Wednesday, August 10, 2011

புடைத்துண்ணும் சதுக்கபூதம் - கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி


நாக்கை நீளமாகத் தொங்கவிட்டபடி கிஸ்சு முஸ்சு என்று இழைத்தபடி எப்போதோ வீசப்பட்ட கல்லை நினைவில் சுமந்து, விரட்டாத கல்லுக்காக ஓடிக் கொண்டிருக்கிறது அந்தநாய். சிந்தனைகளில் சிக்கிக் கொண்டு என்னை மறந்து நான் நடந்து கொண்டிருக்கும்போது ‘வள்’ என்று கத்தி என்னைப்பூமியில் கால்பாவச் செய்கிறது. எப்போதும் நாய் துரத்தினால் ஓடவோ வேகமாக ஒதுங்கவோ கூடாது என்பதும் அப்படி செய்யும்போது நாயின் வீரம் பலமடங்கு அதிகரிக்கும் என அறிந்திருந்ததால் “சீ… போ… கழுத…” என்று நின்று முறைத்து வீரவசனம் பேசியதும் அது ஒதுங்கி ஓடத் தொடங்கியது.

இப்படி வாழ்க்கையில் எழுகின்ற பிரச்சனைகளை எல்லாம் நின்று வீரவசனம் பேசி வெற்றி கொண்டுவிட முடிந்தால் எவ்வளவு லகுவாக இருக்கும். ஆனால் உண்மையில் இந்த நாயைப் போலத்தான் நானும் ஓடிக் கொண்டிருக்கிறேன்.

வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் வாகனங்கள், அவை எழுப்பும் புகைகள் நாசியை மட்டுமல்ல உயிரையும் துளைத்துக் கொண்டிருந்தன. அலையில் சிக்கிய பந்தால் மூழ்கி எப்படி முத்தெடுக்க முடியும் என்பதுபோல்தான் இன்றைய உலகில் வாழ்க்கை என்பது அதளபாதாளத்தில் ஒளிந்து கொண்டுள்ளது. நானோ வெறும் காற்றடைத்த பந்தாக துன்ப அலைகளின் மீது.

எப்படியோ தக்கிமுக்கி தகப்பனின் ஒற்றைச் சொத்தையும் காலியாக்கி வாங்கிய பட்டம். அந்தப் பட்டத்தோடு தெருத்தெருவாய் அலைந்து பெற்ற வேலை. வேலை என்றால் சம்பளம் என்ற ஒன்று உண்டல்லவா? வெள்ளை காகிதத்தில் நான்கு இலக்கங்களில் மாதச் சம்பளம் என அச்சடித்துத் தந்தது அந்த பன்னாட்டுக் கம்பெனி. அதன் குளுகுளுப்பு சென்னையின் வெயிலுக்கு இதமாக இருந்தது.

முதல் மாதம் சென்றது. இரண்டாவது மாதம் சென்றது. மூன்றாவது மாதமும் சென்றது. ஆனால் சம்பளம் மட்டும் வந்தபாடாக இல்லை. ஏன் என்று யாரிடமும் கேட்க முடியவில்லை. ஆனால் வயிறு மட்டும் என்னை கேட்டுக்கொண்டே இருக்கிறது. கண்ணாடி அறைக்குள் இருந்த குளிரைத் தாண்டி என் வயிறு கொதிக்கிறது. எதைப்பற்றியும் கவலைப்படாமல் கணிப்பொறி பளிச்சென ஒளிர்கிறது. என் கண்கள் இருட்டிக் கொண்டு போகின்றன.

தீ எரிந்தால் தண்ணீர் ஊற்றி அணைக்க வேண்டும் என்ற அடிப்படைத் தத்துவத்தை எத்தனை முறைதான் பயன்படுத்துவது என் வயிற்றுத் தீக்கு? உயிர் கருகும் வாசனை என் நாசியைத் துளைக்கிறது. எப்படித்தான் ஜடமாக எல்லோரும் வேலை பார்க்கிறார்களோ என்ற ஆச்சரியம் ஒருபுறம்.

