Tuesday, November 16, 2010

தேசிய அடையாளம் வேண்டுகின்ற கம்யூனிஸ்ட்களின் தொகுப்பு (பகுதி 2) - மதிகண்ணன்


கோபர்ட் கான்டியின் நெருக்கடி முற்றுகிறது : உலகைக் குலுக்கும் பெருந்திரள் மக்கள் வெடிப்புகள்

          தொடர்ந்து இந்திய மாவோயிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கோபர்ட் கான்டி அரவிந்தன் என்ற புனை பெயரில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் ‘நெருக்கடி முற்றுகிறது : உலகைக் குலுக்கும் பெருந்திரள் மக்கள் வெடிப்புகள்’

கோபர்ட் சுட்டிக் காட்டும் சூழல்

          தொழிலாளி வர்க்கம் லே-ஆஃப்கள், ஊதிய வெட்டுக்கள், கட்டாயப்படுத்தப்பட்ட நீண்ட வேலை நேரம், அதிகரித்த வேலை, பாதுகாப்பின்மை ஆகியவற்றால் மோசமாகத் தாக்கப்பட்டுள்ளனர். பெரும் பெரும் நிறுவனங்களும், அமெரிக்காவில் இரண்டு மாநில அரசுகளும்கூட திவாலை நோக்கி நடைபோடுகின்றன. அனைத்து பொருளாதாரக் குறியீடுகளும் சரிவு தொடர்வதைக் குறிப்பிடுகின்றன. உலக அளவில் இது போன்ற சூழல் நிலவுகிறது. இந்திய சூழலின் அவலம் - ஒட்டு மொத்த (கடந்த) தேர்தல் பிரச்சாரத்தில் மக்களின் வாழ்க்கை மீது நெருக்கடியின் தாக்கம் பற்றியும், கறாரான தீர்வு நடவடிக்கைகள் பற்றியும் ஒரு கட்சியும் பேசவில்லை. ஏழைகள் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வினால் மேலும் கசக்கிப் பிழியப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். வேலை இழப்புகள் இப்போது அமைப்புசாரா துறைகளில் மட்டுமல்லாமல் தகவல் தொழில் நுட்பத் துறையையும் சூழ்ந்து கொள்கின்றன. பங்குச் சந்தை மதிப்பு மேலே போய்க்கொண்டிருந்தாலும் இது பொருளாதாரத்தில் எல்லா நிலைகளிலும் பிரதிபலிக்கவில்லை. இப்படி நாட்டில் வளர்ந்து வரக்கூடிய அல்லல்தரும் வறுமை பற்றிய செய்திகள் வந்து கொண்டிருந்தாலும் ஒரு சில தொழில் குடும்பங்களும் அவர்களின் அரசியல் சகாக்களும் வளர்ந்த நாடுகளில்கூட காணப்படாத அளவில் செல்வத்தைக் குவித்துள்ளனர். ஆசியா முழுவதும் ஆப்கானிஸ்தானை மையப்படுத்திய அரசியல் அணிதிரட்டல்களை வளர்ந்த நாடுகள் செய்து வருகின்றன.

சூழல் நிர்ணயித்த பெருந்திரள் மக்கள் வெடிப்புகள்

          இப்படியான சூழ்நிலையில் பிரான்சில் 75 விழுக்காடு மக்கள் ஆதரவுடன் ஜனவரியிலும் மார்ச்சிலும் என குறைந்த இடைவெளியில் வெற்றிகரமாக நடத்தப்பெற்ற இரண்டு பொது வேலைநிறுத்தங்கள், அதே பிரான்சில் குடி, கூலி, வாகனம் என எதையும் எதிர்பார்க்காமல் தாங்களாகவே மக்கள் 20 லட்சம் எண்ணிக்கையில் கலந்துகொண்ட உண்மையிலேயே மாபெரும் ஆர்ப்பாட்டம், தாய்லாந்தில் மக்கள் எழுச்சியால் நடைபெற முடியாமல் போன சர்வதேச வணிகம் பற்றிய பேச்சு வார்த்தைக்கான சந்திப்பு, சந்திப்பின் பிரதிநிதிகளைக் காப்பதற்காக விமானங்களைப் பயன்படுத்த வேண்டிய நிலையிலான வெகுமக்கள் எழுச்சி, பங்களாதேஷ் துணை ராணுவப் படையில் ஏற்பட்ட பெரும் கலவரம், 15 வயதுச் சிறுவன் போலீசாரால் கொல்லப்பட்டதைக் கண்டித்து கிரீஸில் தொடங்கி ஐரோப்பா முழுவதும் பரவிய வெகுமக்கள் ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் என உலகந்தோறும் மக்கள் திரள் எழுச்சியும் கலகங்களும் நடைபெற்று வருகின்றன.

