ஒரு திருமண வீட்டில் உணவு உண்டபின் சற்று ஓய்வாக லஞ்சம், கையூட்டு, ஊழல் போன்ற பதங்களை வைத்து ஒவ்வொன்றிற்கும் என்ன வித்தியாசம், ஒற்றுமை என்பது பற்றி பேசிக்கொண்டிருந்தோம் ஒருநாள். வெகு இயல்பாக ஸ்பெக்ட்ரம், ஆதர்ஷ், காமன்வெல்த் பக்கம் திரும்பியது உயர் நடுத்தர வர்க்கத்தை நோக்கிப் பாயும் நடுத்தர வர்க்கத்து, நடுத்தர வயது இளைஞர்களின் பேச்சு. ஊழலில், வருவாய் ஏய்ப்பில் கைமாறிய நோட்டுகளின் எண்களைக்கூட துல்லியமாகக் கணித்துவிடுவார்கள் போலிருந்தது அங்கிருந்த சிலர். அந்தளவிற்கு விரல்நுனியில் நடனமாடினார்கள். செரிமானப் பேச்சு முடிந்த பின்னர் ஒவ்வொருவராய் நழுவிப் போனோம்.
ஜனநாயக நாடான இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் குறிப்பிடத்தக்க தனித்துவமிக்க சிறிய, பெரிய அளவில் ஊழல்கள் கண்டறியப்பட்டு நிறையப் பத்திரிகைகள் விற்பதற்கும், டி.வி., டி.ஆர்.பி.யைக் கூட்டுவதற்கும் அந்த ஊழல்கள் பெரிதும் உதவியிருக்கின்றனவேயொழிய ஊழலின் ஊற்றுக்கண் என்று சொல்வார்களே அந்த ஊற்றுக்கண் பற்றி யாரும் அலட்டிக் கொண்டதேயில்லை. ஊழல்கள் காரணமாக யாரும் தண்டிக்கப்பட்டதாகவும் எனக்கு எந்த நினைவும் இல்லை.
இந்தியா நடுத்தர வர்க்கத்தினரால் வேகமாக நிரம்பி வருகிறது. இதன் பொருள் அடித்தட்டு மக்கள் பொருளாதார மேம்பாடு பெற்று நடுத்தர வர்க்கமாகி வருகிறார்கள் என்பதல்ல. அடித்தட்டு மக்கள் வாழ வழியற்றவர்களாக்கப் பட்டிருக்கிறார்கள் என்பதே. இவர்களின் வாழ்வாதாரங்கள் அவர்களிடமிருந்து பறிக்கப்படுகின்றன. இருப்பிடங்களிலிருந்து நிர்வாகக் காரணங்காட்டி விரட்டியடிக்கப்படுகிறார்கள். பணிப்பாதுகாப்பு கிடையாது. அடுத்தவேளை சோறு என்பதே கேள்விக்குரியது என்றளவில் இருக்கிறார்கள். இன்னமும் சொல்வதானால் இவர்களது உயிர் வாழும் உரிமையே மறுக்கப்பட்டு ‘கர்மி கட்டோவ்’ என்ற முழக்கம் மூலமாக எல்லாவகையிலும் ஏதிலிகளாக மாற்றப்பட்டு பின் இவர்களது இருப்பு இருட்டடிப்பு செய்யப்பட்டு மாயையான புள்ளிவிவரங்கள் பரப்பப்படுகின்றன.
இந்த அடித்தட்டு மக்களுக்கு லோக்பால் தெரியாது. ஆதர்ஷ், ஸ்பெக்ட்ரம் எதுவும் தெரியாது. தேவையுமில்லை. ஆனால் பல்கிப்பெருகியதாகக் காட்டப்படும் நடுத்தர வர்க்கத்தினருக்கு இந்த ஆதர்ஷ், காமல்வெல்த் எல்லாமே தம்மை நேரடியாகப் பாதிக்காத, ஆனால் நாட்டை ஏதோ ஒரு வகையில் பாதிக்கும் விஷயம் என்பது மட்டும் தெரியும். உண்மையில் நடுத்தர வர்க்கம் என்பதும், நடுத்தர வர்க்க மனோபாவம் என்பதும் மிகச் சிக்கலானது. குழப்பமானது. சமூக இயங்கியலை தனக்குச் சாதகமானதாக மட்டுமே மாற்ற முயலும் தன்மையச் சிந்தனை கொண்டது. மேல்தட்டு வர்க்கத்தால் சூப்பிப் போடப்பட்ட எலும்புத் துண்டுகளும், எச்சில் பர்கர்களும், கெண்டகி சிக்கன்களும், மிச்ச மீதி கோலா பானமும் நேரடியாக நடுத்தர வர்க்கத்தினருக்கே போய்ச் சேருகின்றன. அம்பேத்கர், பெரியார் இன்னபிற சமூகப் போராளிகளின் இடையறாத செயற்பாடுகளால் நடுத்தர வர்க்கத்திற்கு (அநேகமாக இடைச்சாதிகள்) கிடைத்த ஓரளவு கல்வி வாய்ப்பும், மேல்வர்க்கம் தின்றதுபோக மிச்சமீதியும்தான் தரப்படுகிறது.
இந்த நடுத்தர வர்க்கம்தான், எளிதில் வசியம் செய்யப்படக் கூடியதாய் இருப்பதால் அநேகமாக ஊடகக் கதாநாயகர்கள் யாவரும் இந்த நடுத்தர வர்க்கத்திலிருந்து பார்வைக் குறியை விலக்குவதில்லை. திரைக்கதாநாயகர்கள், மலிவான அரசியல்வாதிகள் இதில் எப்போதுமே கில்லாடிகளாக இருந்து வருகிறார்கள். ஒரே பாடலில் கோடீஸ்வரனாகும் கனவு காணும் நடுத்தர வர்க்கம் ஒரே நாளில் நாட்டையே மாற்றிவிடும் கனவு காணச் சொல்லும் நிறைய பேரைச் சந்தித்திருக்கிறது. இந்த வர்க்கம் ஆதர்ஷ், காமன்வெல்த் ஊழல், ஸ்பெக்ட்ரம் என புதுப்புது ஊழல்கள் அம்பலமாகி வந்த கட்டத்தில் கையில் அற்புத விளக்குடன் அலாவுதீன் வந்தால் அசந்தே போகாதா என்ன? அன்னா ஹசாரே வந்தார்.
நடுத்தர, உயர் நடுத்தர வர்க்கத்தினருக்கு நிறைய பாடங்கள் சொல்லித்தரப்பட்டன. இதோ மீண்டும் வந்துவிட்டார் காந்தி. புதியதோர் சத்தியாகிரகம், மீண்டுமொரு சுதந்திரப் போராட்டம் என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டன. அன்னா ஹசாரே ஊழலுக்கெதிராகத்தன் உயிரையே கொடுப்பேனென்றார். இவருக்காதரவாக பெரும் கூட்டம் கூடியது அல்லது அப்படிச் சொல்லப்பட்டது.
உண்மையில் அன்னா ஹசாரேயின் போராட்டம் எத்தகைய பின்புலத்தில் நடைபெறுகிறது. காந்தியின் சீடரான, இன்னொரு காந்தி எனச் சொல்லப்படும் அவரது மேடையில் காந்தியைக் கொன்றவனின் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் வாழ்த்துகிறார்கள். சங்பரிவாரங்கள் அவருக்குக் காவல் நிற்கின்றன. பதற்றத்துடன் ஜெயப்பிரகாஷ் நாராயணன் காட்சி மீண்டும் அரங்கேறி விடக்கூடது எனக் கவனமாக காங்கிரஸ் சமாதானக் கொடியசைத்து வைக்கிறது.
இந்த அரசியல் ட்ரெண்டிற்கு ஏற்ப புரட்சிப் புயல், ஆன்மீக அரிச்சுவடி ராம்தேவ் நிறைய வித்தைகளைச் செய்து பார்க்கிறார். சில யோகாசனங்கள் எடுபடுகின்றன. சில யோகாசனங்கள் கால்களைச் சிக்கிக்கொள்ளச் செய்கின்றன. ‘ஷெர்லாக் ஹோம்ஸ்’க்குப் பிறகு மிகச்சிறந்த மாறுவேடதாரியாக, சடுதியில் மாறுவேடம் புனையும் ஆற்றலுடையவராய் மாறுகிறார் ராம்தேவ். அவரது அடுத்த பயிற்சியில் அவரது இந்த யோகாவும் சேரக்கூடும். அதென்ன மதியம் உண்ணாவிரதம் 2 மணிநேரம் நிறுத்தம் என்கிறார்கள். சாப்பிட்டுக் கொள்வார்களோ?
ஆனால் ராம்தேவுக்குச் சற்று முன்பாகவே அரசியல் பேசத்துவங்கிய மற்றொரு கார்ப்ரேட் சாமி பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ க்கு (இவர் இலங்கைப் பிரச்சனைக்கு தீர்வுத் தூது போகிறேன் என்றார். நக்சலைட்டுகள் நல்லவர்கள் அவர்களுடன் சமாதானம் பேசுவேன் என்றெல்லாம் குட்டிக்கரணம் செய்து பார்த்தார். ம்… ஸ்ரீஸ்ரீ யை யாரும் கண்டுகொள்ளவில்லை) இப்போது காட்சியில் நாம் இல்லையே என்ன செய்தென்ற கவலை. ராஜா நாடகத்தில் சாமரம் வீசும் பணியாளனாகவாவது காட்சியில் இருக்க நினைத்து இங்கும் ஒரு தூதுப்படலத்தை நிகழ்த்தினார். ‘அப்பாடா நானும் சீனுக்கு வந்துட்டேன்’ என்று சிரிக்கிறார். நல்லவேளை நித்யானந்த சுவாமிகள்ஜிக்கு இன்றைக்கு இமேஜ் டேமேஜ் ஆகவில்லை என்றால் அவரும்கூட உண்ணாவிரம் இருந்திருப்பார். பத்திரிகைகளுக்கு கூடுதலாய் சிறிது செய்தி கிடைத்திருக்கும்.
அதிருக்கட்டும். காந்தியின் சீடராகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் அன்னா ஹசாரே காந்தியின் அரசியல் பற்றி எந்தளவிற்குப் புரிந்து வைத்திருக்கிறார் எனத் தெரியவில்லை. காந்தியின் அரசியல் மனுதர்மத்தை முன்னிறுத்திய அரசியல். ஆனால் அவரது இறுதிக்காலத்தில் மனுதர்மத்தை விடவும் நிகழ்கால செயல்தந்திரங்களைச் சரிவரப் புரிந்து கொண்டிருந்தார். அதனால்தான் இந்தியா அரசியல் சுதந்திரம் பெற்றபிறகு, பாகிஸ்தான் பிரிவினையை (மனமில்லாவிட்டாலும்) ஏற்றுக்கொண்டது, பாகிஸ்தானுடன் சொத்துப்பிரிப்பு (அதன் காரணமாகத்தான் அவர் கொல்லப்பட்டார் என்றொரு கூற்றும் உண்டு) சமூக வேறுபாடுகளைக் களைவது, மத விரோதத்திலிருந்து மத சகிப்புத் தன்மைக்கு மக்களை மடைமாற்றம் செய்வது என முற்றிலும் நேரடி அரசியலிருந்து விலகிய சமூகச் செயல்பாடுகளில் கவனம் செலுத்தினார்.
தற்போது நந்திகிராமில் விளைநிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. விவசாயிகள் விரட்டப்படுகிறார்கள். நாடு முழுவதும் பசுமைப்புரட்சியின் விளைச்சலாக விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். வெளிநாட்டுக் கம்பெனிகளுக்கு இந்தியச் சொத்துகள் விருந்தாக்கப்படுகின்றன சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என்றபெயரில். சனாதன வருணாசிரமத்தின் கொடூர(கௌரவக்-?) கொலைகள் நிகழ்கின்றன. பசுமைவேட்டை என்ற பெயரில் ஆதிகுடிகள் விரட்டப்பட்டு பசுமை கொள்ளையடிக்கப்படுகிறது. பகாசுரக் கம்பெனிகள் நாடு முழுவதும் பசியுடன் மேய்ந்து கொண்டிருக்கின்றன. போபால் விஷவாயுக் குற்றவாளி ஆன்டர்சன் தனித்தீவில் நிதானமாய் சுகமாய் குளித்துக் கொண்டிருக்கிறான்.
காந்தியின் சீடரான ஹசாரேக்கு இந்த சமூக, அரசியல் பிரச்சனைகள் எதுவுமே கண்ணில் படவில்லை போலும். சம்மந்தமே இல்லாமல் மோடியைப் புகழ்கிறார். மறுநாள் மராட்டிய அரசின் ஏகாதிபத்திய அடிவருடித்தனத்தை எண்ணி அகமகிழ்கிறார்.
இந்தியா மிகப்பெரிய (மக்கள் தொகையில்) ஜனநாயக நாடு. ஆனால் இந்திய ஜனநாயகம் என்பது முற்றுப்பெறாத ஜனநாயகம். வார்த்தை அலங்கரிப்புகளினாலான ஜனநாயகம் நிலவும் நாடு இது. அதனால்தான் இந்நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் சிலபகுதிகளை அம்பேத்கார், பெரியார் போன்றவர்கள் எரித்தார்கள். அதிலும் இந்திய ஜனநாயகத்தை வடிவமைத்துக் கொடுத்ததே முதலாளித்துவ, ஏகாதிபத்தியம்தான். மக்களைப் புறக்கணித்த, அதிகார மட்டத்தை உள்ளடக்கிய, முதலாளித்துவம் வடிவமைத்துக் கொடுத்த ஜனநாயகத்துக்குச் சொந்தமான பெரிய ஜனநாயகநாடு இந்தியா. முதலாளித்துவம் இருக்குமிடத்தில் ஊழலும், சுரண்டலும், அடக்குமுறையும் இருப்பதென்பது வியப்பானதல்ல. அவ்வகையில்தான் இந்திய ஜனநாயகத்தின் ஊழலும், சுரண்டலும். இதன் பொருள் ஊழலை ஏற்றுக்கொள் என்பதல்ல. ஊழலைவிடவும் சுரண்டலை ஒழிப்பது மிகவும் முக்கியமானது என்பதை ஹசாரே போன்றவர்கள் வசதியாக மறந்து விடுகிறார்கள். ஊழல் என்பது நிர்வாகப் பிரச்சனை சார்ந்தது. சுரண்டல் என்பது பூமியின் ஒட்டுமொத்த அவலங்களுக்கும் காரணமான கோரமுகம் கொண்டது. முதலாளித்துவத்தின் தலைப்பிள்ளையும், தலைமை ஆயுதமும், அதேசமயம் இதன் இயக்கியும்கூட இந்தச் சுரண்டல்தான் என்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொண்டால் ஊழலின் சரியான முடிச்சினைக் கண்டுபிடித்து ஊழலை அம்பலப்படுத்துவது மட்டுமல்ல அதைச் சரிசெய்யவும்கூட முடியும்.
இதையெல்லாம் தெரியாமல் அல்லது மறைத்துவிட்டு ஊழல் எதிர்ப்பு நாடகமும், சமாதான நாடகமும் ஆடிக்கொண்டிருக்கிறார்கள் - ஊழலுக்கே காரணமாயிருக்கும் அத்தனை பேரும், அவர்களைப் பின்னால் இருந்து இயக்குபவர்களும்.
உண்ணாவிரத அரங்கேற்ற அரிதாரப் பூச்சுகளுக்கிடையில் ஒரு சிறுமி 200 பேரால் பலவந்தப்படுத்தப்படுகிறாள். தலித் தொழிலாளி மனிதக் கழிவுகளைச் சுமக்கும்படி நிர்பந்திக்கப்படுகிறான். மீன்பிடிக்கச்சென்ற மீனவர்கள் அடித்துக் காயப்படுத்தப்படுகிறார்கள். இதற்காக யாரும் பெரிய போராட்டங்களை ஒருங்கிணைக்க முடியவில்லை. இதையெல்லாம்விட ரஜினிக்காக யாகம் நடத்தப்படுகின்ற செய்தி முக்கியத்துவம் பெறுகிறது.
பெண்களைப் பாலியல் துன்புறுத்தலுக்ள்ளாக்கிய இந்திய ராணுவத்திற்கெதிராகப் போராடிய ஐரோம் ஷர்மிளா பல்லாண்டுகளாக உண்ணாவிரதம் இருப்பது பற்றிய செய்தியை ஒரு ஓரத்தில்கூட சொல்லாத சர்குலேசன், டி.ஆர்.பி. ஈனப்பிறவிகள் உண்ணாவிரதத்திற்கு இண்டர்வெல் விடும் கோமாளிகளுக்கும், வாய்ச்சவடால் பேசும் போலிகளுக்கு வெற்று விளம்பரம் தேடித்தருகிறார்கள்.
எல்லா உண்ணாவிரதத்திலும் முடிவில் பழச்சாறு தந்து முடிப்பது வழக்கம். காந்தியின் சீடன் அன்னாஹசாரேவுக்கோ ஆட்டுப்பால் சாயாதான் தரவேண்டும்போல. அந்தளவிற்குத்தான் அவர் காந்தியைப் புரிந்து கொண்டிருக்கிறார். இந்த ஆட்டுப்பால் சாயாக்களின் அரசியல் பிஜேபிக்கோ, காங்கிரசுக்கோ போக்கினைப்பொறுத்து யாருக்கேனும் உதவலாம். இப்போதைக்கு ஆட்டுப்பால் சாயா வழங்கியபிறகு சியர்ஸ் சத்தத்துடன் ஜெய்காளி சத்தமும் கேட்கிறது. எனினும் பின்னாளில் ஆட்டுப்பால் சாயாவின் அரசியலோ அல்லது மாட்டுக்கறி எதிர்ப்பு அரசியலோ இங்கு தாண்டவமாடும். அப்பொழுதும் இங்கு ஊழல் இருக்கும். சுரண்டலும் இருக்கும். ஏனென்றால் இது முதலாளித்துவம் வடிவமைத்துத் தந்த ஜனநாயகம். அது அப்படித்தானிருக்கும்.
(அருப்புக்கோட்டையில் 2011 ஜூலை 2 ஆம் நாள் மாவிபக நடத்திய தோழர் கு.பா. நினைவுநாள் கருத்தரங்கில் முன்வைக்கப் பெற்ற கட்டுரை)
தற்போதுள்ள நாட்களில் எந்த விஷயத்தைப் பற்றியும் யாரும் முழுமையாகப் பேசுவதில்லை என்பதால், எதையுமே முழுமையாக தெரிந்து கொள்ள முடிவதில்லை.
ReplyDeleteஅருமையான ஆழமான கட்டுரை... நடைபெரும் நுண் அரசியலை நன்கு விளக்குகிறது - பாண்டு, சிவகாசி
ReplyDelete