Monday, October 10, 2011

‘அச்சு ஊடகமும் – ஊடக அச்சும்‘ கருத்தரங்கம் – மதிகண்ணன்

       
       ஜனநாயகத்தின் நான்காவது தூண் என முன்பொரு நாளில் அறிவிக்கப்பட்டு, ஜனநாயகத்திற்கு எதிரான சக்திகளின் கைகளில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கக்கூடிய வெகுஜன ஊடகத்தின் ஒரு பகுதியான பத்திரிகைகள் - அவற்றின் வாசகப் பயன்பாடு, வாசகர் எண்ணிக்கை, வாசகர் தரம் என வாசகர்தளத்திலும்; உள்ளடக்கம், அரசியல், வெளிப்பாடு என ஆசிரியத்தளத்திலும்; தாள், அச்சு, வண்ணம், கட்டு என தொழில்நுட்பத்தளத்திலும்; விலை, விற்பனை, விளம்பரம், லாபம் என வணிகதளத்திலும்; என தளவாரியாகவும், அவற்றின் உபபிரிவுகளாகவும் இன்றைய பத்திரிகைகளைப் பல்வேறுவிதமாகப் பிரிக்க முடிந்தாலும் வெகுஜன இதழ்கள், புலனாய்வு இதழ்கள் என சந்தைப் பொருளாக நிற்கும் இருபெரும் பிரிவுகளை மட்டும் எடுத்துக்கொண்டு அவற்றின் மீதான பார்வையை ஒரு முன்வைப்பாகக் கொண்டு கலந்துரையாடல்வழி, ஒருங்கிணைக்கப்பட்டது ‘மாவிபக‘வின் ‘அச்சு ஊடகமும் – ஊடக அச்சும்‘ கருத்தரங்கம்.

ஒவ்வொரு தனிநபரும் தான் நினைப்பது யாருக்கும் தெரியாமலாவது வெளியில் சொல்லிவிடும் துடிப்புடன் இருக்கிறார். இதில் ஆண், பெண், திருநங்கை என பால்பேதமொன்றும் இல்லை. இந்தத் துடிப்பிற்கு வடிகாலாய் அமைபவை வலைப்பூக்கள். தமிழகத்தில் மின்னஞ்சல் முகவரி கொண்டோரில் 70 விழுக்காட்டினர் தங்களுக்கென குறைந்தது ஒரு வலைப்பூவையாவது சூடிக்கொண்டிருக்கின்றனர். (எனக்கு அஞ்சு இருக்கு என்பவர்களும் உண்டு) அதில் அவர்கள் என்னதான் பகிர்ந்து கொள்வார்கள் என்பது மிகவும் சுவாரஸ்யமான அவசியம். ஆனாலும் அது அலுப்பூட்டும் அனாவசியம்.

தவிர்க்க முடியாத பகிர்வுவெளியாய் விரியும் வலைப்பூக்கள், தரவுகளை ஒலி, ஒளி, மொழி வடிவில் தரும் வலைத்தளங்கள். முகம்காட்ட விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நாம் உறுப்பினராய் உள்நுழைந்திருக்கும் முகப்புத்தகம், டுவிட்டர் உள்ளிட்ட சமூக மின்னணு வலைப்பின்னல்கள் இவற்றைப்பற்றியும் நம்முடைய உரையாடலைத் தொடங்க வேண்டியது காலத்தின் கட்டாயம். வலைத்தளத்தின் வலையில் விழாதவர்களோ அல்லது வலைத்தளத்தில் வலைவிரிக்கத் தெரியாதவர்களோ ‘மின்னணு சமூக அறிவிலிகள்‘ எனும் சூழலில் இணையம் தொடர்பான தொடக்க நிலைக்கட்டுரையும் முன்வைக்கப்பட்டது.
2011 அக்டோபர் 9 ஆம் நாள் அருப்புக்கோட்டை ராஜாபிரஸ் மாடியில் நடைபெற்ற இக்கருத்தரங்கத்தையும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற படைப்பரங்கத்தையும் தோழர் கேகே ஒருங்கிணைத்தார். அரங்கிற்கு வந்திருந்தவர்களை தோழர் அருண் கருத்தரங்கப் பொருள் குறித்த முன்னறிமுகத்துடன் வரவேற்றார்.

தோழர் கேகேயின் ‘இன்றைய சூழலும் கருத்தரங்க உள்ளடக்கத்தின் தேவையும்‘ குறித்த முன்னுரையைத் தொடர்ந்து தோழர் கருப்புவின் ‘வணிகமயமான வெகுஜன இதழ்கள்‘ என்ற கட்டுரையை தோழர் ரமேஷ் வாசித்தார். தொடர்ந்த விவாதம் வெகுஜன இதழ்கள், அவற்றின் தொடக்க காலத்தன்மையில் இருந்து தடம்புரண்ட வரலாற்றை அலசி ஆராய்ந்தது. பல்சுவை இதழ்களுக்கான தன்மையில் இருந்து அவை தடம்புரண்டதையும்; நடுத்தர வர்க்கமும், தொடக்கநிலை வாசிப்போரும் எளிதில் அணுகக்கூடிய நிலையில் இருக்கின்ற இவற்றின் திசைமாறிய போக்கு குறித்த வருத்தம் கலந்துரையாடலில் வெளிப்பட்டது.