இன்னும் இருந்திருக்க வேண்டியவை

          தனது கருத்துக்களை நிறைய நம்பத்தகுந்த புள்ளி விபரங்களுடன் முன்வைக்கும் கோபர்ட் கான்டி இப்படியான சர்வதேசிய சூழலில் இந்தியக் கம்யூனிஸ்ட்களின் கடமை என்னவாக இருக்க வேண்டும்? அந்தத் தேவையை ஈடுசெய்யும்பொருட்டு பிற கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் மாவோயிஸ்ட் கட்சி எந்தவிதமான ஊடாடலை நிகழ்த்தி வருகிறது? கம்யூனிசத்தின் இன்றைய தேவை என்ன? என்பதைப்பற்றியெல்லாம் ஒரு வரியிலும் முன்வைக்கவில்லை. ஏன்?

          சீன வழியில் இந்திய விடுதலை என்ற முழக்கத்தைக் கொண்டிருக்கும் இந்திய மாவோயிஸ்ட்கள் இடம், நேரம் போன்ற தனித்தன்மை வாய்ந்த பின்னணியை மறந்து விடுகிறார்கள். இந்திய மற்றும் சீன நிலைமைகளில் உள்ள மிகப் பெரிய வேறுபாடுகளைக் காணத்தவறுகிறார்கள். குறிப்பானதை பொதுவானதாக ஆக்குகிறார்கள். மாவோ சொன்ன பாடங்களில் ஒரு பகுதியை உயர்த்திப் பிடித்து, முழுமையானதாக்கி (அரசியல் அதிகாரம் துப்பாக்கி குழல்களில் இருந்து பிறக்கிறது) அதை மற்ற பகுதிகளில் இருந்து தனித்து நிறுத்தி மொத்த விஷயத்தையும் தலைகீழானதாக ஆக்கி விடுகிறார்கள்.

          கடுமையான இழப்புகள் ஏற்பட்ட பிறகும், சீன நிலைமைகளில் ரஷ்ய முன்மாதிரியை கண்மூடித்தனமாக பொறுத்துவதில் விடாப்பிடியாக இருந்த சீன வறட்டுவாதிகளுடன் மாவோ உறுதியான போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. இந்தத் போராட்டத்தினூடேதான் மார்க்சிய லெனினியத்தின் அனைத்தும் தழுவிய உண்மையை சீனாவின் ஸ்தூலமான நிலைமைகளோடு இணைப்பது என்ற பிரபலமான கூற்று உருவானது. நமது நாட்டிலும் மாவோயிஸ்ட்டுகள் என்று தங்களை அழைத்துக் கொள்பவர்களுக்கு எதிராக மா சே துங் சிந்தனையை, இந்தியாவின் ஸ்தூலமான நிலைமைகளோடு இணைக்க உண்மையான முயற்சி செய்பவர்கள், மாவோ வறட்டுவாதிகளுக்கு எதிராக நடத்திய அதே போன்றதொரு போராட்டம் நடத்த வேண்டியுள்ளது; நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

