இங்கே பெண்ணியம்
என்பதும் கட்டற்ற பாலியல் சுதந்திரம் என்பதும் ஒன்றாகவும், பிரித்தும் மாறிமாறி தவறாகப்
புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. இங்கே இவை இரண்டும் ஒன்றெனவும், வேறுவேறெனவும் பலகட்டமாக
பகுப்பாய்வு செய்து அணுப்பிளவுக்கும் சவால்விடும் இரு பிரிவுகளாக விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.
இங்கே பெண்ணியம், பெண் விடுதலை போன்ற பதங்கள் சமூகத்தால் பல காலமாக தவறான புரிதலோடே
அணுகப்பட்டுள்ளன. இங்கு பெரியாரின் வழிவந்தவர்களாக தங்களைத் தாங்களே அறிவித்துக்கொண்டு
அதிதீவிர வறட்டு பெண்ணியம் பேசும் பெண்ணியவாதிகளிடம் மிகப்பெரிய சிக்கல் ஒன்று உள்ளது. அவர்கள் பெரியாரின்
பார்ப்பனீய எதிர்ப்பிலிருந்து கற்ற பாடத்திலிருந்து, அதாவது எப்படி பார்ப்பன எதிர்ப்பை
பார்ப்பனீய எதிர்ப்பாக மாற்றிக்கொண்டார்களோ அதுபோலவே ஆணாதிக்க எதிர்ப்புக்கு ஆண்களை
எதிர்ப்பது என்ற மனநிலையோடு தாங்கள் பேசும் பெண்ணியத்தினைத் தொடங்குகிறார்கள்.
இங்கு பார்ப்பனர்களும்
பார்ப்பனீய எதிர்ப்பாளர்களும் எதிரெதிர் துருவமாய் நிற்பதுபோல, முதலாளிகளும் தொழிலாளர்களும்
எதிரெதிர் துருவம் என்பதுபோல ஆண்களும் பெண்களும் எதிரெதிர் துருவமாக்கிவிட முடியாது,
அது இயற்கையும் அல்ல என்பதை இந்த அதி தீவிர வறட்டு பெண்ணியவாதிகள் புரிந்துகொள்வதில்லை.
மேலே சொன்ன மற்ற
இரண்டிலும் போலவல்லாமல் பெண்ணியத்தின் எதிராளர்கள் (ஆண்கள்) சமூகத்தில் பங்காளிகளாய்
இருக்கும் நிலை இங்கே உள்ளது. எனவே இவர்களோடு தொடர்ந்த உரையாடல் நிகழ்த்திக்கொண்டேயிருக்கவேண்டிய
தேவையும் உள்ளது. பாலியல் சுதந்திரம் என்பது (கட்டற்ற என்பதற்குள் இன்னும் வரவில்லை)
பாலியல் புரிதல் உடைய சமூகத்தில் நிகழ வேண்டிய ஒன்று. இங்கே பாலியல் புரிதல் என்பது
என்ன? இங்கே உடலுறவு என்பது இயல்பான ஒன்றாகப் பார்க்கப் படுகிறதா? இன்னும் முதலிரவு
படுக்கையில் வெள்ளைத் துணி விரித்து அடுத்தநாள் காலையில் அதில் ரத்தக் கறை இல்லை என்றால்
பெண்ணை அவமானப் படுத்தி வீட்டுக்கு திருப்பியனுப்பும் மக்கள் உடைய நாடு இது. சொத்து
குடும்பத்துக்குள் இருப்பதற்காக 8 வயது சிறுவனுக்கு 20 வயது பெண்ணை திருமணம் செய்து
அந்த சிறுவன் வயது வரும் முன் அவள் இரண்டு குழந்தைகளோடு இருக்கும் மக்களும் வாழும்
நாடு இது. இவர்கள் சிறுபான்மையினர் என்று நீங்கள் கூறினால், ஆகப்பெரும் பாலியல் புரட்சி