கசக்கிப் பிழிந்து எறியப்பட்ட சக்கையாக வீதியில் நடந்து கொண்டிருக்கிறேன். மேன்சன் முழுக்கக் கடன்கள் என் வருகைக்காக காத்துக் கிடக்கும். எங்கு செல்வது, யாரிடம் சொல்வது? ஒன்றும் புரியவில்லை. எனக்குக் கற்றுக் கொடுக்கப்பட்ட கல்வித் திட்டத்தில் இதுமாதிரியான நேரத்தில் நான் என்ன செய்ய வேண்டும் என்று எந்த தகவலும் இருந்ததில்லை.

கடற்கரையோரம் செய்வதறியாது நடந்து செல்கிறேன். மனிதர்கள் கூட்டம் கூட்டமாய். எல்லோரின் மீதும் ஒரு வலை பின்னப்பட்டிருக்கிறது. தான், தன் குடும்பம், தன் சுகம் என்ற இரும்பு நூல்களால் ஆக்கப்பட்டிருக்கும் வலை அது. ஆங்காங்கே உணவுப் பொருட்கள் கடைகளில் கண்சிமிட்டி பணமுள்ளவர்களை மட்டும் அழைக்கின்றன. தண்ணீர்கூட பாக்கெட்டுகளில் முடக்கப்பட்டு ஊனமாகிப்போன உலகைப் பறைசாற்றுகிறது.

கடலிலிருந்து வெளிவரும் அலை என் கண்களுக்கு அன்பாகத் தெரிகிறது. இந்த இயற்கை மனிதனுக்கு அன்பை மாறிமாறி வழங்குவது போலவும் அதை அவன் பெற மறுப்பதால் மீண்டும் அவை திரும்பி சென்றுவிடுவது போலவும் உணர்கிறேன். இத்தனை நாட்களாக என்னைச் சுற்றி இருந்த இரும்பு நூல்களை ஒவ்வொன்றாக அறுத்தெறியத் தொடங்குகிறேன்.

ஒரு காயசண்டிகை பிச்சைப் பாத்திரத்துடன் என் முன்னே வந்து நிற்கிறாள். அன்னதானத்தில் என் தங்கையுடன் நிற்கும் தாயை நினைவுபடுத்தியபடி மணிமேகலையாய் எல்லோர் பசியையும் அறுத்திடத் துடிக்கிறேன். அமுதசுரபியின் நினைவு வருகிறது. அதைத் தேடிப் பயணப்பட்ட போது சிதைக்க இயலாத சிவப்புநிற அமுதசுரபியை உடைத்துவிட்டதாகக் கூறி அதன் மீது ஓட்டுப் பெட்டியை வைத்து மறைத்திருப்பதைக் காண்கிறேன். களவாடி கவிழ்த்து வைக்கப்பட்டுள்ள அமுதசுரபியை மீட்டு ஆதிரை தேடி அலையலாமா என்ற எண்ணம் என்னுள் ஊடாடுகிறது.

சுண்டல் விற்கும் சிறுவன் ஒருவன் என் பயணத்தைத் தடைசெய்து பூமிக்கு அழைத்து வருகிறான். வழியில் கண்டெடுத்த அரித்த சத்திய சோதனை புத்தகத்தை அவனுக்குக் கொடுக்கிறேன். படிப்பான் என்று எதிர்நோக்கிய என் விழிகளுக்கு எதிரிலேயே சரக் சரக்கென எல்லாப் பக்கங்களையும் கிழித்து சுண்டல் மடிக்க வைத்துக் கொள்கிறான்.

