Thursday, July 16, 2015

பகத் சிங்கும் இன்றைய இந்தியாவும் - தோழர் திபங்கர் பட்டாச்சார்யா


இன்றைய பகத்சிங்குகளுக்கு நூலின் முதல் கட்டுரை - (அகில இந்திய மாணவர் கழகத்தின் - மதுரை மாவட்ட வெளியீடு)

நமது நாடும், குறிப்பாக இளைஞர்கள், மேலும், கம்யூனிச இயக்கத்தைச் சேர்ந்த நாம் அனைவரும்  பகத்சிங்கின் கருத்துக்களுடன் ஆழமான நெருக்கத்தை வளர்த்துக் கொள்வதற்கு, அவரின்  நூற்றாண்டு விழா  உணர்ச்சியூட்டும் ஒன்றாக  இருக்கும். அப்படிச் செய்வது, காலனிய எதிர்ப்பு சுதந்திர இயக்கத்திற்கு அவர் என்ன பங்களிப்பு செய்தார் என்பதை நாம் புரிந்துகொள்வதற்கு மட்டுமல்லாமல், நமது காலத்துக்கான அவரின் செய்தி என்ன என்பதைத் தெரிந்துகொள்ளவும்   வழிவகுக்கும். இன்றைய மாறிவரும் நிலைமைகளில், குறிப்பாக அவர்களின் நாளைய காலத்துக்கு அவர்களை அழைத்துச் செல்லும் பாதையைக் கண்டுபிடிப்பதில், பகத்சிங், இளைஞர்களுக்கு பேருதவியாக இருப்பார்.
மிகக் குறுகிய காலமே ஆனாலும், மிகத் துடிப்பான அவரின் வாழ்க்கையில் அவர் செய்த முதல் காரியம் தேசபக்தியென்பதற்கு புதிய பொருளை ஏற்படுத்தியதாகும். பகத்சிங்கிற்கு முன்பிருந்த புரட்சிகர தேசபக்தர்கள், காலனியத் தளையிலிருந்து ''தாய்நாட்டை" விடுவிக்க வேண்டும் என்ற பேரார்வத்துடன் பணியாற்றி வந்தார்கள்பேரார்வத்தால், அல்லது தைரியத்தால் அவர், தேசபக்திக்கு புதிய பாதை சமைக்கவில்லை. மாறாக, அவர், தேச பக்தி என்ற சொல்லுக்குப் புதிய பொருளையும் புதிய உள்ளடக்கத்தையும் அளித்தார்.
அதுநாள்வரை  நாட்டைத் தாய்க்கு ஒப்பிட்டு வந்தார்கள். பாடப்பட்ட பாடல்கள் எல்லாம், அன்னையின் புகழைப் பாராட்டின, அல்லது அவளின் அழகையும் வலியையும் வடித்துக்காட்டின. உதாரணத்திற்கு வந்தே மாதரம்  பாடலின் முதல் இரண்டு பத்திகளைப் பாருங்கள். அன்னை இந்தியாவின் பசுமையான வயல்களைப் பற்றியும், குளிர்ந்த தென்றலையும் அது பாடுகிறது. ... சுஜலாம்.... சுபலாம்... மலையஜ சீதலாம்..சஸ்ய ஷியாமலாம்... மாதரம்... என்று பாடுகிறது.
நமது தேசிய கீதமான ஜன கன மனவைப் பாருங்கள். பஞ்சாய், சிந்து, குஜராத், மகாராட்டிரம், திராவிடம், உத்கல் வங்காளம், விந்திய- ஹிமாச்சல - கங்கா பற்றியும் சீற்றம் கொண்ட கடல்கள் பற்றியும் அது பேசுகிறது. (இந்த பாட்டின் வரைபடத்தில் எங்களைக் காணவில்லை என்று பலப் பிராந்திய மக்கள் கருதுகிறார்கள் என்பது வேறு கதை)
இந்த பழைய தேசபக்திப் பாடல்களில் எல்லாம் இல்லாமல் இருப்பது ஒரே விஷயம் என்பது மிகத் தெளிவு. அவர்கள் வேறு யாருமில்லை, இந்தியாவில் வாழ்கிற, இந்தியாவை நேசிக்கிற, உழைக்கிற, போரிடுகிற, இந்த நாட்டின் ஆண்களும், பெண்களும் குழந்தைகளும்தான் அந்தப் பாடல்களில் காணப்படவில்லை.
பகத்சிங் தேசபக்தியின் மையப்புள்ளியாக இந்த மக்களை நிறுத்தினார். நாட்டை நேசிப்பது என்றால் அது மக்களை நேசிப்பது என்ற புதிய விளக்கத்தை அவர் அளித்தார்வரலாறு மற்றும் பூகோளத்தின் மிகப்பெரும்  அட்டவணையாக இருப்பது என்ற நிலை மாறி, தன் மக்களின்  உண்மையான மகிமையுடன் நாடு உயிர்பெற்று எழுந்தது. 1857ல் காலனி ஆட்சியாளர்களுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய மக்கள், அதனைத் தொடர்ந்து இந்தியாவுக்கு வெளியில் துவங்கப்பட்ட கேதார் கட்சியின்  மூலம் பிரிட்டிஷ் ஆட்சிக்கு சவால்விட்ட மக்கள், எண்ணற்ற உள்ளூர் - தேசியப் போராட்டங்களை நடத்திய மக்கள், ஜாலியன்வாலாபாக்கில் பிரிட்டீசாரின் துப்பாக்கியாலும், துப்பாக்கிமுனை கத்தியாலும் காட்டுமிராண்டித்தனமாக கொலை செய்யப்பட்ட மக்கள், 20 வயதில் மரணத்தை முத்தமிட்டு வரவேற்ற கர்த்தார் சிங் சரபா போன்ற எண்ணற்ற கதாநாயகர்கள் - இந்த அனைத்து நிஜமனிதர்களும் தேசபக்தி என்ற கருத்தாக்கத்திற்கு புதிய வண்ணங்களைச் சேர்த்தார்கள்.
