சுகந்திக்குத் தூக்கம் வரவில்லை. இது ஏதோ இன்றைய பிரச்சனையில்லை. வெகுநாளாக இதுதான் நிலை. எதிரே அவள் கனவனின் படம் இருந்தது. மின்விளக்கொன்று அகல் விளக்குப் போல நடித்துக்கொண்டிருந்தது. சற்றே பழைய படத்தை ஸ்டுடியோவில் கொடுத்து மெருகேற்றியிருந்தனர்.
கணவனை நினைக்கும் போது அவளுக்கு இரண்டு அம்சங்கள்தான் நினைவுக்கு வரும். ஒன்று அடி.. மற்றது அரவணைப்பு. இரண்டுக்கும் அவள் பல ஆண்டுகளாகப் பழகியிருந்தாள். இவளுக்கு 36 வயது துவங்கி சில நாட்களின் அவன் இல்லாமல் போய்விட்டான்.
சிறுநீரகத்தில் கல் என்றார்கள். மதுரையில் பணக்கார மருத்துவமனை சென்று பார்த்தார்கள் பணம் கரைந்தது. கல் கரையவில்லை. அப்புறம் கிட்னி பழுது என்றார்கள். அப்புறம் அவன் எழுந்திருக்கவில்லை. வங்கியின் சேமிப்பு கரைந்திருந்தது. அவர்களின் மின்சார பொருள் கடை கடனில் திணறிக்கொண்டிருந்தது.
சுகந்திக்குக் கல்யாணம் ஆகும் போது 16 வயது. பெரியாறு பாசனம் உள்ள திண்டுக்கல் மாவட்ட கிராமம். அப்பா போலீஸ் வேலையில் இருந்தார். அம்மா இல்லத்தரசி. 11வது படிக்கப்போகும் நிலையில் திருமண பேச்செடுத்தார்கள். அவளின் சாதியில் 16ல் கல்யாணம் செய்துவிடுவார்கள்.
அப்போதுதான் சுகந்தி தான் ஒரு பெண் என்பதை உணர்ந்திருந்தாள். பள்ளிக்குப் போகும்போது பையன்கள் அடிக்கும் கிண்டலை இரசிக்க ஆரம்பித்திருந்தாள்.
அவளுக்கு அவள் உடல் பற்றி ஒரே கவலை. அம்மாவிடம் சொன்னாள். அம்மாவுக்குப் புரியவில்லை. ‘அங்கே’ கட்டி வந்திருக்கிறது என்று அம்மாவிடம் சொன்னதும் அம்மா கலங்கிவிட்டாள். லேடி டாக்டரிடம் போனார்கள். அந்த டாக்டர் பரிசோதனை செய்யும்போது சுகந்திக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. இப்படியெல்லாமா செய்வார்கள்?
அப்புறம் லேடி டாக்டர் வகுப்பெடுத்தாள். ‘உன் மாரு வளருதுல்ல’. சுகந்தி குனிந்து பார்த்துக்கொண்டு வெட்கத்துடன் ‘ம்’ என்றாள்.
அதுபோல ‘அது‘வும் வளர்கிறது என்று ஆரம்பித்து அந்த டாக்டர் ஓர் படத்தைக் காட்டி நிறை விளக்கி, ‘அது கட்டியில்ல, வளர்ச்சி’ என்று சொன்னார். சுகந்திக்குப் புரிந்தது போலவும் இருந்தது. வெட்கமாகவும் இருந்தது.
‘இந்த வளர்ச்சி முழுமையாகனும். அதுக்கு சில வருஷம் ஆகும், அதுக்கப்புறம் கல்யாணம் பன்னிக்க, இன்னும் நிறைய புரியும்’ என்று சொல்லி அந்த லேடி டாக்டர் அனுப்பிவைத்தார்.
அம்மாவுக்குப் ஒன்றும் புரியவில்லை. ஸ்கேன் வேணாமா என்று டாக்டரிடம் கேட்டுக்கொண்டிருந்தாள்.
அம்மாவுக்கும் ஒன்றும் புரியவில்லை என்பது அவளின் அடுத்த நடவடிக்கையில் புரிந்தது. ஒன்றும் பிரச்சனையில்லை என்றதும் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தனர். இவள் முனகிப் பார்த்தாள், முக்கிப் பார்த்தாள். ஒன்றும் நடக்கவில்லை. காலேஜ் படிக்க வேண்டும் என்பது அவளின் ஆசை.
