‘கிராமப்புறங்களில் வேலையற்றிருக்கும் ஏழைக்குடும்பம் ஒன்றிற்கு நாளொண்றிற்கு தலைக்கு நூறு ரூபாய் கூலி வீதம் நூறு நாள்களுக்கு வேலை‘ என்றிருக்கும் திட்டத்தில் - கிராமப்புற அடித்தட்டு மக்களின் கூலியைச் சுரண்டி, அன்றாடங் காய்ச்சிகளான அவர்களின் அடிமடியிலேயே கைவைக்கின்றது ஊழல் என்றால், மற்ற திட்டங்களின் செயல்பாட்டு நேர்மை குறித்து நாம் எப்படிப் புரிந்து கொள்வது. (நூறு ரூபாய் கூலியும் முழுவதுமாய் கிடையாது. அதற்கும் அளவு இருக்கிறது. ‘உழைக்காத யாருக்கும் ஊதியம் கிடையாது‘ என்று விளம்பரம் தந்த காசில் ஒழுங்காக கூலி கொடுத்திருக்கலாமே, என்பன போன்ற பழைய விஷயங்கள் எல்லாம் நினைவிற்கு வருகின்றன.)
திருமதி சோனியா காந்தி அவர்களின் கூற்றுப்படி இத்திட்டத்தில் ஊழலை அங்கீகரிக்க முடியாது என்றால், மற்ற திட்டங்களில் ஊழல் செய்து கொள்ளுங்கள் என்று பொருளா? ஊழலை அங்கீகரிக்கும் திட்டங்கள் எவை? எவை? என்ற பட்டியல் விரையில் வெளியிடப்படலாம். இத்திட்டத்தில் சுரண்டல் இருப்பதாக பிரதமரும் ஒப்புக் கொள்கிறாரே! மத்திய அரசின் நிதியில் / பொறுப்பில் நடைபெறும் திட்டத்தில் ஊழல், சுரண்டல் என்றால் யார் பொறுப்பேற்பது? தார்மீகப் பொறுப்பேற்க வேண்டியவர்களான மத்திய அரசின் சூத்ரதாரிகளே சொல்கிறார்கள் திட்டத்தில் சீர்திருத்தம் தேவை என்று.
கட்டாயமாக சீர்திருத்தம் தேவைதான். நூறுநாள்கள் வேலை என்பது ஆண்டு முழுவதும் வேலை என்று மாற்றப்பட வேண்டும். குறைந்தபட்சம் 200 நாள்களாவது வேலை உறுதிசெய்யப்பட வேண்டும். ஆறுநாள்கள் வேலை பார்த்தவர், ஏழாம் நாள் (விடுமுறை எடுத்துக்கொண்டு) வேலைக்கு வராமல், எட்டாம் நாள் வேலைக்கு வரும்போது ஏழாவது நாளினை வாரவிடுமுறை நாளாகக் கணக்கிலெடுத்துக் கொண்டு அந்த நாளுக்கும் கூலி தரவேண்டும். நூறு ரூபாய் கூலி என்பது இருநூறு ரூபாயாக மாற்றப்பட வேண்டும். புவியியல் மாறுபாடுகள் கொண்ட தமிழக நிலப்பரப்பில் வேலையின் அளவைத் தீர்மானிப்பதைத் தவிர்த்து, பருவநிலையைக் கணக்கிலெடுத்துக் கொண்டு வேலை நேரத்தைத் தீர்மானிக்க வேண்டும். இத்திட்டத்தைக் கண்காணிக்க சுழற்சி முறையிலான உள்ளூர் உழைக்கும் மக்கள் கண்காணிப்புக் குழுக்கள் உருவாக்கப்பட வேண்டும். இப்படிப்பட்ட சீர்திருத்தங்களைச் செய்தால் மாண்புமிகு பிரதமர் சொல்வதுபோல் அவர் சும்மாக்காச்சும் சொல்லியிருந்தாலும்கூட, இத்திட்டம் ‘கிராம வளர்ச்சிக்கான மாதிரித் திட்டமாக மாறும்‘ ஊழலும், சுரண்டலும் இல்லாமல் போவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இப்படியும் செய்யலாம். அல்லது...
இதிலேயும் எப்படியாவது ஊழல் செய்யலாமே? அப்படி இதில் ஊழல் நடந்தால் அதை உள்ளூர் பாலு விசாரிக்கலாமா? அல்லது லோக்பாலுதான் விசாரிக்கணுமா? இதனை விசாரிக்க லோக் பாலுக்கு அதிகாரம் இருக்கிறதா? என்று சும்மா, சும்மா பேசிக்கொண்டேயும் இருக்கலாம். அப்புறம் அதையும் மீறி எதுவும் நல்லது நடந்துறாம பாராளுமன்றத்துல பாத்துக்கலாம்.
உழைக்கும் மக்கள் நல விஷயங்களில் பின்னதற்கே வாய்ப்பு அதிகம். அதன்பின்னர் சிலநேரங்களில் அது திட்டமாக மாறலாம். ஆனால் இதுவே முதலாளிய அதிலும் பன்னாட்டு முதலாளிய நல விஷயங்கள் என்றால் எந்தச் சத்தமும இல்லாமல் அவை (இரண்டு அவைகளிலும் – அல்லது இரண்டு அவைகளுக்குமே தெரியாமலும்கூட) நிறைவேறிவிடும் - வெறும் திட்டஙகளாக அல்ல. சட்டங்களாகவே. தயவு செய்து நம்புங்கள் நாம் வாழ்வது உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில்தான்.
No comments:
Post a Comment