Tuesday, November 16, 2010

தேசிய அடையாளம் வேண்டுகின்ற கம்யூனிஸ்ட்களின் தொகுப்பு (பகுதி 1) - மதிகண்ணன்

நூல் மதிப்புரை


நூல்              தேசியம் அடையாளம் கம்யூனிசம்


வெளியீடு அசை (பிரான்ஸ்)
                       ASAI, RUE DU POTEALI
                       75018, PARIS
                       FRANCE
                       TEL 0033 1426 33176
                       ashokyogan @hotmail.com
விலை        ரூ 80


          ‘தேசியம் அடையாளம் கம்யூனிசம்’ என்ற இத் தொகுப்பு ‘அசை’யின் மூன்றாவது தொகுப்பு. ஜென்னி டிஸ்கியின் ‘மார்க்ஸ் எனும் மானுடன்’ தொடங்கி, இமயவரம்பனின் ‘மார்க்சியத்தின் போதாமைகள் பற்றி’ 24 கட்டுரைகளும் தொகுப்பிற்குப் பன்னிரெண்டு வீதம் இரண்டு தொகுப்புகளாக முன்னரே வந்துள்ளன.

          ‘தேசியம் அடையாளம் கம்யூனிசம்’ என்ற இத்தொகுப்பில் உலகஅளவில் பேசப்படுகின்ற அலைன் பதியு, பெனடிக்ட் ஆன்டர்ஸன், ஜேம்ஸ் பெட்ராஸ், நீல் டேவிட்சன், லென்னி பிரன்னர் போன்றவர்களின் சிந்தனைகளும் அவர்களின் சிந்தனைகளை அடியொற்றிய தமிழ்ச் சூழலுக்கு முன்னமே அறிமுகமான இலங்கையின் சபா நாவலன், சி.சிவசேகரம், பெங்களூர் வாழ் தமிழவன் மற்றும் கதிப் அன்சாரி என்ற பெயரில் (மக்களிடையே நமது பணிகள் - நூல் - கீழைக்காற்று வெளியீட்டகம்) தமிழ்ச் சூழலுக்கு அறிமுகமான இந்திய மாவோயிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கோபர்ட் கான்டி, ‘அரவிந்தன்’ என்ற பெயரில் எழுதிய கட்டுரையும் என பத்துக் கட்டுரைகளுடன் வெளிவந்துள்ளது.

          (சில) கட்டுரைகளை மொழிபெயர்த்த ஆர்.பாலகிருஷ்ணன், பாஸ்கர், எச்.பீர்முஹமது, வி.உதயகுமார் ஆகியோரும் அலைன் பதியு-வை அறிமுகப்படுத்திய யமுனா ராஜேந்திரனும் தொகுப்பிற்கு முன்வைப்புரை தந்த அசை - பிரான்ஸின் ஒருங்கிணைப்பாளர் அசோக் யோகனும் ஓரளவிற்கு அனைவரும் புரிந்து கொள்ளும்படியான தமிழ்நடையைத் தேர்ந்தெடுத்ததற்காகப் பாராட்டப்பட வேண்டியவர்கள். பொதுவாக இப்படியான தொகுப்புகளில் கையாளப்படுகின்ற அதி அறிவு ஜீவித்தனமான நடை திகட்டிக் குமட்டும் அளவிற்கு நயம் வாய்ந்தது. ‘அசையில் நான்காவது தொகுப்பு நூலுடன் இன்னும் ஆறு மாதங்களில் சந்திப்போம்’ அசோக் யோகனின் வார்த்தைகளின் தொடர்ச்சியாக நூல் முழுவதும் தேடியும்கூட தொகுப்பின் வெளியீட்டுக்காலம் (நாள்) தெரியவில்லை. ‘புலிகளுக்குப் பின்னரான அரசியல் - தன்னார்வக் குழுக்களின் பொற்காலம்’ போன்ற கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுப்பில் வெளியீட்டு நாள் மறக்கக்கூடாத ஒன்று.