அவளுக்கு மேட்டுத்தெரு கார்த்திக்கைப் பிடிக்கும். இவளை விட 5வயது பெரியவன் கார்த்திக். காய்ந்து கிடக்கும் கண்மாயில் நடக்கும் கிரிக்கெட்டில் கார்த்திக்தான் தண்டுல்கர். அவனின் தீவிர இரசிகை சுகந்தி. இவள் பத்தாவது படிக்கும்போது அவன் காலேஜ் சென்றுகொண்டிருந்தான். அவன் வேலை கிடைத்து சென்னை சென்று வந்தபின்னர் ஒரு நாள் பேருந்து நிறுத்தத்தில் பார்த்தாள். பளிச்சென்றிருந்தான். ஷூ போட்டிருந்தான். அவனோடு கல்யாணம் ஆகி சென்னைக்குப் போய்விட்டால் எப்படியிருக்கும் என்று யோசித்தாள். உடம்பு குப்பென்று ஆனது போல மகிழ்ச்சி பரவியது. ஆனால், அவளுக்குத் தெரியும் அது நடக்காது. அவன் வேறு சாதி, அதுவும் கீழ்ச்சாதி.
அவளைப் பார்க்க வந்திருந்த மாப்பிள்ளையை அவள் பார்த்தபோது கார்த்திக்கின் அடையாளத்தைத் தேடிப்பார்த்தாள். இல்லை. வேட்டி சட்டையில் முறுக்கிய மீசையுடன் அவன் இருந்தான். நிறம் பரவாயில்லை. ஆனால், சரியான கிராமத்து ஆள் என்று தோன்றியது.
இவள் என்ன நினைத்தாள் என்று யாரும் கேட்கவில்லை. மாப்பிள்ளைக்குப் பிடித்துப்போய்விட்டதாம். ஆறடிக்கு நெருங்கும் உயரத்தில் திமு திமுவென்ற வளர்ந்துகொண்டிருக்கும் பெண்ணை யாருக்குத்தான் பிடிக்காது.
கல்யாணம் ஆகி சில மாதங்கள் நன்றாக இருந்தது. முதல் கர்ப்பம் கலைந்துப்போனதால் மாமனார் வீட்டில் பிரச்சனை ஆனது. அப்புறம் டாக்டரின் ஆலோசனையையெல்லாம் புறந்தள்ளிவிட்டு முதல் மகள் அடுத்த வருஷமே பிறந்தாள்.
திவ்யா என்ற பெயருடைய அந்தப் பெண்தான் இன்று அவளின் பெரும்பிரச்சனை. இவளைப்போலவே மகளும் திமுதிமு என்று வளர்ந்து கொண்டிருந்தாள். அவள் பள்ளிக்குச் செல்லும்போது பின்னே செல்ல பையன்கள் கூட்டமொன்று இருந்தது.
இவளின் காலத்தில் அப்படியில்லை. பையன்கள் அரசபுரசலாகப் பார்ப்பதோடு சரி. சுகந்தியும் எல்லாவற்றையும் கண்டுகொண்டு எதுவும் தெரியாதவள் போல இருப்பாள்.
திவ்யா சரியில்லை என்று சுகந்திக்குத் தோன்றியது. பையன்களுடன் பேசுகிறாள் என்று அவளுக்குத் தெரியவந்தது. என்ன சொல்லியும் கேட்காமல் மீனாட்சியம்மன் கோவில் போகிறேன் என்று போனாள். அவளின் தோழிகளுடன்தான் என்று சொன்னாள். ஆனால், விசாரித்தபோது அது பொய் என்று தெரியவந்தது.
இன்று அவள் தூங்கும்போது அவளின் கைப் பையைச் சோதனை செய்தாள். அந்த புதிய மொபைல் கிடைத்தது. இன்றைய தூக்கமின்மைக்கு அதுதான் காரணம். மொபைலில் இதயம் படம் இருந்தது. பட்டனைத் தொட்டால் ஸ்கிரீன் உயிர்பெற சிவப்பாக சுழன்றது. அழைத்த நம்பர்களைப் பார்த்தாள். எல்லாம் ஒரே எண்ணுக்கு அல்லது எண்ணிலிருந்து என்று தெரிந்தது. நெடுநேரம் யோசித்த பின்னர், ‘நாயை கையும் களவுமாகப் பிடிக்கலாம்’ என்று முடிவு செய்து மகளின் பையில் மொபைலை வைத்துவிட்டு வந்து படுத்தாள். தலைக்கு மேல் மின்விசிறி விறுக் விறுக்கென்று ஒடிக்கொண்டிருந்தது.
தூங்கிக்கொண்டிருந்தவளின் அருகே கார்த்திக் வந்து படுத்தான். அவளைப் புரட்டி நெஞ்சில் சாய்த்துக்கொண்டான். பெரிய அகண்ட மார்பு. அந்த சாதி ஆண்களுக்கே உள்ள மார்பு. ‘ஏண்டா என்ன நீ காதலிச்சியா?’ என்று கேட்டபடி அவன் நெஞ்சில் சரிந்தாள்…
என்ன ஆயிற்று? எழுந்து பார்த்தவளுக்கு தான் கட்டிலில் இருந்து விழுந்துவிட்டது தெரிந்தது.