பசி மறந்து லயித்திருந்த நேரத்தில் மீண்டும் நாக்கைத் தொங்கப் போட்டபடி அந்த நாய் என்னை நோக்கி ஓடி வருகிறது. நான் எழுந்து ஓடத் தொடங்குகிறேன். அப்போது எதிரில் என்னைப் போல் இன்னொருவன் ஓடி வருகிறான். இருவரும் எதிரெதிரே நின்று ஒருவரை ஒருவர் பார்க்கிறோம். சுற்றிலும் பார்க்கிறேன் பல இளைஞர்களையும் பல நாட்டு நாய்கள் துரத்திக் கொண்டிருக்கின்றன.

ஒரு இளைஞன் தன் விரல்களை வெட்டி அதன் பசிக்குத் கொடுக்கிறான். ஒருவன் இனி ஓட வலுவில்லை என்பதால் கால்களைக் கழற்றிக் கொடுக்கிறான். ஒருவன் தன் மூளையைக் கையில் எடுத்து அதன் முன்வைத்து மண்டியிட்டு மன்றாடுகிறான். ஒருவன் கண்களை என்று ஒவ்வொருவரும் தங்கள் அவயங்களை நாய்களுக்கு அளித்து சமரசம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருவரிடமும் இருந்து வழியும் ரத்தங்கள் எல்லாம் கடலில் கலந்து கப்பல் ஏறி கழுகுகளின் தேசத்திற்குச் சென்று கொண்டிருக்கின்றன.

அந்த இன்னொருவனின் தலையில் இருந்த ராணுவத் தொப்பியில் பனித்துளிகள் மின்னிக் கொண்டிருக்கின்றன. என்னையாவது நாய் துரத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் அவனையோ சிங்கம் துரத்துகிறது. அதுவும் நான்கு தலையுள்ள சிங்கம். என்னிடம் உதவியாகத் தன்னை எப்படியாவது சிங்கத்திடமிருந்து காப்பாற்றும்படி கெஞ்சி வேண்டுகிறான். நான் எனக்குப் பின்னால் வந்து கொண்டிருக்கும் நாயை அவனிடம் காட்டுகிறேன்.

எனக்காக இரக்கப்படவோ வருத்தப்படவோ ஆற்றப்படுத்தவோ வழியில்லாமல் என்னைக் கீழே தள்ளிவிட்டு தன் அவயங்களைக் காத்துக் கொள்ள அவன் ஓடத் தொடங்குகிறான். எனக்குள் சிரிப்பு எழுகிறது. ஏன் எதற்கு என்று தெரியாமல் யாருடைய இலாபத்திற்போ துப்பாக்கி தூக்கி வனங்களில் திரிந்து தன் மக்கள் மீதும் என் சோதரர்கள் மீதும் குண்டு பொழிந்து திரிபவன்தானே இவன் என்று தெரிந்தபோது என் சிரிப்பு அதிகரிக்கிறது. என் சிரிப்பும் சேர்ந்து அவனைத் துரத்துகிறது. தலைதெறிக்க ஓடுகிறான்.

கீழே விழுந்த என்னைக் கடித்துக் குதற அந்த நாய் வெறியோடு என் அருகே வருகிறது. அப்போது திடீரென அங்கு வருகின்ற ஓநாயைக் கண்டதும் விரட்டிய நாய் ஓநாயின் காதுகளில் வேதம் ஓதி புரிந்துணர்பு ஒப்பந்தம் ஒன்றை இட்டு ஒதுங்கிக் கொள்கிறது.

என் கண்களில் பயத்தைவிட பசியே அதிகம் இருப்பதைக் கண்டதும் எனக்கு இலவசமாக உணவை வழங்குகிறது அந்த ஓநாய். கிராமத்தில் வயிற்றோடு சண்டையிடும் என் குடும்பத்திற்கும் தான்தான் உணவளித்திருப்பதாக என்னிடம் தன்பெருமை கூறி காலரை உயர்த்திக கொள்கிறது ஓநாய். எனக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. பக் பக் என்று சாப்பிடத் தொடங்குகிறேன். அந்த ஓநாய் என் அருகிலேயே சவுகரியமாக உட்கார்ந்து கொள்கிறது.

