நான் என்னுள் எழுந்த வார்த்தைகளுக்கெல்லாம் வர்ணம் பூசிக்கொண்டிருந்தேன். கடிகாரம் நேரத்தைத் தின்றுகொண்டிருந்தது. அந்த சத்தம் அறையெங்கும் நிறைந்திருந்தாலும் என்னை மறந்து நான் வர்ணம் பூசுவதிலேயே கவனம் செலுத்திக் கொண்டிருந்தேன். அந்த வார்த்தைகள் என்னுள் எப்படி எழுகின்றன என்ற சிந்தனையில் சிறிது நேரம் பயணம் செய்யத் தொடங்கினேன்.
சிறுவயதில் வண்ணத்துப் பூச்சியின் பின்னாலேயே அதைப் பிடிக்கச் சென்றபோது கீழே விழுந்து முள் குத்தியது. பின்னொருநாளில் தும்மல் போட்டதற்காக ஒரு நீள மூங்கில் பிரம்பால் எனது வகுப்பாசிரியர் வெள்ளாளப்பாண்டியன் எனது கையைப் பதம் பார்த்தது. முதன் முதலில் மிதிவண்டி ஓட்டிப் பழகிய நாட்களில் எனது தந்தையின் பெரிய மிதிவண்டியை ஓட்டியதும், எதிரே ஒரு கிழவி வந்ததால் வண்டியை நிறுத்த கால் எட்டாததால் முன்னால் குதித்து மர்மப்பகுதியில் அடிபட்டது.
வகுப்பறையில் பெண்கள் மத்தியில் என்னைக் காட்டிக் கொள்ள வார்த்தைகளைப் பிடித்து மடித்து மடித்து கவிதையென ஒரு பிரதிக்குள் புதைத்தது. சிகரெட் ஒன்றை நண்பனிடம் வாங்கி இழுத்து இருமி இருமிக் கண்கள் கலங்கியது. எதிர் வீட்டுப் பெண்ணுக்குக் காதல் கடிதம் எழுதி அவளது அண்ணனுடன் சண்டையிட்டுக் கை ஒடிந்தது.
ஆனால் இப்போது வந்த வார்த்தைகளுக்கும் இந்த நிகழ்வுகளுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்பதை மூளை ஆய்வு செய்து சொன்னது. ஏதோ ஒன்று உள்ளிருந்து இயக்கியே நான் எழுதுகிறேனா? “இதுவரை யாரும் எழுதாததை யாருக்கும் தெரியாத வார்த்தைகளை ஒன்றும் நீ எழுதிவிடவில்லை“ என்று சுவரில் படிந்த எனது நிழல் சொல்லிச் சிரித்தது.
எழுந்து சென்று கண்ணாடியில் என்னைப் பார்த்தேன். எனது பிம்பம், “நிழலோடு வா” என உத்தரவிட்டது. “என்னைப் பார்க்கத்தான் உன்னை தேடி வந்தேன்” என்றதும் அமைதியாக என்னைப் பிரதிபலித்தது. எழுதிக்கொண்டிருந்த பேனாவிற்குள் இருந்த ஊதா நிற மை வெளியேறி ஒரு பூதம் போல் உருவமாகி, “வந்து எழுதித் தொலை. என்னால் தாங்க முடியவில்லை. எத்தனை வார்த்தைகளை எத்தனை காலங்களுக்குத்தான் என்னுள்ளே வைத்துக் கொண்டு நான் அவதிப்படுவது?” என்று கத்தியதும் திடுதிடுவென ஓடிவந்து மீண்டும் கையில் பேனாவை எடுத்தேன்.
எழுத்துக்கள் எல்லாம் தெரியும். எத்தனை எழுத்துக்களைச் சேர்ப்பது? எந்த வார்த்தையை உருவாக்குவது? தூங்கிக் கொண்டிருந்த என் துணைவியின் கூந்தலிலிருந்து நசுங்கிக் காய்ந்து போன பூக்கள் எல்லாம் நாரைவிட்டு வெளியேறி என் அருகே வந்து வார்த்தைகளாகி “நீ கோக்க மட்டுமே செய்கிறாய்” எனச் சிரித்தன.
எனக்குள் கோபம் எழுந்தது. அத்தனை பூக்களையும் எடுத்து சன்னல் வழியே வெளியே வீசினேன். அவைகள் நிலவின் மீது பட்டு நிலவின் பல பகுதிகளில் கருப்பான காயமாகின. தென்றல் என் கோபத்தைத் தணிக்க வார்த்கைள் இல்லாமல் வந்து வருடிக் கொடுத்தது.
