1
நீண்ட நாட்களாக
அது
என்னை உறங்கவிடாமல்
அலைக்களித்துக் கொண்டிருக்கிறது.
எங்கே?
எதற்கு?
எதுவரை?
யார் அழைத்தது?
யார் அனுப்பியது?
யாருக்காக?
தெரிந்தும் தெரியாமலும்
என்னிலிருந்து தொடங்கி
என்னைக் கடந்து
விலகிச் சென்று கொண்டேயிருந்த
பயணம்...
மங்கலான வெளிச்சத்தில்
ஒற்றையடியாய்த் தெரியும்
என் பயணப் பாதையின்
வலப்புறத்தில்
பார்த்தாலே கிறுகிறுக்கும் பாதாளம்
இடப்புறமோ
சிராய்த்தாலும்
தோல் கிழித்தாலும்
ஒட்டி உரசி நடக்க
சாய்ந்து இளைப்பாற
ஆசுவாசமாய் தலை சாய்க்க
பள்ளம் பார்த்த பயத்தில்
தொட்டுக் கொள்ள
கட்டித் தழுவ
என அனைத்திற்குமாய்...
ஆனால்
ஒருபோதும் நான்
முழுவதுமாய்
நகர்ந்து வராதபடி
உயர்ந்து நிற்கும்
படிக்கட்டின் காட்சி காட்டும்
நெடுந்தொடர் பெருஞ் சுவர்.
2
தொடங்கிய இடம் தொட்டுவிடும் எத்தனிப்பில்
திரும்பி நின்றால்…
புலம் திரிந்துத் திகைக்க வைக்கும்
பெருஞ்சுவரும் பாதாளமும்
பயணம் எத்திசை என்றாலும்
காட்சி மாறிமல்
வலம் வலமாகவும்
இடம் இடமாகவும்
விரக்தியின் விளிம்பு தொட்டு
பள்ளத்தின் ஆழம் காண
வலம் திரும்பிக் குதிக்கையில்
பத்தடிகள் தள்ளிச் சென்ற பாதாளம்
நான் நகர நகர நகர்கிறது
குதித்துவிடும் வேகத்துடன் நான்
ஓட ஓட ஓட
என் முன்னே விரைந்து ஓடும் பாதாளம்.
நின்று நானும் மூச்சிறைத்து
திரும்பிப் பார்த்தால்
என்னைப் பின் தொடர்ந்து துரத்தி வரும்
படிக்கட்டின் காட்சி காட்டும்
நெடுந்தொடர் பெருஞ் சுவர்.
‘காக்கவா? கவிழ்க்கவா?‘
எதிர்பாராக் காட்சி கண்டு பதறி
முடிவெடுக்கும் முன்னரே
தடுமாறிச் சாய்ந்த நான்
பாதாளம் நோக்கி விழுந்து கொண்டிருக்கிறேன்.
எட்டும் இடத்தில் எதுவும் நிகழலாம்
நான் பலநூறாய், சில ஆயிரமாய்
சிதிறித் தெறிக்கலாம்
என் சிதறல் பெருவெடிப்பாய் மாறலாம்
காற்றில் கரையா ஓலத்துடன்
அடி தொடும் அந்த நொடிக்காக
இன்னும் விரைவாய்
தினம் தினம்
கைகளால் காற்றைக் கிழித்தபடி
நான் விழுந்து கொண்டேதானிருக்கிறேன்
கால் நூற்றாண்டைக் கடந்த பின்னும்
என் அன்றாட ஒற்றைக் கனாவில்...
(2012 ஜூலை முதல்நாள் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற தோழர் கு.பா.
நினைவுநாள் படைப்பரங்கில் வாசிக்கப்பெற்ற கவிதை)
No comments:
Post a Comment