இந்த வேறுபாட்டை முன்னுக்குக்  கொண்டு வந்த ஒரே நபர் அல்லது முதல் நபர் பகத்சிங் அல்ல என்று வாதிடலாம். அதற்கு முன்பே காந்தி இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றுக்குள் வந்திருந்தார். அவர் நாட்டின் மிகப்பெரும் மக்கள் இயக்கங்களை நடத்தத் துவங்கியிருந்தார். காலனிய இந்தியா என்ற பிரஷர் குக்கர் வெடிக்காமல் இருப்பதற்கான பாதுகாப்பு வால்வாக வடிவமைக்கப்பட்ட காங்கிரஸ், மக்கள் அடித்தளம் கொண்ட கட்சியாகவும், இயக்கமாகவும் உருமாற்றம் பெற்றது. இந்த உண்மையை அங்கீகரிக்கும் அதேசமயம், 'மக்கள்' என்ற காந்தியின் கருத்தாக்கமும் இப்பிரச்சனையில், பகத்சிங்கின் அணுகுமுறையும் தீர்மானகரமான வேறுபாடுகள் கொண்டவை என்பதை நாம் கவனத்தில் கொள்ளாதிருக்க கூடாது.
காந்தியின் 'மக்கள்' என்ற கருத்தாக்கத்துக்குள் அனைவரும் வருவார்கள். ஆனால், அது சாரத்தில் பிர்லாக்கள், பஜாஜ்களில் துவங்குகிறது. அதேசமயம், அது விவசாயிகள் வரை, சாதாரண மக்களின் இதர பிரிவினர்கள் வரை கீழ் நோக்கிச் செல்கிறது. ஆனால், தொழிற்சாலைகளும், விளைநிலங்களும் போராட்ட மையங்கள் ஆவதை அவர் விரும்பவில்லை. அவருடைய இயக்கத்தின் துவக்க காலகட்டத்தில், தொழிலாளர்களும், விவசாயிகளும் குறிப்பிடத்தக்க பேரார்வத்தைக் காட்டியபோது, காந்தியச் செயல்பாட்டின் எல்லைகளைத் தாண்டிச் செல்லும் புதிய முன்முயற்சிகளை மேற்கொண்டபோது, போராட்டத்தைத் திரும்பப் பெறும் அளவுக்கு அவர் சென்றார். அதன் பின் இந்த விவகாரத்தில் அவர் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டார். வெகுமக்களின் போர்க்குணத்திற்கு எந்த இடமும் இல்லாது பார்த்துக்கொண்டார். வெகுமக்களின் அரசியல் சிந்தனை, அல்லது, தொழிலாளர் - விவசாயிகளின் படைப்பூக்கமுள்ள முன்முயற்சிகள் இல்லாது பார்த்துக்கொண்டார். சமூக ரீதியில் ஒடுக்கப்பட்டவர்கள் இடத்துக்கு அவர் இறங்கிச் சென்றார் என்பது உண்மைதான். இருந்தபோதும், அவர் அவர்களை உள்ளிணைத்துக் கொள்வதற்கு முன்பு,  'ஹரிஜனங்கள்' என்று ஒடுக்கப்பட்டவர்களை Ôகருத்தாக்கம்Õ என்ற அளவில் புனிதப்படுத்தினார்.
இதற்கு நேர்மாறாக, பகத்சிங், மாணவர்கள் - இளைஞர்களிடமிருந்து துவங்கினார். அவர்கள், மக்களிடம், தொழிலாளர்களின் காலனிகளுக்கும் விவசாயிகளின் குடியிருப்புகளுக்கும் செல்ல வேண்டும் என்று மென்மேலும் வலியுறுத்தினார். தொழிலாளர்கள் - விவசாயிகளின் போராட்டங்களை அவர் கவனத்துடன் பின்தொடர்ந்தார். குத்தகை கொடுக்க மாட்டோம் என்ற விவசாயிகளின் போராட்டம் பற்றியும், தொழிலாளர்களின்  பொருளாதார போராட்டங்கள், அதுபோலவே அரசியல் போராட்டங்கள் பற்றியும் பேரார்வத்துடன் எழுதினார். துப்புரவுத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் பற்றி அறிந்தவுடன் பெரு மகிழ்ச்சி கொண்டார். தீண்டத்தகாதவர்களுக்கு அவர் விடுத்த அழைப்பு மிக நேரடியானது:  ''நீங்கள்தான் உண்மையான பாட்டாளிகள். தூங்கும் சிங்கங்கள். எழுந்து வாருங்கள்... ஒடுக்கும் பழைய கட்டமைப்புக்கு எதிராகக் கலகம் செய்யுங்கள்''. மக்கள் என்ற தன் வரையறையின் மையத்தில் உழைக்கின்ற மக்களை - ஒடுக்கப்பட்ட மக்களை வைத்த அதேசமயம், தேசிய இயக்கத்தின் மீது தொழிலாளர்கள் - விவசாயிகளின் ஆதிக்கத்தை நிறுவுவதற்கு அவர் அழுத்தம் கொடுத்தார். ஏனென்றால், முதலாளிகள், வணிகர்கள், அரசர்கள், பெரு நிலபிரபுக்கள் ஏகாதிபத்தியத்திடம் சமரசம் செய்துகொள்ளும் திறன் உள்ளவர்கள் என்றும், இந்திய சுதந்திரத்தைப் பொருத்தவரை, அவர்களை உறுதியான எதிரிகள் என்று கருதாவிட்டாலும், நம்பமுடியாத நண்பர்கள் என்று கருத வேண்டும் என்பது அவரின் பார்வையாக இருந்தது.
