2020 மார்ச் 31ல் தினமணியின் நடுப்பக்கத்தில்
ஊடகவியலாளர் கோதை ஜோதிலட்சுமி ‘முன்னோர் மூடர்கள் அல்லர்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை
எழுதியிருந்தார். கரோனோ வைரஸ் கிருமி பற்றி அந்தக் கட்டுரை தொடங்கியது. அதில், இறை
சக்தியே அனைத்தையும் வழி நடத்துகிறது. அறிவியல் ஆராய்ச்சி போன்ற அனைத்து முயற்சிகளையும்
தாண்டி இறைவன்தான் முடிவைத் தீர்மானிக்க முடியும் எனத் தீர்மானமாகத் தொடர்கிறார்.
இறுதியில்… ‘மூடக்கட்டுகள் யாவும் தகர்த்து உடல்-மன நலம் நாடுவோம். பஹுஜன ஹிதாய; பஹுஜன ஸுகாய என்பதே நம் பண்பாடு’ என முடிக்கிறார்.
அதி அற்புதமாய் அவர்கள் கால்நடைகளை
இவர்கள் வயல்களில் மேய்த்துவிட்டு பட்டியில் அடைத்துவிட்டு “இது நம் பண்ணை” என்று அடையாளம்
காட்டுகிறார்கள். இழப்புகள் இவர்களுக்கென்றும் வரத்துகள் அவர்களுக்கென்றும் அவர்கள்
தீர்மானித்த விளையாட்டின் விதிமுறைகள் இவைதான் என எடுத்துக் காட்டுகின்றார்.
நான் இறைவன் இருக்கிறாரா? என்கிற பகுதிக்குக்கூட
இந்த இடத்தில் வர விரும்பவில்லை. ‘இறை எல்லாவற்றையும் காக்கவல்லது என்ற நம்பிக்கை மனிதனை வழிநடத்துகிறது’ என்கிற இடத்தில்தான் முரண்பாடுள்ளது. கிராமத்தில் ‘நோய்க்கும் பார்; பேய்க்கும் பார்’ என்பார்கள். இங்கே
நோய்க்கான வைத்தியம் பார்க்க ஒத்துக்கொண்ட கிராமத்தின் பாமர மக்கள் அவர்களின் திருப்திக்காகப்
பேய்க்கும் பார்ப்பதில் பெரிதாக ஒன்றும் பிரச்சனையில்லை என நோய்க்குப் பார்க்கச் சொன்னவர்கள்
அமைதி காக்கிறார்கள். அவர்கள் அமைதி காப்பதால் பேய்களை ஒத்துக் கொண்டார்கள் என்று பொருளில்லை.
‘அறிவியல் அறிஞர்களும் ஆராய்ச்சியாளர்களும்’ ஆராய்ச்சிக்கு முந்தைய பூஜைகளிலும் அறிவியல் கண்டுபிடிப்பிற்கு ஆரத்தி எடுப்பது
போன்ற சடங்குகளிலும் தலையிடாததற்கு உண்மையான காரணம் என்ன? நிச்சயமாக இறை நம்மைக் காக்கும்
என அவர்கள் நம்புவதால் இல்லை. உடனிருக்கும் மற்றவர்களின் திருப்திக்காக ஒத்துக் கொண்டிருக்கலாம்.
அல்லது இந்த மூடர்களிடம் விவாதித்துச் செலவிடும் அறிவையும் நேரத்தையும் வேறு வகையில்
பயன்படுத்தலாம் என அமைதி காத்திருக்கலாம். அது ஒருவகை நாகரிகம். ‘பெயக்கண்டும் நஞ்சுண்டமைவர்
நயத்தக நாகரிகம் வேண்டுபவர்’ எனும் வள்ளுவர் காட்டிய
நாகரிகர்கள் அவர்கள். அந்த அமைதியை நம்பிக்கை என திசை திருப்புவது அநாகரிகம்.
