Tuesday, July 21, 2015

கூரை வீடுகள் – ஹரி ராஜா

ஒன்று
எங்கள் வீட்டிலிருந்து கொஞ்சம் தள்ளியிருக்கும் கடையில் தான் அந்த ஆளை முதன் முதலில் பார்த்தேன். ஏறக்குறைய நான்கு மாதங்கள் ஆகியிருக்கும். எங்கள் வீட்டிலிருக்கும் கிழவரை விட மெலிந்த தேகம். எப்போதுமே தொள தொள ஆடைகள் தான்.
என்னை ரொம்ப நாளாக கவனித்திருக்கக் கூடும் என்று பின்னால் தெரிந்து கொண்டேன். சிகரெட் வாங்கி தீக்குச்சியை உரசப் போகும் சமயத்தில் என்னருகில் வந்து நின்று கொண்டான். அவனது சிகரெட்டுக்கும் நான் தான் பற்ற வைத்தேன். என்னிடம் இயல்பாக பேச்சுக் கொடுத்தான்.
நீங்கள் அந்த தங்கத்தால் வேயப்பட்ட கூரை வீட்டில் தானே இருக்கிறீர்கள்?”
ஆமாம்.”
”’அது அதிர்ஷ்ட வீடுதானே?”
துரதிர்ஷ்டவசமாக ஆமாம்.”
இப்போது அந்த வீட்டில் எத்தனை பேர் இருக்கிறீர்கள்?”
நானும் இன்னும் நான்கைந்து பேரும். இன்னும் சிலர் எப்போதாவது வந்து போவார்கள்
கிழவர் நலமாக உள்ளாரா?”
ம். இருக்கிறார். வயோதிகம் அவரை வாட்டுகிறது.”
அது சரி. நீங்கள் புகை பிடிப்பது அவருக்குத் தெரியுமா? தைரியமாக அருகிலிருக்கும் கடையிலேயே புகைக்கின்றீர்கள்?”
சமயங்களில் அவரும் நானும் சேர்ந்து புகைப்பதுண்டு.”
வியப்பாக இருக்கிறது. அந்த வீட்டிலிருப்பவர்கள் விநோதமானவர்கள் என்று நானும் கேள்விப்பட்டேன்.”
இதில் தவறென்ன என்பது போல அவனைப் பார்த்தேன். கேட்கவில்லை.
நீங்கள் தானே அந்த வீட்டின் கடைக்குட்டி?”
அவனுக்கு பதில் சொல்லாமல் அங்கிருந்து ஓடிவிட்டேன்.

கிழவரிடம் இதை சொன்னேன். அவர் இதைப் பொருட்படுத்தவில்லை.
இரண்டு வாரங்கள் கழிந்திருக்கும். கிழவர் கொஞ்சம் தரித்திரத்தை  என் கைகளில் திணித்து விட்டு உடனே ஒரு பாக்கெட் சிகரெட்டும் கொஞ்சம் நிலக்கடலையும் வாங்கி வருமாறு கூறினார். அப்போது அவனை இரண்டாம் முறை அதே கடையில் பார்த்தேன். இப்போது அவன் என்னை ஒருமையில் அழைத்தான்.
அன்று நான் கேட்ட கேள்விக்கு நீ பதில் சொல்லவில்லை
உங்களுக்கு நான் ஏன் பதில் சொல்ல வேண்டும்?”
சொல்லாவிட்டால் என்ன? கலங்கும் உன் கண்கள் காட்டிக் கொடுத்து விட்டன நீ தான் கடைக்குட்டி என்று
உண்மையில் நான் கலக்கமுற்றுத்தான் இருந்தேன். என் கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன. அவன் காவல் அதிகாரி எனும் பட்சத்தில் நான் தான் கடைக்குட்டி என்று  நிரூபித்துவிட்டான் என்றால் அவன் என்னை கைது செய்து விடுவான். கடைக்குட்டிகள் கடைக்கு போக கூடாது என்பது சட்டம்.
உண்மையை சொல். காவல் அதிகாரியான என்னிடம் தப்பிக்க நினைக்காதே
நான் கடைக்குட்டி இல்லை. எங்கள் வீட்டில் தற்காலிக கடைக்குட்டி தான் உண்டு. அந்த ஆள் எப்போதேனும் வந்தால் அவன் கடைக்கு போகமலிருக்குமாறு நான் பார்த்துக் கொள்கிறேன்.”
உன்னை நம்பலாமா?”
நிச்சயமாக
பொய் சொன்னாயானால் மூன்று மூட்டை தங்கம் கொடுத்து உங்களை தண்டித்து விடுவோம் என்பதை மறந்து விடாதே
அய்யய்யோ. ஏற்கனவே வீட்டில் தங்கம் தலை விரித்து ஆடுகிறது.”
அன்று நடந்தவற்றை கேட்டுக் கொண்ட கிழவர் அதிர்ச்சியுற்றார். அவரது முகத்தில் சோகம் குடிகொண்டிருந்தது.
அவனை வாங்கள், போங்கள் என்று அழைத்தாயா?”
ஆமாம். முதலில் என்னை மரியாதையாக அழைத்தவன் பின்பு ஒருமையில் அழைத்தான். அப்போதும் நான் வா, போ என்று அழைக்கவில்லை
தவறு செய்து விட்டாயே. அவன் ஒருமையில் பேசினால் நீயும் ஒருமையில் பேசியிருக்க வேண்டும். நீ போய் கடைக்குட்டிகள் வாழ்வியல் என்ற புத்தகத்தை தெளிவாகப் படி. அதில் கடைக்குட்டிகள் பேச்சு முறை குறித்து விளக்கப் பட்டிருக்கும்.”
ஆகட்டும். இப்போது என்ன செய்வது. அவனிடமிருந்து எப்படி தப்பிப்பேன்?”
கலங்காதே. எச்சரிக்கையாக இரு. தங்கக் கூரை வீட்டுக்கு வந்தால் அதிர்ஷ்டம் பிடித்துவிடும் என்பதால் அதிகாரி வீட்டுக்குள் வரமாட்டான். நீ கடைக்கு செல்ல வேண்டுமானால் கொஞ்சம் தங்கம் வைத்துக் கொள். அதைப்பார்த்து அவன் பயந்து விடுவான்.”
உன்னை கைது செய்தால் மேலிடத்திலிருந்து நிறைய தரித்திரம் கொடுப்பார்கள். அதற்குத்தான் அலைக்கிறான் அந்த எச்சில் பொறுக்கி. நீ பயப்படாதேஎனத் தேற்றினார் எங்கள் வீட்டில் வசிக்கும் கடைக்குட்டி அனுபவம் வாய்ந்த ஒருத்தர்.

