Sunday, August 7, 2011

காத்திருப்பு - மனோ

நமது தினசரி வாழ்வில் பிண்ணிப் பிணைந்த ஒரு செயல்பாடு. அலுவல் காரணமாகவோ, நமது சொந்த வேலைக்காகவோ அல்லது நமது நண்பர்களுக்காகவோ நாம் தினமும் எங்காவது காத்துக்கொண்டுதான் இருக்கிறோம். அவ்வாறு காத்திருத்தலின் வெளிப்பாடு என்னவாக இருக்கிறது என்று பார்த்தால் அனைத்தும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.

காதலிக்காக காத்திருப்பது காதலனுக்கு சுகம். பள்ளியில் இருந்து வரும் குழந்தையின் முத்தத்திற்காக காத்திருக்கும் தாயின் காத்திருப்பு தவிப்பு. இதெல்லாம் சின்ன சின்ன காத்திருப்புக்கள். சம்பளத்தை பெற ஏடிஎம்ல் வரிசையில் காத்திருக்கும் பணியாளரின் காத்திருப்பு எரிச்சலாக / கோபமாக இருக்குறது. இதில் வங்கிகள் வெள்ளிக்கிழமை வேலை நிறுத்தம் செய்தால் ஏடிஎம்லும் பணம் இல்லாது திங்கள்கிழமை வரை காத்திருக்கும் காத்திருப்பு வேதனைக்குரியது. அனைத்திற்கும் மேலாக உடல் நலக்குறைவால் வாழ்வின் விளிம்பில் மரணத்திற்காக காத்திருக்கும் முதியவரின் காத்திருப்பு மிக மோசமானது.

தனியொரு மனிதனுக்காக திரளான மக்கள் காத்திருக்கும்போது, அந்த மனிதன் தாமதமாக வருவது இழிவான செயல் என ஒருபோதும் உணர்வதில்லை. தனது வேலையை ஒருவர் தாமதமாக செய்வதனால் கூட அதனைச் சார்ந்து பலர் காத்திருக்கவேண்டியுள்ளது.

புத்தகம் குடுத்த ஆட்சி
மின்சாரம் குடுக்கவில்லை.
மின்சாரம் குடுத்த ஆட்சி
புத்தகம் குடுக்கவில்லை.

என எழுதும் அளவிற்கு பாடப்புத்தகங்களுக்காக பள்ளி செல்லும் குழந்தைகள் காத்திருக்கின்றன.

பணிக்காக வெளிநாடு சென்ற நண்பர் அங்கேயே நிரந்தரவாசி ஆகிவிட்டார். மனைவியையும், பிறந்த குழந்தையையும் அழைத்துச் செல்வதற்காக பார்ப்பதற்காக விடுப்பில் இந்தியா வந்தார். குழந்தைக்கு பாஸ்போர்ட், பிறப்புச் சான்றிதழ் என,  குழந்தையுடன் இருந்த நேரத்தைவிட அதிகமாக அரசு அலுவலகத்திலேயே காத்திருந்தார். காத்திருந்து காத்திருந்து விரக்தியின் உச்சத்திற்கே சென்றுவிட்டார். அதன் விளைவாக வெளிநாடு சென்றவுடன் அங்கேயே குடியுரிமையும் பெற்றுவிட்டார்.

காத்திருப்பது என்பதைவிட காக்கவைப்பது மிகமோசமானது. தமிழகத்தின் புகழ்பெற்ற மருத்துவமனை அது. பத்துமணிக்கு வரும் மருத்துவரைக் காண காலை ஆறு மணிக்கெல்லாம் வந்து காத்திருந்தனர் நோயாளிகள். தனது சொந்த மருத்துவமனையில் எட்டு மணியில் இருந்து பத்து மணி வரை நோயாளிகளை பார்த்துவிட்டு பத்தரைக்கு வருகிறார் மருத்துவர். வருகின்ற நோயாளிகள் யாரையும் உடனே மருத்துவரைப் பார்க்க அனுமதியும் இல்லை. மருத்துவரைப் பார்த்த நோயாளிகளையும் உடனே வீட்டுக்கு அனுப்புவதும் இல்லை.  ஸ்கேன் எடுத்துட்டு வந்து வெயிட் பண்ணுங்க. இரத்தம் டெஸ்ட் குடுத்துட்டு வந்து வெயிட் பண்ணுங்க. இப்படி எதுவுமே இல்லனாலும் ஊசி போடணும் வெயிட் பண்ணுங்க அப்படினு ஏதாவது ஒரு காரணம் சொல்லி காக்கவைக்கப் பட்டுக்கொண்டே இருந்தனர் நோயாளிகள் அனைவரும். காத்திருந்து பொறுமையிழந்து எவ்வளவு நேரம் ஆகும்னு கேட்டால் நீங்க சாப்பிட்டு வந்து வெயிட் பண்ணுங்க என ஏதாவது ஒரு பதில். கடைசியில் மருத்துவர், வீட்டுக்கு செல்வதற்கு சற்று நேரத்துக்கு முன்னர்தான் ஆறு மணிக்கு வந்த நோயாளி வீட்டுக்கு அனுப்பப்படுகிறார். ”நிறைய நோயாளிகள் இருந்தால்தானே நல்ல டாக்டர்னு நிறையப்பேர் வருவாங்க.” காக்கவைப்பதிலும் அரசியல் இருக்கத்தான் செய்கிறது.

(சிங்கப்பூரில் இருந்து மின்னஞ்சல் வழியாக வந்த பதிவு. 2011 ஆகஸ்ட் 7 ஆம் நாள் அருப்புக்கோட்டையில் மாவிபக நடத்திய படைப்பரங்கில் தோழர் கேகேயால் வாசிக்கப்பெற்றது)

No comments:

Post a Comment