Wednesday, April 22, 2009

திசை வழிப் பயணம் - மதிகண்ணன்

‘நின்றால் தீவு
நகர்ந்தால் தோணி
இரண்டிற்கும் இடையே
மின்னல் பொழுதே தூரம்’
- தேவதேவன் (மின்னல் பொழுதே தூரம் கவிதைத் தொகுப்பு)
தேவதேனின் இந்த வரிகள் நிச்சயமாய் மிகவும் பொருள் பொதிந்தவை. இயங்கியலின் அடிப்படைக்கான கலைவடிவம் இந்தக் கவிதை. உண்மைதான் ‘சும்மா’ இருப்பது எப்படி என இந்தியா முழுவதும் வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில், அரசாங்கத்தில் பதிவிவகிப்பவர்களும் ‘அந்த வகுப்புகளுக்கு சரியாகச் சென்றால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ள மாட்டார்கள்’ எனத் திருவாய் மலர்ந்து ‘சும்மா’ இருக்கச் சொல்லும் சூழலில் இயங்கா நிலையை அடைவதற்கும் இயங்குதலின் உதவி தேவை என்பதை உணர்த்தும் இந்தக் கவிதை பொருள் பொதிந்ததுதான். ஐன்ஸ்ட்டீனின் சக்தி என்பது நிறை மற்றும் திசைவேக வர்க்கத்தின் பெருக்கலால் கிடைப்பது என்ற அறிவியல் சூத்திரத்தின் கலைவடிவம் இந்தக் கவிதை. மின்னல் பொழுதும், அது கடக்கும் தூரமும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியது. அது படிமமாக நிற்பது கவித்துவம்.
நிச்சயமாய் இந்தத்¢ தொடர் பயணக் கட்டுரைத் தொடர் இல்லை என்பது புரிந்திருக்கும். ஆனால் இத்தொடர் பயணங்களுடன் தொடர்புடையது. ‘மாவோவின் நெடும்பயணம், சேகுவேராவின் ஈருளிப் பயணம்¢’ இவைகள் பற்றியும் இந்தத் தொடரில் பேசப்படலாம். இந்த இரண்டு பயணங்களும் நூறு விழுக்காடு வேறுவேறானவை. மாவோவின் நெடும்பயணம் ஒரு இலக்கை நிர்ணயித்து அதனை நோக்கியது. மருத்துவக் கல்லூரி மாணவர் சேகுவேராவின் ஈருளிப்பயணம் இலக்கற்றது. ஆனால் அந்தப் பயணத்தின் இறுதியில் ‘ஒரு புரட்சிகரமான மருத்துவராக ஆக வேண்டும்’ என்ற இலக்கை அவர் அடையக் காரணமாக இருந்தது. சேகுவேராவின் வாழ்க்கையில் ஒவ்வொரு பயணம் முடிந்தபோதும் முன்னதிலும் மேம்பட்டதான ஒரு இலக்கை வென்றடைவதற்கான இலக்காக சேகுவேரா தீர்மானித்தார். இந்த வகையில் பார்க்கும் போது சேகுவேராவின் பயணங்கள் அவரது திசைவழியைத் தீர்மானிப்பதற்கான சிந்தனையைத் தூண்டின.
இந்திய மரபில் பயணங்கள் பலவும் திசைவழியைத் தீர்மானிப்பதாகவே முன்வைக்கப்பட்டுள்ளன. இதனைப் புராணங்களும், இதிகாசங்களும், ராஜபரம்பரைக் கதைகளும் கூட (குறிப்பாக பெருங்கதையாடல் மரபில்) தேசாந்திரம் என்று பெயர் சொல்லி அழைத்தன. அரண்மனையில் இளவரசனாக நிறையக் கணவுகளுடனும் ஆசைகளுடனும் வசதியாக வாழ்ந்த சித்தார்த்தனின் ‘மனை துறந்த பயணம்’ அவனைப் புத்தராக்கியது. புதியதொரு தத்துவத்தை உலகினுக்கு ஈந்தது. முந்தைய ஆடம்பர வாழ்க்கைக்கு எதிரானதாக அந்தத் தத்துவம் இருந்தது. சித்தார்த்தனின் திசைவழியைத் தீர்மானித்த இந்தப் பயணத்திற்குப் பின்னர் புத்தரின் பயணங்கள் யாவும் அந்தத் திசைவழியை மற்றவர்களுக்குப் பரப்பும் திசைவழியைக் கொண்டதாக இருந்தன.