என்னைப் பற்றி கடைக்காரரிடம் விசாரித்து நான் கடைக்குட்டி தான் என்று உறுதிப்படுத்தி விட்டான் அந்த அதிகாரி. மறுநாள் கடைக்காரரே என்னிடம் ஒப்புக் கொண்டார். அவரை பழிவாங்க நான்கு அவுன்ஸ் ஒயின் அளித்து என் ஆத்திரைத்தை போக்கிக் கொண்டேன்.
கிட்டத்தட்ட மூன்று மாதம் ஆகியிருக்கும் அவனைப் பார்த்து. இன்று மாலை சூரியன் உதித்த சற்று நேரத்திலேயே என் நண்பனிடம் கொஞ்சம் தரித்திரம் கடன் கேட்கப் புறப்பட்டேன். ’சூரிய உதய காலத்தில் கடன் கூடாது. காலை அஸ்தமனத்தின் போது வரக்கூடாதோ?’ என்று அலுத்துக் கொண்டாலும் அவனால் முடிந்ததைக் கொடுத்து உதவினான். கொஞ்சம் கை நகமும் நிறைய உடம்பு மயிரும் கிடைத்தது. இன்றைய உணவுக்கும் சிகரெட்டுக்கும் இது போதும்.
கடை வாசலில் காலை எடுத்து வைக்கப் போகும் நேரம் என் பின்னாலிருந்து எவனோ என்னைப் பிடித்துக் கொண்டான். அவனே தான். ! நான் தங்கம் எடுத்து வர மறந்துவிட்டேனே!
வசமாக மாட்டிக்கொண்டாயா? நீ கடைக்குட்டி என்பதற்கான ஆதாரங்கள் என்னிடமிருக்கிறது. நட சிறைக்குஎன்றான்.
நான் கொஞ்சமும் யோசிக்காமல் கையில் கிடைத்த மண்ணாங்கட்டியை எடுத்து அவன் காலில் ஒரு அடி போட்டேன். ஆள் சிரஞ்சீவியாகி விட்டான். நான் திரும்பிப் பார்க்காமல் ஓடினேன்
கிழவரை இனிமேல் பார்க்கவே முடியாது என்று எண்ணும் போது வருத்தமாக இருக்கிறது. கடைக்குட்டியாக வாழ்வது மிகவும் கடினம். இனி நான் கடைக்குட்டி இல்லை என்று ஒருபக்கம் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.
இப்பொது நான் எருமையின் ரோமங்களால் வேயப்பட்ட கூரை வீட்டை அடைந்திருக்கிறேன். இங்கே நான் தங்குவதற்கான எல்லா தரித்திரங்களும் எனக்கு உண்டு என்பதால் உடனே என்னை சேர்த்துக் கொண்டார்கள். கொலை செய்தது கூடுதல் நற்குணமாம்.
ஓ தரித்திரக்காரரே! அந்தக் கிழவரிடம் நடந்தவற்றைக் கூறுவீர்களாக! முடிந்தால் அவரையும் இங்கே அழைத்து வாருங்கள். உங்களுக்குப் பரிசாக ஆட்டு ரோமத்தையும் ஆமையின் இரத்தத்தையும் தருவேன்.

