நூல் : கவிதைகள் வாழும் தெரு
ஆசிரியர் : தேவ. பிரபாகரன்
வெளியீடு : உலா பதிப்பகம்
39/23, ஜெ.எம்.வளாகம்
சின்னக்கடை வீதி
திருச்சி - 620 002
98431 10709 - 94438 15933
ulapathippagam@gmail.com
பக்கங்கள் : 56
விலை : ரூ. 40
கவிதை
அழவைக்க வேண்டும்
இல்லையெனில்
எழவைக்க வேண்டும்
- அழகுபாரதி
இதைவிட சிறப்பான முறையில் கவிதை என்ன? என்பதை கூறமுடியாது. ஆசிரியர் தேவ.பிரபாகரனின் கவிதைகள் இதைச் செய்ய முயலுகின்றன. சமூகத்தின் வலிகளை சிக்கல் சிடுக்குகளற்ற வார்த்தைகளால் படிமம், குறியீடு, மிகைப்படுத்திக் கூறல் என எவ்வித அலட்டிக்கொள்ளலும் இன்றி வாசகனுக்குப் புரியும் வண்ணம் நேரடியாக முன்வைத்துள்ளார். இவருடைய கவிதைகள் பல தளங்களில் இயங்குகின்றன.
பொலிவான முகம்
மலிவான விளம்பரம்
விற்பனைக்கா பெண். - பெண்ணின் உடலையும், உடல் மொழியையும் ஏகாதிபத்தியம் சந்தைப் படுத்துகிறது என்பதையும்
புகுந்தவீட்டில்,
வாழா வெட்டியாய்
மனைவி.
வெளிநாட்டில் கணவன். – மேல்தட்டு வர்க்கத்தில் கணவனோடு பெண்ணும் வெளிநாட்டில் வசிக்க குடியுரிமை பெற்றுவிடுகிறாள். ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களின் பெண்கள் வாழ்வில் இது போன்ற சூழல்தான் நிலவுகிறது என்பதை நினைவுகூற இக்கவிதை தூண்டுகிறது. மேலும் இக்கவிதைகள் வழியாக பெண்ணியம் பேச விழைகிறார் ஆசிரியர்.
சுறுசுறுப்பாக
விளையாடித் திரியும்
வயதில்
வெடியும் திரியும்
கையில் – முதலாளியின் லாபநோக்கத்திற்காக குழந்தைகளின் எதிர்காலம் பாழ்படுவதையும் எண்ணி வருந்துகிறார்.
மாலை தொடுக்கும் பொழுது
விரல்களால் விடப்பட்ட
உதிரிப் பூக்களா
அனாதைக் குழந்தைகள். – வாசிக்கும் பொழுது, சுனாமியால் அனாதைகளாக்கப்பட்ட குழந்தைகளும், அவர்களின் இன்றைய நிலையும், நினைவுக்கு வருகின்றன. தொடர்ந்து ‘குடந்தை தீ’ கவிதையும் குழந்தைகள் மீது கவனம் செலுத்த வாசகனை தூண்டும் என்பதில் ஐயமில்லை.
எப்படி
விலக்கினாலும்
தூக்கத்தில்
எட்டி உதைக்கும்
குழந்தையாய்
உன் நினைவுகள் – மற்றும்
உனக்காக
காத்திருந்து
காத்திருந்து
வருவோர் போவோர்க்கெல்லாம்
மைல் கல்லானேன். - இவ்விரு கவிதைகளிலும் வாசகனை காதல் செய்யச் சொல்லும் அழகியல் கூறுகள் நிறைந்து காணப்படுகின்றன.
கூலியாய்
ஒரு படி அரிசி கேட்டேன்
ஒருபிடி அரிசிகூட கொடுக்க
உருப்படி இல்லாதவன்
மனிதனா? – இக்கவிதை வெண்மணி சம்பவத்தையும் அதன் தொடர்ச்சியாய் இன்றுவரை தொடரும் விவசாய தொழிலாளர்கள் நிலையையும் உணர்த்துகிறது.
மூலதனம் போட்டவன் முதலாளி
முயற்சி செய்தவன் தொழிலாளி
இடையில் எப்படி முதுகு சொரியும்
சில பெருச்சாளி. – என்ற கவிதை வழியாக தரகு முதலாளியையும், ஊகவணிகத்தின் வழியாக உழைப்பு சுரண்டப்படுவதையும், அடிவருடிகளின் உழையா ஊதிய விளைவையும் சுட்டிக்காட்ட முயன்றிருக்கிறார். தேசத் தலைவர்கள், சட்டம், மலிவு மணிதர்கள், பட்டினிக் கொடிகள், தொகுதி, வாக்குமூலம் போன்ற கவிதைகளும் ஆசிரியரின் சமூக பிரக்ஞையை காட்டுகின்றன.
நான் மூனாவது
படிக்க
மூக்குத்தி அடகு வைத்தவள்…
முதுகலை படிக்க
சமயபுரம் கோயிலுக்கு
பாதயாத்திரை சென்றவள்
என் அம்மா – தாயின் அன்பையும், கல்வி வியாபாரமாவதையும் சுட்டிக்காட்டும் ஆசிரியர் அப்பா ஒரு குடும்பத்தின் அதிகாரக் குறியீடு என்பதையும் உணர்த்துகிறார்.
நீ தூரத்தில்
வரும்போதுகூட
உன் செருப்பின்
ஓசை நயத்தில்
வீடே பயத்தில்.
பறை கவிதையில் பறையின் தோற்றம் குறித்து இயங்கியல் பார்வையோடு அனுகியிருப்பது சிறப்பு. அதே சமயம் ஒடுக்கப்பட்ட இனத்தின் அடையாளமாகவும் இருந்து விடுதலைக்காக கொட்டவும் செய்கிறது. இக்கவிதை தொகுப்பிற்கு கவியாவிய தமிழனின் ஓவியங்கள் பல்வேறு பரிமானங்களுடன் கவிதைக்கு வலுசேர்க்கின்றன. குறிப்பாக பக்கம் 23, 27, 31, 47ல் உள்ள படங்கள்.
தேவ.பிரபாகரனின் கவிதைகள் வாழும் தெரு – பாடுபொருள் மிகச்சிறப்பாக உள்ள வேளையில் விடுதலைக்கான பாதையை காட்டுவதும் அவரின் பொறுப்பு. காத்திரமான வாசகனுக்கு இவருடைய சிலகவிதைகள் ‘வானம்பாடி’ காலகட்டத்து விளி கவிதைகளையும் நினைவுபடுத்துகிறது என்பதை மறுக்க முடியாது. ஆதிக்க வேர், விண் சமைப்போம் வருக, எழுத்தாளன், மதுவின் பேச்சு, லட்சியம் மற்றும் இன்னும் சிலகவிதைகளின். கவிதையின் வெளிப்பாட்டு உத்தியில் மாற்றம் தேவை. அதற்கு இன்னும் நிறைய வாசிப்புகளை கைக்கொள்ள வேண்டும். இன்றைய இலக்கிய உலகில் நம்மை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது. அதுவும் மானுட விடுதலைக்கான படைப்புகளை முன்னெடுக்க வேண்டிய நம்மைப் போன்றவர்கள் அதிக கவனமும், நமக்கான தத்துவத்தையும் இறுக பற்றிக்கொள்ளவும் தொடர்ந்த வாசிப்பு தேவையாய் உள்ளது. அத்தகைய வகையில் முதல் தொகுப்பு வரவேற்கத் தக்கதாயினும், இரண்டாவது தொகுப்பு இன்னும் நேர்த்தியாய் விரைவில் வெளிவர வாழ்த்துக்கள்.
(2011 ஆகஸ்ட் 7ஆம் நாள் அருப்புக்கோட்டையில் மாவிபக‘வின் நூல் விமர்சன அரங்கில் வாசிக்கப்பெற்ற கட்டுரை)
No comments:
Post a Comment