பட்ஜெட்டுக்குள் குடும்பம் நடத்தும் வித்தையை குடும்பஸ்தனாக மாறி
பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னரும் நான் கற்றுக் கொள்ளவில்லை என்பது என்னுடைய போதாமைதான்.
இத்தனைக்கும் இந்தப் பதினைந்து ஆண்டுகளில் சம்பளம் நான்கு மடங்கு உயர்ந்துள்ளது. செலவுகள்
ஐந்துமடங்கு கூடியுள்ளது. அன்றைக்கு ஆடம்பரமாகத் தெரிந்த டி.வி., சிடி பிளேயர், செல்போன்
போன்ற நிறைய விஷயங்கள் இன்று அத்தியாவசியப் பொருள்கள் என நான் உணர்வதும்கூட செலவுகள்
கூடிப்போனதற்கான காரணம். காரணம் தெரிந்தாலும் பட்ஜெட்டுக்குள் குடும்பம் நடத்துகிற
காரியம் மட்டும் கைகூடிவரவில்லை. சம்பளம் வாங்கிய மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால்
சமைப்பதற்குக் கறி எடுத்துக் கொடுத்துவிட்டு இம்மாதத்திற்கான உறுதியான செலவுகளையும்,
உத்தேசச் செலவுகளையும் எழுதிக் கொண்டிருக்கும்போதுதான் இந்தச் சிந்தனை ஓடிக் கொண்டிருக்கிறது.
“அப்பா கொஞ்சம் கால எடுத்துக்கங்க” என வீட்டைக் கூட்டிக்
கொண்டிருந்த மகள் ஸ்ரீதனா சொல்ல எழுதிக் கொண்டிருந்த நோட்டையும் பேனாவையும் நாற்காலியில்
வைத்துவிட்டு எழுந்தேன். டீபாயில் இருந்த குடித்து முடித்த டீ டம்ளரை பாத்திரம் விளக்கும்
இடத்தில் வைத்துவிட்டு திரும்பி வருவதற்குள் ஸ்ரீதனா நாற்காலி இருந்த இடத்தைக் கூட்டியிருந்தாள்.
கூட்டிக் கொண்டிருக்கும் மகள் பயன்படுத்திய விளக்குமாறு (துடைப்பம்) விடுபட்டிருந்த
என் பட்ஜெட் சிந்தனையை அடுத்த தளத்திற்கு நகர்த்தியது.
எனக்கு விவரம் தெரிந்தபோது என் வீட்டில் தென்னைமாறுதான் விளக்குமாறு.
தென்னங்கீற்றில் ஓலை நீக்கி குச்சியாக்கி அந்தக் குச்சிகளை அதே ஓலையால் ஒரு கட்டு கட்டி
தோட்டக்காரர்கள் தெருவில் கொண்டுவந்து விற்பார்கள். விளக்குமாறு கைகொள்ளா அளவிற்கு
தடிமனாயிருக்கும். பொதுவாக என் அம்மா இரண்டு விளக்குமாறு வாங்கி அதனை மூன்றாகப் பிரித்துக்
கட்டிக் கொள்வார்கள். புதிதாக விளக்குமாறு வாங்கியதும் உள்ளே கூட்டும் மாறு வாசல் கூட்டப்
போய்விடும். வாசலில் இருப்பது, பாத்ரூமிற்கு. பாத்ரூமில் இருப்பது குப்பைக்கு. வீட்டில்
ஒட்டடை அடிக்கவும் தென்னைமாறுதான். எட்டாத உயரத்தில் ஒட்டடை அடிக்க தென்னைமாறை ஒரு
கம்பில் கட்டி ஒட்டடைக் கம்பாகப் பயன்படுத்துவோம். வீட்டிற்குள் பெருக்கவும் அலசவும்
தென்னைமாறுதான். தென்னைமாறைப் பிடிக்கும் கோணத்தைப் பொறுத்து அதன் சுத்தம் செய்யும்
திறன் மாறும். வாசலில் சாணித் தண்ணீர் தெளித்த அன்று மாறை நேராக பிடித்துக் கூட்ட வேண்டும்
