்தைக் கண்டு அஞ்சுகிறது. ஊழலுக்கெதிரான போராட்டங்களைக் கண்டு அஞ்சுகிறது. கூடங்குளம் அணு உலையை மூடவேண்டும் என்று போராடி வரும் இடிந்தகரை போராட்டத்தைப் பார்த்தும் அஞ்சுகிறது.
அதனால்தான் பிரதமர் மன்மோகன் கூடங்குளம் அணு உலையிலிருந்து மின்சாரம் கிடைப்பது தடைபடுமானால் தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சி பாதிக்கப்படும் என்று மாநில அரசாங்கத்தை அச்சுறுத்துகிறார்! இடிந்த கரைப் போராட்டம் தொழில் வளர்ச்சிக்கு எதிரான போராட்டம் என்று கூறுகிறார். தொழில் வளர்ச்சிக்காக மக்கள் மடிவது பற்றி கவலைப்படக்கூடாது என்கிறார்.
இடிந்தகரை போராட்டம் இந்தியாவின் போராட்டம் என்று எமது கட்சி கூறுகிறது. இவ்வாறு சொல்வது, ஏதோ எதுகை மோனைக்காகவோ உங்களை உற்சாகப் படுத்துவதற்காகவோ சொல்லப் படுவதில்லை. உண்மை, முற்றிலும் உண்மை. நிலம், வனம், இயற்கை வளங்கள், மனித உழைப்பு அனைத்தையும் வளர்ச்சி, முன்னேற்றம் என்ற பேரால் ஒழித்துக்கட்டுவதை எதிர்த்து இந்தியாவெங்கும் மக்கள் போராடி வருகிறார்கள். இடிந்தகரையிலும் போராடி வருகிறார்கள்.
தொழில் வளர்ச்சி பாதிக்கப் படும் என்று அச்சுறுத்தும் மன்மோகன் ஆட்சியைப் பார்த்து, தொழில் வளர்ச்சியை விட மக்கள் பாதுகாப்பே முக்கியம்; கூடங்குளத்திலிருந்து அணு உலையை அப்புறப் படுத்திட வேண்டுமென்று முதலமைச்சர் கூறியிருக்கவேண்டும். சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய முதலமைச்சர் அப்படிக் கூறியிருக்கவேண்டும். அப்படிக் கூறியிருந்தால் நமக்கு நம்பிக்கை பிறந்திருக்கும்.
இடிந்தகரை போராட்டத்தை ஆதரிப்பதாக கூறும் கட்சிகள், தலைவர்கள் ஒரு விசயத்தை திரும்பத் திரும்பக் கூறுகிறார்கள். மக்களின் அச்சத்தைப் போக்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இன்றைய முதல்வரும் இதைத்தான் கூறுகிறார். நேற்றைய முதல்வரும் இதையேதான் கூறுகிறார். வருங்கால முதல்வர் என்று சொல்லிக் கொள்வோரும் இதையே கூறுகிறார்கள். இடிந்தகரை போராட்டம், அச்சத்தால் எழுந்த போராட்டம் என்கிறார்கள். இது மிகவும் தவறான கருத்து. மோசடியான கருத்து. அச்சம் என்பது, இல்லாத ஒன்றை இருப்பதாக எண்ணிக் கொள்வதால் ஏற்படுவது. அறியாமையால் ஏற்படுவது. அதனால்தான அவ்வையார் அச்சம் தவிர் என்றார். அச்சமில்லை, அச்சமில்லை என்றான் பாரதி.
இங்கு நடனமாடிய பள்ளி மாணவிகள், அச்சமில்லை, அச்சமில்லை என நடனமாடினார்கள். இடிந்தகரை போராட்டம் அச்சத்தால் எழுந்த போராட்டமல்ல. அறிவால் எழுந்த போராட்டம் . அனுபவத்தால் எழுந்த போராட்டம். வரலாறு தெரிந்ததால் எழுந்த போராட்டம். நெருப்பு சுடுமென்பதை தொட்டுதான் தெரிந்து கொள்ளவேண்டுமா? சுனாமி தமிழ்நாட்டின் கடற்கரையோரங்களை சின்னபின்னமாக்கியதை மறந்தா விட்டோம்? அணுசக்தி என்றாலே அழிவுகரமானது என்பதை ஹிரோஷிமா, நாகசாகி, புகுஷிமா, செர்னோபில் கூறுவதை மனித சமூகம் எப்படி மறந்துவிட முடியும்? அச்சமில்லை, அச்சமில்லை என மாணவிகள் ஆடிய நடனம், அச்சத்தால் எழுந்த போராட்டம் என்று பேசுகிறவர்கள் முகத்தில் அறைகிற நடனம்.
இடிந்தகரை போராட்டத்திற்கெதிராக, விஞ்ஞானிகள் பேசுகிறார்கள். எஸ்.கே ஜெயினையும் பானர்ஜியையும் இறக்கிவிட்டிருக்கிறார் மன்மோகன், பாவம்! மக்கள் உணர்ச்சிவசப்பட்டு போராடுகிறார்கள் என்று கூறுகிறார்கள். அறிவியல் படிப்படியாக மக்களிடம் எடுத்துச் செல்லப்படவேண்டும் என்று சொல்கிறார்கள். நமது போராட்டக் குழுவினர் மன்மோகன்சிங்கை சந்திக்கச் சென்றார்கள். அப்போது பிரதமர் எதுவும் பேசவில்லை. அவரைச் சுற்றியிருந்த விஞ்ஞானிகள் மட்டுமே பேசியிருக்கிறார்கள். கூடங்குளம் அணு உலைக்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி விளக்கியிருக்கிறார்கள்.
அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த நமது போராட்டக்குழுத் தலைவர், அதெல்லாம் சரி, அணு உலையிலிருந்து வரும் புளுட்டோனியம் கழிவை (இது அணுகுண்டு தயாரிக்கப் பயன்படுத்துவது) என்ன செய்வீர்கள்? எப்படி பாதுகாப்பீர்கள்? என்று கேட்டிருக்கிறார். அது ஒன்றும் பெரிய விசயமில்லை. அதை கல்பாக்கம் உலையில் மறு சுழற்சி செய்வோம். பிறகு அது ஒரு கிரிக்கெட் பந்து அளவுக்குதான் இருக்கும். அதை ஒரு கண்ணாடிப் பெட்டியில் வைத்துக் கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார். ஏன் அதை இவர்கள் ஆளுக்கொன்றாக தங்கள் சட்டைப் பையில் வைத்துக் கொள்ளவேண்டியதுதானே? இவர்களெல்லாம் விஞ்ஞானிகள்! தேசத்திற்காக துரும்பைக்கூட இழக்காத விஞ்ஞானிகள்! இந்த தேசத்தையேக் கட்டி எழுப்பிய மக்களைப் பார்த்து இவர்கள் இழிவாகப் பேசுவதை பொறுத்துக் கொள்ள முடியாது. கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியது இது.
மக்களின் உணர்ச்சிகளைப் புரியாதவர்கள் எப்படி விஞ்ஞானிகளாக இருக்கமுடியும்? மக்களின் உணர்வுக்குப் பின்னால் உண்மை இருக்கிறது. நியாயம் இருக்கிறது என்பதைப் புரியாதவர்கள எப்படி விஞ்ஞானிகளாக இருக்கமுடியும்?
ரஷ்ய அணு உலைக்கெதிராக அமெரிக்கா போராட்டத்தை தூண்டி விடுவதாக சில அறிவாளிகள் பேசுகிறார்கள்! கூடங்குளம் அணு உலை மூடப்பட்டுவிட்டால் அமெரிக்க உள்ளிட்ட வல்லரசு நாடுகள் கொண்டுவர நினைக்கும் அணு உலைகளைக் கொண்டு வர முடியாது என்று வல்லரசுகள் அஞ்சுகின்றன. எனவே இடிந்தகரைப் போராட்டம் வல்லரசுகளுக்கெதிரான போராட்டம்.
