சென்னைக்கு வெகுநாள் கழித்துச் சென்றேன். அங்குதான் நான் பல வருடங்கள் குடியிருந்தேன் என்றாலும் என்னால் சென்னையை என் ஊர் என்று சொல்லமுடியாது. இந்த சப்தம், எங்கு பார்த்தாலும் தெரியும் அவசரம், கட்டிடங்கள், அழுக்கு, மினுக்கித் தெரியும் படித்தவர்கள், இன்னபிற.. இது மனிதர்களுக்கான நகரம் இல்லை. யந்திரமாக மாறிவிட்டவர்களுக்கு அல்லது மாறத் தயாராக உள்ளவர்களுக்கான நகரம். காலம் முழுவதும் ஒரு பைசா சேர்க்கக் கூட திட்டமிடாத என்போன்ற ஏமாளிகளுக்கான நகரம் அல்ல.
ஆனால், என் பெண் இங்குதான் குடியிருக்கிறாள். அவளைப் பார்க்க வந்திருந்தேன். அந்த இரயில் நிலையம் அருகாமை சாலை வழியே சென்றபோது அந்த இடத்தில் என் பார்வை இடதுபுரம் திரும்பியது. காணோம்… அந்தக் கட்டிடத்தை.
அது ஓர் பழைய கால கட்டிடம். அன்றைய சென்னைக்கே பொருத்தமற்ற கட்டிடம். சுற்றிலும் ரோஜாக்கள் பூத்துக்குலுங்கும். வேப்பமரம் ஒன்று கட்டிடத்தின் மீது குடையாய் கவிழ்ந்திருக்கும்.
இப்போது அங்கே ’நவீன’ வண்ணங்கள் கொண்ட அப்பார்ட்மெண்ட் வந்திருந்தது. கார்கள் காத்துக்கொண்டிருந்தன. அந்த நாட்களில் அந்த வீட்டின் முன்னே இரு சக்கர வாகனங்கள் காத்திருக்கும், அவற்றோடு பையன்களும் காத்திருப்பார்கள். அது அப்போது வேலைசெய்யும் பெண்களின் விடுதியாக இருந்தது.
நான் அந்த விடுதிக்கு பல முறை வந்திருக்கிறேன். நேராக சென்று காத்திருப்பாளர்கள் அறையில் அமர முடியும். அந்த விடுதியின் உரிமையாளர் ஓர் பெண் தோழர். நான் தொழிற்சங்கவாதி என்பதால் அவரை அறிவேன்.
நானும் செல்வியும் நிறைய பேசிக்கொண்டது இந்த காத்திருப்பாளர் அறையில்தான். செல்வியை நான் சந்தித்ததே தற்செயல்தான். பொதுத்துறை நிறுவன ஊழியர்களின் பொது மாநாடு ஒன்றில் அவர் பேசினார். நானும் பேசினேன். அவர் எழுந்து வந்தபோது அவரைக் கவனித்த நான் சிரத்தைக் காட்டவில்லை. ஆனால், அவர் பேசியபோது அவரது குரல் என்னை ஈர்த்தது. பேசியது மிகவும் பொருத்தமாக இருந்தது. இன்று தகவல் தொடர்புத்துறை என்னவாக ஆகியிருக்கிறதோ அதனை அன்று அவர் சொல்லி எச்சரித்தார்.
தேனீர் இடைவேளையின்போது அவரிடம் அறிமுகம் ஆகிக்கொண்டேன். நீங்களா அது என்று ஆச்சரியப்பட்டார். இவரா இப்படி பேசினார் என்று நான் சற்று முன்பு ஆச்சரியப்பட்டதை அவரிடம் அப்போது நான் சொல்லவில்லை. கட்டைகுட்டையான உயரம். களையான முகம். வெள்ளை சேலையை அடிகோடிடும் கருப்பு நிறம். ஓர் சாதாரண பெண்ணாக அவர் இருந்தார். ஒரே வித்தியாசம் அந்த கண்கள். அறிவு கூர்மையைக் காட்டும் உறுத்துப் பார்த்து கிரகிக்கும் கண்கள்.
