Wednesday, October 12, 2011

புதிய முறையில் உள்ளாட்சித் தேர்தல் - மதிவாணன்



      உள்ளாட்சித் தேர்தல் என்ற திருவிழா துவங்கிவிட்டது. புதிய வகையில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடப்பதற்கான முன்மாதிரியாக இந்த உள்ளாட்சித் தேர்தல் அமையும் என்று தமிழக தேர்தல் ஆணையர் அறிவித்திருக்கிறார். அது என்ன புதிய முறை என்று புரியவில்லை. வழக்கமான முறையில்தான் இந்த தேர்தலும் நடக்கிறது. சட்டமன்ற அல்லது நாடாளுமன்றத் தேர்தலின் குட்டி வடிவத்தில்தான் அனைத்தும் நடக்கின்றன. வேட்பாளர்களின் பிரச்சாரம், பண வினியோகம் துவங்கி வாக்குப் பதிவு முறை வரை அனைத்தும் பழைய பாணியில்தான் இருக்கின்றன. உண்மையிலேயே புதிய முறையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியுமா? முடியும். ஆனால், அது அரசாங்கத்தின் கையில் இல்லை.
      உள்ளாட்சி அமைப்புகளைப் பற்றி சற்று புரிந்துகொள்வது நல்லது. அதிகாரப் பரவல், வேர்க்கால் மட்ட ஜனநாயகம், முற்றூடான ஜனநாயகம் என்றெல்லாம் உள்ளாட்சி அமைப்புகளைப் பற்றி சொல்கிறார்கள். உண்மையில் அது அப்படியில்லை. முதலில் உள்ளாட்சி அமைப்புகள் மத்திய மாநில அரசுகளில் திட்டங்களை நிறைவேற்றும் அமைப்புகளாக இருக்கின்றன. அதிகார அமைப்புகளாக இல்லை. மாநகராட்சி போன்ற உயர் அமைப்புகள் சொந்த நிதி அடித்தளத்தைப் பெற்றிருந்தபோதும், சொந்தமாக முடிவெடுப்பதற்கு ஓரளவு வாய்ப்பிருந்தபோதும் அவற்றை முழுமையான மக்கள் பிரதிநிதித்துவ அமைப்புகள் என்று கொள்ள முடியாது. ஊராட்சி மட்டங்களில் பார்த்தால் மாவட்ட நிர்வாகத்தின் எடுபிடியாக உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. மத்திய மாநில அரசுகள் ஒதுக்கும் நிதியில் அரசு அதிகாரிகள், மாவட்ட மட்ட அரசியல்வாதிகளின் கொள்ளைக்குத் துணை போகும் அமைப்புகளாக உள்ளாட்சிகள் உள்ளன.
      இரண்டாவதாக அந்தந்த மட்ட ஆதிக்கப் புள்ளிகளின் நலனுக்காகவே உள்ளாட்சிகள் இயங்குகின்றன அல்லது இயக்கப்படுகின்றன. சோனியா போன்றவர்கள் சில நூறு கோடிகளில் கொள்ளையடிக்கிறார்கள் என்றால் கருணாநிதி, ஜெ போன்றவர்கள் சில கோடிகளில் கொள்ளையடிக்கிறார்கள். உள்ளாட்சி அமைப்புகளில் அந்தந்த மட்டங்களுக்கு ஏற்ப சில பத்து லட்சங்களில் அல்லது லட்சங்களில் கொள்ளையடிக்கிறர்கள். இப்படி கொள்ளையில்தான் மாறுபாடு.
      பெருமுதலாளிகள் வனங்களையும் சுரங்கங்களையும் கொள்ளையடிக்கிறார்கள் என்றால், கிராமப்புற பெரும் புள்ளிகள் ஆற்று மணலை, குவாரிகளை, புறம்போக்குகளை கொள்ளையடிக்கிறார்கள். அளவில்தான் வேறுபாடு. பெருமுதலாளிகள் நலனுக்காக நாடாளுமன்றம் இருப்பது போல உள்ளூர் பெரும்புள்ளியின் நலனுக்காக பஞ்சாயத்து மன்றம் இருக்கிறது.
      நேரு போன்றவர்கள் பற்பல ஏக்கர்களை வளைத்துப்போட்டிருக்கிறார்கள் என்றால், ஊராட்சித் தலைவர்கள் பற்பல செண்ட்டுகளை வளைத்துப்போடுகிறார்கள்.