காந்தி இந்துமத மரபினைச் சார்ந்திருந்தார்.   காங்கிரசிலிருந்து கணிசமான அளவுக்கு முஸ்லீம் மக்கள் விலகி நிற்பதற்கு அது ஆற்றிய பங்கு சிறியதல்ல. மத அடிப்படையிலான பிளவு தீவிரப்பட்டதுடன், மதவெறித் தீயைப் பற்ற வைப்பதற்கு பிரிட்டீஷ் காலனியவாதிகள் முயற்சியெடுத்தனர். காந்தி அனாதரவான நிலைக்குத் தள்ளப்பட்டார். மத மதிப்பீடுகளின் அடிப்படையில், நல்லிணக்கம் வேண்டும் என்று வேண்டுகோள் விடுவதைத் தவிர அவரால் வேறொன்றும் செய்ய முடியவில்லை. இதற்கு மாறாக, பகத்சிங் வர்க்க ஒருமைப்பாட்டையும் வர்க்கப் போராட்டத்தையும் மக்களின் நல்லிணக்கத்திற்கான அடிப்படை என்று கொண்டார். மேலும், மத அடையாளங்களும் மரபுகளும் இல்லாத மதச்சார்பற்ற பாதையை வளர்த்தெடுத்தார். அதேசமயம், இந்தியாவின் ஒருங்கிணைந்த கலாச்சார பாரம்பரியத்தில் வேர்கொண்டதாக அது இருந்தது. அவரது சொந்த வாழ்வில், தீவிர மத நம்பிக்கைகொண்டவராக இருந்து, பகுத்தறிவுவாதியாக மாறி பின்னர் நாத்தீகத்தை அடைந்திருந்தபோதும், ஒருவர் தன் சொந்த வாழ்வில் தனக்காக மதத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்வதற்கான உரிமையை அவர் மதித்தார். ஆனால், பொது வாழ்வில், அரசு மற்றும் அரசியலில் மதத்தை விலக்கி வைக்கவேண்டும் என்பதில் கறாராக இருந்தார். எனவே, அவரின் தேசியம் என்பது மிக வெளிப்படையாக, மதச்சார்பற்றதாக இருந்தது. அத்துடன் மதவெறிக்கு எதிரானதாக இருந்தது. எனவே, காந்தியின் மத அடிப்படையிலான தேசியத்தைக் காட்டிலும், அல்லது மதத் தீவிரம் கொண்ட தேசியத்தைக் காட்டிலும், பல மதங்கள் கொண்ட இந்தியாவை அரவணைத்துச் செல்வதாக பகத்சிங்கின் தேசியம் இருந்தது.
முழுமையான சுதந்திரம் என்ற தங்களின் தெளிவான இலக்கு குறித்து பகத்சிங்கும் அவரின் தோழர்களும் தங்களை வேறுபடுத்தி அடையாளப்படுத்திக் கொண்டார்கள். காலனிய ஆதிக்கத்தின் பல்வேறு சட்ட வகைப்பட்ட  அரை வேக்காட்டு கருத்துக்களை வைத்துக்கொண்டு செப்படி வித்தை செய்வதை அவர்கள் ஒருபோதும் செய்யவில்லை. ஏகாதிபத்திய அடிமைத் தனத்திலிருந்து முழுமையான விடுதலை என்பதுதான் பகத்சிங்குக்கும் அவரின் தோழர்களுக்குமான அடிப்படை நிலைபாடாக இருந்தது. மக்களை மையப்படுத்திய அவர்களின் தேசபக்தியின் காரணமாக, அரூவமான தேசிய விடுதலை என்ற கருத்தாக்கத்துடன் அவர்கள் முடித்துக் கொள்ளவில்லை. அவர்களைப் பொறுத்தவரை, தேச விடுதலை என்பது, உழைக்கும் மக்களின் விடுதலையுடன் பிணைப்பு கொண்டதாக இருந்தது. எனவே, ஹிந்துஸ்த்தான் குடியரசு சங்கம் என்பது, இயல்பாக, ஹிந்துஸ்த்தான் சோசலிச குடியரசு சங்கமாக மாறியதுவந்தே மாதரம் என்ற பழைய முழக்கத்தின் இடத்தை, விடுதலையின் முழக்கமான ''இன்குலாப் ஜிந்தாபாத்'' (புரட்சி நீடூழி வாழ்க) பிடித்துக்கொண்டது. அதுநாள் முதற்கொண்டு, இந்திய மக்களின் போராட்ட உறுதியின் அழுத்தமான வெளிப்பாடாக, அவர்களின் அனைத்துப்போராட்டங்களிலும்அந்த முழக்கம் இருந்து வருகிறது.
சுதந்திரம் என்ற கருத்தாக்கம் இன்குலாப் அல்லது புரட்சி என்ற இலக்குக்கு இட்டுச் சென்றது போல, இந்தப் புரட்சியைக் கருத்தாக்கமாகக் கொள்ளும் போக்கில், பயங்கரவாதம், அராஜகவாதம், அவநம்பிக்கைவாதம் ஆகியவற்றின் சாயல்கொண்ட கருத்தியல் நிலையிலிருந்து பகத்சிங், மார்க்சிய-லெனினியத்திற்கு வந்து சேர்ந்து தனது கருத்தியல் வளர்ச்சியை முழுமை செய்தார். மார்க்சிய - லெனினியமே அவரின் செயல்பாட்டுகான வழிகாட்டி என்பதால், இந்தியப் புரட்சிக்கான திட்டத்தின் அடிப்படைகளை வளர்த்தெடுக்கும் பெரும்பணிக்குத் தீவிரமான கவனம் செலுத்தத் துவங்கினார்புரட்சிகரத் திட்டமின்றியும் புரட்சிகரக் கட்சி இன்றியும் புரட்சியைச் சாதிக்க முடியாது என்று  தனது இறுதி எழுத்துக்களில் திரும்பத் திரும்பச் சொல்கிறார். இந்தியப் புரட்சியின் பயணப்பாதையைக் குறிப்பதற்கு அவர் சோசலிசம் என்ற வார்த்தையைப் பயன்படுத்திய போதும், இந்தியா இன்னமும் மிகப் பெரும் அளவுக்கு நிலப்பிரபுத்துவ நிலையில் இருந்ததையும், இந்திய முதலாளித்துவவாதிகள், அன்னிய மூலதனத்துடன் நெருக்கமான, உயிர்த்தன்மைகொண்ட உறவுகளைக் கொண்டிருந்ததையும் அவர் கவனத்தில் கொண்டிருந்தார்அவரின் புரட்சிகரத் திட்ட நகலில் முக்கியத்துமிக்க பணிகளில், நிலப்பிரபுத்துவத்தை அழித்தொழிப்பது முதன்மையிடத்தைப் பிடித்திருந்தது. லெனினும் மாவோவும் தங்கள் நாட்டின் ஸ்தூலமான சமூக-பொருளாதார வரலாற்று நிலைமைகளுக்கு மார்க்சியத்தைப் பொருத்தி புரட்சிகரத் திட்டத்தை வளர்த்தெடுத்தது போல, காலனிய இந்தியாவில் அதுபோன்ற பாதையில் பகத்சிங்கும் பணியாற்றிக்கொண்டிருந்தார். புரட்சிகரத் திட்டத்திற்கு கவனம் செலுத்திக்கொண்டே, புரட்சிக்கான தயாரிப்பிற்கான செயல்தந்திர மற்றும் அமைப்பு அம்சங்கள் மீது விரிவான கவனம் செலுத்தி வந்தார். அவர் வறட்டுவாதத்திடமிருந்தும், குறுங்குழுவாதத்திடமிருந்தும் குறிப்பிட்டுச் சொல்லுமளவு விடுதலை பெற்றவராக இருந்தார். நோக்கத்திலும், புரட்சியின் இலக்கிற்கு முக்கியத்துவம் வாய்ந்த அர்ப்பணிப்பு அளிப்பதில் முழுமையாக உறுதியுடன் இருந்த அதேசமயம்மிகஉயர்ந்த பகுத்தறிவுள்ள ஆய்வுத்துடிப்புள்ள அறிவுடையவராக இருந்தார்.   ஆயுதப் போராட்டம் மற்றும் தலைமறைவு அமைப்பின் அவசியம் குறித்த புரிதல் கொண்டிருந்த அவர், வெளிப்படையான வெகுமக்கள் பணியின் மூலம் புரட்சிக்கான விரிவான தயாரிப்பு செய்வது குறித்து மென்மேலும் கூடுதல் அழுத்தம் கொடுத்தார்.