அலைன் பதியுவின் கம்யூனிசக் கருதுகோள்

          1937ல் மொராக்கோவில் பிறந்த மார்க்சியக் கோட்பாட்டாளரான அலைன் பதியு அல்தூசரின் அமைப்பியல் மார்க்சியத்தாலும் லக்கானின் உளப்பகுப்பாய்வுக் கோட்பாட்டினாலும் அதிகம் பாதிப்புற்றவர் எனினும் பின்நவீனத்துவத்திற்கு எதிரான சிந்தனையாளர் என அறியப்படுபவர். அவருடைய கட்டுரையான ‘மார்க்சிய கருதுகோள்’ இததொகுப்பின் முதல்கட்டுரை.

தேர்தலும் அச்சமும்

          பொதுவாக தேர்தல்முறை குடிமக்களிடமும், வேறுவேறு வர்க்கத்தினரிடமும் உருவாக்கும் அச்சம் குறித்துப் பேசும் அலைன் பதியு, வெகுமக்களிடம் உருவாகும் இந்த அச்ச உணர்வை முதலாளித்துவ வர்க்கத்தினர் எவ்வாறு அந்நியர்கள் குறித்த பயமாக உருவாக்கி, தேசபக்தியைக் கட்டி எழுப்பி, தங்கள் நோக்கங்களுக்காகப் பாவிக்கிறார்கள் என்பதை கட்டுரையின் முதல்பகுதியில் சுட்டிக் காட்டுகிறார்.

          பிரான்சில் 2007ல் நடைபெற்ற அதிபர் தேர்தலில் சர்கோசி வெற்றி பெற்றதால் உருவான சாதக-பாதகங்களை அலசும் அலைன் பதியு, ‘அல்தூசர் சித்தாந்தவாத அரசு எந்திரம் என அழைத்த ஊடகங்கள் குறித்து நாம் குறைத்து மதிப்பிடலாகாது. இன்று ஊடகங்கள் எவ்வாறு உள்ளன? தொலைக்காட்சி, வானொலி முதலியவை இவ்உணர்வுகளை எவ்வாறு வெளியிடுகின்றன? வாக்களிப்பு முறையில் ஓர் அச்ச உணர்வை நாம் காண இயலும். அது எதார்த்தத்தைவிட வலுவானது. புராதன காலம் சார்ந்த அச்ச உணர்வைக் காட்டிலும் தீவிரமான அச்சம் அது. அதனால் எதிர்மறையான விளைவுகள்தான் கிட்டும். நாம் எதார்த்த நிலைமைகளுக்கு எதிர்வினை புரியக் கூடியவர்கள். அச்சம் குறித்த அச்ச உணர்வு, அந்த அளவீட்டை விழுங்கி நம்மை இன்னும் எதார்த்தத்தில் இருந்து தொலை தூரத்திற்குத் தூக்கியெறியக் கூடியது’ என்கிறார். இவ்வார்த்தைகள் இன்றைய காலக்கட்டத்தில் தமிழகத்திற்கு மிகவும் நெருக்கமானதாக நம்மால் உணர முடிகிறது. இந்தக் கட்டுரையினை வாசிக்கையில் நோம் சோம்ஸ்கி சொன்ன வரிகள்தான் நினைவில் வந்தன - ‘உலகில் இரண்டே பேரரசுகள்தான் இருக்கின்றன. ஒன்று அமெரிக்கா. இன்னொன்று ஊடகங்கள்’ - உண்மைதான். பேரரசு என ஒன்றை நிறுவுவதும்கூட இன்னொரு பேரரசான ஊடகங்கள்தானே. பிரான்ஸ் நிலைமையில் தமிழகமும் உள்ளது என பெருமைப்பட்டுக் கொள்ள உடன்பிறந்த தழிழர்களுக்கு ‘இந்த நிலை’ மிகவும் உவப்பானதாக இருக்கும். அதற்கும் ஒரு பாராட்டுக் கூட்டம் நடத்தலாம் - இடையில் பாராட்டுக் கூட்டங்கள் நடைபெறாத ஏதாவது நாட்கள் மீதமிருந்தால்.