வேண்டும் நீங்கள் அவர்களைவிட சிறுபான்மையினர் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
இந்த மக்களோடுதான்
நாம் விவாதம் நடத்த வேண்டியுள்ளது. இவர்களெல்லாம் பிற்போக்குவாதிகள், இவர்களிடமெல்லாம்
நான் பேச தேவையில்லை. நான் நேரடியாக புரட்சிதான் பண்ணுவேன், என்பவர்கள் யாருக்காக புரட்சி
பண்ணப் போகிறீர்கள்? உலகில் பாலுறவைத் தவிர வேறெந்த பிரச்னையும் இல்லாத பெண்களிடம்தான்
பேசப்போகிறீர்கள்,, பாலுறவில்கூட பிரச்சினை இல்லாத பெண்களையும்கூட மண்டையை கழுவி, உனக்கு
பிரச்சினை இருக்கு, என்று நம்பவைத்து பாலியல் 'சுதந்திரம்தான்', 'அந்த' பிரச்சினைகளுக்கு
தீர்வு என்று நம்பவைத்து அவர்களுக்கான பிரச்சினைகளை உருவாக்கப் போகிறீர்கள் என்றால்
நீங்கள் தயவுசெய்து இதனை படிக்க தேவையில்லை.
சமூக ஆய்வுகள்
அனைத்தும் சொல்லும் பொதுவான கருத்து, காட்டுமிராண்டி சமுதாயத்தின் கட்டற்ற புணர்ச்சி
கொண்டிருந்த அதே பெண்கள்தான் அதை தடைசெய்து சிறந்த இணை தேர்வு என்ற முடிவினை எடுத்தார்கள்
(இன்னும் குடும்பம் என்ற அமைப்புக்குள் நான் வரவில்லை). ஒருபுறம் பாலியல் நோய்கள் காரணமாக
இருந்தாலும், இன்னொரு முக்கிய காரணம் சிறந்த வாரிசினை உருவாக்குவதுதான். ஏனென்றால்,
இயற்கையின் விதிப்படி பாலுறவின் நோக்கம் இனப்பெருக்கம் மட்டும்தான். இந்தப் படிநிலையிலும், ஒருவனுக்கு ஒருத்தி என்பது நடை முறையில் இல்லை.
குழந்தை பெறவும், கர்ப்ப காலத்தில் உணவு தேவைக்கும் ஆண் தேவைப்பட்டானேயொழிய வேறெதற்கும்
இல்லை. அடுத்த இனப்பெருக்கத்துக்கு வேறு ஆணோ அல்லது அதே ஆணோ, தேர்வு பெண்ணிடம் மட்டுமே
இருந்தது.
இப்போது ஒருவனுக்கு
ஒருத்தி முறைக்கு வருவோம், இந்தப் பதம் உண்மையில் உயிரற்ற ஜடப்பதம், ஏனெனில் இந்த முறை
ஆரம்பித்த காலம்தொட்டு அது ஒருத்திக்கு ஒருவன் என்ற முறைப்படியே இருந்து வந்துள்ளது.
ஆண் பலதார மண முறையிலேயே இருந்துள்ளான். இது எவ்வாறு தோன்றியது என்பதற்கு, குடும்பத்தின்
தோற்றத்தினை, கணங்களின்(clans) தோற்றத்தினை புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. ஆதியில் குடும்பத்தின்
தோற்றத்தில் பெண் பெரும்பங்கு வகித்தாலும் விரைவில் அதை ஆண் கைப்பற்றிக்கொள்கின்றான்.
தொடக்கத்தில் குடும்பத்தின் சொத்துக்கள் அனைத்திற்கும் பெண்ணே உரிமையாளராக இருந்துள்ளார்.
வாழையடி வாழையாக அவளுக்குப் பிறக்கும் பெண்களுக்கே சொத்து என்பதும் நடைமுறையில் இருந்துள்ளது.