மூட்டை மூட்டையாக லஞ்சம் கொடுத்து மன்மோகன் சிங் அரசாங்கம் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தில் வெற்றி பெற்றது. இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தைக் காப்பாற்றிக் கொள்ள மோசடி செய்து அரசாங்கத்தைக் காப்பாற்றிக் கொண்டது. கண்டலிசா ரைஸ் நவம்பர் 1ந்தேதி வெளியிட இருக்கும் தனது புத்தகத்தில் மன்மோகன்சிங்கையும் நட்வர்சிங்கையும் இந்தியா-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடவைத்ததாக கூறுகிறார். அமெரிக்கா கவலைப்படுகிறது. இந்தியாவில் அதிக அளவில் அணு உலைகளை தொடங்க திட்டமிட்டுள்ள அமெரிக்கா கவலைப்படுகிறது. இடிந்தகரை போராட்டம், இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை நார் நாராய் கிழித்துப் போட்டிருக்கிறது. இடிந்தகரை போராட்டம் அமெரிக்கஇந்திய அணு சக்தி ஒப்பந்தத்திற்கெதிரான போராட்டம்.
ஜி 20 மாநாட்டின் போது பிரணப் முகர்ஜியையும் மன்மோகன்சிங்கையும் பார்த்து உலகப் பெருமுதலாளிகளின் அரசாங்கங்கள் கேட்டன. ‘கூடங்குளம் அணுஉலை விசயத்தில் என்ன செய்யப் போகிறீர்கள்?‘ இடிந்தகரை போராட்டம் உலக முதலாளிகளை கவலைப் படச்செய்துள்ளது. இடிந்தகரை போராட்டம் உலகமுதலாளிகளுக்கெதிரான போராட்டம். உலகமயத்திற்கெதிரான போராட்டம்.
கூடங்குளம் அணு உலை பற்றி எப்போது பேசப்பட்டதோ அப்போதே அதற்கான எதிர்ப்பும் உருவாகி விட்டது. மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சி அப்போதே எதிர்ப்பு தெரிவித்து இயக்கம் நடத்தியது. தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறது. இங்கு நாங்கள் உங்கள் முன்பு நின்று கொண்டிருக்கும் இன்று மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சி தமிழ்நாடு முழுவதும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு நாள் நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கிறது. இங்கு வருவதற்கு முன்பு நெல்லையிலே ஆர்ப்பாட்டத்தை நடத்திவிட்டுத்தான் புறப்பட்டோம். கோவையிலே தொழிலாளர் வர்க்கம் அணிதிரண்டு எதிர்ப்பு தெரிவிக்கின்றது. அந்த கூட்டத்திலே எமது கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் குமாரசாமி பேசுகிறார்.
கூடங்குளத்தில் மட்டுமல்ல ஜைதாபூர், கல்பாக்கம், கைகா உள்ளிட்ட இந்தியா முழுவதும் அணு உலைகள் கூடாது என எமது கட்சி இயக்கம் நடத்தி வருகிறது. தொடர்ந்து நடத்தும். இங்கு நடக்கும் போராட்டம் இந்தப் பகுதி மக்களுக்கான போராட்டம் மட்டுமல்ல. இந்தியா முழுவதுக்குமான போராட்டம். இந்தியாவுக்கான போராட்டம். அணு ஆபத்து இல்லாத இந்தியாவிற்கான போராட்டம். விடுதலைப் போராட்டத்தில் பல தியாகிகள் நமது நாட்டை விடுவிக்கப் போராடினர். பகத்சிங், வாஞ்சிநாதன், வ.உ.சி, திருப்பூர் குமரன், சுந்தரலிங்கம், பூலித்தேவன் இன்னும் பலர் சுதந்திர இந்தியாவிற்காகப் போராடினர். அணு ஆபத்து இல்லாத அழகான இந்தியாவிற்காகப் போராடுகிறோம். நமது போராட்டத்தில் நாம் வெற்றி பெறுவோம். நாம் மட்டுமே வெற்றிபெறுவோம்!
இது உங்கள் போராட்டம் என்றார்கள். இது நமது போராட்டம். நமக்கான போராட்டம். நமது இறையாண்மைக்கான போராட்டம். போராடுகிறவர்கள் சிறியவர்கள்; போராட்டத்தை வாழ்த்துகிறவர்கள் பெரியவர்கள் என்பது இல்லை. போராடுகிறவர்களே பெரியவர்கள். ஆகப் பெரியவர்கள். போராட்டத்தைக் கொச்சைப் படுத்துகிறவர்கள் சிறியவர்கள். மிக மிக மிகச் சிறியவர்கள். கீழ்த்தரமானவர்கள். தூசிலும் கீழானவர்கள்.
அணு உலை பாதுகாப்பானது; எந்தவிதமான அச்சத்துக்கும் அவசியமில்லை என்று முதலமைச்சர் வாக்குறுதி அளித்தார். என்ன நடந்ததோ தெரியவில்லை! சில நாட்களிலேயே சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தார்! மக்களின் தீவிரமான வீரஞ்செறிந்த போராட்டம் மாநில அரசாங்கத்தை பணியவைத்தது. உள்ளாட்சி தேர்தலின் போது உங்களுடன் ஒருத்தியாக இருப்பேன் என்றார். உள்ளாட்சி தேர்தல் முடிந்து 10 மாநகராட்சிகளையும் அதிமுக பிடித்துள்ளது. 125 நகராட்சிகளுள் 89 நகராட்சிகளைப் பிடித்துள்ளது. இன்னும் பேரூராட்சிகள், ஒன்றியங்கள், மாவட்டப் பஞ்சாயத்துகளையும் பெரும்பான்மையாகப் பிடித்துள்ளது. இந்த அனைத்து இடங்களிலும் கூடங்குளம் அணு உலையை நிரந்தரமாக மூடவேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றச் சொல்லி உத்தரவு போடலாமே? நாங்கள் வெற்றிபெற்றுள்ள உள்ளாட்சி அமைப்புகளில் முதல்தீர்மானமாக இத்தீர்மானத்தை நிறைவேற்ற இருக்கிறோம்.
மூன்று மாத காலமாக நடந்து கொண்டிருக்கும் போராட்டம் பல வகையிலும் சிறப்பான போராட்டமாகும். மீனவர், தொழிலாளர்கள், விவசாயிகள், வியாபாரிகள், மாணவர்கள் என அனைத்துப் பிரிவினரும் ஒன்று சேர்ந்து சிறப்பான ஒற்றுமையுடன் போராடிக் கொண்டிருக்கிறீர்கள். மத்திய, மாநில ஆட்சிகள் இறங்கி வந்ததற்கான காரணம் இந்த ஒற்றுமைதான். தேவாலயம், மசூதி, கோவில் என்ற பாகுபாடின்றி போராடி வருகிறீர்கள். பல துன்பங்களைத் தாங்கிக் கொண்டு போராடுகிறீர்கள். தியாகங்கள் செய்து போராடுகிறார்கள். மனம் தளராமல் போராடுகிறீர்கள். தொலைக் காட்சியில் பார்க்கிறோம், மாணவர்கள் சொல்கிறார்கள். பள்ளிக்கு போகாதது கஷ்டம்தான். ஆனால் எங்களால் எப்படியும் படித்து முன்னேறிவிட முடியும். நாங்கள் உயிரோடு இருக்க வேண்டுமே அதற்காகத்தான் போராடுகிறோம் என்கிறார்கள். இதுதான், இந்த உறுதிதான் ஆட்சியாளர்களை அஞ்சச்செய்கிறது.
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு இயக்கம் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொள்ளும் மக்கள் இயக்கமாக மாறியுள்ளது. இந்த இயக்கத்தை எத்தகைய அவதூறாலும் அடக்குமுறையாலும் தோற்கடிக்க முடியாது. அணுசக்தியை மக்கள்சக்தி தோற்கடிக்கும். மக்கள் வெல்வார்கள். மக்கள் மட்டுமே வெல்வார்கள். மக்கள் விரோதிகள் தோற்பார்கள். இன்குலாப் ஜிந்தாபாத்!
(இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் அக்டோபர் 30 அன்று நடத்திய கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு நாள் அன்று இடிந்தகரையில் போராடி வரும் மக்கள் மத்தியில் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம் பேசியது.)