என்ன இது? என் கனவில் ஏன் கார்த்திக் வந்தான்? என்ன வயது எனக்கு? என் மகளே காதலிக்கும் வயதில் ஏன் இந்த அடங்காத உணர்வு? மறுபடியும் தூக்கம் வரவில்லை. பேரூராட்சியின் 5 மணி சங்கும் பக்கத்து வீட்டு நாயும் சேர்ந்து ஊளையிடும் வரையில் அவள் தூங்கவில்லை.
காலையில் 7 மணிக்கே தண்ணீர் வந்துவிட்டது. திவ்யாவுக்கு ஏதோ நல்ல குணம் போல, தங்கைக்கு டிபன் சென்து அனுப்பிவைத்துக்கொண்டிருந்தாள். இவள் பானையை எடுத்துக்கொண்டு ஓடி, இரண்டு நாளுக்குத் தேவையான நீரை நிரப்பிவைத்துவிட்டு குளித்துவிட்டு கடைக்கு ஒடினாள். சாப்பிட நேரமில்லை.
இன்றைக்கு ரொம்ப முக்கியமான வேலை. அந்தப் பணத்தைத் திருப்பித் தர வேண்டும். அவள் கணவன் இறுதிப் படுக்கையில் இருந்தபோது வாங்கிய கடன். ஒன்றறை லட்சம் ரூபாய். கடையின் பேரில் வாங்கியது. கொடுத்தது ஒரு வகையில் பார்த்தால் அவள் கணவனின் ஒன்றுவிட்ட அண்ணன்தான். ஆனால், அவர் ரொம்பவும் மோசமாகப் பேசிவிட்டார். வேறு வழியில்லை சீட்டுப் பணம், பஞ்சாயத்துகளுக்கு மோட்டார் சப்ளை செய்த செக்கில் கிடைத்த பணம் எல்லாவற்றையும் பணமாக்கி வைத்திருந்தாள். விக்கிரமனிடம் கடையைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு மதுரைக்குப் புறப்பட்டாள். அவனை இவள் விக்கி என்றுதான் கூப்பிடுவாள்.
அவள் கணவன் கடையை நடத்திக்கொண்டிருந்தபோது கடையில் சிறுவனாக வேலைக்குச் சேர்ந்தவன். எலெக்டிரிக் வேலையில் கில்லாடி. குழாய் வேலைகளும் அத்துபடி. இவள் கணவனுக்குச் மதியச் சாப்பாடு கொண்டு செல்வாள். சாப்பிட்டுவிட்டு கணவன் பின்புர அறையில் சற்று நேரம் தூங்கும்போது அவன்தான் கடையைக் கவனித்துக்கொள்வான். அவனிடம்தான் சுகந்தி வியாபாரத்தைப் படித்தது. அப்படி பழகியிருக்கவில்லை என்றான் இன்று நடுத்தெருவிற்கு வந்திருப்போம் என்று நினைத்துக்கொண்டாள்.
மேற்கு மாசிவீதியில் உள்ள அந்த எலெக்டிரிக் கடையில் படியேறியபோது, கல்லாவின் அவர் இல்லை என்பது தெரிந்தது. கடை மானேஜர் ‘வாங்க வாங்க’, என்றார்.
‘மாமா இல்லியா?’
’அவர் வெளியே போயிருக்கிறார். நீ வந்தவுடன் போன் போடச் சொன்னார்’ என்றார் அந்தப் பெரியவர். இரண்டு குடும்பங்களுக்கும் வெகு நாள் பழக்கமானவர். கடை வாசலில் நின்று மொபைலில் மாமாவைக் கூப்பிட்டாள். அவர் திருப்பரங்குன்றத்திற்கு அப்பால் கூத்தியார்குண்டில் இருந்த பண்ணை வீட்டில் இருக்கிறாராம். கடையில் சொல்லி காரை எடுத்துக்கொண்டு வரச்சொன்னார்.
இவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கடையில் காசைகொடுத்துவிடலாம். ஆனால், கொடுத்தோம் என்று ஆகுமா என்று யோசித்தாள். ‘சரி மாமா.. வரேன்..’ என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தாள். சற்று நேரம் யோசித்தவள் விறுவிறுவென்று நடந்தாள் பெரியாருக்கு.
நகரப் பேருந்தில் திரும்பிக்கொண்டிருக்கும்போது மாமா அழைத்தார். ’என்ன நீ புறப்பட்டிட்டியாம்..?’