வர்ணம் தீட்டிக் கொண்டிருந்த வார்த்தைகள் நிறைந்த அந்தக் காகிதத்தைக் கசக்கி வெளியே எறிந்தேன். இரவுப்பயணம் சென்று கொண்டிருந்த வெள்ளைப் பறவைகள் ஏதோ உணவு கிடைத்ததே என காகிதங்களில் இருந்து கொட்டிய வார்த்தைகளை எடுத்துக் கொண்டு உற்சாகச் சத்தமிட்டுப் பறந்தன.
என் மகள் ஒன்றுக்கு இருந்தாள். அவளது ஆடையைக் கழட்டி வேறு போர்வையில் படுக்க வைத்தேன். ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் இருந்தாலும் அவைகள் ஒன்றாக இணையும்போது என்ன அர்த்தத்தை உருவாக்குகின்றன? அந்த ஒற்றை அர்த்தம் வாசகனுக்குள் என்ன செய்யும்? அதை எண்ணி வார்த்கைளைத் தேடலாம் என மீண்டும் வார்த்தைகளோடு ஒரு யுத்தத்திற்குத் தயாரானேன்.
காலவெளிதாண்டி செல்ல என் ஆழ்மனதிற்குள் பயணமானேன். வட்சவட்சமாய் வார்த்தைகள் முளைத்துக் கொண்டே இருந்தன. வண்ணத்துப் பூச்சிகள் போல் அழகானவற்றைப் பறித்து வந்து காகிதத்தில் கொட்டினேன். நாய் ஒன்று ஊளையிட தொடர்ந்து நான்கைந்து நாய்கள் சேர்ந்து இசைபாட விசில் சத்தம் கேட்டுக் கொண்டே வந்தது. கொஞ்ச கொஞ்சமாய் கரைந்து காணாமல் போனது. வந்த வார்த்தைகள் எல்லாம் அறுந்துபோய்விட மீண்டும் வெறுமையாகிப் போனேன்.
ஒரு காகிதத்தில் இன்னதென்று சொல்ல முடியாதபடி என் விரல்கள் ஏதோ ஒன்றைக் கிறுக்கிக் கொண்டிருந்தன. பலமுறை இதுபோன்ற யுத்தத்தில் ஈடுபட்டு புறமுதுகு காட்டி ஓடிச்சென்று போர்வைக்குள் ஒளிந்துகொண்டது உண்டு. இன்றும் அப்படித்தானா? என்ற சலிப்பு வந்தது.
அந்தத் தாடிக்காரக் கிழவன் நாளை எதிரே உட்கார்ந்துகொண்டு நக்கலாகச் சிரிப்பான். அவனுக்காகவாவது ஏதாவது எழுதித் தொலைக்க வேண்டும். அவனது தாடியிலிருந்த மயிர்கள் பாம்புபோல் வளர்ந்து வந்து என் கைகளை இறுக்கித் தொத்தத் தொடங்கின.
எந்தத் தலைப்பை நினைத்தாலும் எவனாவது ஒருவன் அதுகுறித்து ஏற்கனவே எழுதி வைத்திருக்கிறான். ஏன்தான் இந்த இரண்டாயிரம் ஆண்டுகால பழமையான மொழியில் வந்து பிறந்து தொலைத்தேனோ? எதை எழுதினாலும் “போலச் செய்துள்ளாய். அதில் உள்ளது இதில் உள்ளது” என்று விமர்சனங்கள்.
இந்த ஒற்றை அர்த்த வெளியில் நடப்பதைவிட இரட்டில் நடந்தால் இலகுவாகத் தப்பித்துவிடலாம் என யோசனை தோன்றியது. கயிறு என்றால் பாம்பு எனலாம். பாம்பு என்றால் விழுது எனலாம். விழுது என்றால் துண்டு எனலாம். எந்த வார்த்தைக்கும் அதன் அர்த்தம் தருகின்ற மையத்தை நொறுக்கிவிட்டால் போதும் அவனவனுக்கு வேண்டியதை வேனவனே ஊகித்துக் கொள்வான்.
அர்த்தம் குறித்தோ வார்த்தை குறித்தோ விமர்சனப் பேய்களின் வாய்களுக்குள் சிக்காமல் தப்பிவிடலாம். வர்ணம் தீட்டி வாழ்வதை விட வார்த்தை உடைத்து எளிதாக நிற்கலாம். அர்த்தம் சிதைத்து வார்த்தை உடைத்து எழுத எத்தனித்தபோது இதயத்திலிருந்த ஒளி சட்டென என்னை நிராகரித்து வெளியேறி ஒரு பறவை போல வடிவெடுத்துச் சடசடவென பறந்து போனது.