Monday, October 10, 2011

‘அச்சு ஊடகமும் – ஊடக அச்சும்‘ கருத்தரங்கம் – மதிகண்ணன்

       
       ஜனநாயகத்தின் நான்காவது தூண் என முன்பொரு நாளில் அறிவிக்கப்பட்டு, ஜனநாயகத்திற்கு எதிரான சக்திகளின் கைகளில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கக்கூடிய வெகுஜன ஊடகத்தின் ஒரு பகுதியான பத்திரிகைகள் - அவற்றின் வாசகப் பயன்பாடு, வாசகர் எண்ணிக்கை, வாசகர் தரம் என வாசகர்தளத்திலும்; உள்ளடக்கம், அரசியல், வெளிப்பாடு என ஆசிரியத்தளத்திலும்; தாள், அச்சு, வண்ணம், கட்டு என தொழில்நுட்பத்தளத்திலும்; விலை, விற்பனை, விளம்பரம், லாபம் என வணிகதளத்திலும்; என தளவாரியாகவும், அவற்றின் உபபிரிவுகளாகவும் இன்றைய பத்திரிகைகளைப் பல்வேறுவிதமாகப் பிரிக்க முடிந்தாலும் வெகுஜன இதழ்கள், புலனாய்வு இதழ்கள் என சந்தைப் பொருளாக நிற்கும் இருபெரும் பிரிவுகளை மட்டும் எடுத்துக்கொண்டு அவற்றின் மீதான பார்வையை ஒரு முன்வைப்பாகக் கொண்டு கலந்துரையாடல்வழி, ஒருங்கிணைக்கப்பட்டது ‘மாவிபக‘வின் ‘அச்சு ஊடகமும் – ஊடக அச்சும்‘ கருத்தரங்கம்.

