Monday, February 20, 2012

விளையாட்டு - பிரேமா மனோகர்


சதுரப் பலகையில்
எந்தப் பக்கம் நகர்ந்தாலும்
தப்பிக்க முடிவதில்லை
கலைக்கப்பட்டு, விரட்டப்பட்ட காய்களால்.

ஏதாவதொரு கைக்கடியில்
சிக்கி விளிம்பிற்கு
நகர்த்தப்பட்ட பின்பு
புத்திசாலித்தனமாய்
எல்லாக் காய்களும்
வீழ்த்தப்பட்டு விடும்.

ஓடி ஓடி ஒளிந்தாலும்
குழிக்குள் வீழ்வதென்பது
இறுதியில் நடந்தே விடுகிறது.
கூட்டத்திலிருந்து தனிமைப்படும் காய்களும்
சிவப்புக்காயும் தான் முதலில்
குறிவைக்கப்படுபவை.
சிவப்புக்காயும் ஒதுக்கப்பட்ட பின்பு
விளையாட்டு சுலபமாகி விடுகிறது.

ஆடுவதென்னவோ பலமிக்க
நான்கு ஜோடி கைகள் தான்
ஆட்டுவிக்கப் படுவதோ எண்ணற்ற காய்கள்.
வெறி பிடித்த கொலைக் கைகளின்
கட்டுப்பாட்டிற்குள் வரும் காய்கள்
வீழ்வதைத் தவிர
வேறு வழியிருக்கிறதா என்ன?

எல்லாக் காய்களும்
வெட்டப்பட்ட பின்பே
கைகளின் வெறி அடங்கும்.

இங்கு கைகள் கைகள் மட்டுமல்ல
காய்கள் காய்களுமல்ல.
(ஆழக்குழி தோண்டாதவரை)

(2012 பிப்ரவரி 18ஆம் நாள் அருப்புக்கோட்டையில் மாவிபக நடத்திய படைப்பரங்கில் வாசிக்கப்பெற்ற கவிதை)

No comments:

Post a Comment