Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Tuesday, February 7, 2012

பிரதமர் சுட்டிக் காட்டிய சுரண்டல் - வீரா


தேசிய கிராமப்புற வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் மாநாடு 2012 பிப்ரவரி தொடக்கத்தில் டெல்லியில் நடைபெற்றது. மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய திருமிகு சோனியா காந்தி அவர்கள் “இத்திட்டத்தில் ஊழலை அனுமதிக்க முடியாது“ என்று எச்சரித்தார். மாண்புமிகு பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் “இத்திட்டத்தை கிராம வளர்ச்சிக்கான மாதிரித் திட்டமாக மாற்றுவதற்காக, கடுமையான நிதிச்சுமைகளுக்கு மத்தியிலும் ஆண்டுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீடு செய்து வருகிறது. ஆனால், இத்திட்டத்தை முழுமையாக அமல்படுத்தாமல் சுரண்டுவது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது“ என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். (தினத்தந்தி 03/02/2012 – மதுரைப் பதிப்பு)
‘கிராமப்புறங்களில் வேலையற்றிருக்கும் ஏழைக்குடும்பம் ஒன்றிற்கு நாளொண்றிற்கு தலைக்கு நூறு ரூபாய் கூலி வீதம் நூறு நாள்களுக்கு வேலை‘ என்றிருக்கும் திட்டத்தில் - கிராமப்புற அடித்தட்டு மக்களின் கூலியைச் சுரண்டி, அன்றாடங் காய்ச்சிகளான அவர்களின் அடிமடியிலேயே கைவைக்கின்றது ஊழல் என்றால், மற்ற திட்டங்களின் செயல்பாட்டு நேர்மை குறித்து நாம் எப்படிப் புரிந்து கொள்வது. (நூறு ரூபாய் கூலியும் முழுவதுமாய் கிடையாது. அதற்கும் அளவு இருக்கிறது. ‘உழைக்காத யாருக்கும் ஊதியம் கிடையாது‘ என்று விளம்பரம் தந்த காசில் ஒழுங்காக கூலி கொடுத்திருக்கலாமே, என்பன போன்ற  பழைய விஷயங்கள் எல்லாம் நினைவிற்கு வருகின்றன.)
திருமதி சோனியா காந்தி அவர்களின் கூற்றுப்படி இத்திட்டத்தில் ஊழலை அங்கீகரிக்க முடியாது என்றால், மற்ற திட்டங்களில் ஊழல் செய்து கொள்ளுங்கள் என்று பொருளா? ஊழலை அங்கீகரிக்கும் திட்டங்கள் எவை? எவை? என்ற பட்டியல் விரையில் வெளியிடப்படலாம். இத்திட்டத்தில் சுரண்டல் இருப்பதாக பிரதமரும் ஒப்புக் கொள்கிறாரே! மத்திய அரசின் நிதியில் / பொறுப்பில் நடைபெறும் திட்டத்தில் ஊழல், சுரண்டல் என்றால் யார் பொறுப்பேற்பது? தார்மீகப் பொறுப்பேற்க வேண்டியவர்களான மத்திய அரசின் சூத்ரதாரிகளே சொல்கிறார்கள் திட்டத்தில் சீர்திருத்தம் தேவை என்று.
கட்டாயமாக சீர்திருத்தம் தேவைதான். நூறுநாள்கள் வேலை என்பது ஆண்டு முழுவதும் வேலை என்று மாற்றப்பட வேண்டும். குறைந்தபட்சம் 200 நாள்களாவது வேலை உறுதிசெய்யப்பட வேண்டும். ஆறுநாள்கள் வேலை பார்த்தவர், ஏழாம் நாள் (விடுமுறை எடுத்துக்கொண்டு) வேலைக்கு வராமல், எட்டாம் நாள் வேலைக்கு வரும்போது ஏழாவது நாளினை வாரவிடுமுறை நாளாகக் கணக்கிலெடுத்துக் கொண்டு அந்த நாளுக்கும் கூலி தரவேண்டும். நூறு ரூபாய் கூலி என்பது இருநூறு ரூபாயாக மாற்றப்பட வேண்டும். புவியியல் மாறுபாடுகள் கொண்ட தமிழக நிலப்பரப்பில் வேலையின் அளவைத் தீர்மானிப்பதைத் தவிர்த்து, பருவநிலையைக் கணக்கிலெடுத்துக் கொண்டு வேலை நேரத்தைத் தீர்மானிக்க வேண்டும். இத்திட்டத்தைக் கண்காணிக்க சுழற்சி முறையிலான உள்ளூர் உழைக்கும் மக்கள் கண்காணிப்புக் குழுக்கள் உருவாக்கப்பட வேண்டும்.  இப்படிப்பட்ட சீர்திருத்தங்களைச் செய்தால் மாண்புமிகு பிரதமர் சொல்வதுபோல் அவர் சும்மாக்காச்சும் சொல்லியிருந்தாலும்கூட, இத்திட்டம் ‘கிராம வளர்ச்சிக்கான மாதிரித் திட்டமாக மாறும்‘ ஊழலும், சுரண்டலும் இல்லாமல் போவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இப்படியும் செய்யலாம். அல்லது...
இதிலேயும் எப்படியாவது ஊழல் செய்யலாமே? அப்படி இதில் ஊழல் நடந்தால் அதை உள்ளூர் பாலு விசாரிக்கலாமா? அல்லது லோக்பாலுதான் விசாரிக்கணுமா? இதனை விசாரிக்க லோக் பாலுக்கு அதிகாரம் இருக்கிறதா? என்று சும்மா, சும்மா பேசிக்கொண்டேயும் இருக்கலாம். அப்புறம் அதையும் மீறி எதுவும் நல்லது நடந்துறாம பாராளுமன்றத்துல பாத்துக்கலாம்.
உழைக்கும் மக்கள் நல விஷயங்களில் பின்னதற்கே வாய்ப்பு அதிகம். அதன்பின்னர் சிலநேரங்களில் அது திட்டமாக மாறலாம். ஆனால் இதுவே முதலாளிய அதிலும் பன்னாட்டு முதலாளிய நல விஷயங்கள் என்றால் எந்தச் சத்தமும இல்லாமல் அவை (இரண்டு அவைகளிலும் – அல்லது இரண்டு அவைகளுக்குமே தெரியாமலும்கூட) நிறைவேறிவிடும் - வெறும் திட்டஙகளாக அல்ல. சட்டங்களாகவே. தயவு செய்து நம்புங்கள் நாம் வாழ்வது உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில்தான்.