ஒவ்வொரு தனிநபரும் தான் நினைப்பது யாருக்கும் தெரியாமலாவது வெளியில் சொல்லிவிடும் துடிப்புடன் இருக்கிறார். இதில் ஆண், பெண், திருநங்கை என பால்பேதமொன்றும் இல்லை. இந்தத் துடிப்பிற்கு வடிகாலாய் அமைபவை வலைப்பூக்கள். தமிழகத்தில் மின்னஞ்சல் முகவரி கொண்டோரில் 70 விழுக்காட்டினர் தங்களுக்கென குறைந்தது ஒரு வலைப்பூவையாவது சூடிக்கொண்டிருக்கின்றனர். (எனக்கு அஞ்சு இருக்கு என்பவர்களும் உண்டு) அதில் அவர்கள் என்னதான் பகிர்ந்து கொள்வார்கள் என்பது மிகவும் சுவாரஸ்யமான அவசியம். ஆனாலும் அது அலுப்பூட்டும் அனாவசியம்.

தவிர்க்க முடியாத பகிர்வுவெளியாய் விரியும் வலைப்பூக்கள், தரவுகளை ஒலி, ஒளி, மொழி வடிவில் தரும் வலைத்தளங்கள். முகம்காட்ட விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நாம் உறுப்பினராய் உள்நுழைந்திருக்கும் முகப்புத்தகம், டுவிட்டர் உள்ளிட்ட சமூக மின்னணு வலைப்பின்னல்கள் இவற்றைப்பற்றியும் நம்முடைய உரையாடலைத் தொடங்க வேண்டியது காலத்தின் கட்டாயம். வலைத்தளத்தின் வலையில் விழாதவர்களோ அல்லது வலைத்தளத்தில் வலைவிரிக்கத் தெரியாதவர்களோ ‘மின்னணு சமூக அறிவிலிகள்‘ எனும் சூழலில் இணையம் தொடர்பான தொடக்க நிலைக்கட்டுரையும் முன்வைக்கப்பட்டது.
2011 அக்டோபர் 9 ஆம் நாள் அருப்புக்கோட்டை ராஜாபிரஸ் மாடியில் நடைபெற்ற இக்கருத்தரங்கத்தையும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற படைப்பரங்கத்தையும் தோழர் கேகே ஒருங்கிணைத்தார். அரங்கிற்கு வந்திருந்தவர்களை தோழர் அருண் கருத்தரங்கப் பொருள் குறித்த முன்னறிமுகத்துடன் வரவேற்றார்.

தோழர் கேகேயின் ‘இன்றைய சூழலும் கருத்தரங்க உள்ளடக்கத்தின் தேவையும்‘ குறித்த முன்னுரையைத் தொடர்ந்து தோழர் கருப்புவின் ‘வணிகமயமான வெகுஜன இதழ்கள்‘ என்ற கட்டுரையை தோழர் ரமேஷ் வாசித்தார். தொடர்ந்த விவாதம் வெகுஜன இதழ்கள், அவற்றின் தொடக்க காலத்தன்மையில் இருந்து தடம்புரண்ட வரலாற்றை அலசி ஆராய்ந்தது. பல்சுவை இதழ்களுக்கான தன்மையில் இருந்து அவை தடம்புரண்டதையும்; நடுத்தர வர்க்கமும், தொடக்கநிலை வாசிப்போரும் எளிதில் அணுகக்கூடிய நிலையில் இருக்கின்ற இவற்றின் திசைமாறிய போக்கு குறித்த வருத்தம் கலந்துரையாடலில் வெளிப்பட்டது.

தொடர்ந்து ‘புலன் ஆயும் புலனாய்வு இதழ்கள்‘ என்ற தலைப்பில் தோழர் சுப்புராயுலு தன்னுடைய உரையை முன்வைத்தார். இன்றைய புலனாய்வு இதழ்களின் தொடக்கம் ‘தராசு‘ என நாம் நினைத்தாலும், அன்றைய ‘இந்து நேசனின் குணாம்சங்கள்‘ கொண்டதாகவே இவ்விதழ்கள் இருப்பதாகக் குறிப்பிட்டார். புலனாய்வு என்ற பெயரில், அடுத்தவர் வீட்டில் எட்டிப்பார்க்கும் மனப்பிறழ்வான மனோநிலைக்குத் தீனிபோடுபவையாக இவ்விதழ்கள் இருந்தாலும்; எந்தப் பத்திரிகையிலும் வராத, அதிகார வர்க்கம் மறைக்க நினைக்கின்ற சில விஷயங்களை இதுபோன்ற இதழ்களே வெளி உலகிற்குக் கொண்டு வருகின்றன. இவ்விதழ்கள் புலனாய்வு இதழ்கள் என அறியப்பட்டாலும் இவற்றில் புலனாய்வுத் தன்மை குறைவாக இருக்கிறது. ஆனால் பரபரப்பிற்கு இவை முக்கியத்துவம் கொடுக்கின்றன. இவற்றின் சந்தை. மாதாந்திர மத்தியதர வர்க்கத்தைக் குறிவைத்திருப்பதால், அவர்களின் உணர்வுகளுக்கான செய்திகளும், செய்திக் கட்டுரைகளும், விளம்பரங்களும் இவற்றில் நிரம்பியிருக்கின்றன. இப்படிப் பலவிதமான நேர், எதிர்ப் பார்வைகள் கொண்டதாக பரபரப்பு இதழ்கள் தொடர்பான கலந்துரையாடல் அமைந்தது. பல்சுவை இதழ்கள் சில புலனாய்வு இதழ் தொடங்கியிருப்பதன் பின்னால் இருக்கும் வணிக ரகசியத்தையும் ஒருங்கிணைப்பாளர் தோழர் கேகே சுட்டிக்காட்டினார்.