          பீகாரிலும் ஜார்கண்ட்டிலும் ஒரிசாவிலும் கிழக்கு உத்திரப்பிரதேசத்திலும் மேற்கு வங்கத்திலும் இன்றைய மாவோயிஸ்ட் கட்சியும் சரி, இணைப்புக்கு முந்தைய மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் மையம் தொட்டு கட்சி ஐக்கியம் வரையிலான பல்வேறு மாவோயிச அமைப்புகளும்சரி - பிற (புரட்சிகர/புரட்சிகரமில்லாத) கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட வன்முறை எப்படியான பெருந்திரள் மக்கள் வெடிப்புகளைக் கட்டமைப்பதற்கான செயல்திட்டம் என்பதையும்கூட அவர் விளக்கியிருக்கலாம். 2009 ஜூன் 22 ஆம் நாள் வெளியான மின்ட் பத்திரிக்கையில் வெளியான மாவோயிஸ்ட் கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர் பிமல் அவர்களின் பேட்டியில்

மின்ட் : நிறைய குடிமக்கள் இந்தப் போரில் உயிரிழக்கக் கூடும். அப்படி கொல்லப்பட்டவர்களுக்கு தார்மீக ரீதியாக நீங்கள் பொறுப்பாக மாட்டீர்களா?

பிமல் : ஒரு போரில் குடிமக்கள் என்று யாரும் இல்லை. உங்களை ஆதரிப்பவர்கள் இருக்கிறார்கள். அல்லது உங்களை எதிர்ப்பவர்கள் இருக்கிறார்கள்.

என்று கூறுகிறார். இப்படியான போராட்டங்கள் நடப்பதே தெரியாத மக்கள் (பொருளாதார, சமூக, அரசியல் அளவீடுகளின்படி) அனைத்துத் தரப்பிலும் இருக்கிறார்கள். அவர்களும்கூட ஆதரிப்பவர்கள் அல்லது எதிரப்பவர்கள் என்கிற வகைமைப்படுத்தலின் கீழ் வருகிறார்களா? சரி... அவர்கள் ஆதரிப்பதற்கான நியாயங்கள் அவர்கள் மத்தியில் தெளிவுபடுத்தப்பட்டனவா என்பதையும்கூட தெளிவாகச் சொல்லியிருக்கலாம்.

          இந்திரா காந்தியின் அரசியல் படுகொலையைத் தொடர்ந்து சீக்கியர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட அரசியல் வன்முறையில் ஏறக்குறைய 4000 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதுபற்றிய கேள்வி ஒன்றிற்குப் பதிலளித்த நவபாரதத்தை உருவாக்க நவீனமாக உதித்த ஒரு இளந்தலைவர் ‘ஆலமரம் வீழு¢ம்போது அடிமரத்தில் இருக்கும் சிறு தாவரங்கள் அழியத்தான் செய்யும்.’ என்றார். இரண்டு பதில்களின் பொருளும் ஒன்றுதானா? ‘நாம் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படக் கூடாது’ என்பதுதானே? அல்லது இரண்டும் வேறு வேறா? என்பதையும் கோபர்ட் சுட்டிக் காட்டியிருக்கலாம்.

          தாங்கள் உருவான இடமாக மாவோயிஸ்ட்கள் சொல்லிக் கொள்ளும் நக்சல்பாரி கிராமத்தில் எழுச்சிக்குக் காரணமாக இருந்தவர்களில் ஒருவரான சாரு மஜூம்தார் ‘திரிபுவாதத்தின் ஸ்தூலமான வெளிப்பாடுகளுக்கு எதிரான போராட்டம்’ என்ற கட்டுரையில் இப்படி எழுதுகிறார்.

