Thursday, April 13, 2017

கலந்துரையாடல் - கடிதம் 9 - மாணிக்

தோழர் மதியின் பாவ புண்ணியம் கடிதத்தைத் தொடர்ந்து
      மாணிக்
001/13/03/2014/011
அன்பு மதி,
வணக்கம். கொஞ்ச நாளாக தங்களது பாவ புண்ணியத்தை தலையில் தூக்கி சுத்திவிட்டு இன்றைக்கு இறக்கிவிடலாம் என்று இருக்கிறேன்.
தங்களது கடிதத்திற்கு பதிலே எழுதக்கூடாது என்று நினைத்திருந்தேன். ஆனால் கடிதம் பேசிய விசயங்கள் என்னை மிகப்பெரிய தேடலுக்கு ஆட்படுத்திவிட்டன. என்னிடம் இப்போதைக்கு இருக்கும் சரக்கை வைத்து அந்த கேள்விகளுக்கான விடையை, நீங்கள் போட்டிருக்கும் முடிச்சை அவிழ்த்து விட முடியாது. இருந்தாலும் எனது தற்போதைய அகத்தின் நிலைக்கு இக்கடிதம் மிகவும் அவசியமாகிறது. நான் இப்போதைக்கு இறைமறுப்பை ஏற்றுக்கொள்ளவில்லை என்கின்ற முன் எச்சரிக்கையோடு இந்த உரையாடல் அல்லது விவாதத்தை, பெருவெளியை நோக்கி துவங்குகிறேன்.
எனக்கு ஜென் மற்றும் பௌத்த தத்துவங்களின் மீதான ஈர்ப்பு இன்னும் குறைந்தபாடில்லை. ஜென்னின் கூற்றுப்படி ஒரு விசயத்தை நம்மில் இருந்து வெளியேற்ற வேண்டுமெனில் அதன் மீதான தீவிரமான விசாரணைகளை ஏற்படுத்த வேண்டும். இத்தத்துவங்கள் மற்றவற்றிலுருந்து பெரிதும் மாறுபட்டவை. குறிப்பாக நாம் வளர்ந்த இந்து மத சூழலில் இருந்து.
பாவம் மற்றும் புண்ணியம் தொடர்பான அடிப்படைக் கேள்விகளை என்னுள் எழுப்பிக்கொண்டபோது நான் வந்து சேரந்த இடம் மார்க்ஸ் மற்றும் ஏங்கள்ஸ் வகுத்தளித்த இயங்கியல் பொருள்முதல்வாதம். கொஞ்ச நாட்களுக்கு முன் வரை மார்க்ஸின் பெயரைக் கேட்டாலே மிரண்டு ஓடிக்கொண்டிருந்தேன். அது எனக்குள் ஏற்படுத்திய முரணை எதிர்கொள்ள முடியாமல்.
இயங்கியலின் மிக அடிப்படையான விசயங்களை இப்போது படித்துக் கொண்டிருக்கிறேன். இந்தக்கட்டத்தில் எனக்கு தோன்றுவதெல்லாம் ஜென்னின் அடுத்த கட்டம் இது. மார்க்ஸ் நமக்கு தீராமல் மாறிக்கொண்டேயிருக்கும் உலகத்தின் மாற்றங்களைப் பற்றி சரியான பார்வையை நம்மிடத்தில் ஏற்படுத்துகிறார். மாற்றங்களைப் பற்றிய புரிதலைத்தான் ஏற்படுத்துகிறாரே ஒழிய அந்த மாற்றங்களை சரியான முறையில் எதிர்கொள்வது என்பது அந்தந்த மனிதனைப் பொறுத்து அவன் சார்ந்து இருக்கக்கூடிய பண்பாடு மற்றும் கலாச்சாரத்தைப் பொறுத்து மாறுபடவே செய்யும். (அழுத்தம் மதியினுடையது-?)
இந்த உலகம் சதா மாறிக்கொண்டே இருக்கக்கூடியது. எந்த ஒரு புள்ளியிலும் அதன் இயக்கம் நின்று விடாது. மாற்றம் இருக்கும் இடத்தில் மட்டும்தான் இயக்கம் இருக்க முடியும். ஒரு மாற்றம் நிகழ்ந்திருப்பின் அங்கே ஏதோ ஒன்று பழையதாகி ஒன்று புதுப்பிக்கப்பட்டிருக்கும், அது தற்காலிகமானதாகக்கூட இருக்கலாம். ஒன்று மறுதலிக்கப்பட்டு ஒன்று உருவாகுகிறது. இந்த உலகத்தில் மீண்டும் மீண்டும் ஒரே நிகழ்வு என்றுமே நிகழ முடியாது. அப்படி நிகழ்வதாய்த் தோன்றுமாயினும் ஏதோ ஒன்று நீட்டியோ சுருக்கியோ இருக்க வேண்டும்.