Sunday, February 5, 2012

சாதாரணனுக்குப் புரியாத மின்வெட்டு மர்மம் - வீரா

“6 மணி நேரம் 7 மணி நேரம் மின்சார வெட்டில் தமிழகம் சிக்கித் தவிக்கிறது. இதைச் சரிசெய்ய ஒரு துரும்பைக்கூட எடுத்துப்போடவில்லை தமிழக அரசு. சென்னை, திருச்சி நகரங்களில் ரூ.100 கோடியில் சுற்றுலா பூங்கா என்ன வேண்டிக்கிடக்கு?“ என ஒரு கேள்வி எழுப்பப்படுகிறது.
“மின்வெட்டைப் போக்க தமிழக அரசு ஏதும் செய்யவில்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது! கூடங்குளம் அணுமின் திட்டம் துவங்கப்படாமல் இழுத்துக் கொண்டு போவதில் தமிழக அரசும் தன்னாலான ‘பங்களிப்பை‘ச் செய்துகொண்டுதானே இருக்கிறது“ என பதில் சொல்லப்படுகிறது.
இது ஏதோ பேச்சுவார்த்தைக்குச் சென்ற கூடங்குளம் அணுஉலை எதிரப்பு போராட்டக் குழுவினரைத் தாக்கிய இந்து முன்னணி, இ.காங்கிரஸ்காரர்களின் பதில் என்றோ, கேள்வியின் மையத்தை விட்டுவிட்டு துணை எழுத்துக்களுக்கு விளக்கம் சொல்லும் தி.மு.க. தலைவரின் பதில் என்றோ, துக்ளக் பத்திரிகையில் வந்த சோ.ராமசாமியின் பதில் என்றோ முடிவுக்கு வரவேண்டாம்.
கடலூர் இரா.இராஜேந்திரன் கேள்விக்கு இளமதியின் பதில். (2012 ஜனவரி செம்மலர்) 123 ஒப்பந்தம் தொடர்பாக இந்தியாவில் அனைவருமே இரண்டு அணிகளாகத் திரண்டபோது, உலைக்கு எதிரணியில் இருந்த இளமதி இப்போது அணுஉலை (கூடங்குளத்திற்கு மட்டும் அல்லது ரஷ்ய இறக்குமதி அணுஉலைகளுக்கு மட்டும்) ஆதரவு அணியில் முனைப்புடன் இருப்பதற்கு காரணங்கள் இருக்கலாம். இருக்கட்டும்.
123 ஒப்பந்த விவாத காலத்திலும் தமிழகத்தில் மின்வெட்டு இருந்தது. ‘மின்தடை இல்லாத தமிழகம் அமைய 123 ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்துப் போட்டே ஆகணும். இந்த கம்யூனிஸ்ட் கட்சிக்காரங்கதான் தடுக்குறாங்க. அதனால மின்தடைக்குக் காரணம் கம்யூனிஸ்ட் கட்சிகள்தான்‘ என்று அணுஉலை ஆதரவு / 123 ஆதரவு அணி பிரச்சாரம் செய்தது.
மக்களும் அதை நம்பியபோது ‘சாதாரண மக்களுக்குப் புரியவில்லை‘ என்றார்கள். சரிதான். ஆனால் இப்போது இளமதியில் பதிலின் வாயிலாக போராட்ட அவதூறுப் பிரச்சார அணி மாறியிருப்பது தெரிகிறது. அன்றைக்கும் இன்றைக்கும்  உரையாடல் ஒன்றாக இருந்தாலும் ஆட்களின் இடம் மாறியிருக்கிறது. மின்வெட்டுக்கு அணு உலை எதிர்ப்பாளர்கள்தான் காரணம் என்பது போலவும், கூடங்குளம் அணு உலை திறக்கப்பட்டால் தமிழகத்தில் அணைக்கவே முடியாத அளவிற்கு ஒளிவெள்ளம் பாயும், மின்வெட்டே இருக்காது என்பது போலவும் இருக்கிறது இளமதியின் பதில். இப்போதும் சொல்கிறார்கள் ‘சாதாரண மக்களுக்குப் புரியவில்லை‘ என்று. நமக்கும் ஒண்ணும் புரியமாட்டேங்குது.
அது சரி நானும் சாதாரணன்தானே. ‘சலவை‘ செய்யப்பட்ட பரிசுத்தன் இல்லையே.

