கணிப்பொறி வழியிலான தொழில்நுட்பமான இணையத்தின் வழியிலான தொடர்புகளமாக உள்ள வலைத்தளங்கள் பற்றிய இந்த கட்டுரை நிச்சயமாக விமர்சனமாகிற அளவிற்கு கருத்து ரீதியாக ஆழமாகவும், தொழில்நுட்ப ரீதியாக ஆழமாகவும் இருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் இந்த கட்டுரை (அல்லது குறிப்பு) உங்களுக்கு எந்த அளவிற்கு கருத்துக்களை நியாயமாக தரும் என்ற எனது கேள்விக்கே பதில் தேடிக்கொண்டிருப்பதால் இந்த சந்தேகம். இருந்தாலும் ஓரு பயிற்சியாக செய்து பார்க்கலாம் என்கிற ஓரு சிறு முயற்சியாக தொடர்கிறேன். இதை ஓரு விமர்சனமாக இல்லாமல் இணையத்தில் எனது (அல்லது என்னைப்போன்ற நுனிப்புல் மேய்பவர்களின்) பயணமாக கொள்ளலாம்.
கருப்பு வெள்ளை காலத்தில் இருந்தே கணினியைத் தொட்டிருக்கிறேன். தொட்டிருக்கிறேன் என்பது என்னைப் பொருத்தவரை கொஞ்சம் ஆழமான வார்த்தை. ஏனென்றால் கணிப்பொறி என்பது என் தொழிலுக்கான ஓரு உபகரணமாக மட்டும் எனது வாழ்க்கையில் கிடையாது. மனப்பாடம் செய்ய முடியாத ஓரு மக்கு மாணவனாகவே மற்றவர்களால் பார்க்கப்பட்டு, ஓரு நிலையில் ஆமாம் நான் மக்குதான் என என்னையே நினைக்க வைத்தவர்கள் மத்தியில் தர்க்கரீதியில், லாஜிக் தளத்தில் எனக்கு உள்ள ஓரளவிலான அறிவை வெளிக்கொண்டு வந்து என் மீது எனக்கே நம்பிக்கையை ஏற்படுத்திய ஒரு நண்பனாக நினைத்தே இந்த கணினியோடு நான் பழகி வருகிறேன்.
கணினி நண்பனோடு எனக்கிருக்கும் இந்த நட்பின் ஆழம் உங்களுக்கு எந்தவிதமான பொதுத் தகவலையும் தந்து விடப்போவதில்லை என்றாலும், எனக்குள் தன்னம்பிக்கையை வளர்த்த இப்படிப்பட்ட நண்பனையே இன்று சாதாரண விசயங்களுக்காக மட்டுமே பயன்படுத்திக் கொள்கிறவனாக என்னை மாற்றிய வலைத்தளங்கள் பதிவுகள் பற்றிதான் இப்பொழுது பகிர்வதற்காக நிற்கிறேன். எனக்கு புரியும்படியாக இதை சொல்வதென்றால், பகிர்வதற்கு நிறைய விசயங்கள் உள்ள டீக்கடை நண்பனை, ஓசி டீக்காக மட்டுமே நண்பனாக வைத்திருப்பதைப் போன்ற மனநிலை தான் எனக்கு...
கணினியைப் பற்றியோ, இணையத்தைப் பற்றியோ தொழில் நுட்ப அறிவு எனக்கு ஆழமாக கிடையாது. என்னுடைய அனுபவ அறிவிலும், எனக்கு எந்தவிதமாக அது புரிந்ததோ அப்படியாகத்தான் கணினியுடன் எனது பயணம் இன்று வரை தொடர்கிறது. எந்தவிதமாக அது புரிந்ததோ அப்படியாகத்தான் - என்கிற இந்த வார்த்தையை சொல்லும்பொழுது தோழர் மதியின் குருடனுக்கு கொக்கை காட்டிய கதை ஏனோ நினைவில் வந்து செல்கிறது.
தோழர் மதி, அழைப்பிதழில் அச்சிடுவதற்காக, இந்த பகிர்வின் தலைப்பு என்னவென்று கேட்டார். அவர் கொடுத்த நேரத்திற்குள் நான் தலைப்பு சொல்லாததால் அவர் எனக்கு தலைப்பு கொடுத்து விட்டார். நானும் ஓரு தலைப்பை யோசித்தேன். நான் யோசித்த தலைப்பைதான் தோழர் மதியும் கொடுத்தார். வார்த்தைகள் தான் வேறே தவிர பொருள் ஓன்றுதான். அவர் கொடுத்த தலைப்பு - வலை விரிக்கும் வலைத்தளங்கள். நான் யோசித்தது – “இணைய வெளியால் உருவாகும் இடைவெளிகள்“ இந்த கதை இப்ப எதுக்குன்னா? நான் யோசிச்ச தலைப்புகளின் வார்த்தைகளே கொஞ்சம் அதிகமா வரும். அதனால தான்.
‘இணைய வெளியால் உருவாகும் இடவெளிகள்‘
யாருக்கும் யாருக்கும் இடைவெளி விழுகிறது.
