002/13-11-2011
பாவ புண்ணிய கடித உரையாடலின் தொடர்ச்சியாக... செல்வா
அன்புத் தோழருக்கு
“மரங்கள் அமைதி விரும்பினாலும் காற்று
விடுவதில்லை...
கரைகள் அமைதி விரும்பினாலும் அலைகள் விடுவதில்லை...
ஓடி ஓடி ஒளிந்த போதும் வாழ்க்கை விடுவதில்லை.”
அன்பே சிவம் – படத்தில் இருந்து கேட்ட வரிகள். மிகவும் பிடித்த
வரிகளும் கூட.
சமூகத்தில் பழக்கத்தில் உள்ள எந்த ஒரு நாகரீக, பாவ, புண்ணிய உள்மதிப்பீடுகளையும்
கவனத்தில் கொள்ளாமல் விட்டுவிட முடியாது. அவை தேவையற்றது என்றும் முடிவு செய்தல்
முடியாதது.. காலத்திற்கேற்ப அவை மாற்றம் பெற்று, நிலைத்து, வேரூன்றி, பரவலாக
பரவிக் கிடக்கிறன, சமூகம் முழுவதும்.
புரியவில்லை என்பதற்காக ஓதுக்கி விடவும் முடியாது. தனிமனித
வாழ்விலும், சமூக நிகழ்வுகளிலும் பின்னிப் பிணைந்து கிடக்கிறது இந்த பாவ-புண்ணிய
வரையறைகள்.
சமூகத்தை ஒர் கட்டுக்குள்ளும், கட்டுப்பாட்டுக்குள்ளும்
வைத்திருக்கிறது என்றால், அதன் வரையறையும், செயல்பாடும், மாற்றமும் கவனிக்கப்பட
வேண்டியவை.
நான் செய்வது தவறா? அல்லது சரியா? - என்று இந்த பாவ-புண்ணியம்
கட்டுப்படுத்துகிறதா? தவறு செய்வதில் இருந்து தடுக்கிறதா? எனக்கு இது புரியவில்லை
என்றுதான் சொல்ல வேண்டும். கேள்விகள் கேட்காமல் ஏற்றுக் கொள்வது கொஞ்சம் கஷ்டமாகத்தான்
இருக்கிறது... சரிதான் ஒரு சில கேள்விகளுக்கு உடனடி பதில் அல்லது தீர்வுகள்
கிடையாது... ஆனால் “இன்று செய்து முடிக்கப் பட்டவை யாவும் முன்னர் முடியாதெனக்
கைவிடப் பட்டவைதான்“.
இந்த பாவ-புண்ணிய வரையறைகள் மனிதர்களால் உருவாக்கப்பட்டவையே...அவை
அனைத்தும் சமூகத்தை சமத்துவமாக மாற்றியிருக்க வேண்டும்...சமத்துவத்திற்குப் பதிலாக
படிநிலை சமூகத்தையே ஆதரிக்கின்றன. எல்லாப் படிநிலைகளிலும் இது இருக்கிறது.
கீழ்நிலையில் உள்ளவர்களிடம் மிகவும் ஆழமாகவே இருக்கிறது... (கீழ்நிலை – உழைப்பாளிகள், பாட்டாளிகள்)
பாவ-புண்ணிய வரையறைகள் யாரால் வரையறுக்கப்படுகின்றன...
காலத்திற்க்கேற்ப எப்படி மாற்றம் அடைகிறன... அவை எவ்வாறு திணிக்கப்படுகிறன... இதனைப்
புரிந்து கொள்வதும்... அரசியல் உள்நோக்கங்களை தெரிந்து கொள்வதும் அவசியமாகிறது.
Facebook –ல் படித்த ஒரு சிறிய கதை அல்லது ஆய்வு என்று நினைக்கிறேன்.
ஒரு ஆய்விற்க்காக 5 குரங்குகள் ஒரு அறையில் பூட்டி வைக்கப்படுகின்றன.