அந்த ஓநாயை மேன்சனுக்கு அழைத்துச் செல்கிறேன். ஒவ்வொரு அறையிலும் ஒவ்வொரு ஓநாய் புதிதாக வந்துள்ளது தெரிகிறது. ஆனால் எப்போதும் இல்லாத ரத்தவாடை இப்போது அங்கு வியாபித்திருக்கிறது. என் அறைக்குச் சென்று பார்க்கிறேன். ஓநாயின் தயவால் கண்ணைக்கவரும் ஒரு தொலைக்காட்சி என்னை வரவேற்கிறது. வயிற்றுப் பசி அறுத்ததால் முட்டுப்பசி எழுகிறது. மனதை மயக்கும் காமங்கள் எல்லாம் ஓருருவாய் அந்தப் பெட்டிக்குள் இருந்து விஸ்வரூபம் எடுத்து என்னை முழுமையாக ஆட்கொள்கின்றன.

என்னை மறந்து உறங்கி காலையில் எழுகிறேன். அறையெங்கும் ரத்தம் சிதறிக் கிடக்கிறது. தற்செயலாக ஓநாயின் வாயைப் பார்க்கிறேன். என்னைப் பார்த்து நட்புடன் அது சிரிக்கிறது. அதன் பற்கள் எங்கும் இரத்தம். குளியலறைக்குள் சென்று குளிக்கும்போதுதான் எனக்கு காயடிக்கப்பட்டிருப்பது தெரிகிறது. மேலும் முதுகில் ஒரு சிறுவலி தென்பட்டதால் தடவிப் பார்க்கிறேன். அங்கே சிறு ஓட்டை இருப்பதையும் அதிலிருந்து இலசோக பிசுபிசுவென இரத்தம் வழிந்திருப்பதையும் உணர்கிறேன்.

இவைபெய்லலாம் எப்போது நடந்தது. எப்படி நடந்தது என்று யோசித்துப் பார்க்கிறேன். ஒன்றும் புரியவில்லை. மீண்டும் எனக்கு உணவு கொடுக்கிறது ஓநாய். சந்தோசமாக உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். எதிரிலிருந்த கண்ணாடியை எதெச்கையாக பார்த்தபோது அதிர்ந்து போகிறேன். என் முதுகு பின்னால் உட்கார்ந்து அந்த ஓநாய் ஒரு ஸ்ட்ராவால் என் முதுகு ஓட்டைக்குள் இருந்து இரத்தத்தை குடித்துக் கொண்டிருக்கிறது. சுவரிலிருந்த எந்த கடவுளின் ஆயுதமும் எனக்காக பாய்ந்து வராமல் தேமே என்று உள்ளன.

படக்கென எழுந்து வெளியில் ஓடுகிறேன். ஒவ்வொரு அறையிலும் ஓநாய்கள் மேன்சன்சாரர்களின் இரத்தத்தை அவர்களே அறியா வண்ணம் உறிந்து கொண்டிருக்கின்றன.

அப்போது கணக்கெடுப்பிற்கு வயிறு பெருத்த தொத்தடிமைகள் இருவர் கைகளில் பூணப்பட்ட தங்க விலங்குகளுடன் வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் கைகளில் இரத்தம் தோய்ந்த கத்தி இருக்கிறது. ஒவ்வொருவரிடமும் இருக்கும் ஆள்காட்டி விரலை ஜனநாயக சாட்சியாக வெட்டி எடுத்து பையில் போட்டு கணக்கு எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

என்னைக் கண்டதும் என் ஆட்காட்டி விரலையும் நீட்டச் சொல்கிறார்கள். “ஏன். எதற்கு? எப்போதும் பத்தாண்டுகளுக்கு ஒருமுறைதானே. பெயரும் தகவலும் மட்டும் கேட்பீர்கள். ஜாதிவாரியாக என்று கூறினார்கள். இப்போது இது என்ன புதுமுறை?” என்ற என் கேள்வியைக் கேட்டு அவர்கள், “அதிகம் பேசுகிறான். இவன் கண்காணிப்பிற்கு உரியவன். இவனுக்கு கண்காணி தேவை” என்று தங்களது குறிப்பில் என்னைப் பற்றிக் குறித்துக் கொள்கிறார்கள்.