இங்கும்கூட திசைவழியைத் தீர்மானித்தபின் மேற்கொள்ளப்பட்ட பயணங்களும், திசைவழியைத் தீர்மானிக்க, செலுமைப்படுத்த மேற்கொள்ளப்பட்ட பயணங்களும், பயண வழியில் சந்தித்த நிகழ்வுகளும் மனதர்களும்கூட இடம் பெறுவர். இந்தத் தொடர் யாரைப் பற்றி? யாரைப் பற்றியும்... உலகப் பிரபலங்களின் பயணங்கள் முதல் உள்ளூரில்கூட பெயர்தெரியாத அந்த நபரின் பயணங்கள்கூட இடம் பெறலாம். இப்படியான பயணங்கள் என்பது போக்குவரத்துடன் தொடர்புடையதாக இருக்க வேண்டுமா என்ன? ‘பாதை மாறாத பாட்டுப் பயணம்’ என்ற தலைப்பில் கவிஞர் ந.ம.முத்துக்கூத்தன் சுப.வீ. சிறப்பாசிரியராக இருந்த நந்தன் பத்திரிகையில் ஒரு தொடர் எழுதினார். அது போக்குவரத்துடன் தொடர்புடையதல்ல. ஆம் இத்தொடர் இலக்குகளுடன் தொடர்புடையது. சிந்தனைப் போக்குகளுடன் தொடர்புடையது. செயல்பாடுகளுடன் தொடர்புடையது. போக்குவரத்துப் பயணங்களுக்கு நிறைய இடமிருந்தாலும் இது பயணத் தொடர் அல்ல.
{}
சிறுவயதில் நேர்மையான மாவட்டக் கல்வி அதிகாரியான தன்னுடைய தந்தையை மூளையில் ஏற்பட்ட நோயினால் இழந்த பின்னர், தனக்கான முன்மாதிரியாய் இருந்த தன்னுடைய மூத்த சகோதரன் அலெக்சாண்டர் - ஜார் அரசனை கொலை செய்ய முயற்சி செய்ததாகக் கைது செய்யப்பட்டு, சொந்த சகோதரி வாழ்விடமான கிசானில் இருந்து 40 கிமீ தொலைவிலுள்ள கொக்குஷ்கினோ என்ற ஊருக்கு அனுப்பப்பட்ட போது தன்னுடைய பள்ளிப்படிப்பைப் படித்துக் கொண்டிருந்த சிறுவன் விளாடிமிர் உலியனொவ் - தன் அண்ணன் அலெக்சாண்டர் ஜார் அரசால் தூக்கிலிடப்பட்ட நாளில் பள்ளி இறுதித் தேர்வு எழுதிக் கொண்டிருந்தான். மாவட்டத்தில் முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றான். ஒரு மாணவனாக தன்னுடைய இலக்கைத் தீர்மானிப்பதில் அந்த இலக்கை வென்றடைவதில் அந்தச் சிறுவனுக்கு இருந்த தெளிவு அவனுக்கு இலக்குகளைத் தீர்மானிப்பதிலும் அதை வென்றடைவதிலும் வாழ்நாள் முழுக்க இருந்தது. அன்றைய நாட்களில் ரஷ்யாவில் பிரபலமாக இருந்த மார்க்சியவாதியான ‘ஜார்ஜி பிளிகானொவ்’ வோல்கா நதியின் பெயரால் ‘வோல்ஜின்’ என்று புனைபெயரிட்டுக் கொண்டதைப் போல ‘லேனா’ என்கிற ரஷ்யாவில் பெரிய நதியின் விரைவான தொடர்ந்த இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட விளாடிமிர் உலியனொவ் தனக்குத்தானே ‘லெனின்’ என புனைபெயரிட்டுக் கொண்டார்.
கசான் நகரப் பல்கலைக் கழகத்தில் உயர் படிப்பிற்காகச் சேர்ந்த விளாடிமிர் லெனின், ஜாருக்கு எதிராக அங்கு மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் பங்கெடுத்தார். அதனால் பல்கலைக் கழகத்தில் இருந்து நீக்கப்பட்டார். கைதும் செய்யப்பட்டார். ஜாருக்கு எதிரான தன்னுடைய போராட்டத்தை - தொடர்ந்த செயல்பாடாக்கத் திட்டமிட்டார். காத்திருக்க வேண்டியதன் தேவையை உணர்ந்தார். செயின் பீட்டர்ஸ்பர்க் பல்கலைக் கழகத்தில் படிப்பைத் தொடர அனுமதி பெற்று சட்டம் பயின்றார். பல்கலைக் கழகத் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.