அப்போது அவர் அவசரமாக கேட்டது, பொது வாழ்க்கைக்கு ஊறு விளைவிக்காத ஓர் பெண்கள் விடுதி. அப்போது நான் மேற்படி விடுதிபற்றி அவரிடம் சொன்னேன். இடம் கிடைக்குமா என்று கேட்டார். கிடைக்கும் என்று சொன்னேன். கிடைத்தது. விடுதிக்காப்பாளரைச் சந்திக்கச் செல்லும்போது அவரைப் பார்ப்பேன். அப்போதெல்லாம் பொதுத்துறை நிறுவனங்கள் பற்றி அவற்றின் எதிர்காலம் பற்றி பேசுவோம். அவர் நடத்திகொண்டிருந்த துறைக்கான பத்திரிகை பற்றி பேசுவார்….
ஒருநாள் அந்த காத்திருப்பாளர் அறையில் அமர்ந்துகொண்டு அவரிடம் கேட்டேன். ‘எதற்கு இந்த விடுதி? உங்கள் குடும்பம் எங்கே?’
அவர் ஒரு மாதியாக சிரித்துக்கொண்டு ‘குடும்பமா?’ என்றார். அப்போதுதான் அவரின் கழுத்தைக் கவனித்தேன். மெல்லிய சங்கிலி மட்டும் இருந்தது. நிச்சயம் அது தாலி போன்றதொரு சமாச்சாரம் இல்லை. கால்மீது கால் போட்டு அமர்ந்திருந்த அவரின் கால் விரல்களைப் பார்த்தேன். மெட்டியில்லை.
குழப்பமாக இருந்தது. கணவருடன் கோபித்துக்கொண்டு வந்தவர் இல்லையோ என்று யோசித்தேன். எனது பார்வையைப் புரிந்துகொண்ட அவர் ‘எனக்கு இன்னமும் கல்யாணம் ஆகவில்லை’ என்றார். ‘இன்னமுமா?..’ என்று நான் கேட்டுவிட்டேன்.
அவருக்கு வயது 35க்கு மேல் இருக்கும். அவரின் சம்பளத்திற்கு, தோற்றத்திற்குக் கல்யாணம் ஆகியிருந்திருக்க வேண்டும். அன்றுதான் அவர் அவரின் சொந்த வாழ்க்கையைப் பகிர்ந்துகொண்டார். இரண்டு அக்கா, மூன்று தங்கைகள். அக்காக்களுக்குப் படிப்பில்லை. இவர்தான் படித்தவர். தங்கைகள் படித்துக்கொண்டிருந்தார்கள். அப்பா வேலை பார்த்த கம்பெனியில் ஆட்குறைப்பு நிகழ எல்லாம் தலைகீழாக மாறிப்போனது. அவர் வேலை பார்த்தது தாம்பரம் ஸ்டேண்டர்டு மோட்டாரில். பற்பல காரணங்களுக்காக, என்ன பற்பல, முதலாளிகளின் காரணங்களுக்காக கம்பெனி மூடப்பட்டது. தண்டவாளத்தில் தலையைக் கொடுத்து தற்கொலை செய்துகொண்ட தொழிலாளர்களில் செல்வியின் அப்பாவும் ஒருவர்.
செல்விக்கு அப்போது பொதுத்துறையில் வேலை கிடைத்தது. அக்காக்களுக்கு கல்யாணம் செய்து வைத்தார். தங்கைகளைப் படிக்க வைத்தார். எல்லாம் முடிந்து நிமிர்ந்து பார்த்தால் வயது 36ஐத் தாண்டியிருந்திருக்கிறது. அப்புறம் அவர் சொன்னார், ‘அதனால் நான் விடுதிக்கு வந்து விட்டேன்’.
எனக்கு ஒன்றும் புரியவில்லை. ‘புரியவில்லை’, என்றேன். என்னை நிமிர்ந்து பார்த்தார். கண்களில் கண்ணீர் அணைகட்டியிருந்தது.
‘உங்களிடம் சொல்லலாம். ஏனென்றால் நீங்கள் ஆணும் இல்லை, பெண்ணும் இல்லை’ என்றார்.
பொதுவாழ்வில் இருக்கும் எனக்குக் கிடைத்த மாபெரும் பாராட்டு என்று அதனை எடுத்துக்கொண்டேன். என்னவாக இருந்தாலும் ஆண் ஆணாகத்தான் இருப்பான் என்ற உண்மை அப்போது எனக்குத் தெரியவில்லை என்பது பின்னர் தெரிந்தது.
‘சின்னக்காவை அவளோட வீட்டுக்காரர் விரட்டிவிட்டார். ஏனென்று பேசச் சென்றேன்’, என்று அவர் கதையைச் சொன்னார்.
‘நான் உன் அக்காவோடு வாழத்தயார்.. ஆனால் அவளோடு நீயும் வரவேண்டும்’, என்று அந்த நாய் சொல்லியிருக்கிறது.
‘இத்தனை வயது ஆனதே.. எவனையாவது பார்க்காமல் இருந்திருப்பியா? அப்புறம் என்ன?’ என்றும் கேட்டிருக்கிறது அந்த மிருகம். ஆணாகிய நான் குறுகிப்போனேன்.
‘அக்காவுக்காக, தங்கைக்காக உழைப்பை விற்க முடியும். ஆனால் உடலை அல்லது மனதை விற்க முடியுமா தோழர்.?’ என்று செல்வி கேட்டார். உண்மைதான், சுயம் என்பது உடலையும் மனதையும் விட வேறு எது?
‘அன்று எங்கு போவது என்று தெரியாத நிலைமையில்தான் உங்களைப் பார்த்த அந்த மாநாட்டுக்கு வந்தேன். உங்கள் உதவியால் மாலையே இடம் கிடைத்தது. நன்றி’ என்றார் செல்வி.
அதற்கப்புறம் ஓர் நாள் என் வீட்டுக்கு வந்து என் மனைவியையும் மகளையும் பார்த்தார். என் மகள் அவரோடு ஒட்டிக்கொண்டாள். செல்வி வந்துவிட்டால், என் பெண் அவரின் கையைப் பிடித்து மொட்டை மாடிக்கு விளையாட அழைத்துச் சென்றுவிடுவாள்.
அப்புறம் பல முறை அவர் என்வீட்டிற்கு வந்திருக்கிறார். நான் இருக்கிறேனோ இல்லையோ, ஞாயிறு ஏதாவது ஒரு நேரம் என் வீட்டில் இருப்பார். வழக்கமாக நான் இருப்பதில்லை. உழைக்கும் வர்க்கத்திற்கு விடுமுறை அன்றுதான் என்னைப் போன்றவர்களுக்கு நிறைய வேலையிருக்கும்.
ஒரு நாள் ஓர் பெண்ணை அழைத்துக்கொண்டு என் வீட்டிற்கு வந்தார். பேஜர் தகவலறிந்நு நான் வீட்டுக்கு வந்தேன். அப்போது எல்லாம் பேஜர்தான் நவீன தகவல் தொடர்பு சாதனம்.