      கருணாநிதியோ மன்மோகனோ கம்பெனிகளுக்கு சலுகை செய்துவிட்டு நாட்டுச் செல்வத்தைக் கொள்ளையடிக்கிறார்கள் என்றால் உள்ளாட்சித் தலைவர்கள், மணல் அள்ளுவோருக்கும், குவாரி நடத்துவோருக்கும், ஒதுக்கப்புறமான கிராமங்களில் அமைந்த கம்பெனிகளுக்கும் வள ஆதாரங்களை விற்பனை செய்துவிட்டு கொள்ளையடிக்கிறார்கள்.
      நாடாளுமன்ற ஜனநாயகத்தின் குறுமாதிரியாகத்தான் உள்ளாட்சி ஜனநாயகமும் இருக்கிறது. உதாரணமாக உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டபின்பு மதுரை மாவட்டத்தில் டாஸ்மாக் விற்பனை நாளொன்றுக்கு ரூபாய் 30 லட்சம் அதிகரித்துள்ளதாம். தேர்தல் செலவில் பாதி மது வினியோகம் என்று வைத்துக்கொண்டால் கூட 20 நாட்களுக்கு 6 கோடி ரூபாய் ஆகிறது. எனில் குறைந்தது ஒரு மாவட்டத்தில் தேர்தல் செலவு 12 கோடிகளுக்கு மேலிருக்கலாம். இது ஓர் உத்தேசக் கணக்குதான். தேன் எடுப்பவன் புறங்கையை நக்குவான் என்பது பழைய கதை. இப்போது வருமானத்தைக் கணக்கிட்டே தேர்தல் செலவு செய்கிறார்கள்.
      உள்ளாட்சி தேர்தலின் குறிப்பான அம்சம் உள்ளூர் பெருந்தனக்காரர்களின் ஆதிக்கம். உதாரணமாக, சமீபத்தில் மிகவும் பேசப்பட்ட மண்டலமாணிக்கம் பஞ்சாயத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அது தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்ட பஞ்சாயத்து. தலைவராக ஓர் தலித் வர வேண்டும். அந்த பஞ்சாயத்தில் மிக அதிக எண்ணிக்கையில் உள்ள தலித்துகள் பள்ளர் இனத்தைச் சேர்ந்தவர்கள். ஆனாலும், 4 வீடுகள் உள்ள சக்கிலியர் சாதியிலிருந்து ஒருவரைத் தலைவராக்கிவிட்டு ஆப்பநாட்டு மறவர் வகையறா ஒருவர் பஞ்சாயத்தில் கொள்ளையடித்து வருகிறார்.
      தன்னிடம் வேலை செய்யும் தலித் பெண்ணைத் தலைவராக்கிவிட்டு பஞ்சாயத்துத் தலைவராக இருப்பவர், பெண் தலைவிக்கு பதிலாக மன்றக் கூட்டங்களை நடத்துபவர் என்று நிறைய கதைகள் தமிழகமெங்கும் உள்ளன.
      வட்டிக் கடை நடத்துபவர், கிராம நிலத்தை கையில் வைத்திருப்பவர் அல்லது அவரின் கையில் உள்ள ஓர் எடுபிடி என்று கிராம ஆதிக்கத்தின் மையம் யாரோ அவரே உள்ளாட்சியின் அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கிறார்.
      ஓர் சம்பவத்தைக் குறிப்பிட வேண்டும். வேலையுறுதித் திட்டத்தில் கூலி போதவில்லை என்று கிராம சாலையை மக்கள் மறித்தனர். அங்கு வந்த யூனியன் அதிகாரி ஏதோ பேசி சமாளித்துவிட்டு புறப்பட்டார். அவர் வந்து போன டீசல் செலவுக்காக பஞ்சாயத்து கிளர்க் பணம் அளித்தார். பணம் எங்கிருந்து வந்திருக்கும் என்கிறீர்கள்?
      ஆக, அதிகாரிகளின் கொள்ளைக்குத் துணை போவது, உள்ளூர் பணக்காரரின் கைப்பாவையாக, கொள்ளைக்காடாக இருப்பது இதுதான் உள்ளாட்சி.