குடும்பம் மாஸ்கோவில் குடியேறியது. இவர் பெத்ரோகிராடு நகரில் வழக்கறிஞர் தொழில் புரியத் தொடங்கினார். ஏழைத் தொழிலாளர்களுக்கான வழக்குகளை நடத்தினார். மார்க்ஸின் மூலதனம் படித்தார். சில விஷயங்கள் புரியத் தொடங்கியது. மார்க்ஸ் எங்கல்ஸை முழுமையாகக் கற்கத் தொடங்கினார். ‘எந்த ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட அதிகாரத்திற்கும் எதிராக அந்த அதிகாரத்ததால் ஒடுக்கப்பட்ட மக்களின் ஒன்றிணைந்த போராட்டமே விடியலைத் தரும’¢ என்று தெளிந்தார். வழக்கறிஞர் தொழில் புரிந்த நேரம் போக மற்ற நேரங்களில் தொழிலாளர்களின் குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்றார். அவர்களின் நிலைமையை அவர்களுக்குப் புரிய வைத்தார். இரவில் இரகசியக் கூட்டங்கள் தொழிலாளர்களின் குடியிருப்புப் பகுதிகளில் நடைபெற்றன. முதற்கட்டமாக ஜாரின் நலனில் ஜாரைக் காட்டிலும் விசுவாசமாய் இருக்கின்ற ரஷ்ய முதலாளிகளின் 16 மணிநேரம் தொழிலாளர்களை வேலை வாங்கும் சுரண்டலுக்கு எதிரான போராட்டங்கள் தொடங்கின. ஜாரின் அரசிற்கு லெனின் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரைக் கண்காணிக்க உளவுத் துறையின் ஒரு தனிப் பிரிவே செயல்பட்டது.
இரகசியக் கூட்டங்கள் நடக்கும்போது அவரைப் பிடிக்க வேண்டும் என்பது அவர்களின் திட்டமாக இருந்தது. புத்தகம் படிக்கும் பழக்கம் எப்போதுமே லெனினுக்கு உண்டு. இரயில் பயணங்களில் அவர் ஆழ்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருப்பார். இறங்க வேண்டிய ஊர் வந்து, இரயில் நின்று புறப்பட்ட பிறகும் அவர் புத்தகம் படித்துக் கொண்டிருப்பார். கண்காணிக்கும் காவலர்கள் ‘இந்த இடத்திலும் அவர் இறங்கவில்லை என்றால் அவர் எங்கு இறங்குவார்?’ என தங்களுக்குள் கண்களால் பேசிக் கொண்டிருப்பார்கள். இரயில் வேகமெடுக்கத் தொடங்குகையில் சட்டென புத்தகத்தை மூடிக் கையில் எடுத்துக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் இரயிலில் இருந்த லெனின் விரைவாக இறங்கி கூட்டம் நடக்க இருக்கும் கிராமத்தை நோக்கி மெதுவாக நடக்கத் தொடங்குவார். உளவுத் துறையினர் என்ன செய்வதென்று தெரியாமல் அடுத்த நிறுத்தம் வரை சென்று, அடுத்த இரயிலில் திரும்பி வந்து இந்த ஊரில் இறங்கும் போது கூட்டம் முடிந்து திரும்பவும் இரயில் ஏறிக் கொண்டிருப்பார் லெனின். இலக்கு நோக்கிய பயணத்தில் மட்டுமே இந்தத் துணிவு சாத்தியம்.