‘வலை விரிக்கும் வலைப் பதிவுகள்‘ என்ற தலைப்பிலான தன்னுடைய கட்டுரையை தோழர் ஜெயகணேஷ் முன்வைத்தார். கட்டுரையைத் தொடர்ந்த விவாதத்தில் திண்ணை தொடங்கி இன்று அடுப்பங்கரை(?) வரையிலான பல வலைத்தளங்கள் பற்றிய கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன. பல்சுவை இதழ்கள், பரபரப்பு இதழ்கள், வலைத்தளங்கள் பற்றி ஒட்டுமொத்தமான தன்னுடைய பார்வையை தோழர் வேல்ராஜன் முன்வைத்தார். விக்கி லீக்ஸ் வலைத்தளத்தின் செயல்பாடுகள் பற்றியும் அதன் புலனாய்வுத் தன்மையில் எந்த அளவிற்குத் தரவுகள் அடிப்படையாக உள்ளன என்பது பற்றியும் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

மேலும் விக்கிபீடியா, கீற்று, மாற்றுஆன்லைன் போன்ற வலைத்தளங்களையும் மானுடவிடுதலை வலைப்பூவையும் நாம் எப்படிப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது கலந்துரையாடலில் வெளிப்பட்டது. புதிதாக மின்னணு ஊடகத்தில் புகுபவர்களுக்கான ஒருநாள் தொடக்கநிலைப் பயிற்சி 23-10-2011 ஞாயிறு அன்று அருஞ்சுனை ப்ளக்ஸ் அலுவலகத்தில் ‘மாவிபக‘வால் ஒருங்கிணைக்கப்பெறும் என்ற முடிவுடன் கருத்தரங்கம் ஒரு முடிவிற்கு வந்தது.

படைப்பரங்கில் ‘மண்ணை அரித்துச் செல்லும் பேரலைகள்‘ என்ற தலைப்பிலான வாழ்வியல் பதிவுகளை கவிதை வடிவில் தந்தார் தோழர் சுப்புராயுலு. தலைப்பிடப்படாத - வாழ்வின் அபத்தத்தையும், இறப்பின் நினைவுகளையும் முன்வைத்து தன்னால் எழுதப்பெற்ற சிறுகதையொன்றை வாசித்து ‘தகனம்‘ என்றொரு தலைப்பைப் பெற்றார் தோழர் அரும்பின் பரிமளம். ‘எம்தந்தை பெரியார்‘ ‘அடைமொழிகள்‘ ‘சிதறும் கோர்வை‘ ‘தேநீரின் சுவை‘ என நான்கு கவிதைகளின் வழியாகத் தன் திசைவழி சார்ந்த பார்வையைப் பதிவுசெய்தார் தோழர் ராஜேந்திரன். ஒருங்கிணைத்த தோழர் கேகே ‘உறுத்தலின்றிக் கழியும் பொழுதுகள்‘ என்ற தலைப்பிலான ‘தோழர் கருப்புவிற்கும், இயக்குநர் வெங்கட் பிரபுவிற்குமான‘ தன்னுடைய எண்வழிக் கவிதையை தன்வழி தந்தார். தோழர் ரமேஷின் நன்றிகூறலுடன் கருத்தரங்கமும் படைப்பரங்கமும் தன்நிறைவு கொண்டன.

Thursday, September 29, 2011

உண்மையறியும் குழு அறிக்கை


23, செப்டம்பர் 2011 அன்று மதுரை பத்திரிகையாளர் சங்கத்தில்
இகக (மா-லெ) கட்சியின் மாநில செயலாளர் பாலசுந்தரத்தால் வெளியிடப்பட்ட
உண்மையறியும் குழு அறிக்கை
·          
           காவல்துறை உயர்அதிகாரிகள் ஆய்வாளர்கள் மற்றும் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்ட   காவல்துறை தலைவர்கள் மீது வன்கொடுமை தடுப்புசட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யவேண்டும். அவர்களை பணி நீக்கம் செய்யவேண்டும்.
·                     தலித்துகளை தனிமைப் படுத்துகிற வகையிலும் இழிவுபடுத்துகிற வகையிலும் காவல்துறையின் மிருகத்தனமான வன்முறைகளை நியாயப் படுத்துகிற வகையிலும் முதலமைச்சர் சட்டமன்றத்தில் பேசியதை திரும்பப்பெற வேண்டும். சட்டமன்ற அவைக்குறிப்பிலிருந்து நீக்கப் பட வேண்டும்.
·                     தேவர் ஜெயந்தி ஆண்டு தோறும் அரசாங்க விழாவாகக் கொண்டாடப் பட்டு வரும் நிலையில் தலித் மக்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று இமானுவேல் சேகரனின் நினைவுநாள் நிகழ்ச்சியை அரசாங்க விழாவாக அறிவிக்கவேண்டும்.
·                     தலித்துகள் மீது அரசாங்க இயந்திரங்கள் தாக்குதல், வன்முறை நடத்தும் விசயங்களில் அவர்களை விசாரித்து உரிய தண்டனை வழங்கும் வகையில் வன்கொடுமை தடைச்சட்டம் 1989 விதிகள் 1995 திருத்தப்பட வேண்டும்.

