சிதறும் கோர்வை
முட்டைகள் அடங்கிய
அட்டைப் பெட்டிகளை
எத்துனை கவனமாய்
கையாளும் போதிலும்
எப்போதாவது...
எதிரபாராவிதமாய்
உடைந்துவிடுவதைப்போல்
சிதறித் தெறிக்கிறது
கவிதைக்கான் கோர்வையும்.
அடைமொழிகள்
மிருகத்தின் பெயர்தனை அடைமொழியாக்கி
அடைமொழியாய் வைக்கப்பட்ட
மிருகமாகவே மாறி வாழ்ந்து வருவோர்க்கு
மத்தியில் –
மனிதரகளாக வாழ்வது
கொஞ்சம் கடினம்தான்.
எனினும் நம்மால்தானே முடியும்
அத்தகைய மிருகங்களையும்
அடக்கி ஆள...
தேநீரின் சுவை
காத்திருந்த எச்சில் குவளைகளை
அழுக்கு நீர் அலசி...
அலசிய தண்ணீர்
வடியும் முன்பே
சீனியும் தேயிலைத்தூளும்
பாலின் நிறத்திலே
சுடுநீரும் கலந்து...
ஆற்றி நம் கைகளில்
கொடுக்கப்பட்ட தேநீரை நாம்
செய்தித்தாள்களின் கவனத்திலேயே
பருகிவிடுவதால்
தொடர்ந்து...
சுவையாயிருக்கிறது தேநீரும்.
எம் தந்தை பெரியார்
வள்ளுவர் வழியில் வாழ்ந்து வந்த
தமிழ்ச் சமுதாயம், திராவிடச் சமுதாயம்
பார்ப்பன பண்பாட்டுப் படையெடுப்பினால்
பொசுக்கப்படுவதைக் கண்டு
பொறுக்க முடியாமல்
யாரடா – நீ
எம் இனத்தின் மீது
இழிவைச் சுமத்தி, அறிவைக் கெடுத்து
மானம் இழக்கச் செய்வது?
என
உரக்க்க் குரல் கொடுத்து, ஆரியக் குரல்வளையை
இறுக்கிப் பிடித்த வீரிய கரங்களுக்கு உரியவர்
எம் தலைவர் பெரியார்...
கூறு கூறாய் பிரிந்து இருந்த மக்களை –
ஓர் வழியில் நிறுத்தி, சீர் செய்து,
நேர் வழியில் நடத்திட
திராவிடர் இயக்கம் அமைத்திட்ட
பகுத்தறிவுப் பகலவன்
எம் தந்தை பெரியார்...
(2011 அக்டோபர் 9 ஆம் நாள் அருப்புக்கோட்டையில் மானுட விடுதலை பண்பாட்டுக் கழகம் நடத்திய படைப்பரங்கில் வாசிக்கப்பெற்ற கவிதைகள்)
No comments:
Post a Comment