          தலைவர் மாவோ குறிப்பிட்டார் : ‘ஒரு போரில் ஆயுதங்கள் ஒரு முக்கியமான காரணிதான். ஆனால் அது தீர்மானிக்கும் காரணி அல்ல. மக்கள்தான் தீர்மானிக்கும் சக்தி. பொருட்கள் அல்ல. ஒடுக்கப்பட்ட தண்டிக்கப்பட்ட விவசாயிகள், ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக, வெற்றுக் கரங்களுடனோ அல்லது அவர்களிடம் என்ன இருக்கிறதோ அவற்றுடனோ தங்கள் போராட்டத்தை துவங்குகிறார்கள். போராட்டப் போக்கினூடே, தேவை ஏற்படும்போது, முன்னேறுகிற புரட்சியின் நிர்பந்தங்கள் ஆணையிடும்போது, ஆளும் வர்க்கங்களிடம் இருந்து ஆயுதங்களை பறிக்க, கைப்பற்ற துவங்குகிறார்கள். இப்படித்தான் மக்களின் ஆயுதப் படைகள் உருவாகின்றன.’ வெளியில் இருந்து ஆயுதங்களைக் கொண்டுவருவதன் மூலம் ஒரு புரட்சிகரப் போரை நடத்துவது சாத்தியமற்றது. ஏனென்றால், தலைவர் மாவோ நமக்குப் போதித்தது போல், புரட்சிகரப் போர் என்பது வெகுமக்களின் போர். இது மக்களை அணிதிரட்டுவதன் மூலம், அவர்கள் மீது நம்பிக்கை வைப்பதன் மூலம் மட்டுமே நடைபெறும்.

          கட்டுரையின் எந்தப் பகுதியிலும் இந்தியாவில் கோபார்ட் கான்டி முன்வைத்த இழிநிலைகளைக் களைவதற்கு அவர் சார்ந்திருக்கும் இந்திய மாவோயிஸ்ட் கட்சி என்ன விதமான - மக்கள் அணிதிரட்டலுக்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது / நாடு தழுவிய மக்கள் திரள் எழுச்சியினைக் கட்டமைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது என்பவற்றைப் பற்றி எதைவும் பேசவில்லை. கோபர்ட் கான்டியின் கட்டுரையை வாசித்து முடித்ததும் வழக்கமான வழக்கம்போல் தொடர்புடைய நிறைய விஷயங்களை வாசிக்க நேர்ந்தது. தத்துவங்கள், சித்தாந்தங்கள், சிந்தனைகள், கோட்பாடுகள் அல்லது எம்.ஜி.சுரேஷின் அனுமானங்கள் இவை யாவும் புனைவிலக்கிய வடிவம் பெறும்போது சொல்ல வந்த கருத்தைச் சரியாகச் சொல்கின்றனவா? சரிபார்க்கத் தேடி வாசித்தவற்றில் - குறிப்பாகத் தேர்ந்தெடுத்து வாசித்த ஆல்பர்ட் காம்யூவின் ‘நியாயவாதிகள்’ நாடகத்தில் இருந்து ஒரு பகுதி...

இருத்தலியல்வாதியின் நியாயவாதிகள்

          (க்ராண்ட் ட்யூக்கை அழித்தொழிப்பதற்காக அனுப்பப்பட்ட யானக் என்ற கலியயேவ், க்ராண்ட் ட்யூக்குடன் குழந்தைகள் இருந்ததால் குழந்தைகளைக் கொல்ல மனமின்றி இரண்டுமாத காலம் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் அழித்தொழிப்பில் இருந்து பின் வாங்கித் திரும்பி வந்துவிடுகிறான். நடந்து முடிந்த சரி/தவறின் மீதான விவாதத்தில் அழித்தொழிப்பு அணியில் உள்ளவர்களிடையே நடக்கும் உரையாடல்)

... ... ... ... ... ...

... ... ... ... ... ...

... ... ... ... ... ...

அனெகாவ் : டோரா நீ என்ன சொல்கிறாய்?

டோரா : (மிகவும் உணர்ச்சி வசப்பட்டு) யானெக்கைப் போலவே நான் பின்னடைந்திருக்கக் கூடும். என்னால் செய்ய முடியாதென்கிறபோது எப்படி பிறரைச் சொல்ல முடியும்?