என்றும் மற்ற நாட்களில் சாய்த்துப் போட்டுக் கூட்ட வேண்டும் என்று என் அம்மா, என் அக்காவிற்குச்
சொல்லிக் கொடுப்பதைக் கேட்டிருக்கிறேன். அது தென்னைமாறின் தொழில்நுட்பம் இல்லை. கூட்டுபவரின்
தொழில் திறன். வீட்டிற்குள் பூக்கல் பதித்ததும் தென்னைமாறு வராண்டாவிற்கும் வாசலுக்குமானதாக
மாறியது. வீட்டிற்குள் ஈச்சமாரின் ஆதிக்கம் வந்தது. ஆனாலும்கூட ஒட்டடைக்கும் பாத்ரூமிற்கும்
தென்னைமாறுதான் பயன்பட்டது. பின்னர் வீட்டின் தரை டைல்ஸ், மார்பில்ஸ், கிரானைட் என
தன்னை அழகுபடுத்திக் கொள்ளத் தொடங்கியதும் அதற்கேற்ற பெருக்குமாறுகளும் பயன்பாட்டிற்கு
வந்தன. அவையும் விதவிதமான வடிவங்களிலும் வண்ணங்களிலும் சந்தைப்படுத்தப்பட்டன. அப்படியான
ஒரு விளக்குமாறை முதன்முதலாக நான் வாங்கி வந்தபோது என் அப்பா “வெஞ்சாமரம் யாருக்கு
வீசுறதுக்கு?” என்று கேட்டார்.
“இது விளக்குமாறு” என்றேன்.
“விளக்குமாறா… இதவச்சுத் தரையைக் கூட்டுறதா… இல்லைன்னா தரைக்கு
விசிறி விடுறதா… எல்லாம் காலக் கிரகம்…” என்றார்.
கொஞ்சநாளைக்குப் பின்னர் வீட்டில் தூசியை ஊதி ஊதித் தள்ளவும், உறிஞ்சி
உறிஞ்சித் தின்னவும் ஃப்ளோயர் வந்தது. இப்ப வீட்டைக் கூட்ட விதவிதமான பூமாறுகள், தண்ணிவிட்டுக்
கழுவ ஒரு மாஃப், தண்ணி போட்டுத் துடைக்க வேறொரு மாஃப், ஒட்டடைக்குத் தனியாக லீவர் வைத்த
பிளாஸ்டிக் பிரஸ், பாத்ரூமிற்கு என்று தனித்துவமான ஒரு பிரஸ் என மாறி தென்னைமாறு வீட்டிற்குள்
நுழையத் தேவையற்றதாகிவிட்டது. அன்றைக்குத் தென்னைமாறு அன்னையர்களின் ஆயுதமாகவும் இருந்து.
இன்றைக்கு வரை புரோட்டாக் கடைத் தோசைக் கல்லிற்கு தென்னைமாறைப் போன்ற சிறந்த துடைப்பான்
வேறெதுமில்லை.
இப்போது என் மகள் கூட்டிக் கொண்டிருக்கும் விளக்குமாறு கரும்புக்காட்டில்
வெல்லம் காய்ச்சும்போது பயன்படுத்தப்படும் கிண்டு கரண்டி போல் அமைப்புக் கொண்டது. நான்கடி
நீளமான துத்தநாகப் பைப்பில் விரித்து விடப்பட்ட பிளாஸ்டிக்கில் பிடிபட்டிருக்கும் மென்புற்கள்
கொண்டது. மென்புற்களுக்குப் பதிலாக பிளாஸ்டிக் இழைகள் கொண்டதாகவும் இவை கிடைக்கின்றன.
விளக்குமாறு பற்றிய என்னுடைய ஆராய்ச்சிக் கிணற்றில் கல்லைத் தூக்கிப் போட்டது ஸ்ரீதனாவின்
அலறல். “அம்மா… …” பதறியடித்துக் கொண்டு ஓடிவந்து
பார்த்தபோது ஸ்ரீதனா கிரைண்டருக்குக் கீழே கூட்டியபோது வெளியே வந்த கரப்பான் பூச்சியைப்
பார்த்து பயந்து, கத்தி, நடுங்கி, நிற்க… மகள் கத்திய சத்தத்தில் கரப்பான் பூச்சியும்
பயந்து நடுங்கியபடியே கிரைண்டரின் காலைக் கட்டிக் கொண்டு ஒன்டி நின்றது.