இருந்தும் கைது செய்யப்பட்டு பீட்டர்ஸ்பர்க் தடுப்புக் காவல் சிறையில் வைக்கப்பட்டார். 14 மாதங்களுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டு சைபீரியாவில் உள்ள சுஷென்ஸ்கோயா என்ற ஊரில் தங்கியிருக்கும்படி அனுப்பப் பட்டார். (நாடுகடத்தப் பட்டார்) மூன்று ஆண்டுகளுக்குப் பின் நிபந்தனை நீக்கப்பட்ட போது ஜெர்மனிக்குச் சென்றார். அங்கிருந்து உலகின் முதல் கம்யூனிசப் பத்திரிகையான ‘இஷ்கரா’ பத்திரிகையை வெளியிட்டார். அது ரஷ்யத் தொழிலாளர்கள் மத்தியில் இரகசியமாக விநியோகிக்கப்பட்டது. (இஷ்கரா என்றால் தீப்பொறி என்று பொருள் - தமிழில் ‘தீப்பொறி’ என்ற பத்திரிகை இன்றும் கூட மாத இதழாக வந்து கொண்டிருக்கிறது) ரஷ்ய தொழிலாளர் வர்க்கத்தை பத்திரிகையின் வழியாக லெனின் சந்தித்தார். ஒருங்கிணைத்தார். வழிநடத்தினார்.
1905ல் முதலாளிகளின் நெருக்கடிகள் தாங்காமல் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஜார் அரசனிடம் மனுக்கொடுக்க அமைதி ஊர்வலம் சென்றனர். ஜாரின் கருணை அவனது பீரங்கிகளின் வழியாக வெளிப்பட்டது. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் இறந்தனர். கேள்விப்பட்ட லெனின் பெத்ரோகிரேடிற்கு வந்தார். இறப்பு பயமுறுத்தும் என்று நினைத்த ஜாருக்கு எதிராக இறப்பைத் தவிர வேறேதும் தங்களுக்கு விதிக்கப்படவில்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்ட தொழிலாளர்களின் தொடர்ந்த போராட்டம் பயம் தந்தது. மிகுந்த சிரமப்பட்டு போராட்டத்தை ஜார் அரசு ஒடுக்கியது. முதல் ரஷ்யப் புரட்சி என்றழைக்கப்பட்ட இந்தப் புரட்சி தோல்வியில் முடிந்தது. ‘தோல்விகளில் இருந்த பாடம் கற்போம். நம் தவறுகளைத் திருத்திக் கொள்வோம். இறுதி வெற்றி நமதே’ என்று தோழர்களுக்கு சொன்னார் லெனின். லெனினைக் கண்ட இடத்தில் கொன்றுவிடும்படி அரசாங்கத்தின் அடியாட்கள் ஏவப்பட்டிருந்தார்கள். தப்பிச் செல்ல வேண்டும். தரைப்பகுதியில் எல்லைகளில் காவல் அதிகம். குளிர்காலம் என்பதால் கடல் உறைந்திருக்கிறது. கப்பலோ படகோ செல்ல முடியாது. என்ன செய்வது? கடலின் மீது நடந்தே சுவீடனுக்குச் செல்லத் திட்டமிட்டார் லெனின். மூன்று மீனவத் தோழர்கள் துணைக்கு வர கடல் மீது உறைந்திருந்த பனிப்பாளங்கள் மீது நடந்து சென்றார். பல இடங்களில் ஆளின் எடை தாங்காமல் பொத்துக் கொண்டு கடலுக்குள் விழுந்துவிடும்படி பனிப்பாளங்கள் மென்மையாகவும் இருந்தன. இரும்புக் கம்பிகளால் தட்டிப பார்த்து, தட்டிப் பார்த்து பனிப்பாளங்களின் கடினத் தன்மையைச் சோதித்தே நடக்க வேண்டும். கடலுக்குள் விழுந்தால் நிச்சயம் சாவுதான். அப்படி தட்டிப் பார்த்தும் ஒரு இடத்தில் பனிப்பாளம் உடைந்து விழுந்து கடலுக்குள் இருந்து வெளிவரப் போராடிக் கொண்டிருந்த லெனினை மீனவத் தோழர்கள் காப்பாற்றினார்கள். சாவுக்கும் துணிந்து, பனிப்புயல் வீசும் பயங்கரத்திற்கு நடுவே ஒரு நெடிய பயணத்திற்கு தன்னை ஒப்புக் கொடுப்பது என்பது தான் ஏற்றுக்கொண்ட தத்துவத்தின் மீது கொண்ட நம்பிக்கையால், ஈடுபாட்டால் விளைவது. இலக்கு நோக்கிய பயணங்களில் மட்டுமே இந்த மனவலிமை சாத்தியம். உடலும் ஒத்தழைக்கும். முதல் ரஷ்யப் புரட்சிக்குப் பிறகு ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி (போல்ஷ்விக்) தடை செய்யப்பட்டது. கம்யூனிஸ்ட்டுகள் வேட்டையாடப்பட்டனர். சுட்டுக் கொல்லப்பட்டனர். சித்திரவதை செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்த காலகட்டம் முதல் உலகப் போருக்கான ஆயத்த காலகட்டமும்கூட. ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளை தங்கள் குடியேற்ற நாடுகளாக (காலனி நாடுகளாக) வைத்திருந்த வல்லரசிய நாடுகளான பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்காவிடம் இருந்து புதிய வல்லரசிய நாடுகளாக உருவான ஜெர்மன், ஆஸ்த்திரேலியா, துருக்கி போன்ற நாடுகள் உலகை மறுபங்கீடு செய்து தங்கள் பங்கை தங்களிடன் தரச் சொல்லிக் கேட்டன. பழைய வல்லரசிய நாடுகள் புதிய வல்லரசிய நாடுகளின் கருத்தைக் கருத்தில் கொள்ளாததால், 1914ல் முதல் உலகப் போர் மூண்டது. இதில் ஜாரின் ரஷ்யா பிரிட்டனை ஆதரித்து, ஜெர்மனிக்கு எதிராகப் போரில் ஈடுபட்டது.