          ‘சாதாரண மக்களை வாக்களிப்பதில் இருந்து தடை செய்தால், அவர்கள் என்ன செய்வார்கள்? அவர்கள் எழுச்சி பெற்ற அரசியல் உணர்வை அடைவர்’ என்கிறார் அலைன் பதியு. தடைசெய்வதல்ல அவர்கள் விரும்பினாலும் வாக்களிக்காமல் இருந்துவிடக் கூடாது என்பதற்காக கட்டாய வாக்களிப்புச் சட்ட உருவாக்கம் பற்றி இந்திய/தமிழக (முதலாளித்துவ) அரசுகள் அவ்வப்போது பயமுறுத்தி வருகின்றன. அரசியல் கட்சியில் உறுப்பினராக இருந்தாலோ, அரசியல் சார்புடன் இருந்தாலோ (இங்கு அரசியல் கட்சி என்பது சுத்தமான கம்யூனிஸ்ட் கட்சிகளை மட்டுமே குறிக்கும்) பணி நீக்கத்திற்கான சட்ட சலுகை/அங்கீகாரம் பெற்ற அரசுத் துறைப் பணியாளர்களை கட்சி அரசியல் அடிப்படையில் நடைபெறும் தேர்தலில் வாக்களிக்கும்படி எப்படி கட்டாயப்படுத்துவது என்பதுதான் நமக்குப் புரியவே இல்லை. அதற்கும் வெளிமாநில/வெளிநாட்டு தகவல்களும் தரவுகளும் கொடுக்க முடியாதா என்ன?

மார்ஷல் பெடைனும் பெடைனிசமும்


          தன்னுடைய கட்டுரையில் சர்கோசியின் பெயரால் இயங்கிக் கொண்டிருக்கும் தேசிய வரலாற்று ஆதாரங்கள் பெடைனிசத்தின் உருவரையைப் பிரதிபலிக்கின்றன என்கிறார். பெடைனிசம் என்கிற பதப்பயன்பாடும் அதன் தொடர்ச்சியாக புதிய பெடைனிசக் கூறுகள் என்ற பதச் சேர்க்கைகளும் அலைன் பதியு தவிர்த்த மற்ற எவராலும் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால் நவீன பிரான்சில் பெடைனிசம் என்கிற வார்த்தை ‘விடுதலைக்கு எதிரான, சர்வாதிகார’ என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. பெடைனிச காலம் என ‘ஹென்றி பிலிப் பெனானி ஓமர் ஜோசப் பெடைன்’ (Hendri Phillipe Benoni Omar Joship Petain - 24-04-1856 to 23-07-1951) பிரான்சின் அரசுத் தலைமைப் பொறுப்பில் இருந்த 1940 முதல் 1944 வரையிலான காலக்கட்டத்தைக் குறிப்பிடுகின்றனர். பிலிப் பெடைன் என்றும் மார்ஷல் பெடைன் என்றும் பிரான்ஸ் மக்களால் அழைக்கப் பெற்ற ஹென்றி பிலிப் பெனானி ஓமர் ஜோசப் பெடைன் முதலாம் உலகப்போர் காலத்தில் பிரான்சின் இராணுவ ஜெனரலாக இருந்தவர். அந்தக் காலக்கட்டத்தில் பிரான்சின் நாயகனாக விளங்கிய அவருக்கு ‘மார்ஷல் ஆஃப் பிரான்ஸ்’ பட்டம் பிரான்ஸ் பாராளுமன்றத்தால் வழங்கப்பட்டது. இரண்டாம் உலகப் போர் காலத்தில் பிரான்சைக் காத்தவர் இவர்தான் என பிரான்ஸ் வெகுமக்களால் நம்பப்படுபவர். முதலாம் உலகப் போர்வரை ராணுவம், போர் என மூழ்கியிருந்த மார்ஷல் பெடைன் தன்னுடைய 64 ஆம் வயதில் 1920ல் திருமணம் செய்து கொண்டார். பிரான்ஸ் ராணுவத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த மார்ஷல் பெடைன் 1940ல்அரசின் தலைமைப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


