(புதிய கலாச்சாரம் வெளியீடான ‘நினைவின் குட்டை கனவு நதி’யில் உள்ள ‘மகிழ்ச்சியின் தருணங்கள்’ என்ற கட்டுரையைப் படித்ததன் பாதிப்பில்)
பொது வாழ்வுக்கும், குடும்ப வாழ்வுக்குமான போராட்டம் - சமரசம் குறித்த கேள்விகள் அடிக்கடி எழுவதுண்டு. முக்கியமாக சுதந்திரத்திற்கும், பொது வாழ்விற்கும் ஓர் இடைஞ்சலாகவே திருமணம் (என்னால்) கருதப்படுகிறது.
சாதியை மறுத்து, சடங்குகளை ஒதுக்கி புரட்சிகர திருமணங்கள் நடக்காமலில்லை. ஆனால் அந்தப் புரட்சி பல திருமணங்களில் மணமேடையுடன் முடிந்துவிடுகிறது.
‘கடன் வாங்காதே’
‘சிக்கனமாக இரு - சேமித்துக் கொள்’
‘சொந்தமாய் வீடு கட்டிக் கொள்’
‘பிள்ளைகளை நம்பியிராதே’
என்ற வழக்கமான அறிவுரைகளையும் தாண்டி, தன் வீடு, தன் சுற்றம், என்று வாழாமல் பொதுவாழ்வில் ஈடுபடும்போது குடும்பத்தின் அமைதி கெடுகிறது. கணவன் மனைவியிடையே புதிய வேலைப்பிரிவினை, துணை பொதுவாழ்வில் ஈடுபடுவதைத் தடுப்பது, தயங்குவது, குழந்தை, குடும்பத் தேவைகள், புதிய உறவுகளின் எதிர்பார்ப்புகள், அடையாளச் சிக்கல்கள் - மொத்தத்தில் மகிழ்ச்சிக்காக தெரிவு செய்த மணவாழ்வு, மகிழ்ச்சியைக் காவு கேட்கிறது.
மகிழ்ச்சி என்றால் என்ன? என்ற கேள்விக்கு போராட்டம் என்று பதிலளித்தார் மார்க்ஸ். மகிழ்ச்சி எவ்வாறு போராட்டமாகும்? மகிழ்ச்சிக்குத் தேவையான இன்பநுகர்ச்சி, பயன்பாடு என்ன இருக்கிறது?
பிற மக்களின் துன்பங்களை கண்டுணராமல் தன் மகிழ்ச்சி மட்டுமே இலட்சியமாகக் கொண்டு எந்த வம்பும் வேண்டாமென்று எவ்வளவுதான் ஒதுங்கி இருந்தாலும், எங்கிருந்தோ பறந்து வரும் போராட்டக்காரர்களின் கல் ஒன்று என் தலையைப் பிளக்கும். ‘சமுதாயத்தில் இருந்து கொண்டே, அதிலிருந்து விலகி இருக்க முடியாது, என்ற உண்மையை உறைக்க வைக்கும்’
உயர்ந்த லட்சியங்களைக் கொண்டிருப்பது அந்த லட்சியங்களை அடைய உடல், மன ரீதியான துன்பங்களை சந்திப்பது, தடுமாற்றம் அளிக்கும் சூழலில், கொண்டிருக்கும் கொள்கைக்கு நேர்மையாக நடந்து கொள்வது, இந்தப் போராட்டங்களே மகிழ்ச்சியான தருணங்கள்.
ஊடகத்தில் வரும் எதற்கும் கவலைப்படாத, ஆனால் மகிழ்ச்சி ததும்பும் ‘ஹார்லிக்ஸ் குடும்பத்தை’ அமைப்பது நம் நோக்கமல்ல. அதை ஒழித்துக் கட்டுவதுதான் நம் நோக்கம். சமூக மாற்றத்தை புரட்சியை நேசிக்கும் ஒரு தோழரால், அந்த உணர்ச்சி இல்லாத, சமூக உணர்வற்று, புரட்சிக்கு விரோதமாக சிந்திக்கும் துணையை எவ்வாறு நேசிக்க முடியும்?
