Thursday, February 16, 2012

உதைபந்தாய் உருளும் நம் வாழ்வு – சுப்புராயுலு


உலக வாழ்வுப் பரப்பில்
உதைபந்தாய் உருள்கிறோம்
காலத்தின் கால்களில்.

பிறந்த இடம் ஒன்று
வாழ்வை தக்கவைக்க இன்னோரிடம்.
முதுமையைக் கழிக்க மற்றோரிடம்.
அதோடு, சிறகு முளைத்த குஞ்சுகள்
இப்புவிப்பரப்பின் வெவ்வேறு மூலைகளில்...
வலசை போகும் பறவைகளாய்
வாழ்வு தேடிப் பறந்தோடினர்.

பள்ளிகளில், கல்லூரிகளில், சமூக வெளிகளில்
சுயம் செதுக்கி வடிவமைக்கப்பட்டு...
பின்,
யாரோ ஒரு சிலரின் விருப்பத்திற்காக
நண்பனே...
நீயும் நம் ஊர்விட்டு
இடம் பெயர்ந்தாய்.

என்மனதில் நீயும் நானும்
சேர்ந்தே மண் மணம் நுகர்ந்த
உன்னதமான தருணங்களின்
நினைவுகளை மீட்டியபடி...

நம் செழுமையான நிலவெளிகளில்
வளைந்து செல்லும் மலைப் பாம்பால்
உறிஞ்சப்பட்ட கீசாமத்தின் உயிர்ப்பை
புறநகர்ப் பகுதிகளில் துப்பிய
ஒரு இடத்தில்
என்னைப் போன்றே
முதுமையின் சுவடுகள்
உடலில் நெசவு செய்ய
உன் குஞ்சுகளைப் பற்றிய
நினைவுகளில் தோய்ந்திருக்கிறாயா?

எப்பொழுது கிழக்கு திசையில்
புதிய விடியலின் வெளிச்ச ரேகைகள்
நமக்கான வாழ்வை உறுதிப்படுத்த
வானில் புலப்பெடுமென்றே
காத்திருக்கிறேன்.
(மாவிபக பகிர்தல் கூட்டத்தில் வாசிக்கப்பெற்ற கவிதை)


No comments:

Post a Comment