அங்கு ஒரு ஏணியும், அதன் மீது வாழைப்பழங்களும் வைக்கப்படுகின்றன. குரங்குகள் அதை
எடுக்க முயற்சிக்கும் போது, அந்த அறை முழுவதும் மிகவும் குளிர்ந்த நீர் தெளிக்கப்படுகிறது.
ஒரிரு முயற்சிகளுக்குப் பிறகு அந்தக் குரங்குகள் பழத்தை எடுக்க முயற்சிப்பதை
நிறுத்திவிடுகின்றன.. ஆனாலும் அவ்வப்போது ஏதாவது ஒரு குரங்கு ஆவலினால்
தூண்டப்பட்டு எடுக்க முயலும் போதும் குளிர்ந்த நீர் தெளிக்கப்படுகிறது. இதனால்
மற்ற குரங்குகள் ஆத்திரமடைந்து, பழத்தை எடுக்க முயற்சிக்கும் குரங்கை
தாக்குகின்றன. சில நாட்களுக்குப் பிறகு எந்தக்குரங்கும் பழத்தை எடுக்க முயற்சிக்கவில்லை.
ஜந்து குரங்குகளில் இரண்டு புதிய குரங்குகளால் மாற்றப்படுகிறன.
புதிதாக வந்த குரங்குகள் பழத்தை எடுக்க முயற்சிக்கும்போது அதை பழைய குரங்குகள்
தாக்குகின்றன. புதிதாக வந்த குரங்குகளும் பழத்தை எடுக்கும் முயற்ச்சியை கைவிடுகின்றன...மீதமுள்ள
மூன்று பழைய குரங்குகளையும் ஒவ்வொன்றாக மாற்றும்போதும் இதே விளைவுதான்.. ஒரு கட்டத்தில்
அனைத்து பழைய குரங்குகளும் புதிய குரங்குகளாக மாறியிருந்த போதும்... குளிர்ந்த
நீர் தெளிக்கப்படாத போதும்... குரங்குகள் பழத்தை எடுக்கவில்லை.
பாவ-புண்ணிய வரையறைகள்
கேள்வி கேட்க முடியாத இடத்தில் உள்ளன.
முந்தைய சமூகத்தில் பின்பற்றப்பட்ட பல நடைமுறைகள் இன்னும் கேள்விகளே
கேட்கப்படாமல் பின்பற்றப்படுகின்றன. பல வரையறைகள் இன்றைய சமூக சூழலுக்கு ஏற்ப
மாறியுள்ளன. இதனைப் புரிந்து கொள்வது மிகவும் அவசியமாகிறது - அடுத்த மாற்றத்தை அறிந்து கொள்வதற்கு. இந்த
மாற்றம் யாருக்கானது என்பதையும், யாரால் என்பதையும் அறிவுப்பூர்வமாக அணுகவேண்டியுள்ளது.
ஸ்ரீபதி அவர்களின் கடித்தின் வரிகள் – “தவறு செய்யத் தெரிந்தவனே வாழத்
தகுதியானவன். அதையே பிரம்மாண்டமாக மாட்டிக் கொள்ளாமல் செய்பவன் ஆளத் தகுதியானவன்;
அப்படியே மாட்டினாலும் அதையும் அரசியல்படுத்த தெரிந்தவன் தலைவன்“.
யாருக்கான வரையறை இது? யாரால் உருவாக்கப்பட்டது?
ஒட்டுமொத்த சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? முந்தைய வரையறைகளோடு ஒத்துப்போகிறதா?
எதிர்மறையாக இருக்கிறதா? பாவ-புண்ணிய வரையறைகள் விவாதிக்க, கவனிக்க வேண்டியவைதானா?
சமூக மாற்றத்திற்கும் பாவ-புண்ணியத்திற்கும் தொடர்பு இருக்கிறதா? என நிறைய கேள்விகள் எழுகின்றன.
அன்புடன்
செல்வா
No comments:
Post a Comment