ஏழை நாடுகளை அடிமை நாடுகளாக்குவதற்காக நடைபெறும் கொள்ளைக்காரப் போரில் தங்கள் இன்னுயிரை இழப்பதைவிட தங்களைச் சொந்த நாட்டில் அடிமைப்படுத்தும் ஆட்சி அதிகாரத்திற்கு எதிராக அனைத்து தேசங்களின் பாட்டாளி வர்க்கம் போராட வேண்டும் என்றார் லெனின். ஆனால் தேசப்பற்றின் பெயரால் போர் வெளியூட்டப் பட்டிருந்த மக்களால் அவரது வார்த்தைகள்¢ முதலில் கவனத்தில் கொள்ளப்படவில்லை. ஆனால் தோழர்களில் பலரின் உயிரிழப்பிற்குப் பின்னர் ரஷ்யப் பாட்டாளி வர்க்கம் லெனினின் வார்த்தைகளைப் புரிந்து கொண்டது. 1917 பிப்ரவரியில் ஜாருக்கு எதிரான புரட்சியை நடத்தினர். இந்தப் புரட்சி ஒரே நாளில் வெற்றி பெற்றது. மன்னராட்சி முறை முடிவுக்கு வந்தது. ஆனால், அரசு அதிகாரம் புரட்சியை முன்னெடுத்த பாட்டாளி வர்க்கத்திடம் இல்லை. அதிகாரம் முதலாளிகளால் கைப்பற்றப்பட்டிருந்தது.
லெனின் வெளிநாட்டில் இருந்து ரஷ்யாவிற்கு வந்தார். பெத்ரோகிராடு இரயில் நிலையத்தில் அவரை வரவேற்க, அவரது பேச்சைக் கேட்க இலட்சக் கணக்கானோர் கூடியிருந்தார்கள். இரயில் நிலையத்தின் வெளியில் நடைபெற்ற கூட்டத்தில,¢ லெனின் ‘ஜாரின் ஆட்சியிடத்தில் முதலாளிகளையும், பண்ணையார்களையும் அமர்த்துவதல்ல புரட்சியின் இலக்கு. மக்கள் நலனுக்கான சோஷலிஸ அரசாங்கத்தை நிர்மானிப்பதே நமது இலக்கு. போர்நிறுத்தம் மக்களின் உடனடித் தேவை’ என்று உரையாற்றுகிறார். முதலாளிகளின் அரசாங்கம் போரை நிறுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மக்கள் போரில் இறந்தார்கள். போருக்கு ஆதரவான நிலை எடுக்காத போல்ஷ்விக் கட்சி தேச நலனுக்கு எதிரானது என்று கூறி தடைசெய்யப்பட்டது. லெனின் குறி வைக்கப்பட்டார். இப்போதும் லெனின் தலைமறைவானார். ஆனால் பெத்ரோகிரேடின் மிக அருகில் லெனினைப் பிடிப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்த ஒரு இளம் போலிஸ் அதிகாரியின் வீட்டில் அவர் தங்கியிருந்தார். ஏழைத் தொழிலாளியின் மகனான அந்த இளம் போலிஸ் அதிகாரி போல்ஷ்விக் கட்சியின் ஆதரவாளராக இருந்தார்.