ஸ்டீபன் : எப்படிப்பட்ட முடிவு இது என்பதை நீங்கள் உணர்கிறீர்களா? இரண்டு மாத காலம் வேவு பார்த்தது, மயிரிழையில் பலமுறை தப்பித்தது... இரண்டு மாதகாலமும் வீணாகிவிட்டது. யெகார் கைது செய்யப்பட்டான் - வீணாய்ப் போய்விட்டது. ரிகாவ் தூக்கிலிடப்பட்டான் - வீணாய்ப் போய் விட்டது. மறுபடி நாம் எல்லாவற்றையும் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டுமா? வாரக் கணக்கில் தொடர்ந்த காத்திருத்தல்கள், உறங்காத இரவுகள்... திட்டமும், செயல்பாடும், இதேபோல இன்னொரு சந்தர்ப்பம் கிடைப்பதற்கு முன்னால்... உங்கள் எல்லாருடைய புத்தியும் பேதலித்துவிட்டதா?

அனெகாவ் : இன்னமும் இரண்டே நாட்களில் க்ராண்ட் ட்யூக் மறுபடி தியேட்டருக்குப் போகிறானென்று உனக்கே நன்றாகத் தெரியும்.

ஸ்டீபன் : இரண்டு நாட்கள்... எந்த நேரமும் அகப்பட்டுக் கொள்கிற அபாயம் இருக்கிறதே. இதை நீ முன்னமேயே சொல்லியிருக்கிறாய்.

கலியயேவ் : நான் போகிறேன்.

டோரா : இல்லை, சற்று பொறு... ஸ்டீபன், உன் கண்களைத் திறந்து கொண்டு ஒரு குழந்தையின் மீது உன்னால் நேரடியாகச் சுட முடியுமா?

ஸ்டீபன் : நான் சுடுவேன் - ஸ்தாபனம் எனக்குக் கட்டளையிட்டிருந்தால்...

டோரா : பின் எதற்காக உன் கண்களை மூடிக் கொண்டாய்?

ஸ்டீபன் : என்ன? என் கண்களை நான் மூடிக் கொண்டேனா?

டோரா : ஆமாம்.

ஸ்டீபன் : என் பதில் உண்மையானதாய் இருக்க வேண்டுமென்பதற்காக அந்தக் காட்சியை என் கண்முன் தெளிவாகக் கொண்டுவர நினைத்தேன்.

டோரா : உன் கண்களைத் திற ஸ்டீபன். குழந்தைகள் தூள் தூளாக குண்டால் சிதறடிக்கப்படுவதை ஒரே ஒரு கணம் ஸ்தாபனம் ஒத்துக் கொண்டாலும், அது தன் பலத்தையும் செல்வாக்கையும் இழந்து போகும்.

ஸ்டீபன் : நான் இளகிய மனதுடையவனல்ல. குழந்தைகளைப் பற்றி அநாவசிய உணர்ச்சி வசப்படுவதை என்று நாம் நிறுத்திக் கொள்கிறோமோ அன்றுதான் புரட்சி வெற்றி பெறும். அன்று நாம் இவ்வுலகை வென்றவர்களாவோம்.

டோரா : அப்படிப்பட்ட நாள் வரும்போது, மனித குலம் முழுவதுமே அந்தப் புரட்சியை வெறுக்க நேரும்.

ஸ்டீபன் மனித குலத்தை அதன் அழிவிலிருந்து காப்பாற்ற, அதன் மீது நமது புரட்சியைப் பிரயோகிக்கும் அளவுக்கு அதனை நேசிக்கிறோம்...

டோரா : முழு மனித இனமுமே புரட்சியை மறுக்கிறது என்று வைத்துக் கொண்டால்?... எந்த மக்களுக்காக நீ போராடுகிறாயோ அவர்களே தங்கள் குழந்தைகள் கொலை செய்யப்படுவதை விரும்பவில்லையென்றால் அவர்களோடும் மோதுவாயா?

ஸ்டீபன் : ஆமாம், அதுவும் அவசியமானால் மோதுவேன். அவர்கள் புரிந்து கொள்ளும்வரை அவர்களோடு நான் மோதிக் கொண்டே இருப்பேன். நானும் மக்களை நேசிக்கிறேன்.

டோரா : அது அன்பாகாது.

ஸ்டீபன் : யார் சொன்னது அது அன்பு இல்லையென்று.

டோரா : நான் சொல்கிறேன்.

ஸ்டீபன் : நீ ஒரு பெண்... அத்துடன் நேசத்தைப் பற்றிய உன் எண்ணம் ஆழமற்றது.