வார்த்தைகளைக் கடித்துக் குதறி அர்த்தத்தைத் சிதைத்து மொழியின் குருதியை வாய்களில் ஒழுகவிட்ட ரத்தக் காட்டேறிகளின் கூட்டத்தில் யாருக்கும் தெரியாமல் பறவை அமர்ந்தது. ஒவ்வொன்றும் புதியதாய் ஒவ்வொரு காட்டேறியின் பேச்சும் புதுமையாய் புதியாததாய் இருந்தன. எங்கெங்கோ செத்துப்போன இசப்பிணங்களின் நாற்றத்தை வாசமென எண்ணி அதில் மொய்த்திடத் துடித்தன. வார்த்தைகளை மட்டுமல்ல சொற்களையும் கடித்துத் துப்புக்கொண்டிருந்தன.
அவர்கள் இழுத்து வந்த பலநூற்றாண்டு கன்னி ஒருத்தி துகிலுறியப்பட்டு ஒரு மூலையில் அழுது கொண்டிருந்தாள். ரத்தக் காட்டேறிகளின் வாயிலிருந்து வெளியேறிய சொல்லம்புகள் அவளைக் குத்திக் கிழித்தன். அவர்களது நூல்களுக்குள் செத்துக் கிடக்கும் பிரதிகளில் இருந்த சிதைந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் முள்கயிறுகளாகி அவளைத் துண்டு தண்டாக்கி அழித்திட அவளையே சுற்றிக் கொண்டிருந்தன.
தங்களை கவிதாயினியாக அடையாளம் காட்டிக் கொள்ள தங்களது இருப்பை அதிர்வுகளால் உலகுக்கு உணர்ந்தத அங்கிருந்த பெண்கள் தங்களது அந்தரங்க உறுப்புகளை அறுத்து அறுத்து இரத்தம் சொட்ட சொட்ட காகிதங்களில் ஒட்ட வைத்துக் கொண்டு வந்திருந்தார்கள்.
கூரைமேலிருந்த ஒளிப்பறவை அரண்டுபோய் செய்வதறியாது நிர்வாணமாய் நின்று கொண்டிருந்த அந்த கன்னியை அப்படியே மூடி வானில் பறந்து கடலுக்குள் இருந்த விழிநீர் வடிவ தேசத்திற்கு காப்பாற்றச் சென்றது. குறிகள் குறித்த விவதங்களின் மூலம் கைகலப்பில் ரத்தக்காட்டேறிகள் இருந்ததால் கன்னி மறைந்து போனதை அவைகள் உணரவில்லை. அந்தக் கூட்டம் இலக்கியப் பத்திரிகைகளின் தாகங்களுக்கு நீர் வார்த்தது.
சிங்கத்தின் விந்தில் ஜனித்த அசிங்க மிருகமொன்று நரிகள் உதவியால் புலிக்கறி தின்று கொண்டிருந்த காட்டிற்குள் முள்வேலிகளுக்கிடையே முடங்கிக் கிடந்த அவளது பிள்ளைகளிடம் ஒளிப்பறவை அவளை ஒப்படைத்தது. அங்கிருந்த அவளது நல்லபிள்ளைகள் “உனக்குப் பிள்ளையாக பிறந்ததால்தான் நாங்கள் நாடிழந்து வீடிழந்து உறவிழந்து உரிமையிழந்து உயிரிழக்காது அவதியுறுகிறோம்” எனப் புலம்பி அவளை ஒதுக்கினார்கள். “நாம் ஓலமிட்டடபோது மௌனத்தை முழுங்கிக் கொண்ட தேசத்திலிருந்து வந்த இந்த பறவையும் நது விரோதிதான்” என ஒரு குரல் எழுந்தததும் ஒளிப்பறவை நோக்கி பல்லாயிரம் கற்கள் பறந்து வந்தன.
அப்போது மேகங்களிடையே இருந்து இறங்கி வந்த ஒரு கூட்டம் அந்தக் கன்னியைத் தங்கச் சங்கிலியால் பிணைத்து வானவீதி வழியே ஒழுத்துச் சென்றது. வேசியின் மார்வில் பால்குடித்து வளர்ந்த அவளது பிள்ளைகள் ஆயிரக்கணக்கில் கூடிய பெருவிழவின் மத்தியில் இறக்கிவிட்டது.
அவளுக்குப் பட்டாடைகள் அணிவித்து அவளது புகழைப்பாடி பரவசமாக்கியது. அவளை உச்சத்திற்கு ஏற்றுகிறோமெனக் கூறி வெள்ளைத்துரை விட்டுப்போன கழுமரத்தின் உச்சியில் ஏற்றியது. கருடன் ஒன்று விண்ணில் பறந்தபடி பார்த்துச் சிரித்தது.