என் அனுபவத்தில் முதல் இடைவெளி எனக்கும் எனக்குமான இடைவெளி. இணையம் என்னை நிறைய நுனிப்புல் மேய வைக்கிறது. அதன் வழியாய் என்னை நிறையத் தெரிந்தவனாய் நம்ப வைக்கிறது. இணையம் பற்றி தெரியாத பிறரையும் நம்ப வைக்கிறது. உண்மையான என் சுய மதிப்பை அது குறைக்கிறது.
அடுத்த இடைவெளி. எனக்கும் எனக்கானவர்களுக்கான இடைவெளி. ஓரு காலத்தில் ரேடியோ, கிரிக்கெட், தொலைக்காட்சி, மெகா சீரியல், குறுஞ்செய்தி, குளு குளு செய்தி, உலகக்கோப்பை, உடனடிகோப்பை போன்றவை போதை வஸ்துகளாக மாறி நம் நேரத்தை தின்றனவோ... அவை அனைத்தும் ஓன்று சேர்ந்து இணையத்தின் வழி நம் நேரத்தையும் நம் உறவுகளையும் திங்க வந்துவிட்டது. என்னங்க நாலு நாளா வேலை வேலைன்னு வீட்டுக்கே சாப்பிட வரலை.... இன்னிக்காவது மதியம் வீட்டுக்கு சாப்பிட வாங்க... என்ற துணைவியிடம், பேச நேரமில்லை.... பிறகு பேசு.... இல்ல பேஸ்புக்ல வா பேசலாம்.... என சொல்லுமளவிற்கு வந்துவிட்டது நிலைமை.
என்னோட சின்ன வயசுல எனக்கு நிறைய நேரங்களில் நிறைய சந்தேகங்கள். ஒன்னாம் நம்பர யாரு ஒன்னாம் நம்பர்னு சொன்னது. அவங்களுக்கு யாரு சொல்லியிருப்பா. அப்படி யாரு சொன்னாலும் அது நிஜமா. அது நிஜம்கிறதுக்கு என்ன உத்திரவாதம். அந்த உத்திரவாதத்தை யாரு தருவா. அப்படி தந்தாலும் அதை எப்படி நம்புறது. அதை நம்பலாம்றதுக்கு யாரு உத்திரவாதம் தருவா.... இப்படி நீண்டுகிட்டே போகும். அப்புறம் அப்படி யோசிக்கிற நேரத்த பாடங்களும் (திரைப்)படங்களும் எடுத்துக்கிட்டதுல இந்த வியாதி கொஞ்சம் குறைந்தது. ஆனா திரும்ப இந்த வியாதி வந்து எட்டிப்பார்க்குற மாதிரி தெரியுது, வலைப்பக்கங்களின் புண்ணியத்தால்.
நாம பேசிக்கிட்டிருக்கிறது ஆணா? பெண்ணா? இந்த சந்தேகம் வலைப்பேச்சுகளில் வராத ஆட்களே இருப்பது கடினம். அந்த சந்தேகம் முற்றிப்போய் ஓரு நிலையில் - சரி அவங்க யாராகவும் இருந்துட்டு போகட்டும். நான் ஆண் என்பதால் அவங்களை பெண்ணாகவே நினச்சிக்கிறேன் - அப்படிங்கிற ஓரு மனநிலைக்கு (மனநிலை?) தாமாக வந்து மனநிலையில் பாலினம் மாறிப்போகிறவர்கள் ஏராளம் இந்த இணையத்தில்.
அன்புக்காக ஏங்குகிறவர்களுக்கு எங்குமே அன்பு கிடைப்பதில்லை. ஆனால் இணையத்தில் அன்பு மாதிரி (அ) தற்காலிக அன்பு என்கிற மாதிரியான புதிய உணர்ச்சி வடிவங்கள் நிறைய பிறப்பெடுக்கின்றன.
வரலாறுகளை தெரிந்து கொள்ள வேண்டும். அதிலும் மறைக்கப்பட்ட வரலாறுகளை தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் இந்த படைப்பரங்கம்-விமர்சன அரங்கம் போன்ற அரங்கங்களுக்கு வர முயற்சி செய்வேன். ஆனாலும் அது எல்லா நேரங்களிலும் சாத்தியமாவதில்லை. சரி நம்மிடம் தான் இணையம் இருக்கிறதே. அதில் தெரிந்துகொள்ளலாம் என்றால் போதும் போதும் என்றாகிவிடுகிறது நிலைமை.
திருவிழாக்கூட்டங்களில் நாககன்னி பார்ப்பதற்கு காசு கொடுத்து டிக்கட் எடுத்து போக வேண்டும். அந்த நாக கன்னி விளம்பரத்திற்கு வெளியில் ஒரு ரிக்கார்டு டான்ஸ் நடக்கும். நாக கன்னியை பார்ப்பவர்களை விட ரிக்கார்ட் டான்ஸ் பார்க்க ஆட்கள் அதிகம்.