அந்த புதிய பெண், செல்வி தங்கியிருக்கும் விடுதிபெண்தான். அந்த பெண்ணின் கதையைச் சொன்னார். கணவனே மனைவியைக் கடத்தும் வினோதமான கதை அது. அதனை விரித்துச்சொல்வது இப்போது சாத்தியமோ தேவையோ இல்லை. சோகை படிந்துபோன ஒல்லியான அந்தப் பெண்ணை என் வீட்டில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். ரௌடிகள் முதல் காவல்துறை வரை என் வீட்டுக்குள் நுழைய அஞ்சுவார்கள் என்பது அவர் சொன்ன காரணம். ஒப்புக்கொண்டேன். அந்தப் பெண் வெகு நாட்கள் என் வீட்டில் இருந்தார். பின்பு, விவாகரத்து பெற்றுக்கொண்டு, வேறு ஒருவனைத் திருமணம் செய்துகொண்டு வெளியேறினார். இப்போது பார்த்தாலும் அண்ணே என்று கையைப் பிடித்துக்கொள்வார். எங்கள் வீடு இப்படிப் பலரைப் பார்த்திருக்கிறது. இதுபோன்ற பிரச்சனைகளில் தயங்காது உதவி கேட்பார் செல்வி. நான் கேட்டால் செய்வார். இவ்வாறு எங்கள் நெருக்கம் அதிகமானது. பள்ளிநாட்களில் எனக்கு வாய்த்த நண்பியான மல்லிகாவுக்கு அப்புறம் இவர்தான் என் சிறந்த நண்பர் என்று நான் கருத ஆரம்பித்தேன்.
அதன்பின் ஒரு நாள் என் மனைவி எனக்கு பேஜரில் செய்தி அனுப்ப வீட்டுக்கு விரைந்தேன்.
வீட்டில் நுழைந்த உடனேயே, ’போய் செல்வியைப் பாருங்கள்‘என்றாள் என் மனைவி கடுப்புடன். ஏனென்று கேட்டேன். ‘இரண்டு நாளா காய்ச்சலாம்’ என்றாள் அவள் இறுக்கமாக. என்ன இது, வேலையைக் கெடுத்துக்கொண்டு வீட்டுக்கழைத்து கதை சொல்லிக்கொண்டு என்று எனக்குக் கடுங்கோபம் வந்தது.
‘விடுதியில்தான் டாக்டர்கிட்டே அழைச்சிக்கிட்டு போயிருப்பாங்களே’ என்றேன்.
’அழைச்சிட்டுப் போயிட்டாங்களாம்,ஆனா செல்வி நேத்து நைட்லேந்து உன் பெயரைச் சொல்லி ஜன்னியில புலம்புறாளாம், ஹாஸ்டல்லேர்ந்து ஆள் வந்தாங்க.. போய் பார்’ என்றபடி என் கண்ணைப் பார்த்தார். கேள்வி, வெறுப்பு, அன்பு, சந்தேகம், கோபம், கொக்கி இன்னபிறவெல்லாம் கண்ணில் தெரியுமா? என் மனைவியின் கண்ணில் தெரிந்தது.
அதுபோன்றதொரு கணம் என் வாழ்வில் வந்ததில்லை. புறப்பட்டால் இவள் சந்தேகிப்பாளோ? போகாவிட்டால் செல்விக்கு என்ன ஆகும்? எதற்கு ஜன்னியில் என் பெயர்? ஒருவர் ஜன்னியில் கிடக்கும்போது இது என்ன கேள்வி.. யோசித்துகொண்டிருந்த என்னை என் மனைவியின் அடுத்த அஸ்திரம் வீழ்த்தியது.
‘ஒன்னை நெனச்சு பொம்பள புலம்பற அளவுக்கு என்ன செஞ்ச?’ அவர் சண்டையை எதிர்பார்த்தார் போல. ஆனால், நான் அரசியல்வாதி. உட்கார்ந்துவிட்டேன். அப்புறம், என் மனைவியின் உள்ளிருந்த பெண் வெற்றிபெற அவரே என்னை சத்தம் போட்டு அனுப்பி வைத்தார்.
விடுதியின் காத்திருப்போர் அறையில் செல்வியைப் பாத்தேன், இரண்டு நாள் காய்ச்சலில் இளைத்திருந்தாகத் தோன்றியது. இருந்த கொஞ்ச நேரத்தில் ஒன்றும் அவர் விசேஷமாகச் சொல்லவில்லை. ஆனால், காய்ச்சல் போய்விட்டது என்று தெரிந்தது. விடுதி காப்பாளர் ‘நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று சொல்ல நான் புறப்பட்டுவிட்டேன். அப்போது இரவு 9 மணி. வேறு வழியில்லை.