தலைமறைவாய் இருந்த போல்ஷ்விக் கட்சியின் மத்தியக் கமிட்டி கூடி ஆயுதப் போராட்டமே பிரச்சனைகளைத் தீர்க்க சிறந்த வழி என்று முடிவு செய்தது. நாள் குறிக்கப்பட்டது. மத்தியக் கமிட்டியில் இருந்த பயந்தாங்கொள்ளிகள் குறிக்கப்பட்ட நாளை பத்திரிகைகளுக்குச் செய்தியாகக் கொடுத்து துரோகம் செய்தனர். மற்ற தோழர்கள் கூடி குறிக்கப்பட்ட நாளை நவம்பர் 7 என முன்னதாக நகர்த்தி தொழிலாளர்கள் மத்தியில் பரப்பினார்கள். புரட்சி நடந்தது. 1917 நவம்பர் 7இல் உலகின் முதல் பாட்டாளி வர்க்க அரசு அமைந்ததாக அறிவிக்கப்பட்டது. லெனின் புரட்சிக்குப் பிந்தைய அரசின் தலைவரானார். அரசுத் தலைமையேற்ற அடுத்த கணமே போர் நிறுத்த ஒப்பந்தம் செய்துகொள்ளத் தயாராக இருப்பதாக அறிவித்தார். நாட்கள் நகர நகர சோஷலிஸம் நோக்கி நகரும் ரஷ்ய அரசின் வளர்ச்சியைச் சகித்துக் கொள்ள முடியாத அமெரிக்கா கூலிப்படையினை ஏவி லெனினைக் கொலை செய்ய முயற்சித்தது. தொழிலாளர் கூட்டம் ஒன்றில் பேசிவிட்டுத் திரும்பியபோது அரங்கிற்கு வெளியே லெனின் சுடப்பட்டார். மூன்று குண்டுகள் பாய்ந்தது. அறுவை சிகிச்சையில் இரண்டு குண்டுகள் மட்டுமே அகற்றப்பட்டது. ஒரு குண்டு லெனினுக்கு உள்ளேயே தங்கி விட்டது. லெனின் சுடப்பட்ட செய்தி கேட்ட செம்படை வெறி கொண்டு தாக்கி ஆதிக்கத்தில் இருந்த லெனினின் சொந்த ஊரான ‘சிம்பிர்ஸ்க்’ நகரை மறுநாளே மீட்டது.
லெனினின் பயணப் பாதைகள் அனைத்துமே சிக்கலானவை. அந்தப் பாதை அவரது நலனை மையப்படுத்தியதாக இல்லை. ரஷ்யாவின் நலனை மையப்படுத்தியதாக இருந்தது. திசைவழி தெரிந்திருந்த அந்தப் பயணம் வெற்றி பெற்றதில் வியப்பொன்றும் இல்லை.
ஆம் இன்றும்கூட பலருடைய பயணப்பாதை அப்படியானதாகத்தான் இருக்கிறது. பன்னீர் தெளிக்கவும் நடக்கும் பாதைகளில்¢ மலர்களைப் பரப்பி வைக்கவும் அங்கே ஆட்கள் இல்லை. முட்புதர்களும், காலைக் கிழிக்கும் கடும் கற்களும் நிறைந்தது அந்தப் பாதை. திரும்பிச் செல்லும் உரிமையை தனக்குத்தானே மறுத்துக் கொண்டு, இப்படிப்பட்ட பாதைகளில் இன்றும்கூட பலர் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். உணர்ச்சிவயப்பட்ட நிலையில் அவசர அவசரமாய் பயணம் தொடங்கிய பலரில் சிலரை இன்று காணவில்லை. ஒதுங்கிக் கொண்டார்கள் - பாதை தூரமென்று, பயணம் கடினமென்று. தூரதூரமாய் நீண்டாலும் இன்னும் தொடரத்தான் செய்கிறது உலகில் மக்களுக்காகச் சிந்திப்பவர்களின் பயணம் - புது விடியலை நோக்கி - மானுட விடுதலை நோக்கி.
(ஏப்ரல் 22 லெனின் பிறந்தநாள்)
(இன்று வெளியான மனிதம் என்ற மின்னிதழில் வெளியான கட்டுரை)
- மதிகண்ணன்

No comments:

Post a Comment