“இதுக்குப் போயா இந்தக் கத்து கத்துன” என்றபடி ஸ்ரீதனாவின் கையில்
இருந்த விளக்குமாறை வாங்கி கரப்பான் பூச்சியைக் குறிபார்த்து ‘சத்’தென ஒரே அடி. ‘சட்’
என்று சத்தம் கேட்க கரப்பான் பூச்சி பறந்து பிரிட்ஸின் பின்னால் மறைந்தது. விளக்குமாறின்
கூட்டும் பகுதி பாதி உடைந்து தெறித்தது. விளக்குமாறின் பாதி மட்டும் இருந்தது. மீதிப்பாதி
கைபிடி பிரஸ்ஸைப்போலத் தனியாகக் கிடந்தது.
“போச்சு அம்மா வந்து திட்டப் போறாங்க” என ஸ்ரீதனா சொல்லிக் கொண்டிருக்கும்போதே
இஞ்சி, பூண்டு வாங்குவதற்காகப் பக்கத்துக் கடைக்குப் போயிருந்த என் மனைவி “அப்பாவுக்கும்
மகளுக்கும் என்னாச்சு.. கத்துன கத்து கடைவரைக்கும் கேட்டுச்சு…” என்றபடி உள்ளே வந்தாள்.
அப்புறம் என்ன? வழக்கம்போல நடக்க வேண்டிய எல்லாம் நடந்தன. அம்மாதப் பட்ஜெட் பேப்பரில்
எதிர்பாராத செலவு என்ற வகையின் கீழ் விளக்குமாறுக்கான செலவு சேர்க்கப்பட்டது.
அன்று மாலை ஸ்ரீதனா வீடு கூட்டிக் கொண்டிருக்கும்போது என்னுடன்
பணிபுரியும் ரமணி வீட்டிற்கு வந்தார். ஒவ்வொரு முதல் ஞாயிறும் அவர் நடத்தும் சீட்டுக்
கம்பெனி வசூலுக்காக அவர் வருவது வழக்கமானதுதான். அவர் வந்தபோது ஸ்ரீதனாவிற்கு என்ன
செய்வதென்றே தெரியவில்லை. உடைந்த அரை விளக்குமாறால் கூட்டுவது கேவலமாக இருந்திருக்க
வேண்டும். பாதியிலும் விட்டுவிட்டுப் போக முடியவில்லை. இதுவரை கூட்டிய தூசு தும்பெல்லாம்
நடுவீட்டில் இருந்தது. ரமணி கிண்டல் பேர்வழி என்பதும் அவள் பதட்டத்துக்குக் காரணம்.
வேறு வழியின்றி கூட்டும் வேலையைத் தொடர்ந்தாள்.
“என்ன மருமகளே கூட்டல் பாதியா இருக்கு?” என்றார் ரமணி.
“அடித்தல்ல பிழையிருந்தால கழித்தலாயிருச்சு மாமா” என்று ஸ்ரீதனா குழப்பினாள்.
“அடித்தல் வகுத்தல்லதானே வரும். கழித்தல்ல எங்க வந்துச்சு?” என்றார்.
“திட்டம் வகுத்தல்ல பிரச்சனையாகி அடித்தல் கழித்தலானதால இப்ப கூட்டல்
பிரச்சனையாயிருச்சு…” என்றாள்.
“ஒன்னுமே புரியலையே. எட்டாவதுலயே இவ்வளவு கஷ்டமான கணக்கெல்லாம்
வருதா என்ன? கொஞ்சம் புரியுற மாதிரி சொல்லும்மா…” என்றார் ரமணி.
“இது கணக்கு இல்ல. விளக்குமாறு பத்தின விவரம். முழுசா விளக்கம்
தெரியணுமுன்னா அப்பாக்கிட்டக் கேளுங்க” என்ற ஸ்ரீதனா கூட்டும்
வேலையை முடித்துவிட்டு அவரிடமிருந்து தப்பித்தாள்.