‘தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன்
மெய்வருத்தக் கூலி தரும்’ என்று முன்னோர்கள்
வாழ்க்கைக்கு வழிகாட்டியிருக்கிறார்கள். கோதை அவர்கள் சொல்வதுபோல் முயற்சிகள் என்னதான்
செய்தாலும் அதற்கும் அப்பால் இறைவனை நோக்கிப் பிரார்த்தனைகளை முன்வைப்பதுதான் வழி என்றால்
முயற்சிகள் எதற்காக? இது இயங்கியலுக்கே எதிரானது. அவர் சுட்டிக்காட்டும் ‘இறுதியில்
இறைவனை நோக்கிக் கை காட்டு’ம் செய்கை ‘ஏக்கப்
பெருமூச்சு’ என்று முன்னரே அடையாளம் காட்டப்பட்ட
ஒன்றுதான்.
‘இறை நம்பிக்கை என்பது மனித மனத்தின்
அகற்ற முடியாத ஒன்று’ என்கிறார் கோதை அவர்கள்.
பட்ட பாடுகளையும், படும் பாடுகளையும் சொல்லத் தீர்க்க ஓர் இடம் வேண்டும். சொல்லிய இடத்திலிருந்து
குறைகளைத் தீர்க்க ஒரு கரம் நீள வேண்டும். அப்படி இல்லாத உலகில் இறைவனின் தேவை இருக்கத்தான்
செய்யும். ‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்றார் வள்ளலார். ‘எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று
அறியேன்’
என்றார் தாயுமானவர். ‘இன்பமே சூழ்க! எல்லோரும் வாழ்க!’ என்றார் சுத்தானந்த பாரதியார். இப்படியான சிந்தனையும் அதை நோக்கிய செயல்பாடுகளும்
இல்லாத மனிதர்கள் வாழும் உலகில் இறைவனின் தேவை இருக்கத்தான் செய்யும். இதைத்தான் மார்க்ஸ்.
‘ஆன்மாவற்ற உலகின் ஆன்மாவாக இறைவன் இருக்கிறான்’ என்றார். ஆன்மா உள்ள உலகில் இறைவனின் தேவை இருக்காது. நம்முடைய செயல்பாடுகளும்
சிந்தனைகளும் எழுத்துகளும் உலகை ஆன்மா உள்ள ஒன்றாக, பிற உயிர்களை நேசிக்கும் அன்புமயமானதாக
மாற்றுவதற்கல்லாமல் தலைகீழானதாக இருந்தால் மூடக்கட்டுகளை உருவாக்கி உடல்-மன நலத்தைக்
கெடுப்பதாகவே அமையும்.
கைகூப்பி வணங்கும் கலாச்சாரம் நமது
என்பதே கற்பிதம். கைகள் இணைந்து கூம்புவதென்பது பயத்தில் விளைந்த செயல்பாடு. ஒருவர்
கைகூப்பி வணங்கினால் வணக்கத்திற்குரியவர் வணங்கியவரை ஆசிர்வதிப்பார் என்பதுதான் நீங்கள்
குறிப்பிடும் ‘நமது’ கலாச்சாரம். சந்தித்துக்
கொள்ளும் இருவரும் ஒன்றேபோல் சரிநிகர் சமானமானவர்கள் என்றால் கை குலுக்கலும், தோளோடு
தோள் தொட்டுக் கொள்ளுதலுமே மனிதநேயமிக்க மரியாதைக்குரிய செயல்பாடுகள். வியாதியின் காரணமாய்
விலகி நிற்பதை கலாச்சாரம் என்ற பெயரில் நியாயப்படுத்தி விலக்கி வைப்பது நவீன மனுவின்
முகவர்களின் பணியன்றி வேறில்லை. அதைத்தான் அவர் தொடர்ந்து செய்து வருகிறார்.
நம் முன்னோர்கள் சொல்லித் தந்ததை நடைமுறைப்படுத்தச்
சொல்கிறார் கோதை அவர்கள். முன்னோர்கள் ‘தையல் சொல் கேளேல்’ என்றும்தான் சொன்னார்கள். ‘எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் மெய்ப்பொருள்
காண்பதறிவு’ என்றும்தான் சொன்னார்கள். நாம் எதை
எடுத்துக் கொள்வது? சரியானதை யார் சொன்னாலும் கேட்டுத்தான் ஆகவேண்டும் என்பது அறிவின்வழி
கற்ற எதார்த்தம். ‘பொம்பல சொல் அம்பலம் ஏறாது’ என்றார்கள் முன்னோர்கள். இந்தக் கூற்று பொய் என நிரூபித்த ஒரு பெண் நம் நாடாண்டவர்.
மற்றொரு பெண் நம் மாநிலமாண்டவர். இந்த இருவரும் எடுத்துக்காட்டுகளாக இல்லை என்றாலும்கூட
முன்னோர்களின் இந்தக் கூற்று தவறுதான். கோதை ஜோதிலட்சுமியின் கட்டுரை தினமணியின் நடுப்பக்கத்தில்
வந்ததும்கூட அந்தக் கூற்றைப் பொய்ப்பித்த ஒன்றுதானே?
இத்தனையும் தாண்டி முக்கியமான கேள்வி
ஒன்று தொக்கி நிற்கிறது. நமது கலாச்சாரம் என கட்டுரை பல இடங்களில் பேசுகிறது. கடைசியில்
‘பஹுஜன ஹிதாய; பஹுஜன ஸுகாய’ என்பதே நம் பண்பாடு
என்கிறது. (ஒன்றைக் கவனிக்க வேண்டும். மற்ற இடங்களில் எல்லாம் நமது கலாச்சாரம். இந்த
இடத்தில் மட்டும் நம் பண்பாடு.) அப்படியா? இதுதான் நம் பண்பாடா? ஆம் எனில் இந்தக் கட்டுரையில்
‘நாம்’
என்பது யாரைக் குறிக்கின்ற சொல்? ‘நாம்’ இந்தியர்கள் என்றால் பன்முக கலாச்சாரங்களின் கூட்டுத் தேசமான இந்தியாவில் ஒத்திசைவான
ஒத்த கலாச்சாரம் என்று ஒன்று உண்டா? அதற்கான சாத்தியங்கள் உண்டா? சரி. ‘நாம்’ தமிழர்கள் என்றால் நம் பண்பாடு ஏன் சமஸ்கிருதத்தின் சொற்கூட்டால் முன்வைக்கப்படுகிறது?
அது சமஸ்கிருதமா? ஹிந்தியா? தேவபாஷை?. மொத்தத்தில் தமிழ் இல்லை. ‘நாம்’ என்பது இந்துக்கள் என்றால் சைவமா? வைனவமா? அல்லது உள்வாங்கப்பட்ட பிற மதங்களில்
ஒன்றா? அல்லது ‘நாம்’ என்பது பிராமணர்,
ஷத்திரியர், வைசியர், சூத்திரர், பஞ்சமர் போன்ற அடையாளங்களில் ஒன்றிற்கானதா?
நாம் என்பதற்கான எந்த வரையறைகளுமில்லாது
இந்த வகைக் கட்டுரைகள் ‘நாம்’ என்று அனைவரையும்
ஒன்றாய்ச் சேர்த்து பொதுமைப்படுத்தி என்னபாடு படுத்தும் என்பது தெரிந்த விஷயந்தான்.
என்னத்தையாவது அனுப்பி ‘தமிழனா இருந்தா ஷேர் பண்ணு’ ‘இந்தியனா இருந்தா ஷேர் பண்ணு’ வகைப்பட்ட மொக்கை மெசேஷ்களுக்கும் இந்தவகைக் கட்டுரைகளுக்கும் பெரிய வித்தியாசம்
ஒன்றும் இல்லை. இதில் ஊடகவியலாளர் என்கிற கவசம் வேறு.
எல்லோர்க்கும் எல்லாம் என்ற மானுட விடுதலைக்கான
பண்பாட்டை முன்னெடுக்க வேண்டியது இன்றைய தேவையாக இருக்கிறது என்பதை உணர்வோம். தெளிவோம்.
செயல்படுவோம்.
(2020 ஏப்ரல் 2ஆம் நாள் தினிமணிக்கு அனுப்பப்பட்ட
கடிதத்தின் திருத்திய வடிவம். தினமணி மின்னஞ்சல் கிடைத்ததாக பதில் மின்னஞ்சல் அனுப்பியிருந்தது)
0
No comments:
Post a Comment