... ... ... ... ... ...

... ... ... ... ... ...

... ... ... ... ... ...

டோரா : யானெக் க்ராண்ட் ட்யூக்கைக் கொலை செய்வான். ஏனென்றால் அவன் சாவு, ரஷ்யக் குழந்தைகளின் வேதனை தீரும் நன்னாளை விரைவாகக் கொண்டு வரும் என்பது அவனுக்குத் தெரியும். அதுவே அவனுக்குக் கடினமான காரியந்தான். ஆனால் அந்த இரு குழந்தைகளையும் கொல்வது எந்த ஒரு ஒற்றைக் குழந்தையின் பட்டினிச்சாவையும் தடுத்துவிடப்போவதில்லை. அழிப்பதிலும் சரியானதும் தவறானதுமான இரண்டு வழியுண்டு. அவற்றுக்கு வரையறைகளுமுண்டு...

ஸ்டீபன் : (ஆக்ரோஷத்துடன்) வரையறைகளே கிடையாது. நீங்கள் புரட்சியை நம்பவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது (அவர்கள் எல்லோரும் சட்டென்று எழுந்துவிடுகிறார்கள் - கலியயேவைத் தவிர) இல்லை. நீங்கள் நம்பவேயில்லை - உங்களில் ஒருவர்கூட நம்பவில்லை. முழுமனதுடன் நீங்கள் ஈடுபடுவீர்களானால், நமது தியாகங்களும் வெற்றிகளும் கொடுங்கோலிலிருந்து விடுபட்ட புதிய ரஷ்யாவிற்கு அடிகோலுமென்பதில் நீங்கள் நிச்சயமாயிருந்தால்... உலகம் முழுவதும் சுதந்திர பூமி மெல்லப் பரவி விரியும். அதற்குப் பிறகு... அதற்குப் பிறகு மட்டும்தான் கொடுங்கோல் மற்றும் மூட நம்பிக்கைகளிலிருந்து மனிதன் விடுபடுவான். கடைசியில் தானே ஒரு பெருஞ்சக்தியாக தனக்கே உரியதான பரந்த வானத்தை நோக்குவான். இதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்களானால், இரு குழந்தைகளின் சாவு எப்படி இடிக்கப்பட்ட ஒரு நம்பிக்கையுடன் ஈடாக்கப்பட முடியும்? நிச்சயமாக, அந்த நாளை அருகில் கொண்டு வருவதற்காக எந்தச் செய்கையையும் செய்வதிலும் நியாயத்தைக் காணமுடியும்... அந்த இரண்டு குழந்தைகளை நீங்கள் கொல்லப் போவதில்லையென்றால் உங்கள் செய்கை நியாயமானதென்பதில் உங்களுக்கு நிச்சயமில்லை என்றுதான் ஆகும். அப்படியானால் புரட்சியின் மீதே உங்களுக்கு நம்பிக்கையில்லை.

(அமைதி)

கலியயேவ் : (எழுந்திருந்து) என்னைப் பார்த்து நானே வெட்கப் படுகிறேன். ஸ்டீபன், இனி நீ மேலே பேச நான்விட மாட்டேன். கொடுங்கோலைக் கவிழ்த்தெறிவதற்காக நான் கொலை செய்யத் தயார். ஆனால் உன் வார்த்தைகளின் பின்னால் இன்னொரு விதமான கொடுங்கோன்மையின் பயமுறுத்தலை நான் பார்க்கிறேன். உன் வார்த்தைகள் என்னைக் கொலைகாரனாகத்தான் ஆக்கும்... நாம் போராட முயல்வதெல்லாம் நியாயத்திற்காகத்தான்.

ஸ்டீபன் : நியாயம் வந்துவிட்ட பிறகு, நீங்கள் நியாயத்திற்காகவும் போராடினாலென்ன அல்லது கொலைகாரர்களானால் தானென்ன? நீயும் நானும் ஒரு பொருட்டல்ல..,

கலியயேல் : இல்லை, அப்படியில்லை. அது உனக்குத் தெரியும். உன்னுடைய பெருமிதம்தான் இப்படிச் சொல்ல வைக்கிறது.