”ஆமா மாமா.. அவ்வளவு தூரம் வர நேரமில்லை.’
என்ன நேரமில்ல.. கடன அடைக்க வேணாமா?
’அதுதான் மாமா.. அரும்பாடு பட்டு பொரட்டி கொண்டாந்தேன்’
’சரி இங்க வந்து கொடுத்திட்டு போகலாமுல்ல?’
’அங்கெல்லாம் சரிப்பட்டு வராது மாமா’
’ஏன் நீ சம்பாதிக்கப்பட்ட அரும்பாட்ட, எங்கிட்ட படலாமுல்ல’
சுகந்திக்கு காதில் தேள் கொட்டியது போல இருந்தது. ச்சே என்றிருந்தது. அடுத்து அவர் பேசியதை பேருந்தின் ஹாரன் ஓசை அழித்துவிட்டது. இவள் மொபைலை அணைத்து கைப்பைக்குள் வைப்பதாகக் குனிந்து அருகாமை இருக்கைப் பெண்ணிற்குத் தெரியாமல் அழுதாள். நிமிர்ந்து நிற்கும் அவள் உடலின் மீது அவளுக்கே வெறுப்பு வந்தது. என்ன மாதிரி பேசிவிட்டார், செத்துத் தொலையலாம் என்று வந்தது. பெரியவளும் சின்னவளும் கண்ணுக்குள் வந்து நின்றார்கள். கண்கணைத் துடைத்தபடி நிமிர்ந்தாள்.
பெரியவள் செய்யும் அழும்புதான்அவளால் சகிக்க முடியவில்லை. பத்து முடிக்கவில்லை. மார்க்கெல்லாம் 40தைத் தாண்டவில்லை. டியூஷன் வைத்தாள். அங்கேயும் பிரச்சனை. அப்புறம் ஏதோ ஒர் பையனைக் காதலிப்பதாகப் பிரச்சனை. போலீஸ் ஸ்டேஷன் வரை போனது. எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பிவைத்தார்கள். இவள் செய்யாத வேலையெல்லாம் பெரியவள் செய்கிறாள்.
இரவு வீட்டுக்குப் போனபோது இரண்டும் தூங்கியிருந்தன.மறுநாள் ஞாயிற்றுக் கிழமை. காலையில் பேசிக்கொள்ளலாம் என்று படுக்கப் போனாள். சாப்பாடு பிடிக்கவில்லை. அரை டம்பளர் பால் கூட பிடிக்கவில்லை. என்ன மாதிரி மாமா கேட்டுவிட்டார்? நான் இப்படித்தான் சம்பாதிக்கிறேன் என்று நினைக்கிறாரா? உடல் அழுகிப்போனால் நல்லது என்று தோன்றியது.
காலையில் எழுந்தவுடன் பிரச்சனை துவங்கியது. திவ்யா எங்கோ புறப்பட்டுக்கொண்டிருந்தாள்.
‘எங்கடி..?‘
’அழகர்கோவில் போறோம், நானும் திலகாவும்..எல்லாரும்’
’பொய் சொல்லாதடி..’ என்று சுகந்தி சீற, திவ்யா பயந்துவிட்டாள். ’மதுரைக்கி யாரோட போன? அவளையெல்லாம் கேட்டேன். ஒருத்தியும் மதுரை போகலங்கறாளுக’.
ஆனாலும், திவ்யா அடங்குவதாக இல்லை. ‘இப்ப நான் போவே.. என்ன செய்வ?’
இப்படித் துவங்கிய சண்டை தீவிரமாகியது. திவ்யா சமையலறையில் நுழைந்து பாத்திரங்களை உருட்டிவிட்டாள். பீரோவைத் திறந்து துணியையெல்லாம் எடுத்துவீசினாள்.
சுகந்திக்குக் கடும் கோபம் வந்தது. திவ்யாவின் பையை எடுத்துத் திறந்து மொபைலை எடுத்து ‘இத எவங் கொடுத்தான்?’ என்று கத்தினாள். திவ்யா அப்புறம் கொஞ்சம் அடங்கினாள். ஆனாலும் அன்று முழுவதும் வீடு இறுக்கமாக இருந்தது.
சுகந்தி வழக்கமாக ஞாயிறும் கடைக்குச் செல்வாள். பக்கத்தில் உள்ள கடைக்காரருக்கும் இவளின் கடைக்கும் பலத்த போட்டி. ‘ஒரு பொம்பள முன்னேறுறா…’ என்ற எரிச்சல் அவருக்கு. விக்கியை அழைத்து கடையைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு பாத்திரத்தையெல்லாம் அடுக்கி துணையையெல்லாம் மடித்துவைத்து என்று வேலையை ஆரம்பித்தாள். திவ்யா மதியம் சாப்பிடவில்லை. இவளும் கேட்கவில்லை.
