Monday, July 25, 2011

2011 ஜூலை 2 கு.பா.வின் நினைவஞ்சலி - சுப்புராயுலு



ஒவ்வொரு ஜூலை இரண்டும்
எம் மனதில் சிதாரின் நரம்பதிர்வில் பரவும்
சோக அலைகளை எழுப்பும்.
கு.பா. எனும் தோழரின்
இழப்பின் வேதனைகள்
நம்மில் துயர அலைகளை எழுப்பும்.

கு.பா.
எதனையும் கேள்விக்குட்படுத்தும்
உன் தர்க்கங்களின் தேரோட்டம்
எம்மனதில் ஆழ்ந்த தடம் பதித்துச் சென்றது.
குறுந்தகடுகளின் சுழற்சியில்
வெளிப்படும் சலன பிம்பங்களாய்
‘தமபக’ என்ற வாகனத்தின்
சகபயணியாய் உன்னோடு
தொடர்ந்து பயணப்பட்டேன்.
உன்னோடு பேசிப் பழகிய நாட்கள்
மிகக்குறைவானாலும் செதுக்கி
செழுமைப்பட்ட உன் ஆளுமை தந்த
வசீகரத்தால் நாங்கள் கவரப்பட்டோம்.
போகப்போக நீளும் நம் பயணப்பாதைகளில்
யாத்ரீகர் வரலாம், இடையில் நின்று போகலாம்.

ஆனால் நண்பனே!
உன் இழப்பு தந்த வலிகளோடு
நீ விட்டுச் சென்ற வெற்றிடத்தை
நிரப்ப முடியாமலேயே இலக்கு நோக்கிய
நம்பயணம் தொடர்ந்து செல்கிறது.
உன் குடும்ப வெளியில் உன் இழப்பு
தந்த வெறுமையின் இருளை
உன் கன்றுகள் வளர்ந்து வந்து
வெளிச்சமிட்டு நிரப்பலாம்.
உட்கருவை வட்டமிடும் மின்துகள்கள்
வட்டப்பாதையை விட்டு விலகிச் சென்றாலும்
உட்கருவின் நிறை ஆற்றல் மற்றதொரு
துகளைக் கொண்டு ஈடு செய்யலாம்.

தோழனே!
நீ இல்லாத நம் பயணத்தை
யாரைக் கொண்டு நிரப்புவது?

(மானுட விடுதலை பண்பாட்டுக் கழகம் 2011 ஜூலை 2 ஆம் நாள் அருப்புக்கோட்டையில் நடத்திய தோழர் கு.பா. நினைவுநாள் படைப்பரங்கில் வாசிக்கப் பெற்ற கவிதை)

No comments:

Post a Comment