அதற்கப்புறம் என் மனைவியின் தொந்தரவு தாங்கவில்லை. ‘காய்ச்சல்ல உன் பேரத்தான் உளர்ரான்னா என்ன அர்த்தம்?’
அதுமட்டுமல்லாமல் நானும் செல்வியின் நிலைபற்றி யோசிக்க ஆரம்பித்தேன். என்னைப் போன்றவர்களுக்கு இது சிக்கலான நேரம். சொந்த வாழ்வின் சிக்கல்கள் அரசியலைப் பாதிக்கக் கூடாது.
ரொம்பவும் யோசித்துவிட்டு பின்னர் செல்வியை ஓர் ஹோட்டலில் சந்தித்தேன். இன்றைய சென்னை காபி ஹவுஸ்களின் முன்னோடி அந்த ஹோட்டல். 30 நிமிடத்திற்கு ஒரு முறை டீ சொல்விட்டு பில்லுடன் சர்வருக்கு டிப்சும் கொடுத்தால் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அமர்ந்திருக்கலாம்.
செல்வி சோர்வாகத்தான் இருந்தார். நீண்ட அமைதிக்குப் பின்னர் நான் ஆரம்பித்தேன். சில பல கதைகளைப் பேசிவிட்டு நேரடியாக விஷயத்துக்கு வந்தேன்.
அவர் கருப்புப் புடவையில் இருந்தார். கட்டைகுட்டையான உடல்வாகுவையும் தாண்டி அழகாக இருக்கிறார் என்பது எனக்குத் தெரிந்தது. அப்படித் தெரிந்ததால், எதிர்கால வாழ்க்கைச் சிக்கல்கள் எல்லாம் மனதில்ஓடின. என்னவென்று ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவர் என்ன நினைக்கிறார் என்று தெரியவில்லை. எதுவும் தெரியாமல் நான் பேசிய நிகழ்வுகளில் அதுவும் ஒன்று.
’அன்னிக்கு நீங்க காய்ச்சல்ல புலம்புனிங்களாம்’
செல்வி தலையைக் கவிழ்த்துக்கொண்டார். மேஜையில் ஊன்றிய கைகளில் முகம் பொதிந்திருந்தது. என் உயரத்திற்கு அவரின் உச்சந்தலைதான் தெரிந்தது. நெளிந்து நெளிந்து செல்லும் கருமையான கோரை முடி அவருக்கு. வெள்ளையாக பளீர் என்று நேர் வகிடு தெரிந்தது.
‘அது சரியில்லை.. என் பேரைச் சொல்லி.. பிதற்றுறீங்கன்னா.. தன்னிலையில்லாமதான்… எல்லாரும் என்ன நினைப்பாங்க..?’
சட்டென்று செல்வி தலைநிமிர்ந்தார். என் கண்ணைப் பார்த்தார்.. அது எப்படி கண்ணை மட்டுமே பார்க்கமுடியும் என்பது எனக்குப் புரிந்துகொள்ளமுடியாத புதிர்.
‘ஏன் இப்புடி அசிங்கமா பேசுறிங்க.. நான், பொம்பளை, அதுதான் உங்களுக்கெல்லாம் இளக்காரம்’. அவரின் உதடுகள் துடித்தன. சட்டென்று எழுந்து சர்வரின் கையில் 50 ரூபாய் நோட்டைத் திணித்துவிட்டு நடந்துவிட்டார். நான் அதிர்ந்துபோனேன். எனக்கு என்னவென்றே புரியவில்லை.
என்ன சொன்னேன், என்ன புரிந்துகொண்டார் அல்லது அவர் என்னவாக இருந்தார், நான் என்னவாக புரிந்துகொண்டேன்? அல்லது நான் என்னவாக இருக்கிறேன்?