இங்கே சொத்து எனப்படுவது, உணவும், வீடும், ஆயுதங்களுமே. இந்நிலையில்தான் கர்ப்ப காலத்திலும்,
சொத்துக்களை நிர்வகிப்பதிலும் பெண் வீட்டில் தங்கும் நிலை ஏற்படுகிறது. ஏனெனில் சொத்துக்களை
பாதுகாப்பது உணவுத்தேடலைவிட முக்கியமானதாக பெண்ணால் கருதப் படுகிறது. இப்போது சொத்து
உருவாக்கத்தில் பெண்களின் செயல்பாடு குறைந்ததால் கொஞ்சம் கொஞ்சமாக சொத்துக்களை ஆண்
கைப்பற்றிக் கொள்கிறான். என்னதான் பெண் சொத்தை நிர்வகித்தாலும் ஆணே அதன் உடைமையாளனாக
மாறுகிறான்.
இப்போதுதான் சிக்கலுக்குரிய
மாபெரும் மாற்றம் நிகழ்கிறது. சொத்து பெண்ணின் உடைமையாக இருந்தவரைக்கும் கவலைகள் எதுவும்
இல்லை. அந்தப் பெண்ணினுடைய வாரிசுகளுக்கு இயல்பாகவே சொத்து சென்று சேர்ந்துவிடுகிறது.
ஆனால் சொத்துக்களின் உடைமையாளனாக ஆண் மாறியதும் அவனது வாரிசுகளுக்கு சொத்தினை வழங்குவதில்
பெரும் குழப்பம் நேர்கிறது. ஏனெனில் ஆணுக்கு அவனது வாரிசு யார் என்பதைத் தீர்மானிப்பது
பெண் போன்று அவ்வளவு எளிமையாக இல்லை. எனவே ஆணுக்கு தன்னுடைய வாரிசு குறித்த தீர்மானகரமான
உண்மைத்தன்மை தேவைப்படுகிறது. அப்போதுதான் ஒரு ஆணுடன் மட்டும் ஒரு குறிப்பிட்ட காலம்
உறவுகொண்டு பெற்றெடுக்கும் வாரிசுகளெல்லாம் அந்த ஆணின் வாரிசுகள் என்றும், அவன் சொத்துக்கு
வாரிசுகள் என்றும் ஒரு தீர்மானகரமான முடிவுக்கு வர முடிகிறது. எனவே சொத்துக்களின் வாரிசுகளைத்
தேர்ந்தெடுக்கவே ஆண், பெண்ணை தன்னுடன் மட்டும் வாழும்படி நிர்பந்திக்கிறான். இதனை ஏங்கல்ஸ்,
'குடும்பம், அரசு, தனிச்சொத்து ஆகியவற்றின் தோற்றம்' புத்தகத்தில் விளக்கியிருப்பார்.
இவ்வாறு சொத்துக்களுக்காக பெண்களை தனி ஒருவனுடன் வாழ நிர்பந்தித்த சமுதாயம், பின்பு
பெண்ணையும் ஆணின் சொத்துக்களில் ஒன்றாக்கிவிட்டது.
இவை அனைத்தையும்
மனதில்கொண்டு இப்போது மீண்டும் சமகாலத்துக்கு வருவோம். நம் அதிதீவிர வறட்டு பெண்ணியவாதிகள்
முன்வைக்கும் கட்டற்ற பாலியல் தேவை (சுதந்திரம் என்று நான் கருதவில்லை) என்பதை கடந்த
காலங்களில் பெண்களே தடை செய்திருக்கிறார்கள் என்பது புரிந்துகொள்ளக்கூடியது. ஆனால்
கட்டற்ற பாலியல் தேவை என்பது மனிதருக்கு மனிதர் மாறுபடுவது என்பது எந்தளவு புரிந்துகொள்ளவேண்டியதோ
அதே அளவு, கட்டற்ற பாலியல் தேவை என்பது எல்லா மனிதருக்கும் பொதுவான தீர்வல்ல என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். அடுத்ததாக
பாலியல் சுதந்திரம் என்பது பாலியல் தேர்வுக்கான சுதந்திரமாகவும் இருக்க வேண்டும். இங்கே
பாலியல் முடிச்சு என்பது திருமணங்களால் நிகழ்த்தப்ப்படுகிறது. அதில் எந்தளவு பாலியல்
தேர்வுக்கான சுதந்திரம் பெண்களுக்கு வழங்கப் படுகிறது? இங்கே பெரும்பாலான திருமணங்கள்
குடும்பத்தினரால் செய்யப்படும் தெரிவுகள்தானே.
இங்கே ஆணோ பெண்ணோ
இயல்பாக உறவுகொள்வதோ, காதல்வயப்படுவதோ நிகழ்கிறதா? ஒரு பெண்ணிடம் நட்பாக பழக அவளை எப்படி
அணுகவேண்டும் என்று தெரியாத ஆண்கள் இந்த நாட்டில் எத்தனைகோடிபேர் உள்ளனர். அவர்களுக்கு
புரிதல் ஏற்படத்தேவையில்லை என்பது எவ்வளவு பெரிய வன்முறை? இயல்பான உறவு பிரிவுகளை சாதாரணமாக
எடுத்துக்கொள்ளாமல் ஆசிட் ஊற்றும் 'முன்னாள் காதலர்களை' பார்க்கிறோமே. இவர்களுக்கெல்லாம்
புரிதல் ஏற்பட விவாதம் நிகழ்த்தவே தேவையில்லையா? இவர்களையெல்லாம் முட்டாள்கள்/பிற்போக்குவாதிகள்
என்று தள்ளிவைப்பதன்மூலம், தாங்கள் சமுதாயத்தைவிட்டு விலகிப்போய் சிறு கூட்டமாக சுருங்கிப்போய்விடுவதை
இந்த அதிதீவிர வறட்டு பெண்ணியவாதிகள் உணர்வதேயில்லையா?
குடும்பத்தின்
உருவாக்கம் குறித்து மேலே கூறியவற்றிலிருந்து நாம் புரிந்துகொள்ளக்கூடியது. பெண்கள்
அடிமைப்படுத்தப் பட்டதற்கு சொத்துருவாக்கமும், தனியுடைமையுமே அடிப்படைக் காரணம் என்பதேயாகும்.
அப்படியிருக்க மூலமான காரணத்தினை விடுத்துவிட்டு பெண்ணுக்கு விடுதலை என்பது மீன் குழம்பு
செய்த சட்டியைக் கழுவாமல் சக்கரைப் பொங்கல் செய்வது போன்றதுதானே. மேலும் பெண் விடுதலை
என்பது அனைத்து வகையிலுமான விடுதலையாக இருக்க வேண்டும் என்பதே நம் விருப்பம். மாறாக
மற்ற காரணங்களையெல்லாம் புறந்தள்ளிவிட்டு பாலியல் விடுதலை மட்டுமே ஒற்றை இலக்காகப்
பயணிப்பது என்பது ஆணுக்கு சாதகமான ஒன்றாக முடியுமேயன்றி பெண்களுக்கும், பெண் விடுதலைக்கும்
கிஞ்சித்தும் பயன்தராது.