காங்கிரசின் வர்க்க குணாம்சம் குறித்து அவருக்கு எந்த மாயையும் இல்லாத அதே சமயம், காங்கிரஸ் மேடையையும், வாய்ப்புள்ள தொழிற்சங்கங்களையும் புரட்சியினை முன்னேற்றும் பணிக்காகப் பயன்படுத்துவது குறித்தும் அவர் பேசியிருக்கிறார். புரட்சிகர இயக்கத்தை விரிவாக்குவதன் மூலமும் தீவிரப்படுத்துவதன் மூலமும் காங்கிரசுக்குள் துருவச்சேர்க்கையைச் சாதிப்பதன் மூலம் காந்தியின் தலைமைக்கு ஆற்றல்மிகு சவால் விடுக்க முடியும் என்ற நம்பிக்கை அவருக்கிருந்தது. இந்த நம்பிக்கை தவறானதல்ல. 1929 டிசம்பர் 23 அன்று இந்திய வைஸ்ராய் பயணம் செய்த சிறப்பு இரயிலைக் குண்டு வைத்து தகர்ப்பதற்கான முயற்சியைக் கண்டனம் செய்யும் தீர்மானம், காந்தியால், அவரின் அனைத்து பலத்தையும் பிரயோகம் செய்து கொண்டுவரப்பட்ட போதும், வெறும் 31 வாக்குகள் வித்தியாசத்திலேயே தப்பிப் பிழைக்க முடிந்ததை பகத் சிங், தனது நம்பிக்கைக்கான ஆதாரமாகச் சுட்டிக்காட்டினார். பகத்சிங் தியாகியானபோது அவருக்கிருந்த பிரபலம் காந்தியின் பிரபலத்தைவிட குறைந்தது அல்ல என்று காங்கிரசின் அதிகாரபூர்வ வரலாற்றியலாளரான பட்டாபி சீத்தராமையா ஒப்புக்கொள்ளவேண்டி வந்தது. பகத்சிங்கும் அவரின் தோழர்களும், குறிப்பாக பகவதி சரண் போரா, புரட்சியாளர்களுக்கு எதிரான காந்தியின் வசவுரைகளை ஆற்றல்மிகு பகுத்தறிவுவாதங்கள் மூலமும், கூர்மையான கருத்தியல்வாதங்கள் மூலமும் நிர்மூலமாக்கினர். இருந்தபோதும், காந்தியை அவர்கள் தனிப்பட்ட முறையில் தாக்கியது இல்லை. காந்தியின் பங்களிப்பை மறுத்ததும் இல்லை.
சுருக்கமாகச் சொல்லப்போனால்நமது நாட்டில், பலன்தரும் முதல் புரட்சிகரத் திட்டத்தின் அடிப்படையை உருவாக்கிய, புரட்சிகரக் கட்சி பற்றியும் இயக்கம் பற்றியும் ஒருங்கிணைந்த பார்வை கொண்ட ஒரு கம்யூனிஸ்ட் முன்னோடி என்று நாம் நிச்சயம் பகத்சிங்கை ஏற்றுக்கொள்ளலாம்.
பகத்சிங் நமக்கு இன்று அளிக்கும் செய்தி என்ன? இன்றைய தேசபக்தர்களும் கம்யூனிஸ்ட்டுகளும் எதையெல்லாம் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்?
பாலாறும் தேனாறும் ஓடும் என்று அவர் ஒருபோதும் சுதந்திரத்தைக் குறிப்பிட்டதில்லை. அதுமட்டுமல்ல, அவர் ஒருபோதும் பண்டைய காலத்தை புகழ்ந்து பேசி 'ராம ராஜ்ஜியத்தைக் கொண்டுவருவேன்' என்று உறுதியளித்ததில்லை. அதற்கு மாறாக அவர் எச்சரிக்கை செய்தார்... பிரிட்டீஷ் ஆட்சியாளர்களுக்குப் பதிலாக கருப்பு எஜமானர்களைக் கொண்டுவருவது எந்த வேறுபாட்டையும் கொண்டுவராது என்று எச்சரிக்கை செய்தார். ஏகாதிபத்தியத்திற்குச் சவால்விட வேண்டுமானால், அன்னிய ஆட்சியின் உள்ளூர் அஸ்த்திவாரத்தை - நிலப்பிரபுத்துவ சக்திகளையும் முதலாளித்துவத்தின் கூட்டாளிகளையும், காலனி ஆட்சிக்கு ஆதரவாக இருப்பவர்களையும், ஏகாதிபத்திய மேலாதிக்கத்தையும் - அடித்து நொறுக்க வேண்டும் என்று சொன்னவர் அவர். மதவெறி அரசியலின் பேரழிவு ஏற்படுத்தும் ஆற்றல் பற்றி எச்சரிக்கை செய்தவர் அவர். மேலும் சமூக ஒடுக்குமுறை, தீண்டாமை என்ற கீழ்த்தரமான சமூக யதார்த்தத்தை அழித்தொழிக்கும்படி அறைகூவல் விடுத்தவர் அவர்.