1. செப்டம்பர் 11 அன்று காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூடு நடவடிக்கைகள் எதுவும் காவல்துறை சட்டங்கள், விதிமுறைகள், ஒழுங்கு விதிகளின் படி நடத்தப்படவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் கையாளப் படவில்லை. பல்வேறு ஆதாரங்கள், வாக்குமூலங்கள், நிகழ்ச்சிவிவரங்கள் அனைத்தும் உறுதிப் படுத்துவது, அமைதி, ஒழுங்கை ஏற்படுத்துவதற்கு மாறாக அச்சம், பீதியை ஏற்படுத்தும் வன்மத்துடனும் முன்முடிவுடனும் பரமக்குடியிலும் மற்ற பிற இடங்களிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.
2.      பரமக்குடி 5 முக்கு சாலையில் திரண்டிருந்தவர்களை அமைதிப் படுத்த காவல்துறை உயர் அதிகாரிகளோ மாவட்ட நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களோ முயற்சி எதுவும் எடுக்கவில்லை. மாறாக தியாகி இமானுவேல் சேகரன் பேரவையின் மாநிலத்தலைவர் சந்திரபோஸ், சாலைமறியலை கைவிடச் செய்யவும் நிலமையை கட்டுக்குள் கொண்டுவரவும் கூறிய அனைத்து ஆலோசனைகளையும் கூட காவல் துறை உயர் அதிகாரி சந்தீப் பட்டீல் முரட்டுத்தனமாக மறுத்துவிட்டார். இதன்மூலம், உயர்அதிகாரிகள் துப்பாக்கிச்சூடு நடத்துவதையே குறியாகக் கொண்டிருந்தது உறுதியாகிறது. கூட்டத்தைக் கலைப்பதற்கு தண்ணீர் பீச்சியடிப்பதற்கென்று நிறுத்தப்பட்டிருந்த வஜ்ரா வாகனம் பயன்படுத்தப்பட வில்லை. கலைப்பது நோக்கமல்ல, சுடுவதே நோக்கம் என்பது தெளிவாகிறது.
3.      தடியடியும் துப்பாக்கிச்சூடும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டிருக்கிறது. எனவே தடியடி பயனளிக்காமல் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்ற காவல்துறை கூற்றும் முதலமைச்சரின் அறிக்கையும் உண்மைக்கு மாறாக உள்ளன. துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டவர்கள் பலர், நெற்றியிலும், மார்பிலும் வயிற்றிலும் குண்டுபாய்ந்து பலியாகி உள்ளனர். இது கூட்டத்தைக் கலைப்பதற்கு நடத்தப்படும் துப்பாக்கிச்சூடாக அல்லாமல் குறி பார்த்து சுட்டு உயிரைப்பறிக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்டிருக்கிறது.
4.      ஐந்து முக்கு சாலையில் திரண்டிருந்தவர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது எனும் காவல்துறை கூற்று உண்மைக்கு புறம்பானது. மாறாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட பின்னரே திரண்டிருந்தவர்கள் கல்வீசுவது போன்ற எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். கூட்டம் சிதறிய பின்னரும் துப்பாக்கிச் சூடு மாலை வரை பலமுறை  நடத்தப் பட்டிருப்பதும் 5 முக்கு சாலை சந்திப்பை மாலைவரை காவல்துறை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததும் இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு யாரும் செல்ல முடியாது என்ற நிலமையை ஏற்படுத்துவதற்கென்றே செய்யப்பட்டிருக்கிறது. *மாலை 4 மணிக்கு மேல் இரண்டுஇளைஞர்கள் பிடிக்கப் பட்டு கொல்லப் பட்டிருக்கின்றனர் என்பதை நேரடி சாட்சியங்கள் உறுதிப் படுத்துகின்றன. இவர்கள் காவல் துறையினரால் அடித்தோ அல்லது சுட்டோக் கொல்லப் பட்டிருக்கின்றனர் என்பதும் தங்களைக் காத்துக்கொள்ள, பொதுமக்களை காக்க, வேறுவழியின்றி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக காவல்துறையும் சட்டமன்றத்தில் முதலமைச்சரும் கூறியதும் தவறு என்பது நிரூபணமாகிறது.
5.      ஜான்பாண்டியனுக்கு முதலில் அனுமதி அளித்துவிட்டு பின்னர் கைது செய்து தடுத்து நிறுத்தியதற்காக கூறப்படும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. அவரது பயணப்பாதையையும் நேரத்தையும் முன்கூட்டியே முடிவு செய்து போதிய போலிஸ் காவலுடன் அவரது வருகையை சச்சரவற்ற ஒரு நிகழ்ச்சியாக நடத்தியிருக்கமுடியும். மாறாக நினைவு நிகழ்ச்சிக்கு கூடியிருப்பவர்களை ஆவேசமடைய செய்யவும் ஆத்திர மூட்டுவதற்காகவுமே ஜான்பாண்டியனது வருகை தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. பரமக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சற்றேறக்குறைய அதே நேரத்தில், 25-30 பேர்கள் மட்டுமே கூடியிருந்த மதுரை சிந்தாமணியிலும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கிறது! இவை அனைத்தும் பரமக்குடியை நோக்கி அணிதிரள்பவர்களை ஆங்காங்கே தடுத்து திருப்பி அனுப்புவது, தலித் சமூகத்தினரை ஆத்திரமூட்டுவது, துப்பாக்கிச்சூடு நடத்தி இமானுவேல் சேகரன் நினைவஞ்சலி நிகழ்ச்சியை தடுத்து நிறுத்துவது என்ற முன்முடிவுடன் செய்யப்பட்டிருக்கிறது.
6.      தனியாக சிக்கியவர்களை, குண்டடிபட்டவர்களை, பலியானவர்களை, பலியானவர்களின் உறவினர்களை காவல்துறை நடத்தியவிதம் மனிதத் தன்மையற்ற கொடூர சம்பவங்களாகவே உள்ளன. தனியாக சிக்கிய முதியவர்கள் பலரும் கொடூரமாக அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால் இருவர் பலியாகி இருக்கிறார்கள். 20 பேர் கூடிய இடத்தில் 200 பேர் மீது வழக்கு, 500 பேர் கூடிய இடத்தில் 1000க்கு மேற்பட்டோர் மீது வழக்கு, இரவு நேர தேடுதல் வேட்டை போன்ற அடக்குமுறை நடவடிக்கைகள் தொடருகின்றன. இவை பரமக்குடியை சுற்றியுள்ள தலித் இளைஞர்கள், தலித் அமைப்புகளைச் சேர்ந்தவர்களை நிரந்தரமான அச்சத்தில் ஆழ்த்தவும் அடுத்தடுத்து அணிதிரளாமல் செய்யவுமான திட்டத்துடன் செய்யப்பட்டு வருகிறன்றன.
7.      துப்பாக்கிச்சூடு, தடியடி, உள்ளிட்ட அனைத்தையும் உள்ளூர் போலிசே முன்னின்று நடத்தியுள்ளனர். ‘அனுபவம் வாய்ந்தவர்கள்’ என்று கூறப் படுவோரான, கடந்தகாலத்தில் சாதிய பாரபட்சத்துடன் தலித்துகள்மீது வன்முறை நடத்திய அனுபவம் உள்ள அதிகாரிகள் செந்தில்வேலன், இளங்கோ, சிவக்குமார் போன்றவர்களின் தலைமையிலேயே அனைத்தும் நடந்துள்ளன.    
8.      உள்துறைப் பொறுப்பை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர், லட்சக் கணக்கான தலித் மக்கள் சம்பந்தப்பட்ட உணர்ச்சிபூர்வமான இந்த விவகாரத்தில் பொறுப்பற்ற முறையிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்காமலும் முழுக்க முழுக்க காவல் துறையிடம் விட்டு விட்டதாகவே தெரிகிறது. காவல்துறை உயர் அதிகாரிகள், ஆட்சித்தலைவர்களின் கூட்டத்தை முன்கூட்டியே கூட்டி அமைதி குலையாமல் இருக்கவும், இமானுவேல் சேகரன் நினைவுநாள் நிகழ்ச்சி அமைதியாக நடக்கவும் உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். மாணவர் பழனிக் குமார் திட்டமிட்ட கொலை, இமானுவேல் சேகரன் குருபூஜை நிகழ்ச்சியை தடுக்கும் நோக்கத்துடன் ஆப்பநாட்டு மறவர் சங்கம் நடத்தியக்கூட்டம் இவற்றை முன்கூட்டியே அறிந்து உரிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கத்தவறியுள்ளது. மாறாக, நினைவுநிகழ்ச்சியை சீர்குலைக்க விரும்புவோரது திட்டத்தை நிறைவேற்றுகிற வகையில் அனைத்தும் அரங்கேறுவதற்கு காவல்துறைக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளது.