மாலை ஆறு மணியிருக்கும். திவ்யாவின் மொபைலில் அழைப்பு வந்தது. இவளை ஓர் பார்வை பார்த்துவிட்டு செல்லை எடுத்துக்கொண்டு மொட்டை மாடிக்குச் சென்றாள். இவளும் பொறுமையாக இருந்தாள். அரை மணி நேரம் ஆயிற்று.. திவ்யா கீழே வரவில்லை. இவள் மொட்டை மாடிக்குச் சென்றாள்.
இவளைக் கண்டபின் திவ்யா ‘சரி.. பார்க்கலாம்’ என்று முடித்துக்கொண்டாள்.
’யாரவன். யார் ஒனக்கு போன் வாங்கிக்கொடுத்தது’
‘சொல்றேன்’ என்றபடி திவ்யா கீழிறங்கினாள். இவளுக்கு வெறி வந்தது. அவளை மறித்து போனை பிடுங்கி கீழே வீசினாள். மாடிப்படியில் விழுந்து எகிறி தெருவில் விழுந்து மூன்றாகப் பிளந்தது. திவ்யா வெறிபிடித்தவள் போனாள்.. படிகளில் தாவி இறங்கி வீட்டுக்குள் நுழைந்தாள்.
‘ரொம்பவும் தப்பு செய்கிறோமோ’ என்று யோசித்தபடியே இவளும் பின்தொடர்ந்தாள். திவ்யா வாசலை மறித்துக்கொண்டாள்.
’நீ என்ன ஒழுங்கா? நீ என்ன ஒழுங்கா’ என்று அடித்தொண்டையில் கத்தினாள். எதிர்த்த வீட்டு அண்ணன் எட்டிப் பார்த்தார். பக்கத்து வீட்டு முருகேஸ்வரி வெளியில் வந்தாள்..
சுகந்தி, திவ்யாவைத் தள்ளிக்கொண்டு சென்று கதவை அடித்து மூடினாள். திவ்யா பத்திரகாளி போல நின்றாள். ’நீ விக்கிய வச்சில்லியா? அப்பா செத்தப்புரம் நீ விக்கியோட அடிச்ச கூத்து எனக்குத் தெரியாதுன்னு நினைச்சியா? நான் ஹாஸ்டல்ல இருந்தாலும் குட்டி இங்கதான இருக்கா.. அவ பார்தாளாம்….சொன்னா.. நீ..’
சுகந்திக்கு தலையில் இடியிறங்கியது போல இருந்தது. அப்படியே சரிந்தாள். திவ்யா நிறுத்துவதாக இல்லை. அரை மயக்கம்போல சுகந்தி சரிந்து கிடந்தாள். ’ஒடம்பு அழுகிப்போகனும்’ என்று மறுபடியும் தோன்றியது.
‘சொல்லுடி… ஒங்கம்மா கதைய சொல்லு’ என்று குட்டியைப் பிடித்து இழுத்து வந்தாள். குட்டி பயந்துபோயிருந்தாள். கோழிக்குஞ்சு போல சுருங்கிப்போயிருந்தாள்.
சுகந்திக்கு வெறி வந்தது. எழுந்தாள். ஓங்கி ஒரே அறை. திவ்யா மிரண்டு போனாள். வெறிவந்தது போல வாயைத் திறந்து அடித்தொண்டையில் கத்தினாள். என்னவென்று புரியாத கத்தல். கதவைத் திறந்தவள் வெளியே ஓடினாள். இவள் தெருவில் இறங்கிப் பார்க்கும் போது வாழைத்தோப்புக்குள் திவ்யா இறங்கி மறைவது தெரிந்தது. வாழை மரங்களுக்கு மேல் பௌர்ணமி நிலா பெரிதாகத் தெரிந்தது.
எதிர்த்த வீட்டுக் கிரில் கதவைத் தட்டினாள். அலறிக்கொண்டே தட்டினாள். ‘அண்ணே’ என்று அடித்தொண்டையில் அலறினாள். அவர் எழுந்து வந்தார். அவர் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்தார் போலும்.
‘நீங்க இருங்கம்மா.. நா அழைச்சிட்டு வாரேன்’ என்று தெருமுனை சென்று வாழைத் தோப்பில் இறங்கி நடந்தார்.