ரமணி தன்னை பகுத்தறிவுவாதி என்று பறைசாற்றிக் கொண்டவர். எங்கள்
அலுவலகத்தில் எல்லோருக்கும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் மூட நம்பிக்கைக்கு எதிரான
இலவச வகுப்பெடுப்பவர். அதனால் அவரைப் பெரும்பாலானோர் வாத்தியார் என்றே அழைப்போம். அவரைச்
சீண்டிப் பார்ப்பதும், அவர் மற்றவர்களைச் சீண்டிப்
பார்ப்பதும் எப்போதும் நடப்பதுதான். இன்று அவரைச் சீண்டிப் பார்ப்பது என்று நான் முடிவு
செய்தேன்.
“முழு விளக்குமாறல கூட்டுனா வீட்டைச் சுத்தமாத்
தொடைச்ச மாதிரி ஆயிரும் வாத்தியாரே. அரை விளக்கமாறால கூட்டுனா அந்த ஆண்டவனே கூட்டுன
மாதிரி. நமக்குத் தேவையானத வீட்டுக்குள்ளே விட்டுட்டு தேவையில்லாதத மட்டும் அவர் வெளியே
தள்ளுவார்”
என்றேன்.
“அப்படீன்னா பாதி வீட்ட மட்டும் முழு விளக்குமாறால கூட்ட வேண்டியதுதானே…
ஏன் முழுசாக் கூட்டணும்?” என்றார் ரமணி.
“வாத்தியாரே… எது எது இருக்கணும். எது எது வெளியே போகணும்ன்றத நாம
முடிவு பண்ணக் கூடாது. அவர்தான் முடிவு பண்ணணும்”
“கேட்கிறவன் கேனயன்னா எருமை ஏரோப்ளேன் ஓட்டுதுன்னு
சொல்லுவீங்க… வீட்டக் கூட்டுறதே சுத்தமாக்கத்தான். முழுசாச் சுத்தமாகக் கூடாதுன்னு
சொல்றது சரியா? மடத்தனமா இல்லையா?”
“இதுல என்ன மடத்தனம். கூட்டும்போது ஊக்கு ஹேர்பின்,
காயின்ஸ், பேனா மூடி இப்படி ஏதாவது கிடந்தா நாம எடுத்து வைச்சுட்டுக் கூட்டுறதில்லையா.
அத மாதிரிதான் இதுவும்”
“அதுவும் இதுவும் எப்படி ஒன்னாகும்?” என்ற ரமணியை இன்னும்
கொஞ்சம் சீண்டலாம் என நினைத்த நான் “நம்ம பகுத்தறிவுக்குட்பட்ட தேவையான பொருட்கள நாம
எடுத்து வச்சுர்றோம். நம்ம அறிவுக்கு அப்பாற்பட்ட நமக்குத் தேவையானதெல்லாம் அவருக்குத்தானே
தெரியும். அவரு அத விட்டு வைப்பாரு” என்றேன். ரமணி கொஞ்சம்
அதிகமாகவே கடுப்பானாலும், அந்த நேரத்தில் நான் கொடுத்த பணத்தை எண்ணிக் கொண்டிருந்ததால்
கேள்வி எதுவும் கேட்கவில்லை. பணத்தை எண்ணி பையில் வைத்துக் கொண்டார்.
“இதுக்குன்னே விளக்கமாறு விக்கிறாங்களா என்ன?” என்றார்.
“இல்லையில்லை. இது சீதேவி விளக்குமாறு. புதுசா வாங்கி நாங்களே உடைச்சது.
இரண்டு வருஷமா வீட்டுக்கு வர்றீங்க நீங்க பார்த்ததில்லையா?” என்றேன். எனக்குக்கூட
பொய் சரளமாத்தான் வருது.
“காசப் போட்டு புது விளக்குமாறு வாங்கி அதை உடைக்கணுமா என்ன? இது
காசக் கரியாக்குற வேலையில்லையா?”