ஸ்டீபன் : என்னுடைய பெருமிதம் எனக்கு மட்டுமானதுதான். ஆனால் மனிதனின் பெருமிதம்... எதிர்ப்புக்கான அவனுடைய கலகங்கள், அவனுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதி... இவை நம் எல்லோர் சம்பந்தப்பட்டதும்தான்.

கலியயேவ் : மனிதன் நியாயத்தால் மட்டுமே வாழ்பவனல்ல...

ஸ்டீபன் : அவனுடைய ரொட்டி பறிக்கப்படுகிறபோது, வேறெதைக் கொண்டுதான் அவன் வாழப்போகிறான்?

கலியயேவ் : நியாயத்தாலும், குற்றமற்ற தன்மையானாலும்தான் வாழப்போகிறான்.

ஸ்டீபன் : குற்றமற்ற தன்மையா? நான் அதை நிச்சயமாக உணர்ந்திருக்கிறேன்... ஆனால் இவற்றைக் காணாமல் இருப்பதையே நான் விரும்புகிறேன்... மற்றவர்களும் இவற்றைக் காணாமல் இருப்பதையே விரும்புகிறேன்... அதற்கு அப்போது உலகளாவிய ஒரு அர்த்தமும் கிடைத்துவிடும்...

கலியயேவ் : ஒருவனை வாழ விரும்ப வைக்கும் எல்லாவற்றையுமே ஒருவன் மறுப்பானானால் அப்படிப்பட்ட நாள் வருமென்பதில் அவன் திடமான நிச்சயத்துடனிருக்க வேண்டும்.

ஸ்டீபன் : கட்டாயம் அந்தநாள் வரத்தான் போகிறது.

கலியயேவ் : அவ்வளவு நிச்சயமாக நீ சொல்லவே முடியாது. நம்மில் யார் சரி என்பது தெரிவதற்குள் ஒரு வேளை மூன்று தலைமுறைகளுக்கும் மேலாக உயிர்ப்பலி கொடுக்க வேண்டியிருக்கும்.... பல போர்களும், ரத்தம் சிந்தும் புரட்சிகளும் நிகழும், அத்தனை ரத்தமும் பூமியில் ஊறிவிடும்போது நாம் எப்போதோ மக்கி மண்ணாகிப் போயிருப்போம்.

ஸ்டீபன் : அப்போது மற்றவர்கள் எல்லாம் வருவார்கள். அவர்களை நான் சகோதரர்களாக வாழ்த்தி அழைப்பேன்.

கலியயேவ் : (கத்துகிறான்) மற்றவர்களா... ஆமாம் வருவார்கள்தான்... ஆனால் நான் இன்று உயிரோடிருக்கும் மனிதர்களேயே நேசிக்கிறேன்... அவர்கள் இதே பூமியில் என்னோடு நடமாடிக் கொண்டிருப்பவர்கள். அவர்களுக்காகத்தான் என் உயிரையே பணயம் வைக்கத் தயாராக இருக்கிறேன். கனவாகவே தொலைதூரத்தில் இன்னமுமிருக்கும் யாருமேயறியாத ஒரு வாழ்வுக்காக நான் என்னுடைய சகோதரர்களை நேரடியாகத் தாக்க மாட்டேன்... ஒரு செத்துப்போன நியாயத்துக்காக என்னைச் சுற்றி வாழ்ந்துகொண்டிருக்கும் அநியாயத்துடன் மேலும் அநியாயத்தைச் சேர்க்க மாட்டேன்... (இன்னும் நிதானமாக, அழுத்தத்துடன்) எளிய விவசாயிக்கும் தெரியும் ஒன்றை உனக்குச் சொல்ல விரும்புகிறேன். குழந்தைகளைக் கொல்வதென்பது ஒரு மனித கௌரவத்திற்கே எதிரான பெருங்குற்றம், கௌரவத்திலிருந்தே விலகி ஒரு புரட்சி நடக்குமானால்... நான் அப்படிப்பட்ட புரட்சியிலிருந்தே விலகி விட வேண்டும். நான் அதை செய்தே தீரவேண்டுமென்று நீங்கள் முடிவெடுத்தால் அவர்கள் தியேட்டரிலிருந்து வரும்வரை வெளியே காத்திருக்கத் தயார்... ஆனால் நான் குதிரைகளின் கால்களடியில் என்னை வீழ்த்திக் கொள்வேன்.