பகத்சிங் தியாகியாகி 75 ஆண்டுகள் கடந்த பின்னரும் எத்தனை உண்மையானவராகாவும் தற்காலத்தின் மனிதராகவும் பகத்சிங் இருக்கிறார் என்பதைப் பாருங்கள்! நமது தேசிய இயக்கத்தின் பிற தலைவர்கள் பலரின் பங்களிப்புகள் ஏறக்குறைய காலாவதியாகிப் போயின. உதாரணமாக, கிராமப்புர இந்தியாவின் மொழியைப் பேசியவர் என்று காந்தி நினைவில் கொள்ளப்படுகிறார். ஆனால், இன்றைய வேலைவாய்ப்பின்மை, கிராமப்புர ஏழைகள் பட்டினி கிடப்பது பற்றியோ அல்லது கடனுக்காக விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது பற்றியோ, அல்லது, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரால் விவசாயிகளிடமிருந்து நிலம் பறிக்கப்படுவது பற்றியோ சொல்வதற்கு காந்தியிடம் எதுவும் இல்லைகாந்தி, அமைதியின், அகிம்சையின், மத நல்லிணக்கத்தின் தூதுவன். இருந்தபோதும், மதவெறி, தேசவெறி பைத்தியக்காரத்தனத்தை எதிர்த்து நிற்பதற்கான அடிப்படை என்ன என்பதை அவரால் சொல்ல முடியாது என்பதை விடுங்கள், சமீப காலங்களில் மதவெறி வன்முறைகள் நிறைய நிகழ்வது ஏன் என்பதைக்கூட காந்தியின் கருத்துக்களால் விளக்க முடியாது. தனது வாழ்க்கைதான் தனது செய்தி என்று காந்தி சொன்னார். ஆனால், இப்போது அவரின் செய்தியாளராக முன்னாபாய்(1) இருக்கவேண்டியிருப்பது குறித்து ஆச்சரியப்பட ஏதுமில்லை! மறுகண்டுபிடிப்பு செய்யப்படும், அல்லது புது அவதாரம் எடுக்கும் காந்தி அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் தேசிய அடையாளமாக இல்லைஅதிகரித்து வரும் குற்றங்கள், ஊழல்கள், நுகர்வுவாதத்தின் மத்தியில்  அமைதியையும் நேர்மையையும் போதிக்கும் நல்லதொரு குருவாக மட்டுமே காந்தி இருக்கிறார்.
நேருவின் காலத்தில் சோசலிசத்தின் தீர்க்கதரிசியாக அவர் சொல்லப்பட்டார். அவர் பெரிய திட்டங்களையும், தொழிற்சாலைகளையும் கட்டினார். அவை நவீன இந்தியாவின் கோவில்கள் என்றும் நேரு குறிப்பிட்டார். மேலும், தான் சோசலிச பாணியிலான சமூகத்தை கட்டியெழுப்புவதாக நாம் நம்ப வேண்டும் என்றும் அவர் விரும்பினார்ஆனால், இன்றைய தாராளமயத்தினால், தனியார்மயத்தினால் சோசலிசம் துடைத்தெறியப்பட்டது எப்படி என்பதை விளக்கியாக வேண்டிய நெருக்கடியில் இன்று சிக்கிக்கொண்டுள்ளார். நேருவின் கோவில்கள் அனைத்தும் மூலதனமகற்றலுக்கு ஆளாகி தனியாருக்கு தாரை வார்க்கப்படும் நிலையில், வேலையை இழந்து, உரிமைகளை இழந்து தெருவில் நிற்கும் தொழிலாளிக்கு, அல்லது அதிகரித்துவரும் வேலையற்றோர் பெரும்படைக்கு நேரு எந்தவித நம்பிக்கைத் தரும் செய்தியையும் அளிக்க முடியாதுபொதுத்துறையில் மேற்கொள்ளப்படும் மூலதனமகற்றல், நேருவின் அரசியலும் பொருளாதாரமும் 'மூலதனத்தை' இழந்துவிட்டன என்பதைக் காட்டுவதாகவும் இருக்கிறது. ஏன், காங்கிரஸ்கூட நவம்பர் 14 தவிர வேறு எப்போதும் அவரை நினைவில் கொள்வதில்லை!
காந்திக்கும், நேருவிற்கும் ஏற்பட்ட கதிக்கு நேர் மாறாக, பகத்சிங் பற்றியும் அவரின் கருத்துக்கள் பற்றியும் அறிந்துகொள்வதற்கான ஆர்வம் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. அந்த ஆர்வம் ஒரு பிரபலமான சினிமா படத்தால்கூட வெளிப்படுத்தப்படுகிறது. இந்தியாவின் விடுதலைக்காக, மிகத்துயரமான முறையில் உயிரைத் தியாகம் செய்த பெரிய கதாநாயகர் என்றுதான் நாடு பல ஆண்டுகளாகப் பகத்சிங்கை அறிந்திருந்தது. ஆனால், 1970கள் முதல், புரட்சிகர சிந்தனையாளர் - தலைவர் என்று அதிகரித்த அளவில் இனம் காணப்பட்டு வருகிறார்கருத்துக்களின் ஆதர்சனத்தின் களஞ்சியமாக அவர் இருக்கிறார். அந்த களஞ்சியத்தை அழிக்கவும் முடியாது, கொள்ளையிடவும் முடியாது. ஆனால், முறையாகப் படிப்பதன் மூலம், அவரின் கருத்துக்களைப் பரப்புவதன் மூலம், உண்மையாகச் சொல்லப் போனால், அவரின்  வீரியத்தையும் பார்வைநிலையையும் நமது வாழ்வில் போராட்டத்தில் உட்கொள்வதன் மூலம் அவரைப் பயன்படுத்தவும் அவரைச் செழுமைப்படுத்தவும் வேண்டும்.