ஆனால் தனது பிள்ளைகள் ஒருபுறம் அவதிப்படும்போது தனக்கிந்த ஆர்ப்பாட்டம் தேவையில்லை என கழுமரத்திலிருந்து குதித்து பட்டாடைகள் களைந்து நிர்வாணமாய் ஓடத் தொடங்கினாள். பதினோரு கோடி ரூபாய் மதுபானங்களை அவள்மீது கொட்டி மகிழ்ச்சியை அந்தக் கூட்டம் கொண்டாடியது. ‘தனது பிள்ளைகள் உடன்பிறந்த சோதரனுக்கு உதவிக்கரம் நீட்டாமல் மூளையை விற்றுவிட்டார்களே’ என எண்ணி அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த கவியரங்கின் மத்தியில் தூக்கில் தொங்கினாள்.
நட்சத்திரமாய் விண்ணில் மினனிக் கொண்டிருந்த முண்டாசுக்காரன் கையில் தடியுடன் அங்கே வந்து தாயின் பாதத்தில் விழுந்து அழத்தொடங்கினான். “ஏனடா அழுகிறாய். தீர்க்கதரிசி நீ சொன்னது இன்றுதான் நிறைவேறியுள்ளது. இங்கே நான் கொல்லப்பட்டாலும் எனக்குச் சாவில்லை. எத்தனைபேர் எத்தனைமுறை என்னைக் கொன்று பார்த்தார்கள். உன்னைப் போன்றோர் என்னை மீண்டும் பிறப்பித்துவிடுவதில்லையா? அழாதே வா போகலாம்” என அவன் கைபிடித்துச் சென்றாள்.
இதுகுறித்து அக்கறைப்பட அங்கே எந்த பிள்ளையும் இல்லை. மாலை விரும்பிகள் ‘பெருவிழா பெரும் வெற்றி’ என உலகெங்கும் தெரிவித்தார்கள். ஒளிப்பறவை ஒன்றும் செய்ய இயலாது பூமியெங்கும் ஒளியின் வேத்தில் கிறுக்குப் பிடித்தாற்போல் சுழன்று சுழன்று வந்தது.
அப்போது அதன் காதுகளில் உலகெங்கும் ஒரே குரல் விழுந்தது. “எங்கள் வயிற்றை மட்டும் எப்படியாவது அறுத்துவிடுங்கள். அது எழுப்பும் ஒலி எங்களால் தாங்கமுடியவில்லை” அவர்கள் பெயர் எழுதப்பட்ட அரிசியை திருடித் தின்றவர்கள் வானத்தில் பறந்து கொண்டே இவர்கள் குரல் கேட்காத திசைநோக்கிப் பயணம் செய்கிறார்கள்.
என் வயிறும் ஓலமிடத் தொடங்கியது. என் பெயர் பொறித்த அரிசியைத் தேடி எலியாகி ஓடினேன். ரேசன் கடையிலிருந்த பதிவேட்டில் எனக்கு வழங்கப்பட்டிருந்தது. நானும் முடிந்தவரை தேடிப் பார்த்தேன். சிக்கவே இல்லை. அவைகள் ஏதோ ஒரு சரக்குந்தில் கேரளத்திற்குச் சென்று கொண்டிருந்தன. என்ன செய்தென்று தெரியாமல் ஒரு செம்பு தண்ணீரைக் குடித்தேன். சத்தம் கொஞ்சம் குறைந்தது.
குறிகள் குறித்தோ அர்த்தம் சிதைத்தோ இந்த ஓலத்தை ஒழித்திட வழியுண்டா? வர்ணம் பூசி வார்த்தைகள் கோத்து எந்தப் பிணத்திற்கு மாலையிடுவது? கேள்விகள் வார்த்தைகளாகி வார்தைகள் ஆயுதங்களாகி என்னைத் துரத்தத் தொடங்கின. இதுபோன்று கோடிக்கணக்கான மக்களின் வயிற்றிலிருந்து எழுந்த ஆயுத வார்த்தைகளை தன் அலகில் சேகரித்து சுமந்து வந்த ஒளிப்பறவை என் மனதிற்குள் புகுந்து கொண்டது.
வர்ணம் பூசப்பட்ட வார்தைகள் எல்லாம் மலமாக மாறி அருவருப்பூட்டின. கண்களை மூடிக் கொண்டு அந்த வெற்று வார்தைகள் நிறைந்த காகிதத்தைக் கசக்கி எறிந்துவிட்டு காலத்தைப் பார்த்தேன். ஐந்து மணியில் கடிகாரம் ஆடிக்கொண்டிருந்தது. விடியலைத் துயிலெழுப்ப காகங்கள் கரையத் தொடங்கின. எழுந்து தேநீர் குடிக்க கிளம்பி விட்டேன். உங்களுக்கும் தேநீர் வேண்டுமா?
(மானுட விடுதலை பண்பாட்டுக் கழகம் 2011 ஜூலை 2 ஆம் நாள் அருப்புக்கோட்டையில் நடத்திய தோழர் கு.பா. நினைவுநாள் படைப்பரங்கில் வாசிக்கப் பெற்ற சிறுகதை)
No comments:
Post a Comment