Sunday, January 22, 2012

நாளை எழுதிய கவிதை (அல்லது) வயலும் வாழ்வும் - மதிகண்ணன்

நினைவுகளின் உரசலில் பிறக்கும் சிந்தனை...
சிந்தனையின் வெளிப்பாடாய் செயல்திட்டம்...
நினைவுகளை உரச வைக்கும் நிகழ்வுகள்...

முதல் நிகழ்வில் தோன்றிய உத்வேகம்
உத்வேகத்தின் விதையாய் செயலுறுதி...
மறுநிகழ்வில் வேர்விட்ட தன்னம்பிக்கை
தன்னம்பிக்கையின் விளைச்சலாய் படைப்புகள்...

சிறப்புப் பொது நிகழ்வில்...
இடையிடையே வளர்ந்துவிட்ட களை களைய வேண்டுமென்று -
இலக்குமாறி வளைந்தவற்றை நேராக்கும் முயற்சியென்று -
நன்கு வளர்ந்ததை வெட்டிச் சாய்த்த அரிவாள்கள்,
நேராய் நிமிர்ந்ததை அடித்தொடித்த சுத்தியல்கள்
மனம் மகிழும் நட்சத்திர அறுவடையாய் - பதர்கள்.

பதர்களை விளைச்சலாக்கும் செயல்திட்ட நிகழ்வு குறித்த -
விமர்சனமில்லாதவர்கள் குழுவினர்
அறிந்தவர்கள் குறுங்குழுவினர்
புரிந்தவன் லும்பன்.

யாசிப்பின் வசீகரிப்பில் லயித்து
மடிதடவிப் பிதுக்கிப் பிதுக்கித் தானம் செய்த
நிலவுடமைச் சமூகத்தின், முதலாளித்துவ உற்பத்தி நீங்கள்.

எனக்கு
முடக்கத்தை விளக்கிய இயற்பியலும் புரியவில்லை
இயக்கத்தை விளக்கும் இயங்கியலும் தெரியவில்லை.
என்னை வைத்துக் கொண்டு என்னதான் செய்வது?

(2011 டிசம்பர் 25 ஆம் நாள் அருப்புக்கோட்டையில் மாவிபக நடத்திய படைப்பரங்கில் வாசிக்கப்பெற்ற கவிதை)

3 comments:

  1. கடைசிக்கு முந்தைய வரி ‘முடக்கத்தை’ அல்ல ‘முடுக்கத்தை’

    ReplyDelete