இவ்வகையில் நாம் பாவம் மற்றும் புண்ணியத்தை அனுகுவோம். இந்து மரபில் ஒரு தவறு இழைத்தால் அதனைப் பாவம் என்றும் நல்லதைச் செய்தால் அது புண்ணியம் என்றும் கூறப்படுகிறது. இங்கே எது பாவம், எது புண்ணியம் என்பது அவரவர் ஏற்றுக்கொண்ட கொள்கைகள் மற்றும் தத்துவங்களைப் பொறுத்தும் வேறுபடுகிறது. பாவத்தின் அளவுகோள்கள் காலந்தோறும் மாறிக்கொண்டே வந்திருக்கிறது. இவை ஜாதிக்கு ஜாதிக்கும் கூட மாறுபடத்தான் செய்கிறது. இந்தியாவில் வேல்கம்பு, கத்தி, வாள் போன்ற ஆயுதங்களே பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையிலும் புழக்கத்தில் இருந்திருக்கின்றன. இதே சமயத்தில் மேற்கத்திய நாடுகளில் துப்பாக்கி பீரங்கி போன்ற ஆயுதங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் அதிகரித்த வண்ணம் இருந்திருக்கின்றன. ஆயுதங்கள் தங்களது இருப்பை, ஆளுமை அதிகாரத்தை நிலைநாட்டவே சக மனிதன் மீது பயன்படுத்தப்படும். நம் நாட்டில் ஆயுதம் சார்ந்த தொழில்நுட்பங்கள் வளராமல் இருந்ததிற்கான காரணம் இங்கே வேறு வகையான ஆயுதங்கள் அதுவும் கண்ணுக்குத் தெரியாத ஆயுதங்கள், அதிகாரம் செலுத்துவதற்காக பயன்பட்டுக் கொண்டிருந்தன. அதில் மிக முக்கியமானது பாவம் மற்றும் புண்ணியம் என்கின்ற கருதுகோள்கள்.
பாவங்கள் எதுவும் புண்ணியங்களை வரையறுத்துவிட முடியாது. புண்ணியங்கள்தான் பாவங்களை வரையறுக்கின்றன. கடவுள்கள்தான் எப்போதும் சாத்தான்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள்.
நமது அன்றாட வாழ்வில் இவற்றை எப்படடிப் பொறுத்திப்பார்ப்பது? நாம் எல்லோரும் வாழ்ந்தாக வேண்டிய நெருக்கடியில் இருக்கிறோம். வாழ்வதற்கு தேவையான அடிப்படை ஆதாரங்களான உணவு, உடை, இருப்பிடம் இவற்றை நான் ஒரு விதமாகவும் எனது அப்பா ஒரு விதமாகவும் எனது தாத்தா வேறொரு விதமாகவும் பூர்த்தி செய்து வந்திருக்கிறோம். இப்படி தேவைகளுக்கான தேடலின்போது, சேகரித்தலின் போது, நாம் யார் என்பதையும் எப்படி இதனைச் செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக பாவம் மற்றும் புண்ணியம் நம்மோடு பயனப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
மார்க்ஸிய இயங்கியலுன் படி, நாம் பாவம் மற்றும் புண்ணியத்தில் ஏதோ ஒன்றை மட்டும் கழட்டிவிட முடியாது. அப்படி இருக்கையில் புண்ணியம் என்கிற பதத்திற்கு சரி என்கிற பொருள் கொள்வோமாயின், எந்த சரி முன்னிறுத்தப்படப்போகிறது? வேறு ஒரு சரி முன்நிறுத்தப்படத்தான் வேண்டுமா? என்கிற கேள்விகளோடு நிறுத்திக் கொண்டு, இவ்வளவு நேரமாக இக்கடித்தை படித்துவிட்டு இவன் என்ன சொல்ல வார்ரான்னு நீங்க பாவமா பார்க்குறது புரியது.
நன்றி
மாணிக்

No comments:

Post a Comment