“ஒவ்வொரு முறையும் பொத்தானை அழுத்தவும் கரும்புள்ளி வைப்பதற்கும் விரல்கள் மட்டும் போதும் என பாராளுமன்றம் முடிவு செய்துள்ளது தெரியாதா?” என்று கூறியபடி என் விரலை வெட்டி எடுக்கிறார்கள். அதன் மீதும் என் நெற்றியிலும் ஒரு எண்ணைப் பச்சை குத்துகிறார்கள்.

இந்த கொடுமைகளுக்கெல்லாம் முடிவு கட்டிவிட ஊருக்குள் இருந்த காவல்நிலையம் நோக்கி ஓடுகிறேன். காவல்நிலைய வாசலில் விழுந்து கிடந்த இருதயங்களில் கால் இடறி கீழே விழுந்தேன்.

அங்கு உள்ளே நுழைபவர்களை ஆய்வு செய்யக் கருவி பொருத்தப்பட்டுள்ளது. ஆயிரம் ரூபாய் தாள் உள்ளவர்களுக்கு மட்டுமே அதன் கதவு திறந்து மூடுகிறது.

நாயாகவோ ஓநாயாகவோ மாற முடிந்தவர்கள் மட்டும் மகிழ்ச்சியைத் தங்கள் தோள் மீது தூக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள். கரடி விடத் தெரிந்தவர்கள் எல்லாம் கார்களில் பறந்து கொண்டிருக்கிறார்கள். என்னால் சகிக்க முடியவில்லை.

மசூதி, சர்ச், கோவில் வாசல்களில் கிடக்கும் மூளைகளை எல்லாம் மிதித்து விடாமல் தாண்டிச் செல்வது சற்றுக் கடினமாக இருக்கிறது. இப்போதுதான் எனது மூளை குறித்த கவனம் எனக்கு வருகிறது. கீழே கிடக்கும் மூளைகளை எல்லாம் எடுத்து எனக்குப் பொருத்திப் பார்க்கிறேன். ஒன்றும் சேரவில்லை சட்டென ஞாபகம் வந்ததும் மூளை தொலைத்த இடம் தேடி ஓடுகிறேன்.

முனகல் சத்தம் கேட்டுக் கொண்டிருக்கும் ஆசிரமம் ஒன்றினுள் நுழைகிறேன். அங்கிருக்கும் சாமியாரின் கையில் இருக்கும் தட்டில் என் மூளை இருக்கிறது. அதன் மீது உப்பும், மிளகுப் பொடியும் தூவி உண்ணத் தயார் ஆகிக் கொண்டிருக்கிறார் அந்தச் சாமியார்.

சாமியார் மூளையைத் திண்ணும் முன் அவரிடமிருந்து பிடுங்கி என் மண்டைக்குள் போட்டுக் கொள்கிறேன்.  என் உடலின் நிறம் கருப்பாகியது. “அவனை விரட்டுங்கள்” என்றதும், சாதுக்கள் எல்லாம் சூலங்களோடு என்னைத் துரத்துகிறார்கள். அங்கிருந்து வெளியேறி ஓடுகிறேன்.

மனிதர்கள் அற்ற உலகில் வாழ மனது துடிக்கிறது. அவர்களிடமிருந்து தப்பி சாலைக்குள் புகுந்தபோது மீண்டும் நாயும் ஓநாயும் என்னைத் துரத்தத் தொடங்குகின்றன. சடக்கென ஒரு சந்தில் திரும்பி ஒரு கட்டடத்திற்குள் ஒளிந்து கொள்ள நுழைகிறேன். அங்கு புத்தகங்கள் இறைந்து கிடைக்கின்றன. ஒருவித புத்தகநெடி என்னைச் சங்கடப்பட வைக்கிறது. யாருமே நுழையாத நூலகம். உள்ளே நுழைகிறேன்.