அதுதான் நான் அவரைக் கடைசியாகப் பார்த்தது. நான் அப்புறம் செல்வியைச் சந்திப்பேன் என்று எதிர்பார்த்தேன். அலுவலகத்தை மாற்றிக்கொண்டார். சங்க நடவடிக்கைகளுக்கும் வருவதில்லை. விடுதியில் இருந்து வெளியேறிவிட்டார். அப்புறம் வேறு ஒரு சர்க்கிளில் வேலையை மாற்றிக்கொண்டார்.
பத்து ஆண்டுகளில் நானும் சென்னையை விட்டு வெளியேறி விட்டேன். சரியாகச் சொல்லப்போனால், எல்லோரும் சேர்ந்துகொண்டு சென்னையை விட்டுவிரட்டினர். என்னைப் போன்ற ஒருவனை யார்தான் ஒப்புக்கொள்வார்கள்?
சென்னை செல்லும்பேதெல்லாம் செல்வியின் நினைவு எட்டிப்பார்க்கும். சென்னைக்கு வந்து என் மகளைப் பார்ப்பதற்காக செல்லும் நான், அந்த விடுதியைக் கடக்கும்போது யாரையும் விட முக்கியமாக செல்வியின் முகம்தான் நினைவுக்கு வரும்.
அவர் மனதில் என்னதான் இருந்தது?
கடந்த புத்தாண்டு அன்று சென்னை சென்றிருந்தேன். செங்கல்பட்டில் ஒர் வேலையென்று மின்சார இரயில் பிடித்து அங்கே சென்று இறங்கினேன். நடைமேடை கடக்கும்போது செல்வியைக் கண்டேன். அவர் முடியின் பெரும்பகுதி நரைத்திருந்தது. என் நரையை விட அதிகம். சற்று குண்டாகியிருந்தார். முகம் அன்று போலவே உணர்வற்றிருந்தது. செல்விதான். என்னைத் தாண்டிச் சென்றவரைத் திரும்பிச் சென்று மறித்தேன்.
’செல்வி’
நிமிர்ந்து பார்த்தார். என் உயரத்திற்கு அவர் நிமிர்ந்துதான் பார்க்கவேண்டும். சட்டென்ற முகத்தில் ஒளி கூடியது. நான் அவரின் கழுத்தைக் கவனித்தேன். அதே ஒற்றைச் சங்கிலி.
‘நலமா?’ என்று கேட்டார். உம் என்றேன்.
‘‘நீங்க..?’, என்று கேட்பதற்குள் விலகி நடந்தார். அன்று விலகி நடந்த அதே வேகம். போதும் உன் சகவாசம் என்ற நடை.
நான் உறைந்துபோய் நின்றிருந்தேன். அவர் திரும்பவே இல்லை. நின்றிருந்த சென்னை செல்லும் இரயிலின் பெட்டியில் ஏறி மறைந்தார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்னதான் நடக்கிறது வாழ்வில்?
எவ்வளவு நேரம் நின்றிருந்தேன் என்று தெரியவில்லை. அந்தப் பெட்டிக்குள் சென்று அவரைப் பார்க்கவும் துணிவில்லை. நானும் ஆண்பிள்ளைதானோ? என்று தோன்றியது. பெண்களை நோகடிக்கும் ஆண். அனைத்தையும் "ஆண்-பெண்" என்று மட்டுமே பார்க்கும் ஆண்…
அந்த வண்டி புறப்பட்டது. நான் பார்த்துக்கொண்டேயிருக்க பெட்டி வாசலில் வந்து நின்ற செல்வி என் திசையில் பார்த்தார். மறு கணம் பெட்டிக்குள் மறைந்தார்.
நொடி நேரத்தில் என் முகம் பார்த்த அந்த கண்ணில் தெரிந்தது என்ன?
எனக்கு இன்றுவரை புரியவில்லை. மரணம் வரை புரியாது என்றும் தெரிகிறது…
arumai
ReplyDeletesimply superb...
ReplyDeletesimply superb...
ReplyDelete