இந்தியா இனியும் பிரிட்டனின் காலனி இல்லை என்பது உண்மைதான். பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் சூரியன் மறைந்தே போய்விட்டான். ஆனால், வேறு ஒரு முறையில் முழு உலகத்தையும் காலனியாக்க வாஷிங்டன் முயற்சித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, வள ஆதாரங்கள் நிறைந்த ஆனால் பலவீனமான, ஏழைகளான ஆசிய, ஆப்பிரிக்க லத்தீன் அமெரிக்க நாடுகளை காலனிகளாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறது. அந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இருக்கிறது. ஆனால், நமது தலைவர்கள் உலகத்தின் மிகப்பெரிய ஏகாதிபத்திய சக்தியான அமெரிக்காவுக்குச் சலுகை காட்டுவதில் தீவிரமாக இருக்கிறார்கள். அவர்கள் அமெரிக்காவுடன் செயல்திட்ட ரீதியான பங்காளியாக மாறியிருக்கிறார்கள். அந்த பங்காளிக் கூட்டுக்கு ஏற்றவகையில் நமது கொள்கைகள் மாற்றியமைக்கப்படுகின்றன. நமது கொள்கைகளை நாம் தீர்மானிப்பதற்கான சுதந்திரத்தை, நமது வளஆதாரங்களை நாம் வளர்த்தெடுத்துக் கொள்வதற்கான சுதந்திரத்தை நமது ஆட்சியாளர்கள் அடகு வைத்துவிட்டார்கள். அவர்கள் நமது நாட்டை உள்ளுக்குள் இருந்தவாரே, பலவீனப்படுத்தவும் துண்டு துண்டாக்கவும் செய்து, பிரித்தாளும் காலனிய சூழ்ச்சியைத் தொடர்கிறார்கள்.
நமது நாட்டின் தொழிலாளர்களும், விவசாயிகளும் முற்போக்கு அறிவாளிப் பிரிவினரும் தேசத்தின் கடிவாளத்தை தம் கையில் எடுத்துக் கொண்டால் மட்டுமே நாட்டைக் காப்பாற்ற முடியும். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் நினைவில் நிற்க வேண்டிய வார்த்தைகளின்படி சொல்வதானால், தொழிலாளி வர்க்கம் தன்னைத்தானே தேசம் என்று அறிவித்துக்கொள்ள வேண்டும். இதுதான் பகத்சிங்கின் தேசபக்தியும் கூடஏகாதிபத்திய சார்பாளர்களான, போலிதேசியவாதிகளான ஆர்எஸ்எஸ் - காங்கிரஸ் வகைப்பட்டவர்களைத் தோலுரித்துக் காட்டவும், தூக்கிக்கடாசவும் முன்சொன்ன, ஏகாதிபத்திய எதிர்ப்பு - மக்கள் சார்பு தேசபக்தி, நாட்டிற்கு தேவையானதாக இருக்கிறது. அமெரிக்காவின் மரணப்பிடியிலிருந்து நாட்டை விடுவிக்க நினைக்கும் ஒவ்வொரு இந்திய இளைஞனுக்கும் விடுதலையின் முகமாக பகத்சிங் தெரிகிறார். நிலப்பிரபுத்துவத்தை, காட்டுமிராண்டித்தனமான கருத்துகளை, நடைமுறைகளை, சக்திகளை வரலாற்றின் குப்பைத்தொட்டிக்கு அனுப்பி வைப்பதற்கு முயலும் எந்த ஒரு புரட்சியாளனுக்கும் தைரியமளிப்பவராக, ஆற்றல் கொடுப்பவராக முன்முயற்சியைத் தூண்டுபவராக, உள்ளுயிர்ப்பு ஊட்டுபவராக பகத்சிங் இருக்கிறார்
பகத்சிங்கின் மரபை உண்மையிலேயே உயர்த்திப் பிடிக்கிறோமா என்று நாட்டில் உள்ள கம்யூனிட்டு இயக்கங்கள் சுயபரிசோதனையும் ஆய்வும்  மேற்கொள்ள வேண்டும். நமது நாட்டில் மிகக்கடுமையான விவசாய நெருக்கடி இருக்கும் சமயத்தில், ஏகாதிபத்தியமும் அதன் தேசியக் கூட்டாளிகளும், மதவெறி பாசிசசக்திகளும் நமது இருத்தலின் மீது அனுதினமும் தாக்குதலைத் தீவிரப்படுத்தி நடத்திக்கொண்டிருக்கும் சமயத்தில், நமது நண்பர்களில் சிலர் இந்த ஆட்சிமுறையைக் காப்பாற்றுவதற்கு கூடுதல் பொறுப்புள்ளவர்களாக மாறிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மென்மேலும் குறைந்தபட்ச திட்டத்திற்குள் தங்களைச் சுருக்கிக்கொள்கிறார்கள். அதுவும்கூட அது அவர்களின் குறைந்தபட்ச திட்டம் இல்லை. அதற்கு மாறாக, ஆகக்கூடுதல் வறுமையை மக்களின்மீது சுமத்திவிட்டு, தங்களின் வர்க்கத்திற்கு கூடுதல் லாபத்தைக் அபகரித்துக்கொள்ளும்  ஆட்சியாளர்களின் குறைந்தபட்ச திட்டத்திற்குள் தங்களைச் சுருக்கிக்கொள்கிறார்கள், அந்த நண்பர்கள். பகத்சிங் இதுபோல நடந்துகொள்வாரா? கூடுதல் தாக்குதல் தொடுக்கும் எதிரியின் முன்னால், மக்களுக்கு கூடுதல் துயரான வாழ்க்கையை அளிக்கும் எதிரிக்கு முன்னால், குறைந்தபட்ச திட்டம், குறைந்தபட்ச எதிர்ப்பு, என்று தன்னை பகத்சிங் சுருக்கிக்கொள்வாரா? இந்த தோல்விவாதப் பாதையை அவர் நிச்சயம் மறுத்து ஒதுக்கியிருப்பார், கூடுதல் சாத்தியமான எதிர்ப்புப் போராட்டங்களை நடத்துவதற்காக மக்களை அணிதிரட்ட புறப்பட்டிருப்பார்.
ஆயுதங்களையும், நிதியையும் புரட்சிகர சொற்றொடர்களையும் போதுமான அளவுக்குச் சேகரித்து வைத்துக்கொண்டுள்ள நமது அராஜகவாத நண்பர்கள், அரசியல் - வெகுமக்கள் முயற்சியின்மை என்ற வறுமையில் சிக்கிக்கொண்டு, மக்களிடமிருந்தும் உண்மையான அரசியல் உலகத்திலிருந்து விலகிநிற்பதென்ற, அவர்களே உருவாக்கிக்கொண்ட சிக்கலில் சிக்கிக்கொண்டுள்ளார்கள். 75 ஆண்டுகளுக்கு முன்பு தன் இளம் தோழர்களுக்குச் சொன்ன வார்த்தைகளை இப்போது பகத்சிங் அவர்களுக்கு சொல்லியிருப்பார். உங்களின் அராஜகவாத கருத்துக்களை விட்டு வெளியேறி வாருங்கள், உங்களின் குறுகிய செயல்பாட்டு எல்லைகளைக் கடந்து வாருங்கள்மிகவும் அவசரமான, பன்முகத்தன்மைகொண்ட, பெருமளவிலான புரட்சிகர பிரச்சாரத்துக்கும், அணிதிரட்டலுக்கும் மக்கள் மத்தியில் பணியாற்றுவதற்கு உங்களை அர்ப்பணித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருப்பார்.