          பதவிக்கு வந்தபின் முதலாவதாக ‘பிரான்சைக் காத்தல்’ என்ற பெயரில் புதிய ஆக்கம், மறு உருவாக்கம் என்றெல்லாம் கூறி 1940ல் ஹிட்லருடன் கீழ்ப்படிதலுள்ள ஓர் அடிமைத்தனமான உடன்பாட்டிற்கு வந்தார். இரண்டாவதாக பிரான்ஸ் குடியரசின் உலகப் புகழ்பெற்ற முழக்கமாக / குறிக்கோளாக இருந்த ‘விடுதலை, சமாதானம், சகோதரத்துவம்’ என்பதை ‘பணி, குடும்பம், தந்தையர் நிலம் (நாடு)’ என மாற்றியதுடன், பிரான்சைத் தன் முழு ஆளுகைக்கு உட்பட்ட அரசாக மாற்றினார். (Republic to State). மூன்றாவதாக தேச ஒழுக்கத்தை வலியுறுத்தியதுடன், தேச ஒழுக்கத்திற்கான எடுத்துக் காட்டுகளாக முசோலினியின் இத்தாலியையும், ஹிட்லரின் ஜெர்மனையும் முன்னிருத்தினார். நான்காவதாக தற்காலச் சிக்கல்களுக்கு கடந்தகாலத் தவறுகளே காரணம் என விடுதலைக்குப் பிந்தைய தமிழக / இந்திய ஆட்சியாளர்களைப் போல் முந்தைய குடியரசு ஆட்சியாளர்களைக் குற்றம் சாட்டினார்.

          மேற்கண்ட விஷயங்களைச் செயல்படுத்துவதற்காகத் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி, சிறிய அளவினதென்றாலும் மக்கள் இயக்கங்களுக்கு எதிராக பெடைன் நின்றார். அரசுப் பணியாளர் பணிநீக்கம், எதிர்ப்பாளர்களையும், அகதிகளையும் சிறையிலடைப்பது, புதிய நிர்வாகக் கட்டமைப்புகளை நிறுவி ராணுவ நடைமுறையின் கீழ் நாட்டை ஆள்வது என முசோலினி, ஹிட்லரின் வாரிசாக மார்ஷல் பெடைன் மாறினார்.