தொடர்ந்து ‘புலன் ஆயும் புலனாய்வு இதழ்கள்‘ என்ற தலைப்பில் தோழர் சுப்புராயுலு தன்னுடைய உரையை முன்வைத்தார். இன்றைய புலனாய்வு இதழ்களின் தொடக்கம் ‘தராசு‘ என நாம் நினைத்தாலும், அன்றைய ‘இந்து நேசனின் குணாம்சங்கள்‘ கொண்டதாகவே இவ்விதழ்கள் இருப்பதாகக் குறிப்பிட்டார். புலனாய்வு என்ற பெயரில், அடுத்தவர் வீட்டில் எட்டிப்பார்க்கும் மனப்பிறழ்வான மனோநிலைக்குத் தீனிபோடுபவையாக இவ்விதழ்கள் இருந்தாலும்; எந்தப் பத்திரிகையிலும் வராத, அதிகார வர்க்கம் மறைக்க நினைக்கின்ற சில விஷயங்களை இதுபோன்ற இதழ்களே வெளி உலகிற்குக் கொண்டு வருகின்றன. இவ்விதழ்கள் புலனாய்வு இதழ்கள் என அறியப்பட்டாலும் இவற்றில் புலனாய்வுத் தன்மை குறைவாக இருக்கிறது. ஆனால் பரபரப்பிற்கு இவை முக்கியத்துவம் கொடுக்கின்றன. இவற்றின் சந்தை. மாதாந்திர மத்தியதர வர்க்கத்தைக் குறிவைத்திருப்பதால், அவர்களின் உணர்வுகளுக்கான செய்திகளும், செய்திக் கட்டுரைகளும், விளம்பரங்களும் இவற்றில் நிரம்பியிருக்கின்றன. இப்படிப் பலவிதமான நேர், எதிர்ப் பார்வைகள் கொண்டதாக பரபரப்பு இதழ்கள் தொடர்பான கலந்துரையாடல் அமைந்தது. பல்சுவை இதழ்கள் சில புலனாய்வு இதழ் தொடங்கியிருப்பதன் பின்னால் இருக்கும் வணிக ரகசியத்தையும் ஒருங்கிணைப்பாளர் தோழர் கேகே சுட்டிக்காட்டினார்.


‘வலை விரிக்கும் வலைப் பதிவுகள்‘ என்ற தலைப்பிலான தன்னுடைய கட்டுரையை தோழர் ஜெயகணேஷ் முன்வைத்தார். கட்டுரையைத் தொடர்ந்த விவாதத்தில் திண்ணை தொடங்கி இன்று அடுப்பங்கரை(?) வரையிலான பல வலைத்தளங்கள் பற்றிய கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன. பல்சுவை இதழ்கள், பரபரப்பு இதழ்கள், வலைத்தளங்கள் பற்றி ஒட்டுமொத்தமான தன்னுடைய பார்வையை தோழர் வேல்ராஜன் முன்வைத்தார். விக்கி லீக்ஸ் வலைத்தளத்தின் செயல்பாடுகள் பற்றியும் அதன் புலனாய்வுத் தன்மையில் எந்த அளவிற்குத் தரவுகள் அடிப்படையாக உள்ளன என்பது பற்றியும் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

மேலும் விக்கிபீடியா, கீற்று, மாற்றுஆன்லைன் போன்ற வலைத்தளங்களையும் மானுடவிடுதலை வலைப்பூவையும் நாம் எப்படிப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது கலந்துரையாடலில் வெளிப்பட்டது. புதிதாக மின்னணு ஊடகத்தில் புகுபவர்களுக்கான ஒருநாள் தொடக்கநிலைப் பயிற்சி 23-10-2011 ஞாயிறு அன்று அருஞ்சுனை ப்ளக்ஸ் அலுவலகத்தில் ‘மாவிபக‘வால் ஒருங்கிணைக்கப்பெறும் என்ற முடிவுடன் கருத்தரங்கம் ஒரு முடிவிற்கு வந்தது.

படைப்பரங்கில் ‘மண்ணை அரித்துச் செல்லும் பேரலைகள்‘ என்ற தலைப்பிலான வாழ்வியல் பதிவுகளை கவிதை வடிவில் தந்தார் தோழர் சுப்புராயுலு. தலைப்பிடப்படாத - வாழ்வின் அபத்தத்தையும், இறப்பின் நினைவுகளையும் முன்வைத்து தன்னால் எழுதப்பெற்ற சிறுகதையொன்றை வாசித்து ‘தகனம்‘ என்றொரு தலைப்பைப் பெற்றார் தோழர் அரும்பின் பரிமளம். ‘எம்தந்தை பெரியார்‘ ‘அடைமொழிகள்‘ ‘சிதறும் கோர்வை‘ ‘தேநீரின் சுவை‘ என நான்கு கவிதைகளின் வழியாகத் தன் திசைவழி சார்ந்த பார்வையைப் பதிவுசெய்தார் தோழர் ராஜேந்திரன். ஒருங்கிணைத்த தோழர் கேகே ‘உறுத்தலின்றிக் கழியும் பொழுதுகள்‘ என்ற தலைப்பிலான ‘தோழர் கருப்புவிற்கும், இயக்குநர் வெங்கட் பிரபுவிற்குமான‘ தன்னுடைய எண்வழிக் கவிதையை தன்வழி தந்தார். தோழர் ரமேஷின் நன்றிகூறலுடன் கருத்தரங்கமும் படைப்பரங்கமும் தன்நிறைவு கொண்டன.

No comments:

Post a Comment