நீதி - சத்யா
உலகின் ஆகச்சிறந்த நியாயவான்களின் நீதி வழங்கப்பட்டது
இதுதான் தீர்ப்பென்று
எழுதி முடித்து
முகத்தில் எறிந்தவர்களிடம்
'இது நீதியா' எனக் கேட்டபோது அனாயாசமான உறுமலை வெளிப்படுத்தினர்
இதோ தீர்ப்பென்று
படித்து முடித்து
கிழித்து வீசியவர்களிடம்
'இது திருப்தியா' எனக்கேட்டபோது அருவமான முனகலை வெளிப்படுத்தினர்.
இது நீதியென்று
களித்து கொண்டாடி
மகிழ்ந்தவர்களிடம்
'யாருக்கான நீதி' என்றபோது
கடைவாயில் வழியும் ரத்தமுடைய பற்கள் தெரிய சிரித்து, 'நமக்கானது' என்றனர்.
கையில் திணிக்கப்பட்ட
நீதியின் கனம் தாங்காமல்
வருத்தப்பட்டு பாரஞ்சுமந்தவர்களிடம்
'இது யாருக்கான நீதி' என்றபோது
பற்களின் தடம் பதிந்த கழுத்தில் வழியும் ரத்தத்தை மேலாடையால் மூடிக்கொண்டு பதட்டமாக, 'நமக்கானது' என்றனர்.
நியாயவான்களிடம்
'ஐயா நீதி எதற்காக வழங்கப்படுகிறது'
என்று கேட்டபோது
திருப்திப்படுத்த என்றனர்
சிலநேரங்களில் பெரும்பான்மையினரை திருப்திப்படுத்த
சிலநேரங்களில் அதிகாரம் படைத்தோரை திருப்திப்படுத்த
சிலநேரங்களில் பெரும்பான்மை அதிகாரம் படைத்தோரை திருப்திப்படுத்த
சிலநேரங்களில் அதிகாரம் படைத்த பெரும்பான்மையினரை திருப்திப்படுத்த
சிலநேரம் தக்கவைக்க
சிலநேரம் நெட்டித்தள்ள
சிலநேரம் அவசரப்படுத்த
சிலநேரம் தாமதப்படுத்த
அடிக்கவும்
தடுக்கவும்
இடிக்கவும்
கட்டவும்
நீதி வழங்கப்படுகிறது என்றனர் அந்த மகா நியாயவான்கள்
புன்னகை மாறாத முகத்தோடு
'ஐயா,
அப்போது நீதி
நியாயத்துக்காய் வழங்கப்படுவதில்லையா?'
என்றவுடன்
மூக்கு நுனியில்
ஒட்டிய கண்ணாடியின் மேல்
கண்களை உருட்டி
உதடுகளும்
கன்னத்து கழுத்து சதைகளும் குலுங்க
கிரீடமாய் சூட்டப்பட்ட
கழுத்தின் இருபுறமும்
சுருளும் வெள்ளை முடிகளை அள்ளி
குடுமியாய் முடிந்துகொண்டு
ஒத்த குரலில்
'உனக்கான நீதி வழங்கப்பட்டது
உனக்கு வழங்கப்பட்டதே உனக்கான நீதி'
என்றபடி
வெளியேறுவதற்கான நீதியை என் கையில் திணித்தனர்.
ஆம்,
உலகின் ஆகச்சிறந்த நியாயவான்களின் நீதி
வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment