ஆளப்படுவதும் அடக்கப்படுவதும்
மறுக்கப்படுவதும், ஒடுக்கப்படுவதுமே
பெண்களின் தொன்றுதொட்ட வாழ்க்கை
என்றானபின்னும்…
முன்னோக்கிய பயணம் மட்டும்
நிற்பதேயில்லை ஒரு போதும்.
கடந்தகால இருட்டை விலக்கி
காலடிச் சுவடுகளை வழிநெடுக பதித்தபடி
நீண்ட தூரம் கடந்து வந்த பின்னும்
இருட்டின் கைகள் கனத்துத்தான்
கிடக்கின்றன நிகழ்காலத்திலும்
புத்திசாலிகள் மலிந்து நிற்கும் இடங்களிலும்
பரிகாசங்களின் குரைப்புச் சத்தங்கள் மலிந்தே கிடக்கின்றன.
வார்த்தைகளால் கல்லெறியப்படுவதும்
பார்வைகளால் துகிலுறியப்படுவதும்
உணர்வுகளை உதாசீனப்படுத்துவதும்
உரிமைகள் புறக்கணிக்கப்படுவதும்
புனர்வுக்கான பொருளாக மட்டுமே பார்க்கப்படுவதும்
இதழ்க்கடையில் நெளியும் நமுட்டுச் சிரிப்புகளும்
வேட்டை நாயாய் துரத்திக் கொண்டிருப்பினும்…
தூரத்து வெளிச்சத்தை நோக்கிய
பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது –
தெளிவான சிந்தனையோடும்
தளராத உறுதியோடும்
வெளிச்சம் என்றேனும் வரவேற்குமா?
(2011 செப்டம்பர் 04ஆம் நாள் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற மானுட விடுதலை பண்பாட்டுக் கழகத்தின் படைப்பரங்கத்தில் வாசிக்கப் பெற்ற கவிதை)
No comments:
Post a Comment