Wednesday, February 22, 2012

கொடி நாள் உரை


பட்டொளி  வீசி பறக்குது மூவர்ணம்
பாதியில் தொங்குது  நாலாவது வர்ணம்
கோட்டைக்கு வெளியே அஞ்சாவது வர்ணம்
நாண்டுட்டு சாகுது விவசாயிக மானம்
அரை நூற்றாண்டு  சுதந்திரம்
கோவணத்தை உருவுது .

கம்பத்தின் கீழ் நின்னு பாரீர்
காவல்துறையின்  காமத் தீயின
வாச்சாத்தி , திருகோவிலூர்  என
ஊரு ஊரா வல்லூறு

மானம் காக்க துணியில்ல
மயிறு பிடுங்கி கட்சிகளுக்கு
வகை வகையா கலருல
கதர், மஸ்லின் , ரேயன் , சில்க் என
தினுசு தினுசா கொடிகள்

உழைச்சி ஓடாத் தேயிறோம்
முக்கால் பங்கு சனங்களுக்கு உணவுல
உள்ளம் வெந்து சாகுறோம்

உசர உசர ஏறி நின்னு
கொடி ஏத்துறான்
ஒளிரும் பாரதத்தின்
விடிவெள்ளி தினமுன்னு

ஓர குடிசைல
வயிறு ஒட்டி
ஆறுல ஒரு கொழந்த சாகுது

சண்டித்தனம்  பேசுது
மொண்டிப் பய
தேம்ஸ் நதிக்கரையில
எங்களுக்கு நாகநீரகத்தை கத்துக் கொடுத்தது
நீங்கதான்னு ...


உலகத்துக்கே   நாகநீரகத்தை கத்துக் கொடுத்தது
நாமதான்னு சாட்சியாய் நிக்குது
ஹரப்பா  மொகஞ்ச்சதரோ
செவிப்பறை கிழிய
பறையடிச்சி சொல்லுவோம்

ஏகத்தாளம் பேசுது
ஏளனம் செயுது
வெட்டிப் பய 545ம்

தடி   எடுக்குறான்
தண்டல்காரன்
என்ன விளஞ்சி கிளிச்சதுனு
வாசல் வந்து நிக்குறான்

நேத்து வரை முப்போகம்  விளஞ்சி நிலமெல்லாம்
கல்லூன்றி காத்து கெடக்கான்
ரியல் எஸ்டேட் ஓநாய்
 மிச்ச  மீதி நிலமெல்லாம்
கோட்டை ஏழுப்பி
வேலை கொடுக்குறோமுன்னு
வெட்டி ஜம்பம் பேசுறான்.

வீதியில நிக்குது
எங்கப் புள்ள
ஒண்ட  குடிசையில்லாம.

நாங்களெல்லாம் இந்நாட்டு மன்னர்களாம்
இந்தியாவின் தூண்களாம்
கோட்டையில கொடியேத்தி
முதுகுல குத்துறான்.

வறுமையை ஒழிச்சுபுட்டோம்னு
வாய் கிழிய பேசுறான்
கொடிநாள் உரையின்னு
100
கோடி  மக்களுக்கு சங்கு ஊதுறான்.

(2012 பிப்ரவரி 18ஆம் நாள் அருப்புக்கோட்டையில் மாவிபக நடத்திய படைப்பரங்கில் வாசிக்கப்பெற்ற கவிதை)

No comments:

Post a Comment