ஆளும் வர்க்கங்களை முறியடிக்க இரத்தம் சிந்த வேண்டி இருக்கும். நாமோ? கண்ணீர் சிந்தக்கூட தயாரில்லை. என்றோ நடக்கவிருக்கும் புரட்சிக்காக இன்றைய மகிழ்ச்சியான வாழ்வை இழக்க வேண்டுமா என்ற ஏக்கம். ரயில் வரும்போது தொற்றிக் கொள்ளலாம் என்பது போல், புரட்சி வரும்போது சேர்ந்து கொள்ளலாம் என்று கணக்குப் போடுகிறது ஒரு குழு, தேதி குறித்து வருவது அல்ல புரட்சி. அது வர ஆயிரமாண்டுகள் ஆனாலும் - அதற்கான பண்பாட்டு ஆயத்தப் பணிகளை நாம் எப்பொழுதும் செய்தால்தான் புரட்சி சாத்தியப்படும்.
நம் வாழ்நாளிலே காணமுடியாத நிச்சயயமில்லாத மகிழ்ச்சிக்காக நிகழ்காலத்தை ஈடுபடுத்தித்தான் ஆக வேண்டும். துன்பம் என்று வரும்போது நம்முடைய சந்ததிகள் என்றால் கேள்வி எழுப்புவார்கள், பிறருடைய சந்ததிக்காக என்றால் கேள்வி எழுப்புவதில்லை. தன் பிள்ளைக்காக பட்டினி கிடப்பதை ஒரு தாய் துன்பமாகக் கருதுவதில்லை. குடும்பத்திற்காக ஓவர்டைம் பார்க்க தந்தை சுணங்குவதில்லை. இதெல்லாம் துன்பமான இன்பங்களாம்.
பலியிடுவதற்கு மகிழ்ச்சியான வாழ்வும், இழப்பதற்கு துடிப்பான காலமும் கிடைக்கப் பெறாத கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் கண்ணோட்டத்தில் இருந்துதான் இப்பிரச்சனையை நாம் அணுகவேண்டும்.
உழைப்பின் பயனை பறிகொடுத்த மக்களுக்கு, பூவுலகில் ஆளும் வர்க்கங்கள் அனுபவிக்கும் அத்தனையையும் ‘பரலோகத்தில்’ உறுதி அளிக்கிறது மதம். ஆனால் கம்யூனிஸம் உழைப்பின்றி உல்லாசம் தரும் பரலோகம் அன்று. உழைப்பின் பயனை உறுதி செய்வதுதான் பொதுவுடைமை. உழைப்பையே இன்பமாக கருதும் வாழ்வியல் நெறிமுறை. இதை உணர்ந்து கொண்ட தோழர்கள் இலட்சியத்திற்கு தரும் விலைதான் துன்பம்.
போராட்டமே மகிழ்ச்சி என்று வாழும் போராளிகள், வாழ்க்கையின் புதிய பரிமாணங்களையும், புதிய புதிய அழகுகளையும் படைத்துக் காட்டுகிறார்கள். தூக்குமேடையில் கவிதை சொன்ன பகத்சிங் போல.
துணையை அரசியல்படுத்துவது பொதுவாழ்வில் தடையைத் தகர்த்துவிடுமா? அல்லது ஒத்த சிந்தனை உள்ள தோழரைத் துணையாக ஏற்றால் இப்பிரச்சனை என்ன ஆகும்? இரண்டிற்கும் வழி இல்லையேல் (சிறிதளவு) குடும்பத்தில் சமரசம் செய்து கொள்ளலாமா? அந்த சமரசம் நெகிழ்வா? பிறழ்வா? இவன் எப்போது தடுக்கி விழுவான் என்று காத்துக் கொண்டிருக்கும் எதிராளிக்கு இந்த நெகிழ்ச்சி பெரிய வாய்ப்பாக அமைந்தால் என்ன ஆகும்? குடும்பத்தை ஜனநாயகப்படுத்துவது பற்றி, குடும்பத்தை உடைப்பது பற்றி என்ன சொல்வது? நமது சிந்தனைக்கு எதிராக இருக்கும் குடும்பம் அல்லது திருமணம் தேவைதானா? சரி இதனால் நாம் விரும்பும் ஸ்தூலமான சமூக மாற்றம் உடனே ஏற்பட்டு விடுமா? போன்ற கணக்கற்ற கேள்விகள் கழுத்தை நெறிக்கின்றன.