இடதுசாரிகள் இன்னமும் பலவீனமாக இருப்பதால், பலன் தரும் எதிர்ப்பினைக் கட்டமைப்பது பற்றி யோசிக்க முடியவில்லை என்று  நமது இடதுசாரித் தலைவர்கள் சிலர் சொல்வதை நாம் அடிக்கடி கேட்கிறோம். மிகவும் தெளிவாகக் கண்ணுக்குத் தென்படும் பலவீனம், இந்தி பேசுகின்ற இந்தியாவின் மையப்பகுதியில் காணக்கிடக்கிறது. இந்தி பேசும் பகுதியில் ¢இடதுசாரிகள் பலவீனமாக இருப்பது ஏன்? அந்தப் பகுதி சமூக ரீதியாக மிகவும் பின்தங்கியிருப்பதுதான் அதற்கான காரணம் என்று நமக்குச் சொல்கிறார்கள். ஆனால், உலகில் இதுவரை நடைபெற்ற வெற்றிகரமான புரட்சிகள் பின்தங்கிய நாடுகளில் நடைபெற்றிருப்பதை இந்த நண்பர்கள் மறந்துவிடுகிறார்கள். இந்த நாடுகள் பின்தங்கியிருக்கும் காரணத்தாலேயே, சமூக முன்னேற்றம் வேண்டும் என்று இந்த நாடுகளின் - பிராந்தியங்களின் மக்கள் மிகக்கூடுதல் பெருவிருப்பம் கொண்டுள்ளார்கள் என்பதை அவர்கள் மறந்துவிடுகிறார்கள்
இந்தி பேசும் பகுதியில் இடதுசாரி இயக்கம் விரிவாவதற்கு சமூக சீர்திருத்த இயக்கம்தான் திறவுகோள் என்று நமது நண்பர்கள் சிலர் சொல்கின்றனர். இடதுசாரிகள் வலுவாக இருக்கும் சில மாநிலங்களில் இடதுசாரி பலத்திற்குப் பின்னுள்ள முதன்மையான காரணம் விவசாய இயக்கத்தின் வரலாறும், கிராமப்புர எழுச்சிகளும்தான் என்பதை அவர்கள் மறந்துவிடுகிறார்கள் அல்லது நாம் மறந்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆற்றல்மிகு வர்க்கப் போராட்ட அலைகளின் காரணமாகவே இதுவரையிலான பொருள் உள்ள, நிலைத்த தன்மைகொண்ட சமூக  முன்னேற்றங்கள் சாதிக்கப்பட்டுள்ளன. கம்யூனிஸ்ட்டு கட்சி இந்தப் போராட்டத்தைக் கைவிடும்போது, அல்லது இப்போராட்டத்தை ஆழமான முறையில் நடத்தாதபோது, அதுவேகூட, அதாவது, கம்யூனிஸ்ட் கட்சியேகூடபிற்போக்கான சிந்தனைகளுக்கும், செயல்பாட்டுக்கும் பலியாகிவிடுகிறது
சில கம்யூனிஸ்ட் சிந்தனையாளர்கள் மிகத்தாமதமாக கண்விழித்து நாட்டில் உள்ள சமூக ஒடுக்குமுறை என்ற யதார்த்தத்தைப் பார்க்கிறார்கள். அவர்கள் நாங்கள் இனி சமூகப் பிரச்சனைகள் மீது கவனம் குவிக்கப் போகிறோம் என்கின்றனர். இத்தனை வருடங்களாக அவர்கள் சமூகப் பிரச்சனைகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருந்திருந்தார்கள் என்றால், மிகக்குறுகிய பொருளாதர அர்த்தத்தில் வர்க்கப் போராட்டத்தைப் புரிந்துகொண்டு செயல்படுத்தியிருந்தார்கள் என்றால், அது அவர்களின் பிரச்சனை. யதார்த்தம் என்னவென்றால், நக்சல்பாரியால் உணர்வெழுச்சி பெற்ற போஜ்பூரின் ஒடுக்கப்பட்ட கிராமப்புர ஏழைகள் 1970களில் கலகம் செய்தனர். அது, 'தூங்கிக்கொண்டிருந்த புலிகள் தூக்கக் கலக்கத்திலிருந்து கண்விழித்து முழு ஒடுக்குமுறைச் சமூகக் கட்டமைப்பையும் கேள்விக்குள்ளாக்குவார்கள்' என்ற பகத்சிங்கின் கனவை நனவாக்கிய நிகழ்வு. அந்த புரட்சிகர கம்யூனிச விழித்தெழுதலை, ஜாதிவழிவிலகல், அல்லது வெறும் ஜாதிச்சண்டை என்று மட்டம் தட்டி ஒதுக்கிவிட  பாரம்பரிய மற்றும் முதுபெரும் கம்யூனிஸ்ட்டுகள் சிலர் முயன்றனர். இதே நபர்கள்தான் 1990ல் விபி சிங்கின் மண்டல் முயற்சியை சமூகப்புரட்சி என்று புகழ்ந்து தள்ளினார்கள். அதன் பின்பு, கிராமப்புர புதுப்பணக்காரர்களுடைய கட்சிகளின் தொங்கு சதையாக, சமூகநீதிக்காவலர்கள் வேடம்தாங்கி நடனமிட்டார்கள். பழைய கம்யூனிச இயக்கத்தின் தலைவர்கள் போஜ்பூர் இயக்கத்தை கேலி செய்துகொண்டிருந்தபோது, மிகப்பெரும் கம்யூனிஸ்ட் கவிஞனாகிய நாகர்ஜூன் 'போஜ்பூர் புதிய போராட்ட களம்' என்றும் 'நமது காலத்தில் பகத்சிங் எடுத்த மறுஅவதாரம்' என்றும் மகிழ்ச்சிக் கூத்தாடியதை நாம் மறந்துவிட முடியாது.