இரண்டு
எங்கு பார்த்தாலும் தரித்திரத்தின் சுவடுகள். இப்போது நானே ஒரு தரித்திரக்காரனாக மாறி விட்டேன்.  ஆரம்ப நாட்கள் இங்கு மிக மகிழ்ச்சியாக கழிந்தன. இந்த எருமை  ரோமங்களாலான கூரை வீட்டில் மகிழ்வதற்கு தரித்திரத்தைத் தவிர வேறொன்றும் இல்லை.
ஒரு குண்டுக் கிழவிதான் இந்த விட்டின் தலைவி. வந்து சேர்ந்த ஒரு மாதமாக நானும் பார்க்கிறேன் – அவள் சிரித்தது ஒரே முறை தான். மற்றபடி எப்போதுமே அவள் எரிந்து விழுவாள். என்னைப் பார்த்தாலே அவளுக்கு அவ்வளவு ஆத்திரம்.
அவள் மகிழ்வதற்கு காரணமான சம்பவம் என் அறையில் நடந்தது. அன்று என் அறைக்கு எதையோ தேடுவதற்காக வந்தாள். தரையைப் பார்த்தவள் ஆச்சரியப்பட்டு நின்றாள். மேலே கூரையைப் பார்த்தாள். பின்பு மீண்டும் தரையைப் பார்த்தாள். திடீரென குனிந்து ரோமங்களை அள்ளிக் மடியில் கட்டிக் கொண்டு “தரித்திரமோ தரித்திரம்!” என்று அவளது கர்ண கொடூரக் குரலால் கத்தி விட்டுப் போனாள்.
எனக்கு என்னவென்று சில நாட்கள் கழித்துதான் புரிந்தது. நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தேன். என் மீது ஏறி நின்று கொண்டிருந்தது ஒரு பூனைக்குட்டி. கண்கள் விழித்த போது என்னையே பார்த்துக் கொண்டிருந்தது. அந்தப் பூனையின் ரோமங்களைத்தான் கிழவி சேகரித்திருக்கிறாள்.
”என்ன பார்க்கிறாய்” எனக் கேட்டேன்.
“இத்தனை நாட்களாக வருகிறேன். நீ எப்போதுமே விழித்தது இல்லை” என்றது.
“உன் பிஞ்சுப் பாதங்கள் பட்டிருந்தால் எழுந்திருப்பேன்.”
“அப்படியா?” கேட்டுக் கொண்டே என் மீதிருந்து தாவி அருகிலிருந்த மேசையின் மீது ஏறிக் கொண்டது.
“நீ எங்கே தங்கியிருக்கிறாய்?”
“நான் எங்கு வேண்டுமானாலும் இருப்பேன். விரும்பியபடி விரும்பிய இடத்துக்குச் செல்வேன்”
“விரும்பினால் நீ இங்கேயே இருக்கலாம்”
“ம் பார்க்கலாம்” என்று ஒய்யாரமாக சொல்லிக் கொண்டே மேசையிலிருந்து குதித்து என் மடியில் ஏறிக் கொண்டது.
சாம்பல் நிறத்தில் ஒரு தரித்திர தெய்வம் என்னைத் தேடி வந்திருப்பதாக உணர்ந்தேன். அதன் அழகில் என்னைப் பறிகொடுத்தேன்.
திரும்பி என் முகத்தைப் பார்த்து “நீ தான் இந்த வீட்டின் கடைக்குட்டியாமே?” என்றது.
“ஆம். அந்தக் கொடுமையிலிருந்து தப்பிக்கத்தான் இங்கு வந்தேன். ஆனால் கடைசியில் வந்துசேர்ந்தவன் கடைக்குட்டி என்ற முறைப்படி இங்கும் நான்தான் கடைக்குட்டி”
“சரியான அதிர்ஷ்டக்காரனாக இருக்கிறாயே” என்று சிரித்தது.
“என் நிலையைப் பார்த்து உனக்கு சிரிப்பு வருகிறதா? எப்போதும் பின் தொடரும் உளவாளிகள், எரிந்து விழும் கிழவி, கடுமையான விதிமுறைகள் என்று தினமும் வாழ்க்கையோடு போராடுகிறேன்” என்றேன்.
திடீரென என் மடியிலிருந்து குதித்தது. என் முகத்தை உற்றுப் பார்த்து தலை குனிந்தது. தரையில் அதன் கண்ணீர்த் துளிகள்.
என்னை திரும்பிக்கூடப் பார்க்காமல் நடக்கத் துவங்கியது. முன் வாசல் வழியாக  வெளியே சென்றது. அதன் பின்னே செல்ல முயன்ற என்னை தடுத்து நிறுத்தினாள் கிழவி.
“எங்கே போகிறாய்? காதல் கீதல் செய்தாயானால் ஏதாவது தண்டவாளத்தில் சிரஞ்சீவியாகக் கிடப்பாய். ஜாக்கிரதை” என்று எச்சரித்தாள்.
ஏதோ சொல்ல முயன்ற எனது கைகளில் கண்ணாடியைக் கொடுத்தாள். எனது முகம் ஒரு குரங்கின் முகமாக மாறிக் கொண்டிருப்பதை கண்டு கொண்டேன்.

(2015 ஜூலை 19 அன்று நடைபெற்ற படைப்பரங்கில் வாசிக்கப்பெற்ற சிறுகதை)

No comments:

Post a Comment