Monday, January 9, 2012

தொடரும் உரையாடல்களின் வழி உதிரும் சொற்பிம்பங்களின் நிஜங்கள் - மதிகண்ணன்

முக்கித் தக்கிச் சொன்ன முதல் வார்த்தையான அம்மாதொடங்கி, திக்கித் திணறிச் சொல்லும் கடைசி வார்த்தையான அம்மாவரையிலும் இடைநிலையில் நாம் பயன்படுத்திய வார்த்தைகள் அனைத்தையும் பொருள் புரிந்துதான் பயன்படுத்தியிருக்கிறோமா? இந்தக் கேள்விக்கு ஆம்என பதில் சொல்வதில் யாருக்குமே சிக்கல் இருக்கத்தான் செய்கிறது. சொற்கள் பொருள் பொதிந்தவை. நாம் அவற்றை ஏதோ ஒரு பொருளில் பயன்படுத்துகிறோம். நாம் நினைக்கின்ற ஒன்றை வெளிப்படுத்துவதற்காக ஏதோ ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகிறோம். அது சில நேரங்களில் நாம் நினைத்த பொருளை வெளிப்படுத்தாமல் போகலாம். நினைத்ததற்கு எதிரான பொருளையும்கூட வெளிப்படுத்தலாம். அது பொருள் பொதிந்த சொல்லின் பிழையல்ல. சொல்லுக்குள் எப்படி தனியாக பொருள் பொதியும் என சிலர் வரிந்து கட்டிக் கொண்ட பேனாவைத் திறப்பது (கீபோர்டில் கைவைப்பது) தெரிகிறது. பொருள் பொதிந்த சொல் என்ற பதப்பயன்பாடு நாம் முன்னரே நிறைய பொருள்களை பொதிய வைத்த சொல்என்ற புரிதலில்தான். மொத்தத்தில் சொற்கள் அனைத்துமே வெறும் பிம்பங்கள்தான். பயன்பாடு தொடர்பானதே அவற்றின் அர்த்தச் செரிவு. தொடரும் உரையாடல்களின் வழி உதிரும் சொற்பிம்பங்களின் நிஜங்கள் நமக்குத் தெரிந்தால் நாம் சொல்லுகின்ற எந்த விஷயத்திலும் நாம் எதிர்பார்க்காத கோணத்தில் இருந்து பிரச்சனைகள் கிளம்ப வாய்ப்பில்லை. பிம்பங்களில் மயங்கிக் கெட்டவர்கள் நாம். அது வார்த்தை என்றாலும் சரி, வாழ்க்கை என்றாலும் சரி. இருந்தாலும் முயற்சி செய்வோம். நாம் தொடரும் உரையாடல்களின் வழி உதிரும் சொற்பிம்பங்களின் நிஜங்களைத் தெரிந்து கொள்ள.
கடந்த ஆண்டு (2010) செப்டம்பர் 14 ஆம் நாள் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் கருப்பு எம்ஜிஆர்விஜயகாந்த் நம்ம நாட்டுல எமர்ஜென்சி கொண்டுவந்தாத்தான் எல்லாம் சரியாகும்என்று தன்னுடைய அற்புதமான கருத்துச் செறிவான வார்த்தைகளை உதிர்த்தார். எமர்ஜென்சிக்குக் பின்னதான 1977 பாராளுமன்றத் தேர்தலில் எமர்ஜென்சியைக் கொண்டுவந்த இந்திரா காங்கிரசுடன் கூட்டணி வைத்து, நேருவின் வாரிசுகான இந்திரா காந்தியும், சஞ்சய் காந்தியும் அவரவர் தொகுதியில் தோற்றபோதும் தென்மாநிலங்களில் ஒன்றான தமிழகத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான பாராளுமன்ற இடங்களை பெற்றுத் தந்த ஒரிஜினல் சிவப்பு எம்ஜிஆரின் உடன் இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் இப்போது விஜய்காந்தின் அரசியல் ஆலோசகராக அவருடனே இருக்கிறார். அவரிடமாவது ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம். அது என்ன நெருக்கடிநிலை? எத்தகைய சூழ்நிலையில் ஒரு நாட்டில் எமர்ஜென்சி கொண்டு வரப்படும்? இந்தியாவில் எதற்காக எமர்ஜென்சி கொண்டு வரப்பட்டது?’ அதையெல்லாம் விட்டுவிட்டு நெருக்கடிநிலை தேவைஎன அவசரமாய்ச் சொல்ல வேண்டிய நெருக்கடியானநிலை அவருக்கு ஏன்தான் வந்ததோ?
தேநீர்க்கடைகளில் பலநேரங்களில் தொடரும் உரையாடல்களின் ஊடே வடை விலை ஒரு ரூபாய் கூடியதற்காக வெள்ளைக்காரன் மறுபடி வந்தால்தான் எல்லாம் சரியாய் வரும்என்ற அடிவருடி வார்த்தைகளையும், தேநீர் விலை ஐம்பது காசு கூடியதற்காக ராணுவ ஆட்சி வந்தால்தான் எல்லாம் சரிப்பட்டு வரும்என்ற அதிரடி வார்த்தைகளையும் ‘தேசிய பானம்‘ தேநீரை சாலையோரக் கடைகளில் குடிக்கும் யாரும் பலமுறை கேட்டிருக்கலாம்.
எப்படிப்பட்ட அடக்கு முறை வந்தாலும் எனக்கு எந்தப்பாதிப்பும் ஏற்படாது. நான் அடக்குமுறை அதிகாரத்திற்கு விசுவாசமான அடிமையாக இருப்பேன்என்கிற மனோபாவம்தான் இப்படியான தேநீர்க்கடைத் தொண்டர்களின் வார்த்தைகளுக்கும், தேமுதிகவிற்கு மட்டுமல்லாது (நாம் கொண்ட கோபத்தின் பலனால்) இன்று சட்ட மன்ற எதிர்க்கட்சிக்கும் தலைவராகவும் இருக்கக்கூடிய விஜய்காந்தின் வார்த்தைகளுக்கும் காரணம். என்று மடியும் இந்த அடிமையின் மோகம்?’
பொதுவாக உலகின் எல்லா நாடுகளிலும் நெருக்கடிநிலையை நடைமுறைப்படுத்துவதற்கென்றே அந்தந்த நாடுகளில் அரசியலமைப்பில் சட்டரீதியான சில ஒழுங்குகள் உள்ளன. அந்நிய ஆக்கிரமிப்பினால் ஏற்படுகின்ற போர்ச்சூழல் மற்றும் நடைமுறை; சுனாமி, புயல், உள்நாட்டுப் போர் போன்ற பேரிடர்களால் அதீத அழிவுகளை நாடு சந்திக்கின்ற சூழல்... போன்ற தேசிய ஆபத்துள்ள சூழல்களில் உள்நாட்டுக் குழப்பங்களைத் தவிர்ப்பதற்காக, நாட்டின் இறையாண்மையைக் காப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படுவதே நெருக்கடிநிலைஅல்லது அவசரநிலை’. இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலும் இக்கட்டான சூழ்நிலையில் நாட்டின் இறையாண்மையைக் காப்பதற்காகவென்றே விதி உள்ளது. மேதகு குடியரசுத்தலைவர் இந்திய அரசியலமைப்புச் சட்ட விதி எண் 352ன்படி நெருக்கடிநிலையை அறிவிப்பார்.
அப்படிப்பட்ட சூழல் நிலவிய இந்திய சீனப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த 1962ஆம் ஆண்டிலும், இந்திய பாகிஸ்தான் போர் நடைபெற்றுக்கொண்டிருந்த 1971ஆம் ஆண்டிலும் போர்முடிகின்ற காலம் வரையிலும் முழு இந்தியாவிற்குமாக நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு நடைமுறையில் இருந்தது. இந்த இரண்டு காலங்களிலும் அறிவிக்கப்பட்டிருந்த, நடைமுறைப்படுத்தப்பட்ட நெருக்கடிநிலைபற்றிப் பொதுவாக எந்தச் சர்ச்சையும் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எழுந்ததில்லை. இந்தியாவில் நெருக்கடிநிலை காலம் என்றால் அது 1975ல் இந்திராகாந்தி நடைமுறைப்படுத்திய நெருக்கடிகாலம்தான். இந்த நெருக்கடிநிலை அறிவிப்பைச் செய்தவர் ஐந்தாவது குடியரசுத் தலைவராக அன்றிருந்த பக்ருதீன் அலி அகமது அவர்கள். சட்டத்திற்கு உட்பட்டு அன்றைய அமைச்சரவையின் எழுத்துப்பூர்வமான ஒப்புதலோடு ஆறுமாதங்களுக்கு அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலை அதன்பின்னர் பாராளுமன்ற ஒப்புதலுடன் ஆறு ஆறு மாதங்களுக்காக மூன்று முறை நீட்டிக்கப்பட்டது. வழக்கமான நெருக்கடி நிலை காலத்தில் உள்ளதுபோல் மக்களின் அடிப்படை உரிமைகள் இந்த நெருக்கடி நிலைகாலத்திலும் இல்லாதிருந்தன. ஆனால் வழக்கத்திற்கு மாறாக மக்களின் உயிர் வாழ்வதற்கான உரிமையும்கூட இந்த நெருக்கடிநிலை காலகட்டத்தில் பறிக்கப்பட்டது.