பரிந்துரைகள்:

1.      தலித் மக்களின் அச்சத்தைப் போக்கி அவர்களிடம் நம்பிக்கையைக் கொண்டுவரும் வகையில், செப்டம்பர் 11 அன்று பரமக்குடிக்கு அழைக்கப்பட்டிருந்த சந்தீப் பட்டீல் உள்ளிட்ட காவல்துறை உயர்அதிகாரிகள் ஆய்வாளர்கள் மற்றும் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்ட மாவட்ட காவல்துறை தலைவர்கள் மீது வன்கொடுமை தடுப்புசட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யவேண்டும். அவர்களை பணி நீக்கம் செய்யவேண்டும். இந்த மாவட்டங்களைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்யவேண்டும். அரசாங்கம் அறிவித்துள்ள ஓய்வு பெற்ற நீதிபதியைக் கொண்ட ஒரு நபர் கொண்ட விசாரணைக் கமிஷனுக்குப் பதிலாக பணியிலுள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் பல உறுப்பினர்கள் கொண்ட விசாரணைக்கமிஷன் அமைத்திட வேண்டும். செப்டம்பர் 11 நிகழ்வை ஒட்டி, முதலமைச்சர் பொறுப்பிலுள்ள உள்துறை அமைச்சகத்தின் செயல்பட்டவிதம் குறித்தும் விசாரணைக் கமிஷன் விசாரிக்க வேண்டும்.
2.      தலித்துகள் வன்முறையாளர்கள், கலவரக்காரர்கள், இனக் கலவரத்தை தூண்டுபவர்கள் என்றவகையில் தலித்துகளை தனிமைப் படுத்துகிற வகையிலும் இழிவுபடுத்துகிற வகையிலும் காவல்துறையின் மிருகத்தனமான வன்முறைகளை நியாயப் படுத்துகிற வகையிலும் முதலமைச்சர் சட்டமன்றத்தில் பேசியதை திரும்பப்பெற வேண்டும். சட்டமன்ற அவைக்குறிப்பிலிருந்து நீக்கப் பட வேண்டும்.
3.      மருத்துவமனைகளில் உள்ளவர்களுக்கு உயர்மருத்துவ வசதியை அரசே தன் முழுப்பொறுப்பில் செய்திட வேண்டும். சிறையிலுள்ள அனைவரையும் உடனடியாக விடுதலை செய்திட வேண்டும். அடக்குமுறை, அச்சுறுத்தல் நோக்கத்துடன் பெண்கள் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்டோர் மீது போடப் பட்ட வழக்குகளைத் திரும்பப்பெற வேண்டும். போலீஸ் தேடுதல் வேட்டை காரணமாக இருவர் இறந்துள்ள நிலையில் இது போன்ற தேடுதல் வேட்டைகளை உடனடியாக நிறுத்திட வேண்டும்.
4.      நேர்த்திக் கடனாக நாக்கை வெட்டிக் கொண்ட தனது கட்சிக்காரப் பெண்ணுக்கு ரூ 5 லட்சமும் அரசாங்கவேலையும் வழங்கும் அளவுக்கு ‘தாராள’ மனது படைத்த முதலமைச்சர், காவல்துறை துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள் குடும்பத்திற்கு ஒரு லட்சம் அளித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. பழனிக்குமார் உள்ளிட்ட அனைத்துக் குடும்பங்களுக்கும் ரூ 25 லட்சமும் அரசாங்க வேலையும் அளித்திடவேண்டும். தலித் மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வரும் பச்சேரி கிராமத்தில் உள்ள ஆரம்ப பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக உயர்த்திட வேண்டும். புதிய சாலை அமைத்து தர வேண்டும். வேலை இல்லாமலிருக்கும் அந்த கிராம மக்களுக்கு 100 நாள் வேலைத் திட்டத்தில் உடனடியாக வேலை வழங்கிடவேண்டும்.
5.      ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 144 தடை உத்தரவை ரத்து செய்யவேண்டும். கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்ட ஜனநாயக நடவடிக்கைகளை அனுமதிக்கவேண்டும். தலித் அமைப்புகளின் தலைவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் நுழைவதற்குள்ள தடையை நீக்க வேண்டும்.
6.      தேவர் ஜெயந்தி ஆண்டு தோறும் அரசாங்க விழாவாகக் கொண்டாடப் பட்டு வரும் நிலையில் தலித் மக்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று இமானுவேல் சேகரனின் நினைவுநாள் நிகழ்ச்சியை அரசாங்க விழாவாக அறிவிக்கவேண்டும்.
7.      ‘‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என்ற கோட்பாட்டின்படி அரசாங்கம் இயங்குவதாக சொல்லப்படுகிறது. ஆனால் தலித்துகள் மீதான அரசாங்க வன்முறையும் காவல்துறை வன்முறையும் (கொடியங்குளம், தாமிரபரணி, பரமக்குடி) அதிகரித்து வரும் நிலையில் காவல்துறையினர், அரசாங்க அதிகாரிகள் கடுமையாக தண்டிக்கப்படுவது அவசியம். எனவே தலித்துகள் மீது அரசாங்க இயந்திரங்கள் தாக்குதல், வன்முறை நடத்தும் விசயங்களில் அவர்களை விசாரித்து உரிய தண்டனை வழங்கும் வகையில் வன்கொடுமை தடைச்சட்டம் 1989 விதிகள் 1995 திருத்தப்பட மத்திய/மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்த ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) உண்மை அறியும் குழு செப்டம்பர் 19-20 தேதிகளில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டது. 700 கிலோமீட்டர்களுக்கு மேலாக பயணம் மேற்கொண்ட குழு, பலியானவர்கள் அனைவரது குடும்பத்தினர், பொதுமக்கள், தலித் அமைப்புகளின் தலைவர்கள், காவல்நிலையங்கள், மாவட்டக் காவல்துறை, மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், சம்பவம் நடந்த இடங்கள் அனைத்தையும் பார்வையிட்டு கருத்தறிந்தது. கட்சியின் மாநிலச் செயலாளர் பாலசுந்தரம் தலைமையில் சென்ற குழுவில், டி.சங்கரபாண்டியன் (எஅய்சிசிடியு மாநிலத் துணைத்தலைவர்), ஆவுடையப்பன் (அனைத்திந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலக் குழு உறுப்பினர்), திவ்யா (அகில இந்திய மாணவர் கழக மாநிலக் குழு உறுப்பினர்), சி.மதிவாணன் (மதுரை மாவட்டச் செயலாளர்), ஜீவா (சிவகங்கை மாவட்டப் பொறுப்பாளர்), கே.ஜி.தேசிகன் (ஒருமைப்பாடு ஆசிரியர்குழு உறுப்பினர்) ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

