மீட்பர் - சத்யா
இதோ நமது மீட்பர்
என்றனர்
நம் போன்ற
செம்மறி ஆட்டுக்குட்டிகளை
தொட்டுத் தூக்கி தோளில்
சுமப்பவர் அவர்
என்றனர்
செம்மறி ஆடுகளுக்காய்
கசாப்புக்கடைக்காரனின்
கழுத்தைப் பதம்பார்த்த
பட்டாக்கத்தியை தன் இடுப்பில்
சொருகி வைத்திருப்பவர்
அவர் என்றனர்
நமக்கான
புல்லுக்கட்டுகளைச் சுமக்கும்
சும்மாடினை
தலையில் அணிந்தவர் என்றனர்
நமக்காக
மலைகளிலும் பள்ளங்களிலும்
நதிகளிலும் காடுகளிலும்
அலைந்து தேய்ந்த செருப்பினை
அணிந்த
நல்ல மேய்ப்பர் அவர்
என்றனர்
அன்பும் பேரெழிலும் கொண்ட
சலனமற்ற கண்களால்
நம்மை மோட்சிக்க வந்த
மீட்பர் என்றனர்
காரிருளில்
கைபிடித்து வழிகாட்டும்
வெளிச்சம் அவர் என்றனர்
தடுமாறி தரையில் விழும்
நம்மை
தாங்கிப்பிடிக்கும்
தயாளர் என்றனர்
மலையுச்சியில் உறங்காத சன்னல்களுடைய
அவர் வீட்டின் வாசலில்
நின்று
உரக்க சத்தமெழுப்பிக் கேட்டேன்
'நீரா எம் மீட்பர்'
படாரென கதவைத்திறந்து
அருள்பொங்கும் கண்களால்
என்னைப் பார்த்து புன்னகைத்தபடி
செம்மறியாடுகளின் ரோமத்தாலான
மேலாடையை இழுத்துவிட்டுக்கொண்டு சொன்னார்
'ஆம், யாமே உமக்கான
மீட்பர்'
No comments:
Post a Comment