நெருக்கடி நிலை காலகட்டத்தில் கேரளாவைச் சேர்ந்த மாணவர் ராஜன் காணாமல் போய் ஆள் கொணர் மனுமூலமாக அவர் கொலை செய்யப்பட்டார் என்பது தெரிய வந்தபோது, தலைமை நீதிபதி ஹான்ஸ் ராஜ் கண்ணா அவர்களின் அரசியலமைப்புச் சட்டம் 21ல் குறிப்பிடப்பட்டுள்ள உயிர் வாழ்வதற்கான உரிமையையும் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுதல் என்ற நெருக்கடிநிலைக் காலத்திற்கு அரசு நீட்டிக்கிறதா?’ என்ற கேள்விக்கு சட்டத்திற்குப் புறம்பாக உயிர்பறிக்கப்பட்டாலும், நீதிமன்றங்கள் உதவமுடியாதுஎன்ற அட்டர்னி ஜெனரலின் பதில் அன்றைய நிலையை நமக்கு உணர்த்தும். ராஜன் கொலை பற்றிய விபரங்கள் அவரது தந்தையால் ஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள்என்ற நூலாக (மொழிபெயர்க்கப்பட்டு தமிழிலும்) வந்துள்ளது.
நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்ட 1975 ஜூன் (25ஆம்நாள், புதன்கிழமை இரவு) 26 ஆம் நாள் முதல் அது நடைமுறையில் திரும்பப்பெறப்பட்ட 1977 மார்ச் 23 ஆம் நாள், புதன்கிழமை வரை ஒட்டு மொத்த இந்தியாவும் இந்திராவின் கட்டுப்பாட்டில் இருந்தது. இதில் கடைசி இரண்டு மாதங்கள் தேர்தல் அறிவிக்கப்பட்ட காலம் என்பதால் சிறிது மாற்றம் இருந்தது. நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்ட மறுநாள் தலைநகர் டெல்லியில் தேசிய முதலாளிகளான டாட்டாவும்- பிர்லாவும், டால்மியாவும்- சிந்தியாவும், சிங்கரேணிகளும் என ஒட்டுமொத்த முதலாளிகளும் ஊர்வலமாகச் சென்று திருமதி இந்திராவுக்கு நன்றி செலுத்தினார்கள். முதலாளிகளின் இந்த ஊர்வலமே நமக்கு உணர்த்தும் இந்த நெருக்கடிநிலை யாருக்குச் சாதகமானது என்பதை.
நெருக்கடிநிலையின் அவலங்கள் வெளித்தெரியாதிருப்பதற்காக பள்ளி மாணவர்கள் தொடங்கி பல்கலைக் கழக மாணவர்கள் வரை அனைவருக்கும் இந்திராவின் 20 அம்சத்திட்டத்தின் சிறப்புகளை விவரிக்கும் பேச்சுப் போட்டிகள், கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்திராவின் இருபது அம்சத் திட்டம் பற்றிய நாடகங்கள் பள்ளி, கல்லூரி மாணவர்களால் நடத்த(வைக்கப்)ப்பட்டன. அப்படிப்பட்ட நாடகங்களில் நானும் என்னுடன் இன்றிருக்கும் தோழர்களில் சிலரும்கூட நடித்திருக்கிறோம் என்பதைச் சொல்வதில் எங்களுக்கு எந்தக் கூச்சமுமில்லை. சிறுவயதில் நடிப்பு ஆர்வத்திலும் ஆசிரியருக்கு நெருக்கமாக இருப்பதற்காகவும் மட்டுமே அந்த நாடகங்களில் நடித்தோம். எங்களுடைய கருத்துக்களைச் சொல்வதற்காக அல்ல. அந்த வயதில் மற்றவர்களுக்குச் சொல்லிக்கொள்ளும்படியாக அப்படி எந்தக் கருத்தும் எங்களைப் பெரிய அளவில் பாதிக்கவில்லை என்பதும்கூட கருத்துச் சொல்லாததற்கான காரணம். சொந்தக் கருத்துகள் அற்ற நாங்கள் எங்கள் ஆசிரியரின் கருத்துக்கு அடிபணிந்தோம். சொந்தக் கருத்துக்கள் இல்லாத (அப்படி ஏதும் இருந்தாலும் - வெளியிட வகையில்லா நெருக்கடிநிலையில்) எங்கள் ஆசிரியர்களும், பள்ளியும் அரசாங்கத்தின் கருத்திற்கு அடிபணிந்தார்கள். நெருக்கடிநிலையை உலகஅரங்கில் நியாயப்படுத்தும் முயற்சியை இந்திராவின் இருபது அம்சத்திட்டம் செய்தது.
இந்திராவின் இருபது அம்சத் திட்டம் சோசலிசக் கோட்பாடுகளைக் கொண்டது என அன்றைய சோசலிச குடியரசின் அதிபர் பிரஷ்னேவ் அவர்களுக்கு விளக்கப்பட்டு, அவரும் ஆம் இது சோசலிசக் கோட்பாடுகளைக் கொண்டது என்று சொல்ல நமது ரஷ்ய ஆதரவு கம்யூனிஸ்ட் கட்சியான இந்திய பொதுவுடமைக் கட்சி இந்திரா காந்தியின் நெருக்கடிக்கு எல்லா நிலையிலும் ஆதரவு தெரிவித்தது. இந்திராவா? இந்தியாவா? என ஒரு கேள்வி வந்தபோது இந்திய பொதுவுடமைக் கட்சி இந்தியாதான் இந்திரா; இந்திராதான் இந்தியாஎன தன் முழு ஆதரவை வெளிப்படுத்தி தன்னுடைய அறிவியல் பார்வையை வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டது. இந்திராவை மட்டும் அல்ல, பிரஷ்னேவையும் நம்பியது தவறு என்பதை, காலம் கடந்து, சோசலிசக் குடியரசின் சிதைவுக்குப் பின்னர் இந்திய பொதுவுடமைக் கட்சி புரிந்து கொண்டது என்பது கடந்த கால வரலாறு.
பொதுத்துறைகளை குறிப்பாக தொடர்வண்டித் துறையை சரி செய்ய... விலைவாசியை கட்டுப்படுத்த... பொதுத்துறை அலுவலகங்களைச் சரிப்படுத்த... இந்திய ஜனநாயகத்தை கட்டிக்காக்க என பல்வேறு பொய்க் காரணங்களைச் சொல்லி ஏற்கனவே குற்றுயிரும் குலையுயிருமாய்க் கிடந்த இந்திய ஜனநாயகத்தின் கழுத்தை நெருக்கடிநிலையை அறிவித்ததன் வழியாக இரும்புக்கரத்தால் இறுக்கினார் நேருவின் புதல்வி. எப்போதும் ஆளும் வர்க்கத்திற்கும், முதலாளித்துவத்திற்கும் எதிராக நிற்கக்கூடிய அரசியல்வாதிகளையும், முற்போக்கு சக்திகளையும் சிறையிலடைத்தது அவருடைய நெருக்கடி நிலை. காங்கிரசுக்கு எதிரான செயல்திட்டம் கொண்ட, எமர்ஜென்சியை எதிர்த்துக் கேள்வி கேட்ட முதலாளித்துவ கட்சிகளின் தலைவர்களையும், சில காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களையும்கூட அவரது நெருக்கடிநிலை விட்டு வைக்கவில்லை. தமிழ்நாட்டில் திரு, திருமிகு-விற்குப் பதிலாக மிசாஎன்று போட்டுக் கொள்ளும் நெருக்கடிநிலைக் கைதிகள் உண்டு, போராட்டத்தின் ஒரு பகுதி சிறையிலடைக்கப்படுதல். அது ஒரு தகுதி அல்ல என்ற உண¢ர்வுடன் பெயருக்கு முன்னாலோ, பின்னாலோ போட்டுக் கொள்ளாத இன்றும் வாழும் நெருக்கடிநிலைக் கால அரசியல் கைதிகளும் நம்மிடையே நிறைய உண்டு.
நெருக்கடிநிலைக் காலத்தில் அரசுக்கு எதிராக இவர்கள் செயல்படலாம் எனக் கருதப்படுகின்ற யாரும் சிறையில் அடைக்கப்படலாம் என்பது சட்டமாக இருந்தது. ஆனந்த மார்க், ஆர்எஸ்எஸ், மேற்கு வங்க நக்சல்பாரி எழுச்சியின் தொடர்ச்சியாக உருவான மார்க்சிய லெனினிய இந்திய பொதுவுடமைக் கட்சிக் குழுக்கள், ஜம்மா-இ-இஸ்லாமி-இ-இந்து உட்பட மத, அரசியல், புரட்சிகர சக்திகள் அவற்றின் உபஅமைப்புகள் என 22 கட்சிகள்/அமைப்புகள் தடைசெய்யப்பட்டிருந்தன. பேரணிகள், சாமிஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் போன்றவற்றிற்கு அனுமதி மறுக்கப்பட்டது. எங்கு என்ன நடக்கிறது என்பதை மக்கள் தெரிந்து கொள்ள முடியாதபடி பத்திரிகைகள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டன. அரசாங்கம் சொல்வதே மக்களுக்கான செய்தியாக இருந்தது. இந்தியாவின் நெருக்கடிகள் அனைத்திற்கும் காரணம் இந்திய மக்கட் தொகைதான் என நேருவின் பேரர், இந்திராவின் புதல்வர், சஞ்சய் காந்தி ஒரு அற்புதமான உலகப் புகழ்பெற்ற கண்டுபிடிப்பை முன்வைத்தார். அதற்குத் தீர்வாக (விருப்ப) குடும்பக் கட்டுப்பாடு என்ற பெயரில் கட்டாய அறுவைக்கு மக்கள் (காயடிப்புக்கு) உட்படுத்தப்பட்டனர். இந்த அற்புதத் திட்டத்தின் பலனை சில திருமணமாகாத இளையோரும் அனுபவித்து நாட்டிற்குச் சேவை செய்தனர் என்பது கடந்தகால மறைபொருள் வரலாறு. அவர்களில் சிலர் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் தங்களுக்கு வாரிசுகள் இல்லையே என்ற வருத்தத்துடன். பசுமைப் புரட்சியும் அறுவை மருத்துவம் இல்லாமலேயே அதைத்தான் செய்தது என்பது இன்னொரு வேதியியல் மறைபொருள் வரலாறு. இத்திட்டத்திற்கான இலட்சினையாக இரண்டு குழந்தைகள் போதும் என்ற முழக்கத்துடன் சிவப்பு முக்கோணம் அறிமுகப்படுத்தப்பட்டது. சிவப்பு முக்கோணத்தின் ஒரு பக்கம் ஆண் குழந்தைக்கு; இன்னொரு பக்கம் பெண் குழந்தைக்கு; மூன்றாவது பக்கம் அரசுக்கு; என்ற விளக்கம் தரப்பட்டது. இந்த முக்கோணத்தின் நான்காவது கோணமாக இந்திராவின் நெருக்கடிநிலை இருந்தது என்பதே உண்மை. இப்படியாக இந்தியா முழுவதும் பசுவும் கன்றும் (அன்றைய இந்திரா காங்கிரஸின் தேர்தல் சின்னம் பசுவும் கன்றும்) ஆடிக்கொண்டிருந்த ஆட்டத்தை இந்தியா கண்டு கழித்தது/கழிந்தது.
மாநிலங்களின் சட்டமன்றங்களில் தாக்கல் செய்யப்படுகின்ற பொருளாதார மசோதா உட்பட அனைத்து மசோதாக்களும் பாராளுமன்றத்தின் அனுமதி பெற வேண்டிய சூழல் ஏற்பட்டது. மாநிலச் சட்டமன்றத்தின் செயலாட்சிகள் முடக்கப்பட்டன. பாராளுமன்றத்தால் 66 புதிய சட்டங்கள் உருவாக்கப்பட்டன. அந்த 66ல் பலவும் இன்றுவரை நடைமுறையில் உள்ளன. அன்றைய இந்திய பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் அதிகப்படியாக ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது.
அன்றைய பேரரசுகளுள் ஒன்றாக இருந்த சோவியத் குடியரசில் இந்தியாவின் நெருக்கடி நிலைக்காக பிரஷ்னேவின் வார்த்தைகளில் நல்ல பெயர் வாங்கியாகிவிட்டது. இந்தியாவை உருவாக்கி 1858 முதல் 1947 வரை 90 ஆண்டுகள் ஆண்டு வந்த இங்கிலாந்திடமும் நல்ல பெயர் வாங்கி விட்டால் இந்த உலகத்தையே ஜெயித்ததாகப் பொருள் அல்லவா? அதற்காக லண்டன் பல்கலைக்கழக பேராசிரியர் டேவிட் சல்போர்னை இந்திய அரசு வரவழைத்தது. இந்திய அரசின் செலவில் அவர் நாடுமுழுவதையும் சுற்றிப் பார்த்தார். தாயகம் திரும்பும்போது இந்திய அரசால் அளிக்கப்பட்ட ஒரு மாலை விருந்திலும் பின்னர் லண்டன் பர்மிங்காம் அரங்கிலும் அவர் உரையாற்றினார். பி.கே.பிர்லா, ஆர்.கே.தவன் முன்னிலையில் நடைபெற்ற கூட்டங்களில் ஆற்றிய அவருடைய உரையின் ஒரு பகுதி.
"பி.கே. பிர்லா அவர்களே, ஆர்.கே.தவான் அவர்களே, இந்திய நாட்டின் செலவில் எங்களை வரவழைத்தீர்கள். கடந்த மூன்றுமாதமும் காஷ்மீரிலிருந்து, கன்னியாகுமரிவரை சுற்றிப்பார்க்க வாகன வசதி, உண்ண உணவு, தங்குமிடம் கொடுத்து எந்தக்குறைவுமின்றி பாதுகாத்தீர்கள். இந்த நெருக்கடிநிலை சம்பந்தமாக உலக அரங்கில் பேச வாய்ப்பும் அளித்தீர்கள். எங்களை இவ்வளவு நேர்த்தியோடு கவனித்த உங்களிடையே சில உண்மையான செய்திகளை கூறிவிடுவதுதான் எனக்கு சரியென்று படுகிறது. இந்த மாலை விருந்தில் என்னுடைய உரையை கேட்டபின்னால், நான் ஒரு நன்றிகெட்டவன் என்று நீங்கள் கருதுவீர்களேயானால், அதற்கு நான் பொறுப்பாளியல்ல.
இந்தியாவை சுற்றிப்பார்க்கும்போது எங்கும் ஓர் அசாத்தியமான அமைதியே தோன்றுகிறது. அந்த அமைதி மயானங்களில் புதைக்கப்பட்டிருக்கும் பிணங்களிடையே காணப்படும் அமைதியே. இந்திய நாட்டின் சிறைக்கூடங்கள் தேசத் துரோகிகளும், சமூகக் குற்றவாளிகளும் நிறைந்து இருக்கவேண்டியவை. மாறாக இந்தியாவின் தலைசிறந்த அரசியல்வாதிகளும் அவர்தம் இயக்கங்களும் முடக்கப்பட்டு அதன் ஊழியர்கள் பல்லாயிரமானோர் சிறைபட்டிருப்பதை காணமுடிந்தது. சிறையில் இருக்க வேண்டியவர்கள் வெளி உலகிலும், வெளிஉலகில் இருக்க வேண்டியவர்கள், சிறைக்கொட்டடியிலும் இருப்பதை என் கண்ணால் காணமுடிந்தது. இதை நான் சொல்லாமல் இருந்தால் குற்றவாளியாகி விடுவேன்..."
போர் நடைபெற்றுக்கொண்டிருந்த 1962, 1971 காலகட்டத்தில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டதற்கான காரணத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. 1975ல் எதற்காக நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது? 1967 மேற்குவங்கத்தில் நக்சல்பாரி எழுச்சியின் காரணமாக இந்தியா முழுமைக்கும் ஒரு புரட்சிகரமான சூழல் உருவாவதற்கான அசைவுகளை உணர்ந்த அரசு நக்சல்பாரி எழுச்சிக்குக் காரணமான தலைவர்களையும் தொண்டர்களையும் சட்டப்படியும், சட்டத்திற்குப் புறம்பாகவும் கொலை செய்து ஒழித்துக்கட்டிக் கொண்டிருந்தது. அரசாங்கத்தால் 1970ல் நடைமுறைப்படுத்தப்பட்ட சிறுவிவசாயத்தை அழித்தொழித்த பசுமைப்புரட்சியின் நெருக்கடி சிறுவிவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் அரசை நெருக்கடிக்கு உள்ளாக்கக்கூடிய போராட்டங்களை நோக்கி நகர்த்தியது. இப்படியான சூழலில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி 1971ல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலைச் சந்திக்க வேண்டியிருந்தது. ஆட்சி அதிகாரத்தில் இருந்த காங்கிரஸ் கட்சி ராணுவ டாங்குகள் வரையிலான அரசாங்கத்தின் ஒட்டு மொத்த சக்தியையும், அதிகாரத்தையும் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காகப் பயன்படுத்தி தேர்தலில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து ஆட்சியதிகாரத்தில் அமர்ந்த இந்திரா காந்தி பதவி விலக வேண்டும் என்று லோக் நாயக் (உலக நாயகன்) என்றழைக்கப்பட்ட ஜெயப்பிரகாஷ் நாராயணன் பீகாரில் வி.எம்.தார்குன்டேவுடன் இணைந்து அவருக்குத் தெரிந்த காந்திய அஹிம்சை வழியில் சத்யாகிரகப் போராட்டத்தைத் தொடங்கினார். எங்கு தொடங்குவது என்று தெரியாமல் நின்ற சூழலில், தொடங்கப்பெற்ற ஜெ.பி.யின் போராட்டத்திற்கு ஆதரவாக மாணவர்களும், இளைஞர்களும், சிறுவிவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும், பல்வேறு தொழிலாளர் அமைப்பினரும் திரண்டனர். (இதே காட்சியை நாம் இன்றும் பார்க்கிறோம்) இந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாக அவர் முழுப்புரட்சி என ஒரு திட்டத்தை அறிவிக்க போராட்டப் பொறி மற்ற மாநிலங்களிலும் பறக்கத் தொடங்கியது. (இந்த முழுப்புரட்சிக்கும் லியான் ட்ராட்ஸ்கி முன்வைத்த  நிரந்தர புரட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை)