கம்யூனிஸ்ட்டுகள் ஒவ்வொரு ஒடுக்குமுறையின் பேரிலும், அது சமூக ஒடுக்குமுறையாக இருந்தாலும், பாலின ஒடுக்குமுறையாக இருந்தாலும் தேசிய ஒடுக்குமுறையாக இருந்தாலும் அதன்மீது நிச்சயம் யுத்தம் தொடுக்க வேண்டும். சமூகப் பிரச்சனைகள் என்று சொல்லப்படுபவைபற்றி நமது பழைய கம்யயூனிஸ்ட்டுகள் காட்டுகின்ற புதிய ஆர்வம், ஸ்தூலமான சமூக யதார்த்தத்தை இனம் காண்பது என்ற பெயரில், சாதி அரசியலுக்கான கருத்தியல் சரணாகதியை, அதனை நியாயப்படுத்துவதைத்தான் கூடுதலாக வெளிப்படுத்துகிறது! இந்த வகைப்பட்ட தோல்வி வாதக் கண்டுபிடிப்புகள், சாதியுடன் தன்னை நிறுத்திக்கொள்ளாது. இப்போது சில கம்யூனிஸ்ட் தலைவர்கள், மதத்தின் பொருத்தப்பாடு மற்றும் மறுகண்டுபிடிப்புகள் செய்வதைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்சில நாட்களுக்கு முன்னர், மேற்கு வங்கத்தின் மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த அமைச்சர் ஒருவர், காளி கோவிலில் பூஜை செய்துகொண்டிருப்பதைக் கண்டோம். மார்க்சிஸ்ட் தலைவர் ஒருவர் பூஜை செய்வது வழக்கத்திற்கு விரோதமானது இல்லையா என்று கேட்டபோது, ''நான் ஒரு பெருமை மிகு இந்து.. அதிலும் பிராமணன்'', என்று பதில் சொன்னார்! அவர் அங்கே நிறுத்தாமல் மேலும் முன்னேறிச் சென்று வாதம் செய்தார். மதத்தின் பாத்திரத்தை அங்கீகரிக்காததாலும், பாராட்டப்படாததாலும், பூஜைகளிலிருந்தும் கோவில்களிலிருந்தும் விலகி நிற்பதாலும்தான் கம்யூனிஸ்ட்டுகள் தோல்வியடைகிறார்கள், சில மாநிலங்களிலேயே முடங்கிக் கிடக்கிறார்கள் என்று வாதிட்டார்!
அனேகமாக பலவீன இதயம் படைத்த கம்யூனிஸ்ட்டுகளை, வர்க்கப் போராட்டத்தின் அதிர்வலைகளிலிருந்து நீண்ட காலம் விலகியிருந்த கம்யூனிஸ்ட்டுகளை, 'மண்டல் - கமண்டல்' அரசியலின் கருத்தியல் தாக்குதல் கூடுதலாகப் பலவீனப்படுத்தியிருக்கிறது. சாதி, மதம் என்ற முப்பட்டகக் கண்ணாடியின் மூலம் சமூகத்தைப் பார்த்து, அந்தப் பார்வையின் உதவிகொண்டு, கம்யூனிச இயக்கத்தை விரிவாக்கம் செய்துவிடலாம் என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால், இன்னமும் கொஞ்சம் தோல்விகளும், மேலும் சில அதிர்ச்சிகளும் மட்டுமே உங்களுக்குக் கிடைக்கும். எந்த அளவுக்கு உங்களின் மேற்சொன்ன கண்ணாடியின் ஆற்றல் அதிகரிக்கிறதோ, அதன் தலைகீழ் விகிதத்தில் உங்களின் அதிகாரமும், அரசியலும் கீழே சரியும்கம்யூனிசப் பார்வை மங்கலாகும்போது, சாதி - மதம் என்ற கண்ணாடிகளோ அல்லது காண்டாக்ட் லென்சுகளோ அதற்கான மாற்றாகாது. பகத்சிங் இருந்திருந்தால், அந்தப் பார்வைத் தடுப்பான்களைத் தூக்கியெறியுங்கள் என்று சொல்லியிருப்பார், நீங்கள் ஒரு புரட்சியாளர் என்பதில் பெருமைகொள்ளுங்கள் என்று சொல்லியிருப்பார், நீங்கள் கம்யூனிஸ்ட் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று சொல்லியிருப்பார். நீங்கள் கம்யூனிஸ்ட் என்றால் மக்கள் மீதான நாட்டின் மீதான உங்கள் அன்பு எந்த ஒன்றுக்கும் இரண்டாம் பட்சமானதல்ல. மதச்சார்பின்மைக்கான உங்கள் அர்ப்பணிப்பு எந்த ஒன்றையும்விடக் கடினமானது. முற்றூடானா சமூகமாற்றம் மற்றும் முன்னேற்றத்திற்கான உங்கள் மனவுறுதி எந்த ஒன்றாலும் சிதைக்கப்பட முடியாதது.
பகத்சிங்கின் நூற்£ண்டு இந்திய கம்யூனிச இயக்கத்திற்கு இன்னமும் கூடுதல் வலுவையும் இன்னமும் கூடுதல்  வீரியத்தையும் வழங்கட்டும்!
மேலும் மேலும் அதிக எண்ணிக்கையிலான இளைஞர்கள் பகத்சிங் என்ற புரட்சிகர கம்யூனிஸ்ட் பதாகையின் கீழ் அணிதிரண்டு, ஏகாதிபத்திய ஆதிக்கத்திற்கு எதிராகவும், அனைத்துவிதமான சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கு எதிராகவும், போராடும் தொழிலாளர் - விவசாயிகளின் போர்ப்படையில் இணையட்டும்!
குறிப்பு (1) முன்னாபாய்: சஞ்சய்தத் நடித்த இந்தி திரைப்படம். முன்னாபாய் என்பவர் காந்தியுடன் சேர்ந்து ஊழலை எதிர்ப்பதான கதையமைப்பு கொண்ட படம். படத்தில் பயன்படுத்தப்படும் மும்பை இந்தியில் பாய் என்பதற்கு சகோதரன் என்ற பொருளும், அதேசமயம்  இளம் குற்றவாளி என்ற அர்த்தமும்  உண்டு.
(பீகாரின் பகுசாராயில் உள்ள கோட்ர்கோவான் பிப்லாபாய் புத்தகாலயத்தில் நடைபெற்ற பகத்சிங் நூற்றாண்டு விழாவின்போது ஆற்றிய உரையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. அக்டோபர் 8, 2006)

No comments:

Post a Comment