(2010 நவம்பர் 7 ஆம் நாள் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற ‘மதிப்பு’ கருத்தரங்கில் வாசிக்கப்பெற்ற கட்டுரை)
நமது சிந்தனைக்கு எதிராக இருக்கும் குடும்பம் அதாவது திருமணம் தேவைதானா? சரி இதனால் நாம் விரும்பும் ஸ்தூலமான சமூக மாற்றம் உடனே ஏற்பட்டு விடுமா? போன்ற கணக்கற்ற கேள்விகள் கழுத்தை நெறிக்கின்றன...
ReplyDeleteஆளும் வர்க்கங்களை முறியடிக்க இரத்தம் சிந்த வேண்டி இருக்கும். நாமோ? கண்ணீர் சிந்தக்கூட தயாரில்லை. என்றோ நடக்கவிருக்கும் புரட்சிக்காக இன்றைய மகிழ்ச்சியான வாழ்வை இழக்க வேண்டுமா என்ற ஏக்கம். ரயில் வரும்போது தொற்றிக் கொள்ளலாம் என்பது போல், புரட்சி வரும்போது சேர்ந்து கொள்ளலாம் என்று கணக்குப் போடுகிறது ஒரு குழு, தேதி குறித்து வருவது அல்ல புரட்சி. அது வர ஆயிரமாண்டுகள் ஆனாலும் - அதற்கான பண்பாட்டு ஆயத்தப் பணிகளை நாம் எப்பொழுதும் செய்தால்தான் புரட்சி சாத்தியப்படும்.
கலாச்சாரம் உருவாக்குகிறது...
உருவாக்குவது கலாச்சாரம்
என்கிற வரிகள் ஏனோ
நினைவுக்கு வருகின்றன...
தன் மக்களின் துன்பங்களையும், உணர்வுகளையும் உணரமுடியாதவர் எப்படி பிற மக்களின் துன்பங்களை உணரமுடியும்?
ReplyDeleteமிகச் சரியாக சொல்ல வேண்டுமானால் நீங்கள் “ஹார்லிக்ஸ் குடும்பத்தை” எதிர்பார்கிறீர்களா?
மிகச் சாதாரணமான,
பொது வாழ்வு ## குடும்ப வாழ்வு
இதற்கான சமரசத்தைப் பற்றி அதிகமாக யோசிக்கத் தேவையில்லை என்று நினைக்கிறேன். இதற்காக இவ்வள்வு கஷ்டப்பட்டால்,
பாட்டாளிக்கும் ## ஆளும் வர்க்கத்திற்க்கும்
எப்படி யோசிக்க முடியும்...பண்பாட்டைப் பற்றி எப்படி யோசிக்க முடியும்?
நாம் சமூகத்தின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும், அதன் உணர்ச்சிகளையும், மாற்றங்களையும் உண்ர்வதற்க்கு, அதை சரி செய்வதற்க்கு.
உணராமல் யோசிக்க முடியாது. முடியுமா?
1. நான் பொட்டு வச்சுக்க மாட்டேன்.
2. நீ வைப்பதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.
3. நீ எனக்கு வைப்பதை நான் அனுமதிக்க மாட்டேன்.
இன்னும் சரியாக,
யாரையும் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
கட்டுப்படுத்தப் பட்டால் அங்கு பொதுவுடைமை இல்லை.
கடைசியாக...
“குடும்பம் சமூகத்தின் ஒர் அங்கம், என்பதை வலியுறுத்திச் சொல்லிக் கொள்கிறேன்...”
அன்புடன்...