1971 தேர்தலில் இந்திரா காந்தியை எதிர்த்து நின்று தோற்றுப் போன ராஜ் நரைன் அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் அரசு இயந்திரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி இந்திராகாந்தி பெற்ற வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். 1975 ஜூன் 12ஆம் நாள் அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜக்மோகன் சின்கா தேர்தலில் அரசு இயந்திரத்தை முறைகேடாகக் பயன்படுத்தியதைக் கண்டித்ததுடன், இந்திராகாந்தியின் வெற்றி செல்லத்தக்கதல்ல என்று தீர்ப்பளித்து, இந்திரா காந்தி இன்னும் 6 ஆண்டுகளுக்கு எந்தத் தேர்தலிலும் நிற்கக் கூடாதெனத் தடைவிதித்தார். நேருவின் மகளுக்கு நெருக்கடி இங்குதான் தொடங்கியது. பிரதமராகத் தொடர்வதில் நெருக்கடி, சஞ்சய் காந்தி பிரதமராவதற்கு ஜெயப்பிரகாஷ் நாராயணன் போன்றவர்களின் நெருக்கடி. இன்றைக்குச் இந்தகாந்திக்குக் கிடைத்ததுபோல், அன்றைக்கு அந்தகாந்திக்கு உலகவங்கி ஓய்வூதியம் பெறும் மன்மோகன் போன்ற விசுவாசிகள் கிடைக்காத நெருக்கடி. இப்படி ஏகப்பட்ட நெருக்கடிகள். நெருக்கடிகள் எதுவும் இந்தியாவிற்கல்ல, இந்திராவிற்கு. இந்த நெருக்கடிகளைச் சமாளிப்பதற்காக, நாற்காலியைத் தக்கவைப்பதற்காக இந்திராகாந்தி தினறிக் கொண்டிருக்கையில் அப்போதைய மேற்குவங்கத்தின் முதலமைச்சராக இருந்த சித்தார்த்த சங்கர் ராய் இந்தியாவில் நெருக்கடிநிலையை அறிவிப்பதன் மூலம் இந்த நெருக்கடிநிலைக்கு ஒரு முடிவு கட்டலாம் என ஆலோசனை வழங்கினார். இந்த ஆலோசனையை ஏற்றுக்கொண்டு இந்திராகாந்தியால் கொண்டு வரப்பட்டதுதான் ‘1975 இந்திரா நெருக்கடிநிலைப் பிரகடனம்’.
நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தலைவர்கள் கைது தொடங்குகிறது. ஜெயப்பிரகாஷ் நாராயணன், ராஜ் நரைன், மொரார்ஜி தேசாய், சரண்சிங், ஜிவட்ராம் கிருபாலனி, அடல்பிகாரி வாஜ்பாய், சத்யேந்திர நாராயண் சின்கா, சென்னை பார்த்தசாரதி போன்றவர்கள் கைது செய்யப்படுகின்றனர். அதன் பின்னர் இருந்த நிலைமைகள் எல்லாம் முன்னரே மேலோட்டமாகப் பார்த்தவைதான்.
புரட்சித் தலைவர் என அழைக்கப்பெற்ற (புரட்சித் திலகம் புரட்சித் தலைவராவதற்கு முன்னரே) உலகநாயகன் (லோக் நாயக்) ஜெயப் பிரகாஷ் நாராயணனின் சிறுநீரகக் கோளாறுக்கு, அப்படி எந்தக் கோளாறும் இல்லை எனக்கோளாறாகச் சொல்லி மருத்துவம் மறுத்து அவரை சிறையிலேயே கொலைசெய்யத் திட்டமிட்டது இ.காங்கிரஸ். அதே இ.காங்கிரஸின் பீகார் செய்தித் தொடர்பாளர் மோகன் பிரகாஷ் சமீபத்தில் ஒரு கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவரான ராகுல் காந்தி, இளைஞர்களின் நலன், தேவைகள், எதிர்காலம் குறித்து பெரும் கவலையுடனும், அக்கறையுடனும் உள்ளார். ஜெயப்பிரகாஷ் நாராயணனுக்குப் பிறகு நாட்டின் இளைஞர்கள் குறித்து அக்கறை காட்டி வரும் ஒரே தலைவர் ராகுல் மட்டுமே. நாட்டின் வளர்ச்சி, இளைஞர்களின் எதிர்காலம் குறித்து மட்டுமே பேசி வருகிறார். இது பீகார் இளைஞர்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் இளைஞர்கள் குறித்து முன்பு ஜெயப்பிரகாஷ் நாராயணன் கவலைப்பட்டார். இப்போது ராகுல் காந்தி அந்த இடத்தை நிரப்பியுள்ளார்என்கிறார். நல்ல வேலையாக ஜெ.பி. இறந்துவிட்டார்.
காந்தியைக் கொலை செய்தவர்கள் காந்திக்கு விழா எடுப்பதும், பகத்சிங்கை தீவிரவாதி என முத்திரை குத்தி அவர் தூக்குக் கயிற்றில் தொங்க ஏற்பாடு செய்தவர்கள் அவருக்கு விழா எடுப்பதும், ஜெ.பி.யைக் கொலை செய்ய முயன்றவர்கள் அவரைப் போன்றவர் எங்கள் தலைவர் என்று சொல்வதும், கணக்குக் கேட்டதற்காக கட்சியை விட்டுத் தூக்கி எறிந்தவரை, அவர் பெயர் சொன்னால் ஓட்டுக் கிடைக்கும் என்ற சூழல் வரும்போது அவர் என் நண்பர் என்று சொல்வதும் முதலாளித்துவ, எண்ணிக்கை விளையாட்டை மையப்படுத்திய தேர்தல் ஜனநாயகத்தில் சர்வசாதாரணம். ஜெ.பி. இறந்து 21 ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு பாரத ரத்னாவிருது (1999) வழங்கப்பட்டது என்பது இங்கு தேவையான ஒரு துணைத் தகவல் என நினைக்கிறேன்.
1977 ஜனவரி 23ல் தேர்தல் அறிவிக்கப்படுகிறது. தலைவர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள். தேர்தல் நடைபெற்று மார்ச் 21ல் ஜனதா கட்சி (மக்கள் கட்சி’) வென்றதாக அறிவிக்கப்பட்டு அது பொறுப்பேற்ற 1977 மார்ச் 23 வரை நெருக்கடிநிலை நடைமுறையில் இருந்தது. இந்த மக்கள் கட்சிஉருவாக்கம், செயல்பாடு, உருக்குலைவு போன்றவை பற்றித் தனியாகப் பேச நிறைய உள்ளது. மிகக்குறிப்பாக ஜெ.பி.யின் முழுப்புரட்சிக்கான போராட்டம் எதனைச் சாதித்ததோ இல்லையோ பாரதிய ஜனதாக் கட்சி என்ற மதவாத அரசியல் கட்சி இந்தியாவில் உருவாக மிகவும் உறுதுணையாக இருந்தது. இப்படியான சூழல், இன்று அன்னா அசாரேயின் போராட்டத்தில் இருப்பதாக நினைப்பவர்கள், அன்றைய நிகழ்வுகளின் தொடர் நிகழ்வுகளைக் கவனத்தில் கொள்வது நல்லது.
நெருக்கடி நிலை பற்றிய சிறு அறிமுகம் மட்டுமே இந்தப் பதிவு, ‘நெருக்கடி நிலையை அறிவித்திருக்காவிட்டால், இந்தியா சோவியத் குடியரசின் காலனியாக மாறியிருக்கும்என்று சிலர் இன்றும் தங்கள் சொந்த வலைத் தளங்களில் புலம்பிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. மொத்தத்தில் நெருக்கடி நிலைக்காலம் என்பது அன்று மட்டுமல்ல இன்று வரையிலும் ஒரு சர்ச்சைக்குரிய காலம்தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
இந்தியாவிலும் தமிழ் நாட்டிலும் கட்சி தொடங்குபவர்களுக்கு விடுதலைக்குப் பிந்தைய இந்திய வரலாறு பற்றிய ஒரு தேர்வு வைத்து அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே கட்சி தொடங்க வேண்டும் என்று சொல்லலாமா? அதற்கும் நம்மவர்கள் ஆயத்தமாகத்தான் இருப்பார்கள் எவ்வளவோ செய்யுறோம். இதைச் செய்யமாட்டமா?’ என்ற தெனாவட்டுடன். தொடரும் உரையாடல்களின் வழி உதிரும் சொற்பிம்பங்களின் நிஜங்களைப் புரிந்து கொள்ளாமையும், புரிந்துகொள்ள முயலாமையும்கூட தெனாவட்டின் வெளிப்பாடுகள்தான்.
கொடூரங்களை நடைமுறைப்படுத்துபவர்கள் கொடூரமானவர்கள்.
அத்தகைய கொடூரங்களை சகித்துக் கொண்டு அங்கீகரிப்பவர்கள் மிகக் கொடூரமானவர்கள்.
அவற்றை வேண்டி விரும்பி மீண்டும் கேட்பவர்கள் மிகமிகக் கொடூரமானவர்கள்
(நன்றி:உயிர் எழுத்து டிசம்பர் 2011)