          நடைமுறைச் சிக்கல்கள் முற்றிய சூழலில் மார்ஷல் பெடைன் தன் சகாக்களுடன் ஜெர்மனுக்குச் சென்றார். ஜெர்மனின் சிக்மேரின்கனில் (Sigmaringen) தேசம் கடந்த அரசு (Government-in-exile) ஒன்றை 1944 செப்டம்பர் 7ல் உருவாக்கி பிரான்சை ஆண்டார். இரண்டாம் உலகப் போரில் நாஜிகள் செஞ்சேனையிடம் தோற்று, ஜெர்மனுக்கான சிக்கல் முற்றிய சூழ்நிலையில், ஹிட்லரின் தற்கொலைச் சாவுக்கு 23 நாட்கள் முன்னதாக 1945 ஏப்ரல் 7 ஆம் நாள் மார்ஷல் பெடைன் ஜெர்மனை விட்டு வெளியேறி மீண்டும் பிரான்ஸை அடைந்தார். அடுத்தடுத்த நாட்களில் நிகழ்ந்த முசோலினி, ஹிட்லரின் மரணத்தைத் தொடர்ந்து இரண்டாம் உலகப்போர், உலகப்போர் என்ற நிலையில் ஒரு முடிவிற்கு வந்தது.
பிரான்சில் உருவான புதிய அரசு பல்வேறு விசாரணைகளைத் தொடர்ந்து ‘மார்ஷல்’ பெடைனை பாராளுமன்றத்தால் தனிப்பட்ட சட்டம் உருவாக்கி அளிக்கப்பட்ட மார்ஷல் பட்டம் தவிர்த்த அனைத்தையும் அவரிடம் இருந்து பறித்துக் கொண்டதுடன் 1945 ஆகஸ்ட் 15 ஆம் நாள் அவரைச் சுட்டுக் கொல்லும்படி தீர்ப்பளித்தது. அன்றைய பிரான்ஸ் குடியரசின் தற்காலிக அரசாங்கத்தின் ஜனாதிபதியாக இருந்த சார்லஸ் டி கௌலே (Charles de Gaulle) பெடைனின் வயதையும் முதல் உலகப் போரில் அவரது பங்களிப்பையும் முன்னிட்டு மரணதண்டனையை ஆயுட் தண்டனையாக மாற்றினார். 1945 ஆகஸ்ட் 15 முதல் நவம்பர் 16 வரை பைர்னஸ் ராணுவ சிறையிலும், பின்னர் லிடிய்யூ என்ற அட்லாண்டிக் தீவிலும் சிறை வைக்கப்பட்டார். அங்கு அவர் முழுமையாக நோய்வாய்ப்பட்டு நிரந்தர தாதிச் சேவை தேவைப்படுபவராக இருந்தார். தன்னுடைய 95 ஆம் வயதில் 1951 ஜூலை 23 இல் இறந்த அவருடைய உடல் சிறைக்கு அருகில் உள்ள மேரின் சுடுகாட்டில் எரிக்கப்பட்டது.

          1940 முதல் 1944 வரை மார்ஷல் பெடைனின் நடவடிக்கைகள் மீது பிரான்ஸ் மக்களுக்கு இருவேறு கருத்துககள் இருந்தாலும் அவர் பிரான்ஸைக் காத்தவர் என்கிற நம்பிக்கை மேலோங்கி இருக்கிறது. முதலாம் உலகப்போர் காலக்கட்டத்தில் தன்னுடைய அகவை 60 களின் தொடக்கத்தில் இருந்த மார்ஷல் பெடைன் வீரராகவும், இரண்டாம் உலகப் போர் காலக்கட்டத்தில் தன்னுடைய அகவை 80 களின் இறுதியில் இருந்த மார்ஷல் பெடைன் விவேகியாகவும் - பிரான்ஸ் மக்களில் பெரும்பான்மையினரால் இன்றும் மதிக்கப்படுகிறார். இரண்டாம் உலகப்போர் காலக்கட்டத்தில் 1940 முதல் 1944 வரையிலான மார்ஷல் பெடைனின் அந்நிய அடிமைத்தனமும், சொந்த மக்களின் மீதான அடாவடித்தனமும் பெடைனிசத்தின் உருவரைகள் என அலைன் பதியு முன்வைக்கிறார். இப்படி நடந்து கொண்டதற்கான காரணமாக மார்ஷல் பெடைன் கூறும் வார்த்தைகள் ‘தோல்விக்கான அச்சத்தைவிட போருக்கான அச்சமே தேவையானதாக இருந்தது’ (it was necessary to be more afraid of war than of defeat). அதிக அச்சம் தரக்கூடிய போரைத் தவிர்ப்பதற்காக அடிமை உடன்பாட்டிற்கு வராமல் அனுபவம், அறிவுத்திறம் என்ற பிரச்சாரத்தின் வழியாக பதவியைப் பிடித்த ஒரு 84 வயது மனிதன் வேறு என்னதான் செய்துவிட முடியும்.

