காக்கா, நாய், பூனை வைத்து சோறூட்டிய காலம் மலையேறிப்போச்சு...
இது நவீன காலம் சார்... – பாரதி சே
இது நவீன காலம் சார்... – பாரதி சே
செல்லப்பா, உன் மகள் இருந்தா மேலே வரச் சொல்லு என்று மேல் வீட்டு வக்கீலின் குரல் கேட்டதும் என் அப்பா (செக்யூரிட்டி) என்னைப் பார்த்தார். விளையாடிக் கொண்டிருந்த நான் விரைவாகச் செல்ல பணிக்கப்பட்டேன். நாங்கள் இருப்பது பத்து வீடுகள் கொண்ட கூட்டுக் குடியிருப்பு. அந்த அக்கா இஸ்லாமியர், அந்த வக்கீல் இந்து.இன்று ரமலான் என்பதால் சாப்பிடுவதற்கு வரச் சொல்லி இருக்கலாம். நான் நினைத்தது சரிதான். நான் சென்ற சமயம் அங்கே சில விருந்தினர்களும் இருந்தார்கள். எனக்கு சாப்பாடு கொண்டு வந்து வைக்கப்பட்டது. என்னுடன் அவர்களின் மகளுக்கும் பரிமாறப்பட்டது. இடையே பேச்சு ஓடிக் கொண்டிருந்தது. அவர்களின் மகளின் சேட்டை, சாப்பிடுவதில் விருப்பமின்மை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் இருவரும் சாப்பிட அமர்ந்தோம். அவர்கள் மகள் லைலா. அவளிடம் பேசினார்கள்.
வக்கீல்: லைலா, யாரு மொதல்ல சாப்பிடுறாங்களோ, அவர்களுக்கு ஒரு பரிசு இருக்கு.
லைலா: அப்பா, இவ சீக்கிரம் சாப்பிடுறா.
வ: அப்பிடியா, அவ சீக்கிரம் சாப்பிட்டா, அவளுக்கு இன்னும் கொஞ்சம் வச்சிடலாம். நீதான் முதல்ல. சாப்பிடு சீக்கிரம்.
லை: அப்பா, உச்சா வருது
வ: டேய்(அவர் மனைவியை), இவளைக் கூட்டிட்டுப் போ.
(சிறிது நேரம் கழிந்து..)
லை: அப்பா, சிக்கன் வேணா.
வ: டேய், அதை எடுத்து, லாவண்யாகிட்ட வச்சிடு( நான் தான் லாவண்யா)
(சிறிது நேரம் கழிந்து..)
நான்: அக்கா, சாப்பிட்டு முடிச்சிட்டேன்.
வ: லாவண்யா, லைலா சாப்பிடாம நீ எந்திக்கக் கூடாது.
லை: அப்பா, போதும்..
வ: சாப்பிடு. அக்கா எந்திக்க மாட்டா..
வக்கீல் மனைவி: போதுங்க. அவ இவ்வளவு சாப்பிட்டதே பெரிசு.
வ: சரி.ரெண்டு பேரும் போய் கை கழுவுங்க..
வ: லாவண்யா, சாப்பாடு சிந்திக் கெடக்கு பாரு. அதை எடு. பொம்பள பிள்ள தான. இப்பவே பழகு. ரெண்டு பேரு சாப்பிட்டதையும் க்ளீன் பண்ணு..லைலா கை கழுவிட்டயாடா.. சரி வா இங்க..
விருந்தினரிடம் வக்கீல்: ஏதும் இல்லாத பிள்ளைகள்தான் என்ன குடுத்தாலும் சாப்பிட்டுக்கிட்டே இருப்பாங்க. இந்தா, நம்மள மாதிரி எல்லாம் இருந்தா, எதுவும் சாப்பிடுறதில்ல. இந்தப் பிள்ளைகளை எப்படியெல்லாம் சாப்பிட வைக்க வேண்டியிருக்கு..
பேச்சு அப்படியே பக்தி மார்க்கம் நோக்கிப் போக, நான் "அக்கா நான் வரேன்"னு சொல்லிவிட்டு, அங்கிருந்து வெளியேறினேன்.
(2015 ஜூலை 19 அன்று நடைபெற்ற படைப்பரங்கில் வாசிக்கப்பெற்ற மின்னஞ்சல் சிறுகதை)
No comments:
Post a Comment