Sunday, January 8, 2012

அரசு செயல்பட வேண்டும் – சிபிஅய் (எம்-எல்) கோரிக்கை


   தானே புயலால் ஏற்பட்ட பேரிழப்புக்கும் பெரும் துயரத்துக்கும்  அதிமுக அரசாங்கத்தின் செயலற்ற தன்மையே காரணம்!
ஆமை வேகத்தில் நடந்து வரும் துயர் துடைப்பு நடவடிக்கைகள், பெரும் துயரிலிருந்து மக்களை மீட்பதாக இல்லை, போர்க்கால அடிப்படையில் என்ற சொல்லுக்கு பொருந்துவதாகவும் இல்லை.
பாதிப்புக்கு ஆளான மக்களின் வாழ்வாதாரத்தை முழுவதுமாக மீட்டெடுக்கவும், அழிந்துபோயுள்ள விவசாயத்தை முழுவதுமாக புதுப்பிக்கவும் அரசாங்கம் உடனடி, நீண்டகால திட்டங்களை செயல்படுத்திட வேண்டும்.

24ந்தேதி முதலே புயல் பற்றிய எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டு வந்தது. புயலின் வேகம் மணிக்கு 150 கிமீ வரை இருக்குமென்று திரும்பத் திரும்ப அறிவிக்கப்பட்டு வந்தது. ஏறத்தாழ ஆறு நாட்கள் அவகாசமிருந்தும் அரசாங்கம் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் இறங்கவில்லை. மாவட்ட நிர்வாகங்களும் கடும் அலட்சியத்துடன் இருந்துள்ளன. இதுவே பெரும் இழப்புக்கும் துயரத்துக்கும் முதன்மையான காரணம்.
டிசம்பர் 30ம் தேதி அதிகாலை கோரத் தாண்டவத்துடன் புயல் கரையைக் கடந்தது. அன்று பிற்பகலில் ஆளும் கட்சியின் பொதுக் குழுக் கூட்டம், அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் புடைசூழ தடபுடலான விருந்துடன் நடந்துள்ளது. பொதுக்குழவில் கலந்து கொண்ட முதலமைச்சரோ, அமைச்சர்களோ, கட்சிக்காரர்களோ தானே புயல் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களை சின்னாபின்னமாக்கியதைப் பற்றி எதுவும் பேசவில்லை. முதலமைச்சரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தீர்மானம் நிறைவேற்றிய பொதுக்குழு புயலின் கொடுமையால் இறந்தவர்களுக்கு ஒரு இரங்கல் தீர்மானத்தை கூட நிறைவேற்றத் தயாராக இல்லை!
புயல் பற்றிய செய்தி அறிந்ததும் பொதுக்குழுவை தள்ளிவைத்துவிட்டு அமைச்சர்களையும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கட்சி நிர்வாகிகளையும் புயல் பாதித்த பகுதிகளுக்குச் சென்று துயர் துடைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு முதலமைச்சர் உத்தரவிட்டிருக்க வேண்டும். மக்களுக்கு பேரழிவை ஏற்படுத்திய தானே புயலை கண்டுகொள்ளாத முதலமைச்சர், சசிகலா புயலை சமாளிப்பதில் மட்டும் மும்முரமாக இருந்துள்ளார்!
இதிலிருந்தே அதிமுக அரசாங்கம் புயலை சமாளிப்பதற்கு, மக்களை காப்பதற்கு முன்னெச்சரிக்கை (மின்சாரத்தை துண்டித்ததை தவிர)நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. அரசாங்க இயந்திரத்தை இறக்கிவிடவில்லை என்பதும் தெளிவாகிறது.
பொதுக்குழுக் கூட்டத்தை முடித்த பிறகே அமைச்சரவையைக் கூட்டியிருக்கிறார். புயல் ஏற்படுத்திய பாதிப்புகள் தெரிந்திருந்த போதும் கூட வெறும் 150 கோடி மட்டுமே ஒதுக்கியதும் நான்கு நாட்கள் கழித்து மேலும் 750 கோடி ஒதுக்கியதும் முதலமைச்சரின் செயலின்மைக்கு எடுத்துக்காட்டு. புயல் தாக்கி 5 நாட்களுக்குப்பிறகே முதலமைச்சர் கடலூருக்கு சென்றுள்ளார் என்பது இதை மேலும் உறுதிப்படுத்துகிறது. 2004ல் பேரழிவு சுனாமி தாக்கிய போதும் இப்படித்தான் நடந்து கொண்டார்.
புயல் தாக்கி ஏழு நாட்களுக்குப்பிறகும் விழுப்புரம், கடலூர் கிராமங்கள் இருட்டில் மூழ்கிக் கிடக்கின்றன. இன்னும் குடிதண்ணீர், உணவு, தங்குவது, மருத்துவம், எதுவுமின்றி லட்சக் கணக்கான மக்கள் கடும் துன்பத்தில் உள்ளனர். மின்சாரம் முழுவதுமாக மீண்டும் கொண்டு வரப்படுமென்பதற்கு மாவட்ட நிர்வாகங்கள் எந்த உத்தரவாதத்தையும் தரத் தயாராக இல்லை.

விவசாயம் பேரழிவு !

கடலூர், விழுப்புரம், நாகை, திருவாரூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், தஞ்சை மாவட்டங்களில் 10 லட்சம் ஏக்கர் அளவுக்கு பயிர் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ஆனால் அரசாங்கம் 5 லட்சம் ஏக்கர் மட்டும் என்று கூறுகிறது. அதுபோலவே சேதமடைந்துள்ள குடிசைகள், வீடுகள், உயிரிழந்துள்ள கால்நடைகள், சாய்ந்துள்ள மின் கம்பங்கள், சரிந்துள்ள மின் மாற்றிகள், வேரோடு விழுந்துள்ள மரங்கள் இவை அனைத்து விசயத்திலும் கணெக்கெடுப்பு தவறானவை. திட்டமிட்டு குறைத்துக் காட்டப்பட்டிருக்கிறது. அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணங்களும் மிக குறைவானவை. சின்னக் குடிசையைக் கூட 2500க்கோ 5000க்கோ கட்டமுடியாது என்பது  தெரிந்திருந்தும் அரசாங்கம் இவ்வாறு அறிவித்திருப்பது ஏமாற்று வேலையாகும். நெல் பயிருக்கு ஏக்கருக்கு 10000 வேண்டுமென விவசாயிகள் கேட்கும் நிலையில் ஹெக்டேருக்கு (2.5 ஏக்கர்) 10000 என (ஏக்கருக்கு ரூ 4000 மட்டுமே)அறிவித்திருப்பது துயரமடைந்துள்ள விவசாயிகளை ஏமாற்றுவதாகும். ஆண்டுக்கு ஏக்கருக்கு 30000 வரை வருமானம் தரும் முந்திரிப் பயிர்கள் முற்றிலுமாக அழிந்து போயுள்ளன. முந்திரி (விவசாய இழப்பு ரூ 300 கோடி)மீண்டும் முந்திரி விவசாயத்தில் வருமானம் கிடைக்க 10-15 ஆண்டுகளாகும். அப்படியிருக்க முந்திரி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 3600 என அறிவித்திருப்பது புயல் ஏற்படுத்திய கொடுமையை விட பெரும் கொடுமையாகும். மூன்று லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள்! மின் சேத மதிப்பே ரூ 1000 கோடி என மதிப்பிடப் பட்டிருக்கிறது. ஆனால் மொத்த சேதத்திற்கும் ரூ 850 கோடி அரசாங்கம் ஒதுக்கியிருக்கிறது. பாதிப்பின் தீவிரத்தையும் மக்களின் பாதிப்பையும் அரசாங்கம் உணரவில்லை என்பதையேக் காட்டுகிறது.