இந்த அண்ணனை அவளுக்குப் பிடிக்காது. இரண்டு மாதங்களுக்கு முன்பு அந்த பேய் வீட்டுக்கு வாடகைக்கு வந்திருந்தார். வெகு நாட்கள் பூட்டிக்கிடந்த வீடு அது. அவர் ஏதோ ஓர் கம்யூனிஸ்டுக் கட்சிக்காரர். யாரோடும் பேசமாட்டார். அவரைப் பார்க்க கிராமத்து ஜனங்கள் வருவார்கள். பேசிக்கொண்டேயிருப்பார். மற்றபடி சிகெரெட் வாங்க கடைகளுக்குச் செல்வார். எல்லோரையும் அவர் பார்ப்பது போலத் தோன்றினாலும் யாரையும் பார்க்க மாட்டார். வாயைத் திறப்பதற்கு காசு கேட்பார் போல. அவளுக்கு கம்யூனிஸ்ட் என்றாலே பிடிக்காது. அவளுடைய அப்பா, தாத்தா எல்லோரும் காங்கிரஸ்காரர்கள்.
பத்து பதினைந்து நிமிடம் ஆனது. இவளுக்கு காலம் நின்று விட்டது போலத் தெரிந்தது. வாழைத் தோப்பில் பாம்பு இருக்குமே என்று பயம் வந்தது. இந்த சனியன் பம்பு செட் கிணற்றுக்குச் சென்றுவிட்டதோ என்று பயந்தாள். வெளியே செல்லவும் பயம். ‘அத்தனை பொம்பளைகளும் கேள்வி கேட்பாளுங்க’ என்ற பயம். அவள் அந்தத் தெருவில் யாருடனும் பேசுவதில்லை. சண்டை. இவளை அவர்கள் யாரும் மதிப்பதில்லை. தாலியறுத்துவிட்டு மினுக்கித் திரிபவள் என்று அவர்களுக்கு அபிப்ராயம்.
பௌணர்மி வெளிச்சத்தில் அவர்கள் வருவது தெரிந்தது. அண்ணன் திவ்யாவை அழைத்துக்கொண்டு அவர் வீட்டுக்குள் சென்று விட்டார். இவளும் அவர் வீட்டுக்குள் நுழைய முயன்றபோது, ‘இரும்மா, நான் பேசிட்டு கூப்பிடுறேன்’ என்றார்.
மறுபடியும் நேரம் சென்றுகொண்டிருந்தது. திவ்யா கிணற்றில் விழுந்திருந்தாள் என்ன ஆகும்? அந்த மாமா பண்ணை வீட்டுக்கு வரச்சொன்னாரே.. இனி என்ன செய்வார்.. வெளியில் எப்படி தலைகாட்டுவது என்றொல்லாம் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் மனசு ஓடியது.
10 மணியிருக்கும். திவ்யா உள்ளே வந்தாள். எதிர்த்த வீட்டு அண்ணன் வாசலில் நின்றிருந்தார். ‘எல்லாம் சரியாயிடும். காலைல நாம பேசலாம்’ என்று திரும்பி நடந்தார். கையில் சிகெரெட் புகைந்துகொண்டிருந்தது.
இவள் திவ்யாவைப் பார்த்தாள். திவ்யா அமைதியாக இருந்தாள். தலைகுனிந்தபடியிருந்தாள். ’என்ன சொன்னாரு?’
திவ்யா நிமிர்ந்து தீர்க்கமாகப் பார்த்தாள். அவளுக்கும் இவளைப்போலவே பெரிய கண்கள். ‘ஒங்க அம்மாவும் பொம்பளதான்னு சொன்னாரு’ என்றாள். இவளுக்குப் புரியவில்லை.
திவ்யா சமையலறை சென்று அவளுக்கும் இவளுக்குமாக சாப்பாடு போட்டுக்கொண்டு வந்தாள். இவளுக்கு அவளின் மாற்றம் புரியவில்லை. ’சாப்பிடும்மா’ என்றபடி அமர்ந்தாள். இவளும் அவளுமாக சாப்பிட்டார்கள். இப்படி சாப்பிட்டு வெகு நாளாயிற்று. ஆனால், இரண்டு பேரும் பேசிக்கொள்ளவில்லை.
இவள் படுக்கையில் படுத்தபோது, வராண்டாவில் படுத்திருந்த திவ்யா எழுந்துவந்து மடியில் தலைவைத்துப் படுத்துக்கொண்டாள். அனைத்து குழப்பங்களுக்கு இடையிலும் சுகந்தி அன்று சற்று தூங்கினாள்.
காலையில் எழுந்தபோது எதிர்வீட்டுக் கதவு திறக்கவில்லை. அண்ணன் எப்போதும் லேட்டாகத்தான் எழுந்திருப்பார். அவர் எழுந்திருக்கக் காத்திருந்தாள். அவர் எழுந்து வாழைத் தோப்பு வழியே டீ கடைக்குச் சென்று வந்தபின்பு, அவர் வீட்டு வாசலில் நின்று ‘அண்ணே’ என்றாள்.
