சுரீர் என்று
எப்பொழுதோ குட்டுப்பட்ட வலியில்
எங்கெங்கோ ஓடி
அறியாமலேயே பந்தயகோட்டுக்குள் எறியப்பட்டு
கழுத்தில் பட்டைகளும் பூட்டப்பட்ட பின்
எழுந்து ஓடுவதை தவிர வேறுவழி இருப்பதில்லை.
அவ்வப்பொழுது மறைமுகமாய் பெற்ற அடிகளும்
ஏற்கனவே பெற்ற புண்களின் ரணமும்
ஓடும் வெறியை இன்னும் அதிகமாக்க
ஓடிய வேகத்தில் முதல் நிலையைக் கடக்க
சற்றே நிறுத்தப்பட்டு
கழுத்தோடு இணைக்கப்பட்டது இன்னொறு குதிரை.
மாற்றி இணைக்கப்பட்டதாய்
சுற்றிலும் ஆரவாரமும் கூச்சலும் காதைப்பிளக்க
இணைக்கப்பட்ட குதிரையுடன் தொடர்ந்தது ஓட்டம்.
ஒவ்வோரு நிலையையும் கடந்ததன் அடையாளமாய்
ஒவ்வொரு பட்டையாய் கழட்டப்பட்டன கழுத்திலிருந்து.
முதல் பட்டையாய் ”நிம்மதி”
இரண்டாவதாய் ”சந்தோசம்”
மூன்றாவதாய் ”இணைக்கப்பட்ட குதிரையும்” பறிக்கப்பட
இலக்கு மனதை வெகுவாய் உறுத்த
சஞ்சலப்பட்ட மனது சற்றே ஆசுவாசிக்க
பின்னால் வரும் குதிரைகளின் குழம்படி
அருகில் வந்து வேகமாய் கடந்து கடந்துபோக
தனியாய் மீண்டும் ஓட்டம்
இன்னும் வேகமாய்
மறுபடியும் வெவ்வேறு நிலைகள்
கழட்டப்பட்ட வெவ்வேறு பட்டைகள்.
தொடர்ந்துகொண்டிருக்கும் ஓட்டம்
எப்போழுதேனும் நிற்குமா
தெரியவில்லை.
எல்லா நிலைகளும் என்றோ ஒருநாள்
கடக்கப்பட்டே தீரும்.
தூரத்தே தெரியும் இலக்கு
எப்படியேனும் அடையப்பட்டே தீரும்.
கழற்றப்பட்ட பட்டைகளும் பிரிக்கப்பட்ட குதிரையும்
மீண்டும் ஒருநாள் மீண்டு வரும் என்ற நம்பிக்கையுடன்
மனதில் பட்ட வலியுடனும்
உடலில் பட்ட புண்களுடனும்
தொடந்து ஓடிக்கொண்டிருக்கும்
நாங்கள் பந்தயக் குதிரைகள்.
(கோவையில் இருந்து மின்னஞ்சல் வழியாக வந்த கவிதை 2011 ஆகஸ்ட் 7 ஆம் நாள் நடைபெற்ற படைப்பரங்கில் தோழர் கேகே யால் வாசிக்கப்பெற்றது)
No comments:
Post a Comment