Tuesday, January 10, 2012

பீலி பெய் சாகாடும் - ஜெயகணேஷ்


                மனம் ரொம்பவே கனமா இருந்தது. அப்பாவிடம் அப்படி பேசியிருக்க கூடாது. அப்பாவும் அப்படி பேசியிருக்கக் கூடாது. நாளை தானாக சரியாகிவிடும்தான். இருந்தாலும், பழகி விட்டது. அப்பாவின் முகம் வாடியிருந்தால் எந்த வேலையுமே ஓடாது.
                பை யாரோடது. லக்கேஜ் வாங்கணும். யாரு பை - கண்டக்டர் சத்தத்தில் சிதறியிருந்த கவனம் பஸ்சுக்குள் வந்தது.
                அண்ணே. ரிட்டன் போறதுதான்னே. உள்ள வெறும் பைதான்னே. சரக்கு கொஞ்சம்தான்ணே இருக்கு. அதுக்கு லக்கேஜாண்ணே - கொஞ்சம் கெஞ்சுறமாதிரி கேட்டேன்.
                என்ன சரக்கு.
                அண்ணே. ஊருகாய்தான்ணே.
                பதில் பேசாமலேயே நகர்ந்தார் கண்டக்டர். ஏற்கனவே வரும்போதே டிக்கட் லக்கேஜ் எல்லாம் இரண்டு மடங்கா இருந்தது. இந்த லட்சணத்துல ரிட்டனுக்கும் லக்கேஜ் போட்டா அவ்வளவுதான் ஊறுகாய் வித்த காசுல ஊறுகாய்கூட வாங்க முடியாது. இருந்தாலும் அப்பாகிட்ட நான் அப்படி பேசியிருக்கக்கூடாது. சுத்தி சுத்தி மனசு அங்கதான் வருது. கனமாகவே இருந்தது மனசு.
                பப்பப்பப்ப ப பப்பப்ப ப பப்பப்ப ப..... ரிங்டோன் அடிக்க. எடுத்துப் பார்த்தா... வீட்டம்மா.
                “என்னங்க தம்பிய கூப்பிட வந்துருவீங்களா... இல்ல நான் போகவா. ஸ்கூல் விடுற டைம் ஆச்சி“
                “வந்துருவேம்மா... மணி 12 தான் ஆகுது. 12.20க்குள்ள வந்துருவேன். கிளம்பிட்டேன்“
                “சாப்டிங்களா இல்லியா?“
                “சாப்டேன் சாப்டேன்...“
“அப்பா சாப்பிட்டாங்களா?“
                “இல்ல... கம்மங்கஞ்சி குடிச்சிக்கிறேன்னு சொல்லீட்டாங்க... நான் தோசை கொண்டு போனோன். சாப்பிடவே இல்ல...“
“நான்தான் சொன்னேனே... எதுத்து பேசாதீங்க... எதுத்து பேசாதீங்கன்னு. இப்ப பாருங்க.. யாருமே நிம்மதி இல்லாம...
                “அதுக்காக அவரு செல்லம் கொடுத்து, செல்லம் கொடுத்து அவனை சொல்பேச்சு கேக்காதவனா ஆக்குவாரு... போசாம பார்த்துக்கிட்டே இருக்கணுமா?“
                “அய்யோ... அவன் சின்ன பையங்க. ஒண்னாங்கிளாஸ்தான் படிக்கிறான்.. போகப் போக சரியாகிருவான்“
                “ஆமா ஆமா சரியாகிருவான். எல்லாரும் மெச்சிக்கோங்க... நீ போன வை...“
                பக்கத்து சீட்டுல இருந்த குழந்தை, என் முகம் கோபமாவதைப் பார்த்து பயப்பட ஆரம்பிக்க... சிரிப்பை வரவழைத்து கொண்டே எட்டிப் பார்த்த கண்ணீரை துடைத்துக் கொண்டேன்.
                12.03 ஆச்சி... பஸ் எப்ப ஊருக்குள்ள போயி.... அப்புறம் பஸ்ஸ்டாண்டு போயி. நான் வண்டியெடுத்து... அப்புறம் ஸ்கூலுக்கு போக... தம்பி அதுக்குள்ள ஆளக்காணோம்னு தேடுவானே... பசி நேரம் வேற... லேட்டாகிடக்கூடாதே... இந்த டிரைவர் நிலம புரியாம அசால்ட்டா போய்க்கிட்ருக்காரு. அய்யய்யோ இந்த ஸ்டாப்லயுமா நிப்பாட்டுவாங்க.. அண்ணே லேட்டாச்சுண்ணே.... சே. மனசு புலம்புறது யாருக்கும் கேட்க மாட்டேங்கிதே.
                நடுக்காட்டுல பஸ்ஸ நிப்பாட்டினார் டிரைவர். களை வேளை பார்த்திட்டு நாலு பொம்பளங்க ஏறுனாங்க... காலைல 6 மணி பஸ்ல நான் லயனுக்கு வரும்போது நிறைய பேர் வேலைக்கு வருவாங்க. மணி 12 தான் ஆகுது அதுக்குள்ள முடிச்சிட்டு கிளம்பிட்டாங்க. எப்படியும் 100ரூபா வாங்குவாங்க. இன்னிக்கி வேலைக்காரங்களுக்குதான் நல்ல காசு..
                புலம்பிக்கிட்டிருக்கிறப்பவே கண்ணுலபட்டது கட்டாக மயிலிறகுகள். அந்த களை வேலை பார்க்குற அக்கா ரெண்டு பேரு கையில கட்டாக மயிலிறகு வச்சிருந்தாங்க. பார்க்க பார்க்க ஆசையா இருந்தது.
                அய்யோ என் பொண்ணு ரெம்ப ஆசைப்படுவாளே. அப்பா எனக்கா எனக்கா ன்னு ஆசையா சொல்றது இப்பவே கண்ணுல தெரியுதே. அண்ணணுக்கு ஒன்று எனக்கு ஒண்ணுன்னு  வாங்கும்போதே அழகா வாங்குவாளே... வாங்கனும்னு ஆசையா இருக்கே.
                தருவாங்களா... கேட்டுப்பார்ப்போமா. காசு கேட்பாங்கல்ல.... ஆமா ஆமா காசுகொடுக்காம தருவாங்களா... என் பொண்ணுக்கும் பையனுக்கும் தானே காசு கொடுத்து வாங்கினாத்தான் சந்தோசம்.
               
       ஆனாலும் எவ்வளவு கேட்பாங்க.
                ஒன்னு பத்து ரூபா சொல்லுவாங்களா.
                ஒன்னு வாங்கினா பத்தாதே.
                ரெண்டு... நாலு....
                கட்டாக் கோட்டா எவ்வளவு சொல்லுவாங்க...
                நூறு ரூபா சொல்லுவாங்களோ?
                கையில வாங்கினவுடன் ரெண்டு பேரும் விளையாண்டு பிச்சிருவாங்க. அதுக்கு நூறு ரூபா கொடுக்கணுமா.
                வாங்காம போனாலும் மனசு கேட்காதே
                கீழ கிடக்குறததானே பொறுக்கிட்டு வர்றாங்க. அவ்வளவு காசா கேட்பாங்க. கொஞ்சம் கொறச்சி கேட்டா என்ன.
                காசு கிடக்கும்னுதானே பொறுக்கிட்டு வர்றாங்க... யார்ன்னாலும் காசு கொடுத்து வாங்கிக்குவாங்க... அதனால கொறக்க மாட்டாங்க...
                எதையெல்லாம் காசாக்குறாங்க... கீழ கிடக்குறதெல்லாம் இவங்களுக்கு காசாகுது. நாம எவ்வளவு சுத்தினாலும் போதும்கிற அளவுக்கு வருமானம் கெடக்கிதா?
                மஹால் ஸ்டாப் எல்லாம் எறங்குங்க... பழைய பஸ் ஸ்டாண்டு எல்லாம் எந்திரிச்சிக்கோங்க... கண்டக்டர் சத்தம கேட்டு பக்கத்துல உட்கார்ந்த சார் எந்திரிக்க... வழி விடுறதுக்காக ஒதுங்கினேன். நம்ம உடம்புக்கு ஒதுங்கினா இடம் கிடைக்குமா?
                டக்குன்னு எந்திரிச்சிட்டேன். அப்பவும் அவரு ஒதுங்கி போகுற அளவுக்குதான் இடம் இருந்தது. எதுக்கு சிரமம்னு முன்னால நகர்ந்தேன்.
                மயிலிறகு கையில் உரசியது.
                கேட்டுருவோமா... சரி கேட்டுத்தான் பார்த்துருவோம்.
                எக்கா. இது விக்கிறதுக்காக்கா. எவ்வளவுக்கா
                அக்கா பக்கத்துல பார்த்து சிரிச்சது. ரெண்டு இறக உருவியது.
                நான் வேகமா பைய தடவினேன். இருபது ரூபா வந்தது. எடுத்தேன்
                யே. போப்பா. இதுக்கு போய் காசு கொடுத்துட்டு.
                அதுக்காக சும்மா கொடுப்பாங்களாக்கா. இந்தாங்க
                நீ போப்பா... பேசாம இரு. கீழ கிடந்து எடுத்ததுக்கு போய் ரூபாய கொடுத்துட்டு
                செவிட்டில் அறைந்தது போல் இருந்தது.
                என் பொண்ணு ஆசப்படுவா... அதுக்காகத்தான்
                இன்னொரு அக்கா அவங்க கையில இருந்த கட்டுல பெரிசா இருந்த அஞ்சாரு இறக எடுத்து... இந்தாப்பா இதயும் வச்சிக்க. சின்னப்புள்ளக்கித்தானே...
                மனசு பரபரத்தது. சும்மா வாங்கிட்டுப் போக மனசே இல்ல.
                சரக்கு வச்சிருந்த பைய சீட்டுக்கு அடியில இருந்து இழுத்து ஒரு ஊறுகாய் பாக்கட்ட எடுத்து அக்கா இதையாவது வச்சிக்கோங்க.. சாப்பாட்டுக்கு ஊறுகாய் வாங்குவீங்கள்ல... வச்சிக்கோங்க... என்ற படி அவங்க மடியில ஊறுகாய் பாக்கட்ட வச்சிட்டேன்.
                ஏய் நீ வேறப்பா... பேசாம இரு. பாவம் நீ எம்புட்டு அலஞ்சி வியாபாரம் பாக்குறியோ... முழு பாக்கட்ட சும்மா கொடுத்துக்கிட்டு. பேசாம போப்பா...
                இந்த பயல பாருக்கா... இதுக்கு போயி ஊறுகாய் பாக்கட் கொடுக்குறாப்ல... தள்ளுப்பா பழைய பஸ் ஸ்டாண்டு வந்திருச்சி. இறங்க போறோம். நீ இந்த இறக பத்திரமா கொண்டு போய் புள்ளக்கி கொடுய்யா என்றபடி சீட்டிலிருந்து எந்திரித்து படியில் இறங்குச்சி அந்த அக்கா.
                இறங்கும் போது கையில இருந்த மயிலிறகு மறுபடியும் கையில இடிச்சது. ரெம்ப வலிச்சது மனசு.
                இப்ப மனசு அப்பா, கோபம், வலி, அழுகை, மகன், வீட்டம்மா, பொண்ணு யாருமே மனசுல இல்ல. மயிலிறகு மட்டும் தான் மனசுல இருந்தது. ரெம்ப பாரமாய்.

4 comments:

  1. மிகவும் அருமையன ஒரு நேட்டிவிடி படம் பார்த்த திருப்தி அனுமதித்தால் என் வாலில் பகிர்ந்து கொள்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. பகிர்ந்து கொள்ளுங்கள் நன்பரே

      Delete
  2. Wow... Very nice story! The real talent expressed here Ganesh! Vaalthukkal... Very soon we could expect another Bharathiraja!!!

    ReplyDelete
    Replies
    1. அனாமதேய பின்னூட்டங்கள் என்றாலும், உங்கள் பெயரைச் சேர்க்கலாமே? எங்களுக்கு நாங்களே எழுதிக்கொண்டதுபோல் இருக்கக்கூடாது என்பதால் இந்த வேண்டுகோள்.

      Delete