இவர்கள் நம்மவர்கள் எனும் சொல்லாடல்கள்
அந்த வெளியெங்கும் பரவி ஒலித்துக் கொண்டிருந்தன.
ஆலைகளிலும் குடியிருப்புகளிலும்
அதிகாரத்தின் அந்தகார இருள்
பனிப்பாளங்களாய் படிந்திருக்கின்றன.
நடைபாதைகளிலும் குடியிருப்பின் வெளியெங்கிலும்
கண்காணிப்பின் கனத்த வலைகளை
நுட்பமாக கண்ணில்படாது விரித்து வைத்திருந்தனர்.
இவர்கள் வாழ்வின் சாரங்களை
மென்று தின்று உமிழ்ந்தவர்களையே
அரங்க வெளிச்சத்தின் உயர் பீடங்களில்
கொலு வைத்துப் போற்றித் தொழுதனர்
கண்களில் அதிருப்தியின் ரேகை படர
அவர்களைப் பார்த்த போது
இவர்கள் நம்மவர்கள்
இவர்களோடு இருப்பதே நமக்கு
மகிழ்வைத் தரும் என்றனர்.
அடர்ந்த பனைகளினூடாக கசிந்த வைகறை
வெளிச்சத்தில் நடைபயிற்சியில்
என்னோடுகூட வந்த நண்பர்
அவர்களைப் பற்றிய கதையாடல்களை
புதிர்மொழியில் வார்த்தைகளுக்கிடையே
நீண்ட இடைவெளிகள் தந்து பேசினார்.
அவர் சொன்ன அடையாளங்கங்களோடு
அவர்களைத் தேடிச் சென்றேன்.
தூரத்தில் மேற்கு திசையின் அடிவானத்தில்
செம்மண் பாவிய சாலையின் முடிவில்
உயர்ந்த அடர்ந்த பசுமையைப் பேசிய மரங்களுக்கிடையில்
சிறுசிறு கட்டிடங்கள் தென்பட்டன.
குறுக்கும் நெடுக்குமாக ஓடிய இளைஞர்கள்
பணியின் வேகத்தில் கவனம் கொண்டனர்.
ஓரிடத்தைச் சுட்டிக் கேட்டபோது
இது மனிதர்களின் புற அகத் தளைகளை
உடைக்கும் கருவிகளை வார்க்கும்
உலைக்கூடம் என்று பகர்ந்தனர்.
சற்று நகர்ந்து வேறொரு திசையை நோக்குகையில்
அது திசைவெளிகளில் விரிந்து
பயணிக்கும் வாகனங்களைப்
பழுதுபார்க்கும் பணிமனை என்றனர்.
அந்த வெளியும் சூழலும் என்னை உள்ளீர்த்துக் கொண்டதால்
தொடர்ந்து அங்கே சென்று கொண்டிருந்தேன்.
முரண் எதிர்வுகளையே வாழ்வின் தரிசனங்களென் கண்டவர்கள்
அங்கே போகாதே.
அவர்கள் நம்மவர்கள் அல்ல என்றனர்.
முன் முடிவுகளில் நனைந்த சொற்களோடு.
ஆனால் இப்பொழுது நான்
அவர்களோடு அவர்களாய்.
(2011 செப்டம்பர் 04ஆம் நாள் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற மானுட விடுதலை பண்பாட்டுக் கழகத்தின் படைப்பரங்கத்தில் வாசிக்கப் பெற்ற கவிதை)
No comments:
Post a Comment