உனக்கு நான் எழுதி அனுப்பாமல் வைத்திருக்கும் கடிதங்களில் இதுவும் ஒன்றாகப் போகிறது என்று நான் மதிப்பிட்டாலும் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
இன்று அந்த அலுவலகத்தில் இரவு தங்கினேன். அலுவலகத்தின் வெளியே கம்பி வலைகளால் செய்யப்பட்ட பறவைப்பெட்டி ஒன்று உண்டு. இங்கு நீ வராமல் போனபோது வந்த குருவிக்கூண்டு இது. எனது தங்கையின் மகள் இங்கே கொண்டுவந்து வைத்துவிட்டாள்.
ஒரு சில வாரங்களுக்கு முன்பு ஒருநாள். ஒரே சத்தம். ஓடிப்போய் பார்த்தால், மாமிசப் பட்சினி பறவை ஒன்று இந்தக் காதல் பறவைகளை வேட்டையாட முயற்சி செய்து கொண்டிருந்தது. அதனை விரட்டிப் பார்த்தால் ஒன்றும் பலனில்லை. அருகாமை வேப்பமரத்தில் அமர்ந்துகொண்டு நாங்கள் எப்போது விலகுவோம் என்று காத்திருந்தது. ஒரு துணியைப் போர்த்திவிட்டு அவரவர் பிழைப்பைப் பார்க்கச் சென்று விட்டோம். மனிதநேயமிக்க நானும்தான்.
இரண்டு நாள் கழித்து அந்த அலுவலகத்திற்கு போயிருந்தேன். நமக்குத் தெரிந்த அந்த குழந்தை டைப்பிஸ்ட் என்னிடம் சொன்னார்கள். ‘சார், எப்பிடியோ ஒரு வெள்ளைக் குருவியை அது பிடிச்சுட்டு போயிடுச்சு… வெள்ளை சிறகா கிடந்துச்சா.. அப்புறம் எண்ணிப் பார்க்கும்போது வெள்ளைக் குருவி ஒன்னைக் காணோம்..’
கம்பிகளுக்கிடையே இழுக்கப்படும் அந்த வெள்ளைக் குருவியின் பயமும், இரத்தமும் என் கண்முன் வந்து மறைந்தன. அறிவொளிமிக்க மனிதனாக, அந்த எண்ணத்தைக் கழற்றி எறிந்துவிட்டு என் தங்கையிடம் சொல்ல வேண்டியவற்றைச் சொல்லிவிட்டுப் புறப்பட்டுவிட்டேன்.
அப்புறம் இன்றுதான் திரும்ப வந்தேன். இரவு அந்த அலுவலகத்தில் தங்க வேண்டிய நிர்ப்பந்தம். நானும் எனது நண்பர் ஒருவரும் வழக்கம்போல பிரச்சனைகளைப் பேசிவிட்டு, வந்து தன்னந் தனியானாக அந்த அலுவலகத்தின் கதவைத் திறந்தேன்.
இருட்டாக இருந்ததால் வராண்டா விளக்கைப் போட்டேன். அறை விளக்கையும் போட்டுக்கொண்டேன். வராண்டாவில் இருந்த பறவைக் கூண்டிலிருந்து பறவையின் குரல் கேட்டது. அருகே சென்று பார்த்தேன். அந்த ஒற்றைக் குருவிதான். வெள்ளை, உன்னைப் போல. அது ஆணா, பெண்ணா என்று தெரியாது.
‘உச்சுச்சூ’ என்று குரல் எழுப்பியது. நான் அதனைப் பார்த்துக்கொண்டிருந்தேன். மற்ற பறவைகள் அனைத்தும் அவற்றுக்கான குட்டிப்பானைக்குள் உறங்கிக் கொண்டிருந்தன என்று தெரிந்தது. நான் அந்த பறவையைப் பார்த்துக்கொண்டே அமர்ந்துவிட்டேன். மறுபடியும் அது ‘உச்சுச்சூ’ என்றது. என்னை மறந்த நான் விசில் அடித்தேன். ‘உச்சுச்சூ’.
என்னைத் திரும்பிப் பார்த்தது. ஆனால், அது உணர்ந்துகொள்ளும் வடிவத்தில் நானில்லை. அல்லது அதன் கண்ணில் நான் தென்படவில்லை.
‘உச்சுச்சூ’ என்றது. அதே விசிலை திரும்ப அனுப்பினால் அது பதிலாக இருக்காது என்று என் மனித அறிவு சொன்னதால், ‘உஷ்ஷ் உச்சுச்சூ’ என்று விசிலடித்தேன். அந்த ஒற்றைப் பறவை மறுபடியும் ஏதோ குரலெழுப்பியது. என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அதன் துணை என்னவாறு குரல் கொடுத்திருக்கும் என்று யோசித்தேன். மனித அறிவு எத்தனை சிறியது என்று புரிந்தது.
வராண்டா விளக்கையும் அறை விளக்கையும் போட்ட என் முட்டாள்தனம் நினைவுக்கு வந்தது. இரண்டு விளக்குகளையும் அணைத்தேன். ‘தூங்கு குருவி தூங்கு. இது இரவு.. உயிர்கள் உறங்க வேண்டும்’ என்று அந்த குருவியிடம் சொன்னேன்.
அப்புறம் குருவின் குரல் கேட்கவில்லை. அது தூங்கியிருக்குமோ? தெரியவில்லை. ஆனால், நான் தூங்கவில்லை…
NANUM INRU THUNGAMATEN
ReplyDelete