          அன்றைக்கு ஜெர்மனுக்கு அடிமையான பெடைனைப் போல் இன்று அமெரிக்க அடிமையாக சர்கோசி இருப்பதாகக் குற்றம் சாட்டும் அலைன் பதியு தொடர்ந்து செயல்தளம் சார்ந்த இணைவு பற்றிப் பேசுகையில் ‘அடையாள மேலுருவாக்கம் இரண்டு தன்மைகள் கொண்டது. முதலாவது எதிர்மறையானது. இதில் நான் என்பது மற்றதல்ல என்பதாகும். இரண்டாவது, ஒரு புதிய சூழ்நிலையை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் அடையாளம். ஒரே ஒரு உலகமே உண்டு என்ற சொல்லாடலின் அரசியல் விளைவாக அடையாளங்கள் பொதுமைப்படுத்தப்படுகின்றன’ போன்ற கருத்து நிலைகளில் நின்று சொந்த நாட்டின் உலகமயச் சூழல் விதைத்த அடையாளத் தனிமை, அடையாள ஒருமை பற்றிப் பேசுகிறார்.
          எடுத்துக்காட்டுகளில் உள்ள புவியிடம் சார்ந்த அடையாளங்கள் தவிர்த்து சாராம்சத்தில் அலைன் பதியுவின் கருத்துக்கள் சர்வதேசத் தன்மை வாய்ந்தவை. இந்திய தமிழகச் சூழலுக்கும் நாம் இவற்றைப் பொருத்திப் பார்க்கலாம்.

மாறாச் சூழலில் மாற்றம் நோக்கி...

இறுதியில் ‘பத்தொன்பதாம் நூற்றாண்டில் என்ன கேள்விகளைக் கொண்டு புதுயுகம் பிறந்ததோ அவ்வாறே நாமும் உள்ளோம். வறுமையின் பரப்பு அதிகரித்துள்ளது. சமத்துவமின்மை, அரசியல் என்பது செல்வருக்குப் பணிசெய்தல், இளைஞர் பட்டாளம் எதையும் மறுதலிக்கும் எதிர்வாதம், அறிவுஜீவிகளின் அடிமைத்தனம், உடைந்து நொறுங்கிப்போன சில குழுக்கள் கம்யூனிசத்தை உருவாக்க முனையும் கொள்கை ஆகிய யாவும் பத்தொன்பதாம் நூற்றாண்டு போலவே உள்ளன. இவற்றின் பொருள் கம்யூனிசக் கருதுகோள் நெருக்கடியில் உள்ளது என்பதல்ல. வாழ்நிலையே அவ்வாறு உள்ளது. எதிர்வாத அரங்கேற்றம் நிகழ்ந்துவரும் இக்காலத்தில் நாம் சில இலக்குகளை உருவாக்க வேண்டும். உலகளாவிய சிந்தனைத் தொகுப்புக்களை நாம் கண்டடைய வேண்டும். அரசியல் அனுபவம் தனித்து உள்ளூர் நிலையில் இருந்தாலும் உலகளாவிய அளவில் மாற்றம் பெறத்தக்கதா என்று காணத்தகுந்த கம்யூனிசக் கருதுகோள்களை நாம் உணர்வுகளில் வடிவமைக்க வேண்டும்’ என தன் உணர்வுகளை வெளிப்படுத்திச் செல்கிறார் அலைன் பதியு.
          முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக வளர்ந்து வரும் வேகத்தில் கம்யூனிசக் கருதுகோள்களின் செயல் திறம் வளர்ச்சி பெறவில்லை என்பதை நாம் ஒப்புக் கொள்ள மறுத்தால் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகவே பொருள். உலக அளவிலான சிந்தனையும் உள்ளூர் மட்டத்திலான களப்பணியும் அன்றும் இன்றும் என்றும் தேவை என்பதை மனதிலிருத்த வேண்டியது அவசியந்தானே?

(2010 நவம்பர் 7 ஆம் நாள் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற ‘மதிப்பு’ கருத்தரங்கில் வாசிக்கப்பெற்ற கட்டுரையின் பகுதி 1)

(மேலும்...)

No comments:

Post a Comment