      எனவே, உள்ளாட்சித் தேர்தல் என்பது இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் வேர்க்கால் வடிவம். அவ்வளவுதான். எனில், இந்த தேர்தலை புதிய மாதிரியில் நடத்துவது எப்படி? நிச்சயம். தேர்தல் வாரியம் சொல்லும் முறையில் அல்ல.
      தமிழகக் கிராமங்களின் இன்றைய நிலை என்ன? அனைத்து நகரங்களுக்கு பெருநகரங்களுக்கு செல்லும் நகரப் பேருந்துகள் அதிகரித்துவிட்டன. காலையில் கிராமங்களிலிருந்து உழைப்பாளிகளை அள்ளிச்சென்று மாலையில் கொண்டுவந்து இறக்கிவிடுகின்றன. கிராமத்தில் வேலை இல்லை. விவசாயக் கூலி போதுமானதாக இல்லை. அதிலும் முக்கியமாக உழைப்புக்கு மரியாதை இல்லை.
      கிராம மக்களுக்கான நல்வாழ்வுத் திட்டங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன. கைகள் நடுங்கும் வயதிலும் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கு முதியோர் உதவித் தொகை கொடுக்கப்படுவதில்லை.
      இரு சக்கர வாகனத்தில் கிராமத்தை முன்னிரவு நேரத்தில் நெருங்கும்போது சாலையின் இரு பக்கமும் எழுந்து நிற்கும் பெண்கள் தென்படுவார்கள். திண்டுக்கல் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் புதிதாகப் போடப்பட்ட கிராம சாலையில் மற்றொரு சாதிப் பெண்கள் மலம் கழித்துவிட்டார்கள் என்று மிகப்பெரும் தாக்குதலே நடந்தது. இந்தியா 2020ல் வல்லரசாக மாறும் என்று சொன்ன அப்துல் கலாமுக்கு நிதர்சன‌ அறிவே கிடையாது என்று தோன்றுகிறது.
      வேலை, கூலி, கௌரவம் என்ற மூன்றும்தான் கிராமப்புற உழைப்பாளிகளின் பிரச்சனையாக இருக்கிறது. இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயகமும் சரி வேர்க்கால் மட்ட முற்றூடான ஜனநாயகமும் சரி இப்பிரச்சனைகளைப் பற்றி கவலைபட்டதேயில்லை.
      மாற்றம் எங்கே இருக்கிறது? இந்த வகைப்பட்ட அரசியலை முற்றிலுமாக மறுப்பதில் இருக்கிறது. இந்திய ஜனநாயகம், உள்நாட்டு வெளிநாட்டு முதலாளிகள், அதிகார வர்க்கம், நில உடமையாளர்களின் ஜனநாயகமாக இருக்கிறது என்பதற்காக, வேர்க்கால் மட்ட ஜனநாயம் உள்ளூர் பெருந்தனத்தின், அதிகார வர்க்கத்தின் ஜனநாயகமாக இருக்கிறது என்பதற்காக அதனை முற்றிலுமாக மறுத்துவிட முடியாது. முன்னாளைய சாதி அதிகார நாட்டாமைச் சபைகளை விட கிராம சபை உயர்ந்ததுதான். ஆனால், அதனை நடப்பாக, உண்மையானதாக ஆக்குவதுதான் பெரும் பிரச்சனை. உள்ளூர் ஆதிக்கத்தின் கருவியாக இருக்கும் பஞ்சாயத்து மன்றத்தை உள்ளூர் ஆதிக்கத்திற்கு எதிரான போர்வாளாக ஏன் மாற்ற முடியாது? கிராமத்தில் ஏறக்குறைய 90 சதம் மக்கள் உழைப்பாளிகளாக இருக்கும்போது ஏன் உழைப்பாளிகளின் அதிகாரத்தை நிறுவ இந்தத் தேர்தலை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்த முடியாது?
      நிச்சயம் இந்தியாவை ஜனநாயக மக்கள் குடியரசாக மாற்றுவதற்கு வெகு தூரம் செல்ல வேண்டும். மக்கள் அதிகாரத்தைக் கட்டமைக்க கிராமங்களை உழைப்பாளர்களின் அதிகார மையமாக்க வெகு நீண்ட தூரம் போக வேண்டும். உழைக்கும் மக்கள் எதிர்த்து நிற்க ஆரம்பித்துவிட்டால் எந்த அதிகாரத்தைத் தகர்ப்பதற்கும் நாளாகாது.
      இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) தமிழகத்தின் உள்ளாட்சித் தேர்தல்களில் பங்கெடுக்கிறது. வேறு வழியே இல்லாமல் கூட்டணியில்லாமல் நிற்கும் கட்சிகள் போல அல்லாமல், கொள்ளைக்கார கட்சிகளோடு கூட்டு இல்லை என்ற கொள்கையின் அடிப்படையில் தனியாக தேர்தலை எதிர்கொள்கிறது.
      மதுரை மாவட்டத்தை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம். யார் இதுநாள் வரை மக்களின் தலைவர்களாக நின்று போராட்டங்களை வழிநடத்தியிருக்கிறார்களோ அவர்கள் மட்டும்தான் வேட்பாளர்கள். தேர்தல் செலவு ரூபாய் 650 (தலித்), 750 (இதரர்) தாண்டக்கூடாது என்பது முதல் நிபந்தனை. தேர்தல் செலவையும் கட்சிக் கிளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது இரண்டாவது நிபந்தனை.
      உள்ளூர் பெருந்தனத்தின் கையாளாக இருக்க மாட்டேன், ஊழலில் ஈடுபட மாட்டேன், உள்ளாட்சியின் காண்ட்ராக்டுகளை எடுத்துக்கொள்ள மாட்டேன், 100 நாள் வேலையில் 119 சட்டக்கூலி கிடைக்கப் போராடுவேன் என்பது உள்ளிட்ட உறுதிமொழிகளை அளிக்க வேண்டும்.
      மதுரை மாவட்டத்தில் போட்டியிடும் எம்எல் கட்சி வேட்பாளர்களில் 70 சதம் பெண்கள் என்பது மற்றொரு கவனத்திற்குரிய செய்தி.
      இந்த வேட்பாளர்களின் பிரச்சாரம் கிராமங்களில் வரவேற்பு பெறுகிறது. சாராயம் தராமல், ஓட்டுக்குப் பணம் கொடுக்காமல், ஊழல் எதிர்ப்பு, உள்ளூர் மற்றும் அதிகார எதிர்ப்பு என்ற முழக்கங்கள் சரியானவை தேவையானவை என்கின்றனர் பொது மக்கள். திமுக, அதிமுக கட்சியினர் எம்எல் கட்சியின் வேட்பாளர்களுக்கு விலை பேச ஆரம்பித்துள்ளனர். இப்போதைய விலை வார்டு உறுப்பினருக்கு 20 ஆயிரம். ஆனால், அவர்களின் பேரம் வெற்றிபெறவில்லை.
      உள்ளாட்சித் தேர்தலின் அடுத்த கட்டம் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் உப தலைவரைத் தேர்ந்தெடுப்பது. அது அடுத்த கட்ட பணப்பாய்ச்சலுக்கான இடம். எம்எல் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் பணம் அளிப்பவருக்கு உபதலைவர் பதவிக்கு வாக்களிக்கக் கூடாது. தகுதியான யாரும் உபதலைவருக்குப் போட்டியிடவில்லை என்றால் வாக்களிக்கக் கூடாது என்று இப்போதே கட்சி உத்தரவிட்டிருக்கிறது.
      இப்படியாக புதியதொரு முறையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த கட்சியும் மக்களும் முயற்சியெடுத்திருக்கிறார்கள். சிறிய ஆனால், கௌரவமான தொடக்கம் என்று இதனைச் சொல்ல வேண்டும். ஆனால், இன்னும் கடினமான சவால்கள் இனிதான் இருக்கின்றன.

1 comment:

  1. புதியதொரு முறையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த கட்சியும் மக்களும் முயற்சியெடுத்திருக்கிறார்கள். சிறிய ஆனால், கௌரவமான தொடக்கம் என்று இதனைச் சொல்ல வேண்டும். ஆனால், இன்னும் கடினமான சவால்கள் இனிதான் இருக்கின்றன. சத்தியமான வரிகள். இப்படி எல்லா இடங்களிலும் நடக்க விட்டுவிடுவார்களா? முதலாளித்துவக் கட்சிகளின் தொ(கு)ண்டர்கள்

    ReplyDelete