அதுபோக இந்த கட்டற்ற
பாலியல் தேவையை எதோ நம் வறட்டு சித்தாந்தவாதிகள் கண்டுபிடித்துவிடவில்லை. மேட்டுக்குடி
வர்க்கத்தில் இதுவெல்லாம் சகஜம். என்ன நடந்தாலும் ஸ்டேட்டஸ் காப்பாற்றுவது என்பதுதான்
அங்கே பிரதானம். அந்த ஸ்டேட்டஸ் பின்னால் பங்குச்சந்தை, வணிகம் என எல்லாமே பொருளாதார
காரணங்களே மிஞ்சும். தொடக்கத்திலேயே சொன்னதுபோல இங்கே தேவை பொருளாதார சுதந்திரம். இன்னும்
சொல்லப்போனால் பொருளாதார தன்னிறைவு. அதன்பின்னால்தான் ஆணுடன் சண்டையிடவோ, ஏன் விவாதம்
செய்யவோகூட பலத்தினை பெண்களால் பெறமுடியும். இப்போது கட்டற்ற பாலியல் சுதந்திரம் என்ற
பெயரில் குடும்ப அமைப்பிற்குள்ளேயே இருந்துகொண்டு இந்தப் பெண்கள் சாதித்துவிடக்கூடியது
என்ன? பலாபலன்களை ஆண்களுக்கு வழங்கியபடி சமூகத்துடன் நடத்தவேண்டிய விவாதத்துக்கான கதவுகளை
இழுத்துமூடுவது மட்டும்தான்.
ஒட்டுமொத்த சமூகத்தின்
குடும்ப அமைப்பை போலி அமைப்பு என்றும், அவ்வமைப்பில் உள்ள தங்கள் எதிர்ப்பாளர்கள் அனைவரும்
பிற்போக்குவாதிகள் என்றும் கூறிக்கொள்பவர்கள், போலி அமைப்பை உடைக்க கூறும் தீர்வு கட்டற்ற
பாலியல் சுதந்திரம். தங்களை மட்டுமே பெண்ணியவாதிகளாக அறிவித்துக்கொள்ளும் கட்டற்ற பாலியல்
தேவையுடைய இந்தப் பெண்கள், குடும்ப அமைப்பை உடைத்துக்கொண்டு வெளியேறினார்களா என்றால்
இல்லையே. அதற்கான பொருளாதார தன்னிறைவு பெற்றவர்களாக அல்லது அதற்கான வழிகாட்டுதல்களை
பெற்றவர்களாக இல்லையே, அப்படியே இருந்தாலும் அவர்களுக்கு குடும்பம் என்ற அமைப்பு சமூகத்துக்காகவோ,
கௌரவத்துக்காகவோ, அல்லது சொத்துக்களுக்கான (ஓர் ஆணின்)வாரிசுகளை உருவாக்கவோ தேவைப்படுகிறதே.
இப்படி தன்னளவில் தோல்வியடைந்த தீர்வினை உலகப் பொதுமறையாக்க எப்படி இந்தப் வறட்டுப்
பெண்ணியவாதிகள் துணிகிறார்கள்?
இப்படி சமூக பொருளாதார
நிலைமைகளைக் கணக்கில் கொள்ளாமல் வர்க்கப்பார்வையற்ற எந்த ஒரு போராட்டமும் வெற்றியடையாதது
மட்டுமல்லாமல் எதிர்த்தரப்பினை வலுவடையவே வைக்கும். ஏனென்றால் நம் கருத்துக்களால் சமுதாயத்தை
வென்றடைய வேண்டியிருக்கிறது. அதை மறுத்துவிட்டு சமூகத்தை குற்றம்சொல்லி அதைவிட்டு விலகிப்ப்போவதாய்
இருந்தால் நம்முடன் விவாதம் நடத்தவோ, அணிசேரவோ யாரும் வரப்போவதில்லை. மறுபடி சொல்கிறேன்.
நாம் சிறுபான்மையினர். மக்களை நம்பக்கம் இழுக்க ஓயாத விவாதங்கள் புரியவேண்டியுள்ளது.
விவாதங்களுக்கான கதவுகளை திறப்போம். இங்கே உண்மையான தேவை வர்க்க விடுதலைதான் வர்க்க
விடுதலையின் முடிவில், பெண் விடுதலையின் முடிவில் கட்டற்ற பாலியல் தேவை என்பது தனிநபர்
தேர்வாக இருக்கும்.
பாலியல் தேவை மட்டுமல்ல
குடும்பம் என்பதுகூட தனிநபர் தேர்வாகவே இருக்கும். எனவே இங்கு தேவை வர்க்க விடுதலை.
No comments:
Post a Comment