அங்கே ஒரு தாடிக்காரக் கிழவர் உட்கார்ந்திருக்கிறார். அவரிடம் “ஏதாவது வழி இருக்கிறதா?” என்று கேட்கிறேன். அப்போது ஒரு இளைஞன் கையில் வெடிகுண்டுடன் தன் நண்பர்களுடன் விளையாடியபடி தூக்குக் கயிறு ஒன்றை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறான். தலைப்பாகையுடன் இருந்த மீசைக்காரன் ஒருவன் கவிதை புனைந்து கொண்டிருக்கிறான். அவர்களைப் பார்த்துச் சிரித்தபடி அந்தக் கிழவர் என்னிடம் தனது நாற்பதாண்டு உழைப்பின் காரணமாக தான் கண்டறிந்த விசயங்கள் எழுதப்பட்ட நூல் ஒன்றைக் கையில் கொடுக்கிறார். கொஞ்சம் நம்பிக்கை வருகிறது.

ஊன் மறந்து உறக்கம் மறந்து புத்தகத்திற்குள் வெள்ளிப் பூச்சியாகி மாறி தின்று மேய்கிறேன். கருப்பான என் மேனி கொஞ்சம் கொஞ்சமாக சிவப்பாக மாறத் தொடங்குகிறது. எல்லாவற்றின் ஆரம்பம், எல்லாவற்றின் இலக்கு, எல்லாவற்றின் செயல்பாடு என என் முன்னே எல்லாமே தன்னைத்தானே அவிழ்த்துக் காட்டத் தொடங்குகின்றன. வரலாறுகள் வரிசை கட்டி வரத் தொடங்குகின்றன. அப்போதுதான் பொம்மைகள் கைகளில் நம்மை ஆளக் கொடுத்த விசயமும், ஜனநாயகப் பூக்சியை அலகில் சுமந்தபடி எல்லாவற்றையும் கொத்தித் திங்க எப்போதும் வானத்தில் பறக்கும் பருந்தும், அதன் பிடரியில் சுகமாக அமர்ந்து அதை ஆட்டுவித்து வழிநடத்தும் ஆயுத வியாபரிகளும் தெரியத் தொடங்குகிறார்கள்.

அங்கிருந்து நான் வெளியேறுகிறேன். எனக்குள் நிகழும் நிறமாற்றம் புதிய உருமாற்றம் கொள்ளச் செய்கிறது. இப்போது நான் வடிவற்ற, உள்ளீடற்ற உருவமாக மாறத் தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக சதுக்கப் பூதமாகிறேன். என் வாய்க்குள் நாய்களும், ஓநாய்களும், கரடிகளும், பருந்துகளும் உள்ளே போகத் தொடங்குகின்றன. அவைகள் எல்லாம் ஒன்றாக குரலெடுத்துக் கத்துகின்றன “வன்முறை தவறானது. தீவிரவாதத்தை ஒழிப்போம்” என்று.

மக்கள் பயத்தில் குங்குமம் அப்பிய பூசணிகளை சதுக்கங்களில் பூதத்திற்கு பலி கொடுத்து சாந்தி செய்ய முயலுகிறார்கள். “உங்கள் பலியிடல்களால் என்னை சாந்தி செய்ய இயலாது- நாய்களையும், ஓநாய்களையும், கரடிகளையும், பருந்துகளையும், கழுகுகளையும் இனம் கண்டு நீங்கள் பலியிடும்போதுதான் எனக்கு சாந்தி” என்று கூக்குரலிடுகிறது புடைத்துண்ணும் சதுக்கபூதம்.

(2011 ஆகஸ்ட் 7 ஆம் நாள் – மாவிபக’வின் படைப்பரங்கில் வாசிக்கப்பெற்ற சிறுகதை)

No comments:

Post a Comment