“வாத்தியாரே நம்ம கையில நாலு காசு தங்கணுமின்னா,
ஒரு காசு போறதப் பத்திக் கவலைப்படக்கூடாது. கொஞ்சம் கவனமா உடைச்சு சீதேவி விளக்குமாறத்தான்
பயன் படுத்தணும். கடையில கிடைக்கலைன்றதுக்காக உட்டுற முடியுமா என்ன? நமக்கானத நாமதான்
உருவாக்கிக்கிறணும்னு நீங்க சொல்லுவீங்கல்ல. அது மாதிரிதான் இதுவும். எங்களுக்கான சீதேவி
விளக்கமாற நாங்களே உருவாக்கிக்கிட்டோம்”
அதற்குள் அவர் வந்த வேலை முடிந்து கிளம்பத் தயாரானர். வீட்டு வாசல்
வரை வந்த அவர் என்னிடம், “நம்ம ஆபிஸ்ல நீங்க கொஞ்சம் விவரமான ஆளுன்னு நெனச்சுக்கிட்டிருந்தேன்.
ஆனா நீங்க மத்தவங்க பரவாயில்லைன்ற அளவுக்கு விளக்குமாறு வரைக்கும் மூட நம்பிக்கையோட
இருப்பீங்கன்னு எதிர் பார்க்கல” என வருத்தப்பட்டார்.
நானும் விட்டுத் தராமல், “இதுல என்ன மூட நம்பிக்கை, அறிவு நம்பிக்கை
வாத்தியாரே. நான் நம்புறத நான் செய்யுறேன். நம்பிக்கையில்லாததச் செய்யிறதவிட நம்புறதச்
செய்யிறது நல்லதுதானே” என்றேன்.
“ஸ்ரீதனா விளக்குமாறப் பத்தி ஏதோ கணக்குச் சொன்னாளே…” என இழுத்த ரமணியிடம்,
“ஆமா வாத்தியாரே… அது ஒரு கணக்கு… எங்க குடும்பத்துக்கு மட்டுமே புரிஞ்ச மந்திரம் மாதிரி.
‘திட்டம் வகுத்தல்ல பிரச்சனையாகி அடித்தல் கழித்தலானதால கூட்டல் பிரச்சனையாயிருச்சு’ இதக் கூட்டும்போது சொன்னமுன்னா
முழு பலன் கிடைக்கும்”
ரமணிக்கு தலை சுற்றியிருக்க வேண்டும். வாய் பேசாமல் தலையாட்டி விடைபெற்றார்.
அவர் சென்ற பின்னர், நாங்கள் அப்படி ஒரு நம்பிக்கை வைத்திருப்பதாய் நம்பிய அவரை நினைத்து
சிரித்துக் கொண்டோம்.
“முதல்ல வேற விளக்குமாறு வாங்கிட்டு வாங்க” என்ற மனைவியின் கட்டளை
அடுத்த அரை மணி நேரத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தது. சீதேவி விளக்குமாறு கைக்கெட்டிய
உயரத்தில் ஒட்டடையடிப்பதற்காக ஓரங்கட்டப்பட்டிருந்தது. அந்த ஞாயிற்றுக் கிழமைக்குப்
பின்னர் நாங்கள் அந்த சம்பவத்தையே மறந்து போயிருந்தோம்.