ஸ்டீபன் : கௌரவம் என்பது வண்டிகளில் பவனி வருபவர்களுக்கே உரியதான சுகபோகம்.

கலியயேவ் : இல்லை. ஏழைகளிடம் மீதமிருக்கிற ஒரே செல்வம் அதுதான். உனக்கு இது தெரியும். அத்துடன் புரட்சிக்கு அதற்கேயான ஒரு கௌரவம் உண்டென்பதும் உனக்குத் தெரியும். அதற்காகத்தான் நாம் உயிர் கொடுக்கவும் தயாராக இருக்கிறோம்...

... ... ... ... ... ...

... ... ... ... ... ...

... ... ... ... ... ...

ஸ்டீபன் : ... ... நாம் கொலைகாரர்கள். கொலைகாரர்களாக இருக்கவே நாம் முடிவு கட்டியிருக்கிறோம்.

கலியயேவ் : (அடக்க முடியாத ஆத்திரத்துடன்) இல்லை. உலகில் கொலை முடிசூடுவதைத் தடுக்கவே நான் சாவைத் தேர்ந்தெடுத்தேன்... நான் குற்றமற்றவனாக இருக்கவே சாவைத் தேர்ந்தெடுத்தேன்.

அனெகாவ் : யானெக், ஸ்டீபன், போதும் நிறுத்துங்கள். இந்தக் குழந்தைகளைக் கொல்வது ஒன்றுக்கும் உதவாது என்று நாம் தீர்மானித்திருக்கிறோம் முதலிலிருந்து நாம் மறுபடி ஆரம்பித்தாக வேண்டும். இரண்டே நாட்களில் மறுபடி முயற்சி செய்ய தயாராக இருங்கள்.

ஸ்டீபன் : மறுபடியும் அந்தக் குழந்தைகள் அங்கிருந்தால்?

கலியயேவ் : அதற்கடுத்த சந்தர்ப்பத்திற்குக் காத்திருப்போம்.

... ... ... ... ... ...

... ... ... ... ... ...

... ... ... ... ... ...


நமது குறைந்தபட்ச எதிர்பார்ப்பு

          1906 ல் ரஷ்யத் தலைநகரான மாஸ்கோவில் நடைபெறுவதாக நவீன இலக்கியத்தில் கவனத்திற்குரியவரும், இருத்தலியல்வாதிகளில் குறிப்பிடத்தக்கவருமான ஆல்பர்ட் காம்யூவால் எழுதப்பெற்றது. மனுக்கொடுக்கச் சென்றதற்கே பல்லாயிரக்கணக்கானோரைச் சுட்டுக் கொன்ற கொடூரன் ஜாருக்கு எதிரான தீவிரவாதக் குழுக்களிலும்கூட நிலவிய மனிதாபிமானத்தையும், ஜனநாயகத் தன்மையை இந்நாடகம் சிறப்பாக முன்வைக்கிறது. இன்றைய இந்திய மாவோயிஸ்ட் குழுக்களிடம் மட்டுமல்ல பல்வேறு மாநில அரசாங்களிடமும் மத்திய அரசாங்கத்திடமும் நாம் குறைந்தபட்சம் எதிர்பார்ப்பதும்கூட இவற்றைத்தான்.

(நவம்பர் 7 ஆம் நாள் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற ‘மதிப்பு’ கருத்தரங்கில் வாசிக்கப்பெற்ற கட்டுரை)

(மேலும்...)

1 comment:

  1. இது போன்ற மதிப்புரைகளை அப்புத்தகத்தின் மற்ற கட்டுரைகளுக்கும் தங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete