தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத பைஸ்மால்கசன் மீண்டும் மறுதொடக்க (ரீஸ்டார்ட்) பட்டனை அழுத்தி தன்னுடைய கணினியை இயக்கினான். அவனுடைய கணினியும் விபரங்கள் சொல்லி,
எங்கே நுழைய எனக்கேட்டு, இதுவரையிலான கோளாறுகள் அனைத்தையும் தற்காலிகமாகச் சரிசெய்து
‘டெஸ்க் டாப்’ நிலைக்கு வந்தது. சற்று நேரம் எதுவும் செய்யாமல் அமர்ந்து கவனித்துக் கொண்டிருந்த பைஸ்மால்கசன் கணினியின் சுட்டி(மௌஸ்)யைத் தொட்டதும் - பெரிய சிரிப்பொலியுடன் அந்த உருவம் திரையில் தோன்றியது. தோள்பட்டைக்கு மேலே கழுத்தில் தலை இருக்க வேண்டிய இடத்தில் தலை இல்லாமல் இரண்டு கைகளுடன்,
தோள்ப்பட்டையில் வளர்ந்த சதை காதுகளாகி வயிற்றுக்கு நேராகத் தொங்கும் தலையும் கொண்ட அந்த உருவத்தைப் பார்த்தவுடன் பைஸ்மால்கசனுக்கு எரிச்சல்தான் வந்தது. “எந்தனை முறைதான் இந்தத் தொந்தரவு.
‘எங்ஸ்ட்வின்’ என்ற இந்த வைரஸைச் சரி செய்ய முடியாதா?”
என்ற கேள்வியுடன் காத்திருந்தான். சிரித்து முடித்த
‘எங்ஸ்ட்வின்’ என்ற பெயர் கொண்ட அந்த செயற்கை நுன்னறிவு
(ஏ.ஐ. - ஆர்ட்டிஃபீஸியல் இண்டலிஜன்ஸ்) வைரஸ்
“என்ன ஆயத்தமாகி விட்டாயா? சரி பார்க்கலாம். இது உன்னைப் போன்ற ஒருவனின் கதைதான்.
இந்தமுறையாவது நீ வெற்றிபெற என் வாழ்த்துக்கள்” என்று சொல்லி மறைந்ததும் கணினியின் திரை கருப்பாக மாற, திரையில் இளமஞ்சள் நிறத்தில் எழுத்துகள் தோன்றின.
0
‘அந்நியர்கள் உள்ளே நுழையக் கூடாது’
என்ற அறிவிப்புடன் அந்த இரண்டுங்கெட்டான் நகரத்தில் இருக்கிறது இந்த வெளிநாடுகளின் நிறுவனம்.
இது உண்மையிலேயே வெளிநாடுகளின் நிறுவனம்தான். இந்தியாவிற்கு முதலீட்டளவில் எந்த வகையிலும் தொடர்பில்லாத பலவெளிநாடுகளின் முதலீடுகளுடன் இந்தியாவில் தொடங்கப்பட்ட ஒரு பல்தேச நிறுவனம் இது. இந்நிறுவனத்திற்கு இந்தியத் தலைநகர் தொடங்கி எல்லா நகரங்களிலும் கிளைகள் உண்டு.
அனைத்து நாட்டு நிறுவனங்களுக்கும் அவர்களின் தேவைக்கேற்ப மென்பொருள் (சாஃப்ட்வேர்) உருவாக்கித் தருவது மட்டுமே இந்நிறுவனத்தின் பணி.
நிறுவனத்தின் நிர்வாகத் தலைமையைப் பொறுத்தவரை இந்தியத் தலைமை நிர்வாகியே நான்காம் நிலை நிர்வாகிதான். இது போன்ற நகரங்களின் தலைமை நிர்வாகிக்கு மேல்
11 அதிகாரப் படிநிலைகள் உண்டு. இந்திய அரசின் சிறப்பு அனுமதி மற்றும் வெகுமதிகளுடன் தொடங்கப் பெற்ற இதுபோன்ற நிறுவனங்கள் பலவற்றிலும் இதே நிலைதான்.
உள்ளூர் நிர்வாகத்திற்கென்று - பணியில் ஆட்களைச் சேர்ப்பது,
(ஒரு வரம்பிற்குள்) முதற்கட்ட ஊதியத்தை நிர்ணயம் செய்வது,
அலுவலக நிர்வாகச் செலவுகளுக்காக ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை செலவு செய்வது போன்ற சில வரையறுக்கப்பட்ட அதிகாரங்கள் உண்டு. குறிப்பாக ஊழியர் விவகாரங்களில் மேலே இருப்பவர்கள் பொதுவாக தலையிடுவதில்லை. ஆனால்,
பணிநீக்கம், ஊதிய உயர்வு, தொழிலாளர் நலன் சார்ந்த செலவுகள் போன்றவற்றிற்கு மேலிருந்து அனுமதி பெற வேண்டும்.
தொடங்கிய நாள் முதல் தொழிற்சங்கத்திற்கு எத்தனை எழுத்துகள் என்று கேட்டு வந்த இந்திய நிர்வாகம் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் வேறு வழியே இன்றி தொழிற்சங்கம் தொடங்க ஒத்துக்கொண்டது. தலைமை நிர்வாகி முதல் தற்காலிக ஊழியர் வரையிலான அனைவருக்கும் ஒரே தொழிற்சங்கம். இப்படி அனைவருக்குமான தொழிற்சங்கமாக இருப்பதால் பல்வேறு முடிவுகள் நிர்வாகத் தலைமை நினைப்பதற்கிணங்கவே இருந்தது. நிர்வாகத்தைக் காட்டிலும் நிர்வாகத்திற்கு விசுவாசமானவர்கள் தொழிற்சங்கத் தலைவர்களாக இருந்தார்கள். ஒரு காலகட்டத்திற்குப் பிறகு சூழ்ச்சியைப் புரிந்து கொண்டவர்கள் ஒரு வழியாக தொழிற்சங்கத்தை ஜனநாயக முறைப்படி
(நிர்வாகம் நிர்ணயித்த ஜனநாயக முறைப்படி)
கைப்பற்றினர்.
“சாமி சரணம்”
என வாசலில் நிற்கும் காவலருக்கு வணக்கம் வைத்து,
அவரைப் பயமுறுத்தி, பதில் சரணம் வாங்கிக் கொண்டு சிரித்தபடி அலுவலகத்தின் ‘லிப்ட்’
நோக்கிச் செல்கிறார் வரதராஜன். ‘லிப்ட்பாய்’ (வயது
45ஐவிட குறைவுதான்) இவரை முந்திக் கொண்டு
“சாமி சரணம்” என்றவுடன் வரதராஜனும் சிரித்தபடி சரணம் சொல்லி
‘லிப்ட்’க்கும், ‘லிப்ட்பாய்’க்கும் தன்னை ஒப்புக் கொடுத்தார். கண்களை மூடி
“பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டு போனால்...
அய்யனை நீ காணலாம்...
சபரியில் அய்யனை நீ காணலாம்...”
என ஐயப்பதுதி பாடத் தொடங்கினார். “சார் வந்தாச்சு”
என்ற குரல் கேட்டு
“சாமியே சரணம் ஐயப்பா... அதுக்குள்ள சபரிமலை வந்தாச்சா?”
தன்னுடைய இந்தக் கேள்விக்கு பதில் சொல்லாத லிப்ட்பாயை நன்றியுடன் பார்த்து,
வெளியேறினார் வரதராஜன். இந்த அலுவலகத்தின் உதவித் தலைமை அதிகாரி.
மேலிடத்தில் அனுமதி பெற்று
60 நாட்கள் அலுவலகத்திற்குத் தாடியுடன் வருபவர். அனைத்தையும் ஐயப்பனாகப் பார்ப்பவர். அவருடைய அறைச்சுவரில் விநாயகரும், மேஜையின் கண்ணாடிக்குக் கீழ் எந்தப் பக்கம் இருந்து பார்ப்பவருக்கும் நேர்முகத்தில் காட்சி தரும்படி ஐயப்பன் படங்களும் இருக்கும்.
யாருக்கும் எந்தத் தீங்கும் நாம் செய்யாமல் இருந்தால்,
ஐயப்பன் நம்மை நன்றாகப் பார்த்துக் கொள்வான் என ஆழமாக நம்புபவர்.
ஒருமுறை கடைவீதியில் தன் காவிக்கோலத்தைப் பார்த்து கிண்டலாகச் சிரித்த பழைய வாட்ச்மேனிடம் “ஐயப்ப பக்தர்களை யாராவது சீண்ட நினைத்தால் ஐயப்பன் புலியை அனுப்பி நியாயம் கேட்பான்”
என்று சபித்துவிட்டு இவர் போய் விட்டார்.
இவர் சபித்தபோது சிரித்துக் கொண்டிருந்த காவலர், இரவில் அரைத்தூக்கத்தில் பூனையைப் பார்த்துவிட்டு ‘புலி புலி’
என கத்தி இரண்டு நாள் காய்ச்சலில் படுத்து,
பின்னர் இவரிடம் மன்னிப்புக் கேட்டபோது வரதராஜனின் நம்பிக்கை அதிகமானது.
அவருடைய குடியிருப்புப் பகுதியில் இருக்கும் ‘ஐயப்ப சேவா சங்க’த்தின் தலைவர், செயலாளர்,
பொருளாளர் என எல்லாவுமாக இருப்பவர்.
அலுவலகத்தில் யாரையும் எரிந்து பேசாதவர்.
நிர்வாகவியலில் பெரும்படிப்பு படித்தவர். தொழிற்சங்கத்தின் பொருளாளர்.
“தோழர்களே ‘சுய திருப்தி என்பது படிப்பின் விரோதி.
இந்தச் சுயதிருப்தி உணர்வை நம்மிடம் இருந்து நீக்கினால் ஒழிய நாம் ஒன்றையும் உண்மையாகக் கற்க முடியாது.
நம்மைப் பொறுத்தவரை படிப்பில் தெவிட்டாமை என்ற கண்ணோட்டத்தையும், கற்றுக் கொடுப்பதில் சளையாமை என்ற கண்ணோட்டத்தையும் மேற்கொள்ள வேண்டும்’ன்னு சொல்லியிருக்காரு தோழர் மாவோ.
நீங்க இப்ப தெரிஞ்சுக்கிட்ட விஷயம்தான் முழுமையானதுன்னு நினைச்சு திருப்தியாயிட்டீங்கன்னா, அப்புறம் புதுசா எதையும் தெரிஞ்சுக்க முடியாது.
அடுத்து என்னன்ற தேடல் எப்பவுமே நமக்குள்ளே இருந்துக்கிட்டே இருக்கணும்” என்று அலுவலகத்தின் மனமகிழ் மன்றத்தின் ஆண்டு விழாவில் அனைவரும் மன்றத்தின் நூலகத்தைப் பயன்படுத்தச் சொல்லி மைக் இல்லாமல் முழங்கிக் கொண்டிருக்கிறான் முருகானந்தம். அலுவலகத்தில் மென்பொருள் பணிப் பிரிவில் நிரல் எழுதுபவன்
(ப்ரோகிராமர் - நிரலாளன்). தொழிலில் திறமையானவன். திறன் ஊக்கத்தொகையை அலுவலகத்தில் அதிகமுறை பெற்றவன்.
நுனிநாக்கு ஆங்கிலம் தெரிந்தவன். வாய்ஸ் சாட்டிங்கில் வரும் வெளிநாட்டவர்களுடன் உரையாடுவதற்காக வரதராஜனும் அவருக்கு மேல் இருக்கும் இரண்டு நிர்வாகிகளும்கூட இவனை பயன்படுத்துவார்கள். மாணவப் பருவத்தில் கானாவிற்குக் கானாவும்,
வானாவிற்கு வானாவும் போட்டு வரிக்கு இரண்டிரண்டு வார்த்தைகள் எழுதி வைத்திருந்ததை யரோ கவிதை என்று சொல்ல அவனும் நம்பி நிறைய
(கொஞ்சம் ஓவராத்தான் போயிருச்சு) எழுதிக் குவித்துவிட்டான். பிறகுதான் தெரிந்தது கவிதை வேறு.
தான் எழுதியதெல்லாம் வேறு என்பது.
‘எழுதுவதல்ல... எழுப்புவது எழுத்து’ என்ற குஞ்சுன்னியின் வார்த்தைகளை அறியாத காலத்தில் எழுதியவை அவை என அவனே அவற்றை நிராகரித்தான். மாணவப் பருவத்தில் மாணவர் சங்கம்,
அப்புறம் இளைஞர் சங்கம்,
அப்புறம் வேலை கிடைத்ததும் தொழிற்சங்கம் என தன்னை ஒரு மார்க்சியவாதியாக நம்பிக் கொண்டிருப்பவன் முருகானந்தம். இவனது கணினியின் முதல் திரையில் சே சுருட்டுப் பிடித்துக் கொண்டிருந்தார். நிர்வாகம் கட்டிக்காத்த அடிவருடித் தொழிற்சங்கத்திற்கு இந்த அலுவலகத்தில் சாவுமணி அடித்ததில் இவன் பங்கு குறிப்பிடத்தக்கது. வரதராஜன் பொருளாளராக இருக்கும் தொழிற்சங்கத்தின் செயலாளர் இவன்.
காதல் திருமணம் முடிப்பது என்ற முடிவுடன் இருப்பதால் இன்னும் திருமணம் முடியவில்லை. காதலிக்க நேரம் கிடைக்காததால்(?) 29 வயதுவரை காலத்திற்காகக் காத்திருக்கிறான்.
நிகழ்ச்சி முடிந்து அனைவரும் வெளியேறும் போது வரதராஜன்
“முருகன் சாமி படிப்பைப் பத்தி நம்ம நாட்டுக்காரங்க யாரும் எதும் சொல்லலையா?” என்றார்.
“ஏன் தோழர் சொல்லலை.
நிறையப் பேர் சொல்லியிருக்காங்களே ‘கல்விக்கு கரையில்லை’
‘கற்றது கையளவு; கல்லாதது கடலளவு’ன்னு பழமொழிகள்லாம் இருக்கே.
ஏன் திருவள்ளுவர்கூட ‘நூலின்றிக் கோட்டிகொளல்’ ‘கற்றனைத்தூறும் அறிவு’ன்னெல்லாம் சொல்லியிருக்காரே” என்றான் முருகானந்தம்.
“பிறகு ஏன் சாமி அதெல்லாம் கூட்டத்தில் சொல்ல மாட்டேன்றீங்க...?” என்ற வரதராஜனின் கேள்விக்குப் பதில் ஏதும் சொல்லாமல் உரையாடலுக்கிடையில் மதன்பாப் சிரிப்பதைப் போலல்லாமல் பாடல்களுக்கிடையில் எஸ்.பி.பாலசுப்ரமணியன் சிரிப்பதுபோல் சிரித்துக் கொண்டே “மத்தியானம் என்ன சாப்பாடு கொண்டு வந்திருக்கீங்க தோழர்.
நமக்கு வெறும் தயிர் சாதம் மட்டும்தான். வேஷதாரியா இருக்குற நேரத்தில வாங்கித்தானே சாப்பிட மாட்டீங்க.
மத்தவங்களுக்குக் கொடுக்குறதில ஒன்னும் பிரச்சனை இல்லையே?”
என்றபோது வந்த செல்விடப்பேசி அழைப்பிற்குக் காது கொடுக்கும் முன்னர் இவரிடம்
“சாரி தோழர்” சொல்லி, இவரை விட்டு நகர்ந்து
“வணக்கம் தோழர்... சாயங்காலந்தானே... நினைவிருக்கு... கட்டாயம் வந்துருவேன்... நமக்குள்ள என்ன தோழர் சம்பிரதாயமெல்லாம்...”
தொழிலாளர்களுக்கு இவனது செயல்பாடுகள் மீது அபார நம்பிக்கை உண்டு.
ஒரு ஜெர்மன் கம்பெனிக்கு ஆறுமாதங்களுக்கு முன்னர் இவன் எழுதிக் கொடுத்த ப்ரோகிராமில் சிறிய மாற்றம் செய்ய வேண்டும் என்று ஜெர்மன் கம்பெனி கேட்டபோது, மீண்டும் ஒருமுறை கம்பெனிக்கு பணம் கட்டச் சொன்னவன்.
“இன்னொரு நிறுவனத்தின் நலனுக்காக நம் நிறுவனத்தின் வருமானத்தை நாம் விட்டுக் கொடுக்க முடியாது.
நம்ம எழுதிக் கொடுக்கிற ப்ரோகிராமை மற்ற கம்பெனிகளுக்கு விற்றுத்தானே அவர்கள் காசு பார்க்கிறார்கள். தரகு முதலாளிகள்தானே. ‘மெமரான்டம் ஆஃப் அண்டர்ஸ்டாண்டிங்’கில் இல்லாத எந்த மாற்றத்திற்கும் எந்த நிறுவனமாக இருந்தாலும் பணம் கட்ட வேண்டும்”
என்றான். நிறுவனத்தின் வருமானத்தில் கவனம் செலுத்துகின்ற அதே நேரத்தில் நிறுவன வருவாயின் ஒரு பகுதி ஊழியர்களின் நலனுக்கானதாக இருக்க வேண்டும் என்பதிலும் மிகவும் கவனமாக இருப்பான்.
“இன்னொரு நிறுவனத்தின் நலனுக்கான நம்ம நிறுவனம் எதையும் இழக்க முடியாது.
ஆனால், ஊழியர்களின் நலனுக்காக நிறுவனம் இழக்கலாம்.
ஒவ்வொரு ஆண்டும் 10 நாள் சிறப்பு விடுப்போட ஊழியர்களின் குடும்பம் இந்தியாவுக்குள்ள எங்க வேண்னாலும் நிறுவனத்தின் செலவுல சுற்றுலா போறதுக்காக மேல வரையிலும் பேச்சு வார்த்தை நடந்துக்கிட்டு இருக்கு.
சீக்கிரமா எல்லாரும் வேலையைப் பாதிக்காம டூர் போகத் தயாராகிக்கங்க” என்ற கனவின் அசரீரி போன்ற அவன் வார்த்தைகள் இரண்டு மாதங்களில் நனவானபோது ஊழியர்களில் பலரால் நம்பவே முடியவில்லை.
0
“தம்பி. எங்க வீட்டுக்காரர கொஞ்ச நேரத்துக்கு முன்னால போலீஸ்காரங்க வந்து பிடிச்சுட்டுப் போயிட்டாங்க. சீட்டிங் கேசுன்னு சொல்றாங்க. என்ன ஏதுன்னே தெரியல.
ஒரே பதட்டமா இருக்கு”
செல்லிடப்பேசியில் வரதராஜனின் துணை காலை
8 மணிக்கு அலறியபோது, கொஞ்சம் ஆடித்தான் போனான் முருகானந்தம். ‘வரதராஜன் மேல சீட்டிங்கேசா? வாய்ப்பே இல்லையே?
நமக்குத் தெரியாம ஏதாவது இருக்குமோ? சீ... சீ... அப்படியெல்லாம் இருக்காது’ அவசரமாக ஓடிய எண்ணங்களைத் தவிர்த்தபடி “ஒன்ணும் கவலைப்படாதீங்கம்மா நான் பார்த்துக்கிறேன். எந்த ஸ்டேசன்?”
“போலீஸ்காரங்கன்னுதான் தெரியும்.
எந்த ஸ்டேசன்னு தெரியலையே... ஐயோ அவருக்கு இன்னேரம் என்ன ஆச்சோ...
ஏது ஆச்சோ தெரியலையே” எனப் புலம்பிய வரதராஜனின் துணைவியாரிடம் “ஒன்னும் ஆயிருக்காது. விடுங்கம்மா... நீங்க தைரியமா இருங்க.
நானு என்ன ஏதுன்னு பாத்துக்கிறேன்”
காவல்துறை குற்றப்பிரிவில் ஆய்வாளராக இருக்கும் அவனுடைய நண்பர் செல்வக்குமாருடன் தொடர்பு கொண்டு நகர் காவல் நிலையமாக இருக்கலாம் என்ற விபரமறிந்து நகர் காவல்நிலையத்திற்கு செல்வக்குமாரையும் வரச்சொல்லி அவசர அவசரமாக அரை மணிநேரத்தில் காவல் நிலையத்தை அடைந்தான் முருகானந்தம். காவல்நிலையத்தில் வராண்டாவில் இருக்கும் இரவுக்காவலரின் காவல் கட்டிலில் மோசமான எதையோ எதிர்பார்க்கும் மனோநிலையை வெளிக்காட்டும் முகத்துடன் தலைகுனிந்து அமர்ந்திருந்தார் வரதராஜன். அமர்ந்திருந்தார் என்பதைவிட அந்த பெஞ்சில் அவர் ஒட்டிக் கொண்டிருந்தார். ஆள் அரவம் கேட்டு நிமிர்ந்த அவர் இவனைப் பார்த்ததும் எழுந்தார்.
அவரை நெருங்கிய முருகானந்தத்தை உள்ளிருந்து ஒரு முரட்டுக்குரல் “யாரது...?”
என விசாரித்தது. வரதராஜனை சைகையால் கையமர்த்திவிட்டு, உள்ளே சென்றான் முருகானந்தம். “நான் அட்வகேட் முருகானந்தம். லீகல் அட்வைசர் பாஃர்...
... ...” வரதராஜனுக்கு இருந்த உயிரும் போய்விட்டது. “ஏற்கனவே சீட்டிங் கேசுன்னு உட்கார வைச்சிருக்கிற நேரத்தில சாமி வேற வக்கீல் அது இதுன்னு புருடா விட்டுக்கிட்டு இருக்கே...
என்ன ஆகப் போகுதோ?”
உள்ளே இருந்த கனத்த குரல்
“கம்ப்ளெய்ண்ட் வந்ததாலதான் சார் நாங்க கூட்டிட்டுவரச் சொன்னோம். கம்ப்ளெய்ண்ட் கொடுத்தவரையும் வரச்சொல்லியிருக்கோம். அவங்களும் இப்ப வந்திருவாங்க சார்.
அவங்க ரெண்டு பேரும் பேசிச் சமாதானமாப் போயிட்டா அப்புறம் நாங்க என்னசார் இடையில”
“சரி நாங்க வாசல் கடையில ஒரு டீ சாப்பிட்டு வர்றோம்”
என்று முருகானந்தம் சொல்லிக் கொண்டிருந்தபோதே செல்வக்குமார் “என்ன வக்கீல் சார்...
நான் வர கொஞ்சம் லேட்டாயிருச்சு... நீங்க அப்பதையே வந்திட்டீங்களா?” என்றபடி உள்ளே வந்தார்.
அவரைப் பார்த்ததும் முரட்டுக்குரல் ஆசாமி எழுந்து நின்று விரைப்பாக சல்யூட் அடித்து
“வாங்க சார்” என்றார். முருகானந்தமும் “வாங்க செல்வக்குமார் சார்...” என்றார்.
“செல்வக்குமார் சார். தோழர் ஒரே டென்சனா இருக்காரு.
வாங்களே வெளியில போயி ஒரு டீ சாப்பிட்டு வரலாம்”
என்ற முருகானந்தத்திடம், “இல்ல சார்.
நான் இப்பத்தான் சாப்பிட்டுட்டு வரேன். நீங்க போயிட்டு வாங்க...”
என்ற செல்வக்குமார் “என்னய்யா போகலாமுல்ல...” என்றார் முரட்டுக்குரலாரிடம். அதற்கு அவர்
“தாராளமா சார். நான் அப்பதையே போயிட்டு வாங்கன்னு சொல்லீட்டேனே” என எழுந்து நின்று பதில் சொல்லி அமர்ந்தார்.
0
“வேற ஏதாவது இது தொடர்பான விஷயம் விட்டுப் போகலையே”
என டீ சாப்பிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தபோது கேட்ட முருகானந்தத்திடம் “இல்லை...”
என்றார் வரதராஜன். கொஞ்சம் தாமதித்து
“அந்த லெட்டரோட காப்பிகூட என்னோட பாஸ்புக்குலதான் இருக்கு” என்றார்.
மீண்டும் அவர்கள் காவல்நிலையத்தை அடைந்தபோது மணி 10ஐ நெருங்கிக் கொண்டிருந்தது. வரதராஜன் மீது புகார் கொடுத்தவர்கள் இன்னும் வரவில்லை.
இவர்களைப் பார்த்ததும் செல்வக்குமார், முரட்டுக்குரலாரிடம் ‘கம்ப்ளெய்ண்ட் கொடுத்தவங்க போன் நம்பர் இருந்தா,
கூப்பிட்டு என்னன்னு கேளுய்யா’
என்றார். அவர் தொலைபேசியில் தொடர்பு கொள்வதற்காக எழுந்து பக்கத்து அறைக்குச் சென்றார்.
திரும்பி வந்தவர் ‘இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாங்களாம் சார்’ என்றார்.
முருகானந்தம் கையசைத்து வரதராஜனை வெளியில் அழைத்து வந்தான்.
தன்னுடைய செல்லிடப்பேசியில் அலுவலகத்திற்குத் தொடர்பு கொண்டான்.
தனக்கு உடல்நலமில்லை என்பதால் ஒரு நாள் விடுப்பு வேண்டும் என்றும்,
மருத்துவமனைக்கு தன்னை வரதராஜன் அழைத்துச் செல்வதால் அவருக்கும் விடுப்பு சொன்னான்.
வரதராஜனும் செல்லிடப்பேசியில் ‘ஆம்’ எனச்சொல்லி, இந்தப் பொய்யினை ஆசீர்வதித்தார்.
வரதராஜனின் குடியிருப்புப் பகுதியில் உள்ள தோழர் டேனியலிடம் வரதராஜன் வீட்டிற்குச் சென்று அவர் பாஸ்புக் வைத்துள்ள கைப்பையை வாங்கி வரச்சொல்லி தொலைபேசினான். வரதராசனின் துணையிடம் ஒன்றும் பிரச்சனை இல்லை என்று சொல்லி,
வரதராஜனைப் பேசச்சொன்னான். வரதராஜன் கைப்பையைக் கொடுத்துவிடும்படி மனைவியிடம் கூறினார். அந்தப் பெண்மணியின் அழுகைக்கும் புலம்பலுக்கும் இருவருமே ‘ஒன்றுமில்லை’ என்ற ஒற்றை வார்த்தையை மட்டுமே பதிலாக்கினார்கள்.
மீண்டும் இரவுக் காவலரின் காவல் கட்டிலில்
¢இருவரும் வந்து அமர்ந்தபோது செல்வக்குமார் அவர்களை உள்ளே அழைத்து நாற்காலி கொடுத்தார். வரதராஜனுக்கு கொஞ்சம் தெம்பு வந்ததுபோல் இருந்தது.
இருந்தாலும் நாற்காலியில் சாதாரணமாக உட்காரமுடியாமல், நுனியில் அமர்ந்திருந்தார். செல்வக்குமார் முரட்டுக் குரலாரிடம் ‘மாரியப்பன், இவர் மிஸ்டர் முருகானந்தம், சாஃப்ட்வேர் இன்ஜினியர். சென்னையில இவரும் நானும் பார்ட்டைம் பி.எல். பண்ணும்போது பழக்கம்’ என முருகானந்தத்தை அறிமுகப்படுத்தினார். வரதராஜனுக்கு இதுநாள்வரை முருகானந்தம் சட்டம் படித்திருக்கிற விஷயமே தெரியாது.
கம்பெனிக்கு அவன் கொடுத்த சுயவிபரக் குறிப்பிலும் இந்தக் குறிப்பு இல்லை.
வரதராஜன் சாதாரணமாக உட்கார முயன்றார்.
முருகானந்தம் வரதராஜனை ‘என்னோட சீனியர் மிஸ்டர் வரதராஜன்.
எங்க கம்பெனி ட்ரேட் யூனியனோட பொருளாளர்’ என்று பொதுவாக அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தபோது வாசலில் ஒரு ஏ.சி.சுமோ வந்து நின்றது.
அதிலிருந்து காவி உடையில் நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவரும்,
அரைகுறைக் காவியுடன் ஒருவனும், சாதாரண உடைகளில் மேலும் மூன்று பேரும் இறங்கினார்கள்.
இறங்கிய நால்வரில் குறைக்காவி சுமோவிற்கும் காவல்நிலைய வாசலுக்கும் இடையில் கிடந்த ஒரு சிறு கல்லை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டு,
‘வாங்க சாமி’ என்றது. காவி கல்பொறுக்கியைக் கடந்தவுடன் கல்லை ஓரமாகப் போட்டுவிட்டு, அது காவியைக் கடந்து விரைந்து வேறு ஏதாவது பாதையில் கிடக்கிறதா என்பதில் கவனமானது.
மற்ற மூவரும் காவியின் அடியொற்றிப் பின்தொடர சுமோ ஓரம் தேடி உறுமி ஓடியது.
காவியைக் காலியாக இருந்த நாற்காலியில் அமரச் சொன்னார் மாரியப்பன். நாற்காலி கல்பொறுக்கியால் துடைக்கப்பட்டவுடன் காவி ‘ஓம்’ என்றபடி அமர்ந்தது. ‘என்னசார்...
அந்த ஆளப் புடிச்சாச்சா? உண்மையை ஒத்துக்கிட்டானா? எதுக்காக எங்க பணத்தை ஏமாத்தினான்? பணத்த என்ன பண்ணுனான்?’
என அடுக்கிக் கொண்டே சென்ற காவியின் உடன் வந்தவரிடம் ‘நீங்க யாரு?’ என்றார் மாரியப்பன். கேள்விக்குப் ‘பதிலாக’ அவர் ஒரு விசிட்டிங் கார்டை நீட்டினார். அதை வாங்கிப் பார்க்காமலேயே ஓரமாக வைத்த மாரியப்பன் ‘அது இருக்கட்டும். நீங்க வரதராசனா?’
என்றார்.
‘இல்லை அந்தத் திருநாமம் ஸ்வாமியோடது’ என காவியை இருகைகளையும் நீர் வார்ப்பதுபோல் வைத்துச் சுட்டிக் காட்டினார்.
‘நீங்க யாரு?’
‘நானு அவரோட சிஷ்யன்’
‘வக்கீலா?’
‘இல்லை’
‘லீகல் அட்வைசரா?’
‘இல்லை’
‘எல்லாத்துக்கும் இல்லையின்னா? என்ன அர்த்தம்?’
காவி சிஷ்யனை நோக்கி இடக்கை தூக்கி ஆசிர்வதித்து ஓரங்கட்டி,
வலக்கையால் முத்திரை பிடித்து ஒரு வினாடி தன் நெற்றியில் வைத்திருந்துவிட்டு, மாரியப்பனிடம் ‘நான்தான் புகார் கொடுத்து அனுப்பினேன்’ என்றார்.
‘சொல்லுங்க’ என்றார் மாரியப்பன்.
‘திருச்சியில் இருக்கும் என் சிஷ்யன் எனக்கு அனுப்பிய எட்டாயிரம் ரூபாய்க்கான வரைவோலையை குமரன் நகரில் குடியிருக்கும் வரதராஜன் ஏமாற்றி எடுத்துக் கொண்டார்,
என்பதே நான் கொடுத்த புகார்’
என எழுத்து நடையில் பேசிய காவியிடம் ‘அந்த வரதராஜனை உங்களுக்குத் தெரியுமா?’
என்றார்
காவி தலையாட்டி ‘தெரியாது’ என்றார்.
மாரியப்பன் வரதராஜனிடம் ‘சார், இவர உங்களுக்குத் தெரியுமா?’ என்றார்.
‘பழக்கமில்லை. ஆனா நல்லாத் தெரியும் சார்.
எங்க தெருக் கடைசியில ஒரு தோப்பு பங்களாவுலதான் இருக்காரு.
பங்காளக் காம்பவுன்டுலகூட... என்னமோ...
ஆனந்தா குடில்ன்னு எழுதியிருக்கும். சாமி பங்களான்னு சொன்னா குமரன் நகர்ல எல்லாருக்கும் தெரியும்’
இந்த விசாரிப்பினூடே வாசலில் டேனியல் வந்து நிற்க,
மாரியப்பன் இன்னொரு காவலரிடம் ‘பெரியசாமி அது என்னன்னு பாரு’
என வாசலைக் கண் காட்டினார். திரும்பிப் பார்த்த முருகானந்தம் ‘நம்ம நண்பர்தான்’ என்று எழுந்து சென்று கைப்பையை வாங்கிக் கொண்டு,
டேனியலை எதிரில் இருக்கும் டீக்கடையில் காத்திருக்கும்படி சொல்லிவிட்டு வந்து தன் பழைய இடத்தில் அமர்ந்தான்.
முருகானந்தம் திரும்பி வருவதற்காகவே தாமதப்படுத்தியதுபோல் காவலர் பெரியசாமியிடம் சைகையால் தண்ணீர் கேட்டு வாங்கிக் குடித்து முடித்த மாரியப்பன் ‘இவருக்கு வந்த டிராப்ட்ட நீங்க ஏமாத்தி எடுத்துக்கிட்டதா உங்க மேல கம்ப்ளெய்ன்ட் குடுத்துருக்காங்க’ என்றார்.
வரதராஜன் பதட்டமாக ‘நான் யாரையும் எப்பவுமே ஏமாத்தினதில்லீங்க’ என்றார்.
‘அப்படீன்னா அந்த எட்டாயிரம் ரூபாய எங்க?
நீங்க ஏமாத்தலைன்னா அப்புறம் நாங்க என்னமோ பொய் சொல்ற மாதிரியில்ல ஆயிருது.
எங்கக்கிட்ட எல்லா ஆதாரமும் இருக்குறதுனாலதான் தெளிவா உங்க பேர எழுதிக் கம்ப்ளெய்ன்ட் குடுத்துருக்கோம்’ என குறுக்கே புகுந்த சிஷ்யனிடம் மாரியப்பன் அதட்டலாக ‘ஏய் ஓம் பேரென்ன?
என்ன வேலை பாக்குற?’
என்றார். மீண்டும் காவி கையமர்த்த சிஷ்யன் அமைதியானான். மாரியப்பன் உள்ளுக்குள் ஏதோ திட்டியபடி அவனை முறைத்துவிட்டு எங்கு விட்டோம் என தலையை ஆட்டி நினைவுபடுத்த முயற்சித்தார்.
கைப்பையில் இருந்து பாஸ்புத்தகத்தை எடுத்த முருகானந்தம் அதில் இருந்த கடிதத்தை ஒரு பார்வை பார்த்துவிட்டு மாரியப்பனிடம் கொடுத்தார். இதற்கிடையில் பக்கத்து அறைக்குச் சென்றிருந்த செல்வக்குமார் திரும்பி வந்து மாரியப்பனுக்கு அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தார். கடிதம் ஆங்கிலத்தில் இருந்ததால் அதை மேலோட்டமாகப் பார்த்த மாரியப்பன் கடிதத்தை செல்வக்குமாரிடம் கொடுத்தார். ஆறு மாதங்களுக்கு முன் தேதியுடன் வங்கி கிளை மேலாருக்கு வரதராஜனால் அக்கடிதம் எழுதப்பட்டிருந்தது. அதில் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள கீறப்பட்ட வரைவோலை தன் முகவரிக்கு, தன் பெயரில் வந்ததாகவும், ஆனால் அது தனக்கானதா என்ற ஐயம் இருப்பதால், இந்த வரைவோலை தொடர்பான புகார் ஏதும் வந்தால் ஆவன செய்யும்படியும் அக்கடிதம் கோரியது. கடித நகலின் இணைப்பாக வரைவோலையின் படப்படி நகலும்,
வரைவோலை வந்த கடித உறையும் இருந்தன.
கடித உறையில் பெறுநர் திருமிகு வரதராஜன் அவர்கள்,
குமரன் நகர்... என்று வரதராஜன் முகவரியும், அனுப்புநர் மூர்த்தி,
திருச்சி என்றும் இருந்தது.
கடிதத்தைப் படித்த செல்வக்குமார் தன்னுடைய செல்லிடப் பேசியை எடுத்து வரதராஜனிடம் வங்கி தொலைபேசி எண் கேட்டு மேலாளரிடம் பேசினார்.
குற்றப்பிரிவு ஆய்வாளர் என்ற தன்னறிமுகத்துடன் வரதராஜன் புகார் விபரம் கேட்டார்.
இதுவரை யாரும் கேட்டு வராததால் வரைவோலையின் காலாவதியாகும் ஆறுமாதங்கள் முடிவதற்கு இரண்டு நாட்கள் முன்பு,
முந்தாநாள், சனிக்கிழமைதான் அதை வரதராஜன் கணக்கில் வரவு வைத்ததாக மேலாளர் தெரிவித்தார்.
செல்வக்குமார் காவியிடம் ‘டிராப்ட் காணோம்ன்ற விபரம் எப்பத் தெரியும்?’
என்றார்.
‘கார்த்திகை தீபத் திருநாளன்று’ என்றார் காவி.
‘அது என்னிக்கி?’
‘இரண்டு மாதம் முன்னால்’
‘எப்படித் தெரியும்?’
‘மூர்த்தி தீபத்திருநாளுக்கு குடிலுக்கு வந்திருந்தபோது சொன்னான்’
‘போலிஸ்ல கம்ளெய்ண்ட் பண்ணீங்களா?’
‘இல்லை’
‘பேங்குல எழுதிக் குடுத்தீங்களா?’
‘இல்லை. ஆனால்,
யாரும் இந்த வரைவோலையை மாற்ற வந்தால் தகவல் தரும்படி சொல்லி,
வரைவோலை எண்ணைக் கொடுத்திருந்தோம்’
‘மேனேஜர் யாருமே கேட்டு வரலைன்னு சொல்றாரே’
‘மேலாளரிடம் சொல்லவில்லை. அங்கு உதவியாளராகப் பணிபுரியும் என்னுடைய சீடனிடம் சொல்லி வைத்திருந்தோம். அவன்தான் முந்தாநாள் என்னைத் தொடர்பு கொண்டு வரைவோலை இவர் கணக்கில் வரவு வைக்கப்பட்ட விபரத்தைச் சொல்லி இவருடைய முகவரியையும் தந்தான்’
என வரதராஜனைக் கையைக் காட்டினார்.
மாரியப்பனும் செல்வக்குமாரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
சிறிது நேர அமைதிக்குப் பிறகு செல்வக்குமார் தொடர்ந்தார்.
‘உங்க பேரு என்ன?’
‘என்னை எல்லோரும் ஞானானந்தா என்றழைப்பார்கள்’
‘அதுதான் பேரா?’
‘இல்லை. அது என் சீடர்கள் என் ஞானத்தின் காரணமாக என்னை அழைக்கும் பெயர்.
என் இயற்பெயர் வரதராஜன். நெருக்கமான சீடர்களுக்கு மட்டுமே இந்தப் பெயர் தெரியும்.
ஆனால் இயற்பெயரில்தான் வங்கி கணக்கு வழக்குகள் எல்லாம் உள்ளன என்பதால்தான் என் சீடன் திருச்சி மூர்த்தி இயற்பெயருக்கு வரைவோலை அனுப்பியிருந்தான்’
‘அட்ரசே இல்லாத திருச்சி சிஷ்யன் மூர்த்தி மொட்டையா வரதராஜன்,
குமரன் நகர்ன்னு ஒரு கவர் அனுப்புனா கூரியர் கொடுக்கிறவன் யாருக்கிட்டக் குடுப்பான். குமரன் தெரு சாமியார் ஞானானந்தாதான் வரதராஜன்னு தெரிஞ்சுக்கிர்றதுக்கு கூரியர் பாய் என்ன உங்க நெருங்கின சிஷ்யனா?’
என்று சத்தத்தை உயர்த்திய செல்வக்குமார், வரதராஜனைக் காட்டி,
‘இவரு எல்லாத்தையும் ப்ராப்பராப் பண்ணியிருக்காரு. நீங்க சிபிஐ ரேஞ்சுக்கு டிராப்ட் மாத்துற ஆளப்பிடிக்கிறதுக்கு சிஐடி ஏற்பாடு பண்ணதா நெனச்சுக்கிட்டு சம்பந்தமே இல்லாம இவரு மேல கேஸ் குடுத்திருக்கீங்க... காவி கட்டியிருக்கீங்களேன்னு பாக்குறேன்...’
காவி அமைதியாக வலதுகையில் முத்திரை பிடித்து நெற்றியில் வைத்து கண்களை மூடிக்கொண்டார். உடன் வந்த நால்வரும் தலைகவிழ்ந்து அமைதியாக நின்றனர்.
‘சொல்லுங்க சார் என்ன பண்ணலாம்?’
என்ற செல்வக்குமாரிடம் ‘அவங்க பணத்தை அவங்கக்கிட்டையே குடுத்துறலாம். நான் இன்னிக்கே எட்டாயிரம் ரூபாய அவங்களுக்குக் குடுத்துர்றேன்’ என்றார் வரதராஜன்.
‘நீங்க என்ன நினைக்கிறீங்க வக்கீல் சார்?’
என முருகானந்தத்திடம் கேட்டார் செல்வக்குமார்.
‘கௌரவமான மனுஷன் மேல அபாண்டமாப் பொய் கேஸ் குடுத்ததுக்காக ஞானானந்தா என்ற வரதராஜன் மேல மான நஷ்ட வழக்குப் போடலாம்ன்னு நெனைக்கிறேன்’ என்றான் முருகானந்தம்.
‘எனக்கும் அதுதான் சரின்னு படுது’
என்ற செல்வக்குமார், மாரியப்பனிடம் ‘என்ன சரிதானே?’ என்றார்.
மாரியப்பன் உடனடியாக ‘ரொம்பச் சரி சார்’
என்றார்.
காவி நாற்காலியில் நெளியத் தொடங்கினார். உடன் வந்தவர்கள் எழவு கேட்கவும் திராணியின்றி தொண்டை அடைக்க நின்று கொண்டிருந்தார்கள்.
வரதராஜன் முருகானந்தத்திடம் ‘அதெல்லாம் ஒன்ணும் வேண்டாம் முருகன்.
அவங்க பணத்த நாம அவங்கக்கிட்டயே குடுத்துறலாம்’ என்றார்.
‘சரி உங்க இஷ்டம்’
என்றான் முருகானந்தம்.
செல்வக்குமார் ஞானானந்த வரதராஜனிடம் ‘தவறுதலாக உங்கள் பெயருக்கு எழுதப்பட்ட எட்டாயிரம் ரூபாய்க்கான டிராப்ட்டை பாதுகாத்துத் தந்தமைக்கு நன்றின்னு வரதராஜன் சாருக்கு ஒரு கடிதம் எழுதிக் குடுத்துருங்க. கடிதத்தில இன்னாரிடமிருந்து எட்டாயிரம் ரூபாய்க்கான காசோலையை நன்றியுடன் பெற்றுக் கொண்டேன்னு எழுதிக் கையெழுத்துப் போட்டுக் குடுத்துட்டு அவரு குடுக்குற செக்க வாங்கிட்டுப் போங்க’
என்றவர் வரதராஜனிடம் ‘செக்புக் இருக்குல்ல?’ என்றார்.
வரதராஜன் செக்புக்கை எடுத்துக் காட்டினார். வார்த்தைகளே வராத நிலையில் அவர் இருந்தார்.
வழக்கம்போல் காவல் நிலையத்திற்கு பேப்பர்,
கார்பன் எல்லாம் வாங்கிக் கொடுத்துவிட்டு செல்வக்குமார் சொன்னபடி கடிதம் கொடுத்து,
காசோலை வாங்கிக் கொண்டார் ஞானானந்த வரதராஜன்.
மாரியப்பனிடம் புகார் திரும்பப்பெறும் மனுக்கொடுத்த பின்னர் சுமோ அவர்களை ஏற்றிக் கொண்டு திணறலுடன் புறப்பட்டு நகர்ந்தது.
செல்வக்குமாருக்கும் மாரியப்பனுக்கும் நன்றி சொல்ல டேனியலுடன் இவர்களும் புறப்பட்டனர்.
மறுநாளில் இருந்து மூன்று நாட்களுக்கு காரைக்குடியில் புதிதாகத் தெர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களுக்கு அடிப்படைப் பயிற்சி கொடுப்பதற்காக முருகானந்தம் நிர்வாகத்தால் அனுப்பப்பட்டிருந்தான். மற்றவர்கள் தயங்குகின்ற இதுபோன்ற பயிற்சிப் பணிகளை அவன் எப்போதுமே விரும்பி ஏற்றுச் செய்வான்.
பணி தொடர்பான பயிற்சி கொடுப்பதுடன், புதியவர்களுக்கு தொழிற்சங்கத்தை அறிமுகப்படுத்துவதற்கும் இந்தக் களத்தை அவன் பயன்படுத்திக் கொள்வான்.
மூன்று நாட்களுக்குப் பின்னர் திரும்பி வந்த அவனை அலுவலகத்தில் அனைவரும் உற்சாகமாக எதிர்கொண்டனர். அலுவலகத்தில் ஓர் பேரதிசயம் நடந்திருப்பதாகச் சொன்னார்கள். ‘என்ன அதிசயம்?’
என்ற இவனிடம் ‘வரதராஜன் சாமியப் பாருங்க’
என்றனர். சிலர் ‘தோழர் வரதராஜனைப் போய்ப்பாருங்க’ என்றனர்.
குழப்பத்துடன் அவர் அறைக்குச் சென்றான்.
அறை முழுவதும் மாற்றம் கண்டிருந்தது. ஜன்னல்களுக்கு போடப்பட்டிருந்த காவிச்சட்டைகள் சிவப்புச் சட்டைகளாக மாறியிருந்தன. மேஜை முழுவதும் இருந்த புலிவாகனன் படங்கள் இருந்த இடத்தில் லெனின் சிரித்துக் கொண்டும்,
பேசிக் கொண்டும், நாவிதர் வேடத்திலும், தன் முத்திரை வணக்கத்துடனும் என பல்வேறு நிலைகளில் இருந்தார்.
சுவரில் இருந்த எலிவாகனன் காணாமல் போய் கார்ல் மார்க்ஸும் எங்கல்சும் மார்பளவில் இருந்தனர்.
கணினியின் முதல்திரையில் சே உரையாற்றிக் கொண்டிருந்தார். இவன் உள்ளே நுழைந்தபோது மார்க்ஸ்,
எங்கல்சின் படத்திற்கு வரதராஜன் ஊதுபத்தி ஏற்றிக் கொண்டிருந்தார்.
அரவம் கேட்டுத் திரும்பிப் பார்த்த வரதராஜன் ‘வணக்கம் தோழர்’ என்றார்.
‘என்ன இதெல்லாம்?’
என்ற முருகானந்தத்திற்கு ‘மாற்றம் மட்டுமே மாறாதது தோழர்’
என்றபடி மார்க்சுக்கும் எங்கல்சுக்கும் குங்குமம் வைத்துக் கொண்டிருந்தார் வரதராஜன்.
முருகானந்தம் பெருமூச்சு விட்டபடி அமைதியாக அமர்ந்தான். தன் கடமைகளை முடித்து வந்த வரதராஜன் ‘என்ன தோழர் ஸ்டன்னாயி உட்காந்துட்டீங்க’ என்றார்.
‘என்ன செஞ்சுக்கிட்டிருக்கீங்க?’
‘படம் மாத்துறதுக்கு ஹெட் ஆபீஸ்ல ஓரல் பெர்மிஷன் வாங்கியாச்சு தோழர்.
ஒன்ணும் பிரச்சனை இல்லை’
‘அலுவலக நடைமுறை பிரச்சனை இல்லை.
ஆனால் தத்துவார்த்த நடைமுறையிலதான் பிரச்சனை’ என எழுந்த முருகானந்தத்திடம் ‘என்ன தோழர் சொல்றீங்க?’ என்றார் வரதராஜன்.
‘ஐயப்பனைக் கும்பிடுறதால எப்படி ஒன்ணும் ஆகப்போறதில்லையோ, அதேமாதிரிதான் மார்க்ஸைக் கும்பிடுறதாலயும் ஒன்ணும் ஆகப்போறதில்லை. மூலதனம் புனிதநூலும் இல்லை.
கார்ல் மார்க்ஸ் கடவுளும் இல்லை.
அவர் மானுடத்தை நேசித்த ஒரு மனிதன்றதப் புரிஞ்சுக்கங்க. முதல்ல உங்க குருட்டுத்தனமான நம்பிக்கைகள்ல இருந்து வெளிய வாங்க’
என்றபடி அறையிலிருந்து பெரும் எரிச்சலுடன் வெளியேறிக் கொண்டிருக்கிறான் முருகானந்தம்.
0
‘இந்தக் கதையில் அறையிலிருந்து வெளியேறிய முருகானந்தம் என்ன செய்யப் போகிறான் என்பதல்ல என்கேள்வி.
நடைமுறை என்ற நெட்டிழையில் ஊடுபாவாக தத்துவம் இருந்தால்தான் சோசலிச நெசவு சாத்தியம் என்பது அனைத்துலக உண்மை.
வெறும் நம்பிக்கைகளையும் அதன் வழிப்பட்ட வழிபாட்டையும் மறுப்பது மார்க்சியம். ஆனால் வெறும் நம்பிக்கைகளே தத்துவமாக,
வெற்று வழிபாடுகளே நடைமுறையாக பல்லாயிரமாண்டு வரலாறு கொண்ட தேசத்தில் மார்க்சியம் சாத்தியமா?
சாத்தியமெனில்... அறிவுக்கும் அறிவியலுக்கும் புறம்பானவற்றை வேரறுக்க எந்த முயற்சியும் எடுக்காத சூழலில் கார்ல் மார்க்ஸ் கடவுளாக மாறுவது தவிர்க்கக்கூடியதா? மண்ணுக்கேற்ற மார்க்சியம் என்ற பெயரில் சாதிமத நிராகரிப்பை முன்னெடுக்காமல் சாதிமத நல்லிணக்கம் பேணுவதாகச் சொல்வது சரியா?
இந்தக் கதையில் வரும் வரதராஜன்களும் முருகானந்தமும் இருப்பவர்களா இல்லாதவர்களா?’ இந்தக் கேள்விகளுக்கான விடைகளை பத்து நொடிகளுக்குள் நீ சொல்லத் தொடங்கவில்லை எனில்...
பைஸ்மால்கசன் விரைவாகச் சிந்திந்து எங்கிருந்து தொடங்குவது என முடிவு எடுத்துக் கொண்டிருக்கையில் எங்ஸ்ட்வின் செயற்கை நுன்னறிவு வைரஸின் கௌண்ட் டவுன் தொடங்கியது.
10... 9... 8... 7... 6... 5... 4... 3...
2... 1...
விடையைக் கண்டுபிடித்துத் டைப் செய்யத் தொடங்குமுன்னரே...
மீண்டும் எங்ஸ்ட்வின் செயற்கை அறிவு வைரஸின் அந்த உருவம் திரையில் தெரிய தோளில் தொங்கிய தலை ‘குட் பை’
சொல்ல... திரை மும்முறை ஒளிர்ந்து கணினி செயல்பாடற்றுப் போனது.
(2011 ஆகஸ்ட் 7ஆம் நாள் ‘மாவிபக’ அருப்புக்கோட்டையில் நடத்திய படைப்பரங்கில் வாசிக்கப்பெற்ற சிறுகதை)
நன்றி
: கணையாழி 2012 ஜூன்
No comments:
Post a Comment