இந்த நிலை எனக்கென்னவோ நிறைய எழுத்தாளர்களிடம் (எனக்கு தெரிந்தவரையில் உள்ள எழுத்தாளர்கள் நிறைய பேர்) வந்து விட்டதை போன்ற ஓர் உணர்வு. தங்களது படைப்புகள் விலை விபரங்களுடன், தங்களது வலைகளில் அவர்கள் நடத்தும் ரிக்கார்டு டான்ஸ் (ரிக்கார்டு டான்ஸ்கள் வயிற்று பிழைப்பிற்காக. இவர்களை அவர்களுக்கு இணையாக நினைப்பதில் கொஞ்சம் வருத்தம் தான்) கொடுமைக்கு ஒரு அளவே இல்லை.
விளம்பரம் மாதிரி தெரியாமல் விளம்பரம் செய்தால் அதுதான் விளம்பரம். இதை சரியாக உணர்ந்து கொண்டவர்கள் இணையதளத்திலும் இயங்கும் எழுத்தாளர்கள் தான். நான் வாசிக்க நினைக்கும் ஓரு எழுத்தாளர், வாசிக்க நினைக்கத்தான் முடிகிறது. அவருடைய புத்தகங்கள் பிளாட் வாங்கிற மாதிரி பிளான் பண்ணி வாங்க வேண்டியதிருக்கிறது. அவருடைய வார்த்தைகளை பார்க்கலாம் என்கிற எண்ணத்தில் அவருடைய வலைத்தளத்தில் வாசிக்க ஆரம்பித்தேன். அதில் அவரின் விளம்பரயுக்தி, மேனேஜ்மெண்ட் வகுப்புகள் நடத்தும் அளவிற்கு திறமையானதாக இருக்கும். தன்னை ரசிப்பவனையும் திட்டுவது - அதற்கு காரணம் சொல்வது - இவர்கள் எல்லாம் நல்லா எழுதுகிறார்கள், ஆனால் அவர்கள் என்னை ஏன் நல்லா எழுதுகிறார்ன்னு சொல்ல மறுக்கிறார்கள் என புலம்புவது - சிவப்பாடை உடுத்தி தீப்பந்தங்களோடு இரவில் பயணம் செய்த பெண்களுக்கு சமஉரிமை கொடுத்த ஒரு கோவிலின் பக்தர்களை, திடீரென புரட்சி வெடித்துவிட்டதா? என்று சந்தேகம் கேட்ட அவரே ஐயப்பன் கோவிலில் நாள் முழுக்க உட்கார்ந்து அந்த உன்னத அனுபவத்தை அடுத்த புத்தகத்தில் போடுகிறேன். காசு இருக்குறவன் அந்த அனுபவத்தை என் எழுத்தில் படியுங்கள் என்பது - இப்படி இன்னும் பல பல வியாபார உத்திகள்.
கிட்னியை வித்து புத்தகம் போட்டாலும் அது நல்லா இல்லைன்னா நல்லா இல்லைன்னுதான் சொல்லுவேன்னு அறிக்கை விட்ட அந்த எழுத்தாளர், தனக்கு நண்பனாக இருந்த ஓரு எழுத்தாளரின் புத்தகத்தை அவருக்கு தெரிந்த வகையில் விமர்சனம் செய்ததற்காக, கிட்டத்தட்ட 39 கட்டுரைகள் (இன்னும் முடியவில்லை) எழுதி புலம்பித் தீர்க்கிறார்.
அவரின் ஜனநாயக முறையால் அவரை பற்றிய விமர்சனத்தை அவருக்கு காட்டியதால் அவருடைய வாசகர் வலைத்தளங்களில் இருந்து கழுத்தைப் பிடித்து வெளியேற்றப்பட்ட அனுபவம் எனக்கு உண்டு.
ஓவ்வொரு ஃபிரண்டும் தேவை மச்சான் - என்கிற தற்போதைய தொலைக்காட்சி விளம்பரத்தின் உண்மை முகம் தான் வலைவிரிக்கும் வளைத்தளங்கள். வலைத்தளங்கள் வலைவிரிக்கின்றன. ஆனால் யாருடைய லாபத்திற்காக வலைவிரிக்கின்றன என்பது இந்த விளம்பரத்தினால் லாபம் பார்க்கும் நிறுவனங்கள் சான்று. நீ நேர்ல பார்த்து ஹாய் சொல்ல கூடாது. பேஸ்புக்ல போய்தான் ஹாய் சொல்லணும். அதுதான் லேட்டஸ்ட் டிரண்ட் - என சொல்லாமல் சொல்லி நமக்கு விரிக்கின்றன வலைகளை.
(2011 அக்டோபர் 9 ஆம் நாள் அருப்புக்கோட்டையில் மானுட விடுதலை பண்பாட்டுக் கழகம் நடத்திய அச்சு ஊடகமும் – ஊடக அச்சும் கருத்தரங்கில் வாசிக்கப்பெற்ற கட்டுரை)
No comments:
Post a Comment