Tuesday, September 20, 2011

மதுரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) ஆர்ப்பாட்டம்

துப்பாக்கி சூடு நடத்திய அதிகாரிகள் மீது வன்கொடுமை சட்டத்தின்  கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

2011 செப்டம்பர் 16 ஆம் நாள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிபிஐ எம்எல் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது. பரமக்குடி, இளையான்குடி மற்றும் மதுரையில் தலித்துகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஐ எம்எல் கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.மதிவாணன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய சிபிஐ எம்எல் கட்சியின் மாநிலச் செயலாளர் மாற்றம் தந்த மக்களுக்கு மரணம் அளித்த ஜெயலலிதாவின் அரசே திட்டமிட்ட முறையில் தலித்துகள் மீது தாக்குதல் நடத்தியது என்று கூறினார். தாக்குதலுக்குப் பின்பு சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் தலித்துகளின் மீது பழிபோடும் வகையில் அவதூறாகப் பேசியதைச் சட்ட மன்றக் கூட்டக்குறிப்பிலிருந்து நீக்குவதன் மூலம் திரும்பப் பெற வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

தலித்துகள் தங்களின் ஒன்று சேர்வதற்கும் உரிமை கோருவதற்கும், அவர்கள் விரும்பும் தலைவர்கள் பின்னால் அணி திரள்வதற்கும் உரிமை இருக்கிறது. எந்தவித தூண்டலும் இல்லாமல் துப்பாக்கிச் சூடு நடந்திருக்கிறது. தலித்துகள் அணி திரள்வதைப் பொறுக்க முடியாத அரசின் செயல் ஜனநாயக விரோதமானது என்று அவர் குறிப்பிட்டார்.

ஆர்ப்பாட்டத்தில் ஒடுக்கப்பட்டோர் விடுதலை முன்னணி அமைப்பாளர் சிம்சன், பாமக விவசாயப் பிரிவின் மாநில துணைச் செயலாளர் காதை முருகன் ஆகியோரும் உரையாற்றினர்.


ஆர்ப்பாட்த்தில் பின்வரும் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
·         பரமக்குடியிலும் மற்ற பல இடங்களிலும் சாதிய காழ்ப்புணர்ச்சியுடன் துப்பாக்கிச் சூடு நடத்தி 7 பேர்களைக் கொன்ற காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் காவலர்களைப் வன்கொடுமை சட்டத்தின் படி பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பணியிலிருக்கும் நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும்.
·         தலித்துகளை வன்முறையாளர்கள், கலவரக்காரர்கள், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள், பொது மக்களுக்கு ஆபத்தானவர்கள் என்று அவதூறாகவும் காவல்துறை அத்துமீறல்களை ஆதரித்தும் பேசியுள்ள முதலமைச்சரின் கருத்தை சட்டமன்றத்திலேயேத் திரும்பப் பெற வேண்டும்.
·         பள்ளி மாணவன் பழனிக் குமாரைக் கொன்றவர்களை உடனடியாக கைது செய்! தலித்துகளின் பாதையை மறிப்பது (மண்டல மாணிக்கம்) போன்ற வன்கொடுமைக் குற்றங்களில் ஈடுபடுபவர்களைக் வன்கொடுமை சட்டத்தின்படி கைது செய்ய வேண்டும்.
·         கைது செய்யப்பட்டுள்ள  தலித் இளைஞர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்! அச்சுறுத்தி அராஜகம் செய்யும் காவல்துறையை தலித் பகுதிகளில் இருந்து திரும்பப்பெற வேண்டும்.
·         கொல்லப் பட்டவர்கள் குடும்பத்துக்கு இழப்பீடாக குறைந்த பட்சம் 10 லட்சமும் காயமுற்றவர்களுக்கு குறைந்த பட்சம் 5 லட்சம் வழங்கிடு! அத்துடன் கொல்லப்பட்டவர்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலை வாய்ப்பும் வழங்க வேண்டும்.
(செய்தி  அனுப்பியவர் சி.மதிவாணன் - மாவட்ட செயலாளர்)