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் விவசாயம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. குடிசை வீட்டில் வாழ்ந்த ஏழை மக்கள் அனைத்தையும் இழந்துள்ளனர். மூன்றரை லட்சம் வீடுகள் பாதிப்பு என்ற அரசாங்க அறிவிப்பும் தவறு. பல லட்சக் கணக்கான மக்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்பதற்கே இன்னும் பல மாதங்களாகும். விவசாயிகள் பெரும் கடனாளியாவார்கள். விலை வாசி கடுமையாக உயரும் வேலை தேடி வெளியேறுவது படுமோசமாக அதிகரிக்கும். ஒட்டு மொத்த பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ள நிலையில் விவசாயத்தொழிலாளர்கள், கட்டுமானத்தொழிலாளர்கள், சிறு, குறு, நடுத்தர விவசாயிகள், நகர்ப்பகுதிகளில் வாழும் அன்றாடக் கூலிகள் மிக மோசமாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.  பல லட்சக் கணக்கான மரங்கள் சாய்ந்துள்ள நிலையில் வரும் கோடைகாலம் அக்கினி சுவாலை வீசுவதாகவே இருக்கும். சுற்றுச் சூழல் மிக மோசமாக பாதிக்கப்படும்.

அதிக  நெல் விவசாயம் நடந்து வரும் விழுப்புரம் மாவட்டத்தில் நெல் பெரும் சேதமடைந்துள்ளது. முந்திரி, சவுக்கு, கரும்பு, உளுந்து. தென்னை போன்ற பயிர்களும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. புயல் பாதித்த எட்டு ஒன்றியங்களில் இன்னும் மின்சாரம், குடிதண்ணீர் வழங்கப்படவில்லை. கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன. ஏழு நாட்களுக்குப்பிறகும் அரசாங்கம் அறிவித்த நிவாரணம் வழங்கப்படவில்லை. பல்லாயிரக் கணக்கான வீடுகள், குடிசைகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஊருக்கு ஒருசில பேர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகளும் ஆளும் கட்சிக் காரர்களும் கூறுகின்றனர். ஆளும்கட்சிக்காரர்களின் குறுக்கீடு மிக அதிகமாக இருக்கிறது.

அரசாங்கம் உடனடி, நீண்டகால அடிப்படையில் பின்வரும் திட்டங்களை செயல் படுத்திட வேண்டும்.

பாதிப்பின் முழு விவரங்களையும் கணக்கெடுத்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
குடிசை வீடுகளை முழுமையாகவும் பகுதியாகவும் இழந்தவர்கள், வேறுவகையில் பாதிக்கப்பட்ட ஏழைக் குடும்பங்கள் அனைத்துக்கும் 4 மாதங்களுக்கு குறையாமல் மாதம் 50 கிலோ அரிசி, தேவையான மண்ணெண்ணய், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும். கூரை வரி, வீட்டு வரிகளை ரத்து செய்ய வேண்டும்.
கிராமங்களில் 100 நாள் வேலைத்திட்டத்தை 200 நாட்களாகவும் கூலியை 300 ஆகவும் உயர்த்தி செயல்படுத்திட வேண்டும். வேறு புதிய வேலைவாய்ப்புதிட்டங்களையும் உருவாக்கிட வேண்டும். நகர்ப்பகுதிகளிலும் புதிய வேலைவாய்ப்பு திட்டங்களை செயல் படுத்திடவேண்டும்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களின் குழந்தைகளின் கல்விச்செலவை அரசே ஏற்றுக் கொள்ளவேண்டும். முழுமையாக, பகுதியாகவோ பாதிக்கப் பட்ட குடிசை வீட்டிலிருந்த அனைத்து குடும்பங்களுக்கும் அரசு செலவில்,  வாழத்தகுதியான கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும். வரும் 5 ஆண்டுகளுக்குள் கூரை வீடுகள் இல்லாத தமிழ்நாடு என்ற நிலையை உருவாக்கிட வேண்டும்.

விவசாயிகள் பெரும் கடனாளியாவதையும் தற்கொலைக்கு தள்ளப்படுவதையும் தடுக்க முழுமையான இழப்பீட்டை (பயிர் செய்ய ஏக்கர் ஒன்றுக்கு ஆன செலவு, விளைச்சலின் மதிப்பு ஆகியவற்றை சேர்த்து) வழங்குவதோடு லட்சக்கணக்கான விவசாயிகள் விவசாயத்தை மீண்டும் தொடங்கிட விதை, உரம், பூச்சி மருந்து, விவசாயக் கருவிகள், உள்ளிட்ட முழுச் செலவையும் அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவேண்டும். நிலவரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் தள்ளுபடி செய்ய வேண்டும். அனைத்து வகை கடன்களையும் ரத்து செய்ய வேண்டும். விவசாய பம்புசெட்டுகளுக்கான மின் இணைப்பு, கம்பங்கள் துண்டிக்கப் பட்ட இடங்களில் அரசு செலவில் கம்பங்கள் நட்டு, விரைந்து மின் இணைப்பு வழங்கிட வேண்டும்.

பல லட்சக கணக்கான மரங்கள் சாய்ந்து சுற்றுச் சூழல் கடுமையாக பாதிக்கப்பட உள்ள நிலையில் பசுமை சூழலை உருவாக்க அரசு பெரும் திட்டம் ஒன்றை விரைந்து இம்மாவட்டங்களில் செயல் படுத்திட வேண்டும்.

புயல்பாதிப்பு பற்றி அறிந்த பிறகும் கூட மன்மோகன் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆட்சியில் பங்கு பெற்றுள்ள காங்கிரஸ்,திமுகவும் இதுபற்றி வாய்திறக்கவில்லை. இது கடும் கண்டனத்திற்குரியது. 2004 சுனாமி பேரழிவுக்குப் பிறகு மத்திய அரசு உருவாக்கியுள்ள பேரிடர் மேலாண்மை விதிமுறைகள் துயர்துடைப்புக்கு ஏற்றதாக இல்லை. மேலும் இயற்கை சீற்றங்களை அறிவியல் ரீதியாக தடுக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அமைப்பை உருவாக்கவும் தவறி விட்டது. பேரிடர் மேலாண்மை விதிமுறைகளை முற்றிலுமாக மாற்றி அமைக்கவேண்டும்.

முதல் சுனாமியால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் கடலூர் மாவட்டங்கள் இரண்டாவது சுனாமியாலும் கடுமையாக பாதிக்கப் பட்டிருக்கின்றன. மத்திய, மாநில அரசுகள் சிறப்பு பெருந்திட்டத்தை உருவாக்கி இவ்விரு மாவட்டங்களின் பொருளாதார-சமூக வளர்ச்சிக்கு விரைந்து செயலாற்ற வேண்டும். இல்லாவிட்டால் பெரும் வேலைஇல்லா திண்டாட்டம், பட்டினிச்சாவு, தற்கொலைகளை சந்திக்கும் அவல நிலை உருவாகும்.

30-12-2011 அன்று புதுச்சேரி, தமிழ்நாட்டின்  கடலூர், விழுப்புரம் மாவட்டங்களை தானே புயல்  மிகமோசமாக தாக்கி பேரழிவையும் பெருநாசத்தையும் ஏற்படுத்தியதை அடுத்து, 04-01-2012 அன்று மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் மாநிலச்செயலாளர் பாலசுந்தரம் தலைமையில் கட்சியின் புதுச்சேரி மாநிலச்செயலாளர் சோ.பாலசுப்ரமணியன், விழுப்புரம் மாவட்டச்செயலாளர் எம். வெங்கடேசன், கடலூர் மாவட்டச்செயலாளர் சி.அம்மையப்பன், தஞ்சை-நாகை மாவட்டச்செயலாளர் இளங்கோவன், விவசாயத்தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் டிகேஎஸ். ஜனார்த்தனன், மற்றும் கலியமூர்த்தி, தனவேல், ராஜசங்கர், கணேசன் ஆகியோர் 280 கி.மீ பயணம் செய்து பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, மக்களை சந்தித்து வந்தனர்.

(06-01-2012 அன்று விழுப்புரத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் மாநிலச்செயலாளர் பாலசுந்தரம் வெளியிட்ட அறிக்கை)