‘உள்ள வாம்மா’ என்று குரல் வந்தது. அண்ணன் பேப்பர் படித்துக்கொண்டிருந்தார். இவள் தரையில் உட்காரப்போக, அவர் தடுத்து நாற்காலியைக் காட்டி, ‘,இங்க எல்லாரும் சமம். பெண்ணுன்னா சேர்லல உட்காரக் கூடாதா, ஆணுக்குச் சமமா?’ என்றார். இவள் வீட்டில் அவள் ஒரு நாளும் எந்த ஆணுக்குச் சமமாகவும் உட்கார்ந்ததில்லை. கடையில்தான் முதலாளி சேரில் உட்கார்ந்திருக்கிறாள்.
அண்ணன் வெகுநேரம் மௌனமாக இருந்தார். எங்கே எப்படி ஆரம்பிப்பது என்று யோசிப்பார் போல.
‘திவ்யா சின்ன பொண்ணு. அவளுக்கு உங்க வாழ்க்கைச் சிக்கல் புரியாது. அப்புறம்.. ’ அவர் நிதானமாகப் பேசினார். சுகந்தியின் கண்களை நேருக்கு நேர் பார்த்து பேசினார். இப்படி ஓர் ஆளை அவள் எதிர்கொள்வது இதுதான் முதல் தடவை.
’அவள ஏதாவது படிக்க அனுப்புங்க. உங்க பொண்ணை நீங்க நம்பனும். ஏதோ காதல்னு சொல்றாளேன்று பயப்படாதீங்க. பெண்களுக்கு ஜாக்கிரதை உணர்வு அதிகம். அவளை நம்புங்க.. ஏதோ படிச்சு அவ வேலைக்குப் போகட்டும். அவ புத்திசாலி’ என்று சொன்னார். அவர்களுக்குள் என்ன பேசிக்கொண்டார்கள் என்று அவர் சொல்லவில்லை.
கடைசியாக அண்ணன் சொன்னார், ’விக்கிய வீட்டுக்கு வரச்சொல்லாதீங்க. நீங்க இல்லாதப்ப அவன் இவள கண்டபடி தொடுறான்னும், என்னக் கட்டிக்கன்னு கேட்கிறான்னும் அவ சொல்றா…’
சுகந்தி அதிர்ந்துபோனாள். ‘அந்த நாய’ என்று ஆரம்பித்து மனதுக்குள் திட்டினாள். ’ஆண்களை நம்பாதிங்க’ என்றார் அண்ணன். அவரின் சின்ன கண்களில் சிரிப்பு இருந்தது. ’ஆண்கள் எப்போதும் ஆண்கள்தான்.. தாக்கிவிட்டு தப்பிச்செல்லும் மிருக உணர்வு கொண்டவர்கள்.. பெண்கள்தான் என்றும் பரிதவிப்பவர்கள்’ என்றார்.
இவளுக்குப் புரியவில்லை. அவரின் பின் பக்கத்தில் தாடிக்காரர்கள் இரண்டு பேர் படமிருந்தது. ஒன்று ஏசு என்பது இவளுக்குத் தெரியும். ஆனால், அவர் கடவுள் மாதிரியில்லாமல் மனிதன் போல வாய்விட்டுச் சிரித்துக்கொண்டிருந்தார். பெரிய தாடிக்காரர் யார் என்று தெரியவில்லை. குடும்பப் படம் ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தாள். ஒன்றும் இல்லை. இந்த ஆள் ஏன் தனியே இருக்கிறார் என்று யோசித்தாள்.
’புறப்படும்மா. கடைக்கு வேற போகனும்ல‘ என்றார். இவள் புறப்பட்டாள். திவ்யாவிடம் என்ன பேசினார் என்ற கேள்விமட்டும் மனதில் இருந்தது.
அப்புறம் திவ்யா நிறைய மாறிவிட்டாள். மதுரை கல்லூரி ஒன்றில் கம்யூட்டர் படிக்கச் சென்றாள். ஆறு மாதம் இப்படி போனது. சில நாட்களில் மறுபடியும் கதை திரும்பிவிட்டது. இப்போது வேறு ஓர் பையன். இரண்டு தெரு தள்ளியிருந்த வீட்டில் குடியிருக்கும் ஒற்றை ஆள். யாரோ என்ன சாதியோ, குடிகாரனோ என்னவோ யாருக்குத் தெரியும்.
ஆனால், சுகந்தி தீர்மானித்து விட்டாள். அண்ணன் சொல்வதெல்லாம் உருப்படாது. கல்யாணம்தான் ஒரே வழி. அப்புறம் மாப்பிள்ளை தேடுவது துவங்கியது.
திவ்யா அடம்பிடித்தாள். முடியவே முடியாது என்றாள். ஆனால், இவள் விடுவதாக இல்லை. அண்ணனிடம் கேட்டாள். மறுபடியும் திவ்யாவும் அண்ணனும் உட்கார்ந்தார்கள். என்ன பேசினார்கள் என்பது மறுபடியும் இரகசியமாகவே இருந்தது. அப்புறம் திவ்யா மாடிக்குச் சென்று அந்தப் பையனிடம் போனில் பேசினாள். வரும்போது அழுதுகொண்டே வந்தாள்.
இவள் பதறிப்போய் ’என்னடி?‘ என்றாள். ’அவனைக் கல்யாணம் பன்னிக்கடா என்று கேட்டேன். என்றபடி அழுதாள். அப்புறம் கண்களைத் துடைத்துக்கொண்டு ’மாப்பிள்ளை பாரும்மா’, என்றாள்.
இவளுக்குப் புரியவில்லை. அண்ணனை பார்த்தபோது ‘என்ன பேசினிங்க’ என்று கேட்டாள். அவர் கண்கள் சிரித்தன. ’மொதல்ல நம்பும்படி பேசனும். அப்புறம் ஒவ்வொருத்தரும் தனக்குச் சரின்னு பட்டதத்தான் செய்வாங்க… புரிஞ்சுக்க அவகாசம் கொடுக்கனும். வாய்ப்பு கொடுக்கனும்.. அவ புரிஞ்சிகிட்டா.. அவ்வளவுதான்’ என்றார்.
இவளுக்குச் சுத்தமாகப் புரியவில்லை. மகள் தப்பித்ததே போதும் என்று தோன்றியது. ’சீக்கிரம் கல்யாணம் பண்ணிவைக்கப் போறேன்.’ என்றாள் சுகந்தி. அவர் நெற்றியைத் தேய்த்துக்கொண்டே, ’ம்’ என்றார். அந்த ’ம்’முக்கு ’வேற வழி?’ என்பதுபோல பொருள் என்று இவளுக்குத் தோன்றியது.
இரண்டே மாதங்களில் கல்யாணம் முடிந்தது. கல்யாண வேலைகளுக்காக மதுரை அருகே வாழ்ந்த அப்பா வீட்டிலேயே இரண்டு மாதமும் போனது. கல்யாணம் முடிந்து பெண்ணையும் மாப்பிள்ளையும் அனுப்பிவைத்துவிட்டு வீட்டுக்கு வந்தாள்.
இரவு எட்டுமணியிருக்கும். வீடு வெறிச்சோடிக்கிடந்தது. குட்டி வந்தவுடனேயே தூங்கிவிட்டாள். பத்து மணியிருக்கும்போது அண்ணன் வரும் சத்தம் கேட்டது. கிரில் கேட்டைத் திறக்கிறார் என்று தெரிந்தது. இவள் வெளியே சென்று ’அண்ணே’ என அவர் திரும்பினார்.
’ஏன் கல்யாணத்துக்கு வரல?’
’பொதுவா நா கல்யாணங்களுக்குப் போறதில்ல. என்ன மாதிரி ஆளுங்க துன்பத்திலதான் துணையா இருப்போம்’
என்ன இது? என்ன பேசுகிறார் இவர். கல்யாணம் பற்றி பேசினால் துன்பம் பற்றி பேசுகிறார்?
’சரிண்ணே’ என்றபடி திரும்பினாள். இவர் போன்ற மனுசங்க தனியா இருப்பதுதான் சரியென்று தோன்றியது.
கட்டிலில் படுத்தபோது விறுக்விறுக்கென்று தலைக்கு மேல் ஒடிய பேன் அனலைக் கொட்டியது. தூக்கம் வராமல் யோசித்துக்கொண்டேயிருந்தாள். இவளது கல்யாணம் முதல் திவ்யாவின் கல்யாணம் வரை எண்ணம் தறிகெட்டு ஓடியது. அடிப்பதும் அணைப்பதுமாய் இருந்த கணவன் முதல் முதல் குழந்தை களைந்து இரத்தமாய் போனது முதல்.. அழைத்த மாமா வரை, சின்னப் பையன் விக்கி முதல்…
இவளுக்குத் திருமணம் ஆன 16 வயதில்தான் திவ்யாவுக்கும் திருமணமாகியிருக்கிறது.
என்னவாகும் மகளின் திருமணம் என்ற கவலை வந்தது. பெருமூச்சு விட்டாள். எழுந்து தண்ணீர் குடித்தாள். படுத்தாள். தூக்கம் வரவில்லை. தலைக்கு மேல் பேன் விறுக்விறுக்கென்று அதே பழைய கதியில் சுற்றிக்கொண்டிருந்ததைப் பார்த்தபடி அமர்ந்தாள்…
No comments:
Post a Comment