இதெல்லாம் முடிந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு தீபாவளி பர்சேசுக்காக
கடைத் தெருவிற்கு குடும்பத்துடன் போயிருந்தோம். ‘இதுதான் வாங்க வேண்டும்’ என்ற எந்தத் திட்டமுமில்லாமல்
கடைத் தெருவில் தீபாவளிக்காக முளைக்கும் திடீர் நடைபாதைக் கடைகளை ஒரு நடை நடந்து வேடிக்கை
பார்த்து வாங்கலாம் என்று தோன்றும் எதையாவது வாங்கிக் கொண்டு வருவதற்குப் பெயர்தான்
தீபாவளி பர்ச்சேஸ். குறைந்த விலையில் கர்சீப், பெல்ட் ஏதும் நடைபாதைக் கடைகளில் கிடைக்குமா
என்ற யோசனையுடன் மெதுவாக வேடிக்கை பார்த்தபடியே நடந்து கொண்டிருந்தேன். திடீரென ஸ்ரீதனா
“அப்பா அங்க பாருங்க…” என எதிர்சாரியில் காட்டினாள். எங்கள் ஊரிலேயே
எல்லாப் பொருட்களும் கிடைக்கும் பெரிய கடை
வாசலில் இருந்த ப்ளக்ஸ் பேனரில் தமிழ்த் திரையுலகின் தற்போதைய முன்னணி நடிகை சிரித்துக்
கொண்டிருக்க ‘கிரேக்க வாஸ்து பெருக்குமாறு’ இங்கே கிடைக்கும் என்ற
எழுத்துகள் மின்னின. ‘கிரேக்க வாஸ்தா?’ அதிர்ச்சியாகத்தான் இருந்தது. இருந்தாலும் நாங்கள் மூவரும் ஏதோ மந்திரத்திற்குக் கட்டுப்பட்டதுபோல்
கடைக்குள் நுழைந்தோம்.
பாதி மட்டுமே கூட்டும் பகுதி இருந்த ‘வாஸ்து மாறு’ விற்பனைப் பகுதியில் ஒருவர்
அதன் அருமை பெருமைகளை விளக்கிக் கொண்டிருந்தார். கூட்டும்போது சொல்ல வேண்டிய மந்திரம்
பொறித்த செப்புத் தகடும் ‘வாஸ்து மாறு’டன் இலவசமாகத் தரப்படும்
என்றார். மாறை கையில் வாங்கிப் பார்த்தோம். அதே கரப்பான் பூச்சி விளக்குமாறுதான். அதான்
நம்ம சீதேவி மாறு. பாதி உடைக்கப்பட்டது போலவே தயாரிக்கப்பட்டிருந்த அந்த மாறின் கைப்பிடி
அருகே ஒரு அங்குல அளவில் செப்புத் தகடு ஒன்று சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. மொத்தமாக
விளக்குமாறு சீல் வைக்கப்பட்டதுபோல் லேமினேஷன் செய்யப்பட்டிருந்தது. நாங்கள் ஒருவரை
ஒருவர் பார்த்துக் கொண்டோம்.
“அது என்ன மந்திரம்…” என்றாள் ஸ்ரீதனா.
“நீங்க ‘வாஸ்து மாறு’ வாங்குனீங்கன்னா அதோட
சீல் உடைச்சதும் அதுக்குள்ள இருக்குற தகடுல மந்திரம் எழுதியிருக்கும். பெருக்கும்போது
அந்த மந்திரத்தச் சொன்னீங்கன்னா முழு பலனும் கிடைக்கும்” என்று விற்பனைப் பிரதிநிதி
பொறுப்பாகச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஸ்ரீதனா சிரித்துவிட்டாள்.
இனி இந்த இடத்தில் நிற்பது சிக்கல் என்பதைப் புரிந்து கொண்டு ‘வாஸ்து
மாறு’
வாங்காமல்
வழியெங்கும் சிரித்தபடியே ஒருவழியாக வீடு வந்து சேர்ந்தோம். வீட்டிற்கு வந்ததும் டி.வி.யை
போட்டாள் ஸ்ரீதனா. தமிழ்த் திரையுலகின் நகைச்சுவை நடிகர் ஒருவர்..
“ஏய்… எதுத்த வீட்டுல இருக்கு…
பக்கத்து வீட்டுல இருக்கு…
கீ வீட்டுல இருக்கு, மே வீட்டுல இருக்கு…
ஒங்க வீட்டுல இருக்கா இந்த வாஸ்து மாறு…?” என நம்மிடம் கேட்டு விட்டு
மிகவும் அன்பாய்ச் சொன்னார்
“ஏய்… மந்திரத் தகடுடன் வாஸ்து மாறை உடனே பெற 044 XOXO
XOXO என்ற
எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுங்க…
ஏய்… மிஸ் பண்ணீராதீங்க… அப்புறம் வருத்தப்படுவீங்க…”
நன்றி : தினமணி கதிர் 04-12-2016
http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2016/dec/05/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2610793.html
No comments:
Post a Comment